ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

ஒப்பீடு / மாருதி சுஸூகியின் 4 மீட்டர் Heartect கார்கள்தொகுப்பு: ராகுல் சிவகுரு

13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹேட்ச்பேக், கார்களின் மீதான வாடிக்கையாளர்களின் பார்வையை, முற்றிலுமாக மாற்றியமைத்தது. அந்தப் பெருமை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டையே சேரும். என்னதான் மாருதி 800, சாமானியர்களை கார் ஓனர் ஆக்கியது என்றாலும், காரும் ஒரு குடும்ப அங்கத்தினர் என்பதை மிடில் கிளாஸ் மக்களுக்கு உணர்த்தியது ஸ்விஃப்ட்தான். குறைந்த விலை, நம்பகத்தன்மை, நல்ல ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றுடன் போதுமான இடவசதி, ஸ்டைலான தோற்றம், சிறப்பான கையாளுமை ஆகிய அம்சங்களை உள்ளடக்கி வெளிவந்த மாருதியின் முதல் தயாரிப்பு ஸ்விஃப்ட்தான். இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் அறிமுகமானபோது, அப்போது எஸ்டீம், பெலினோ செடான், கிராண்ட் விட்டாரா XL7 ஆகிய பிரீமியம் கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்துவந்தது. என்றாலும், மாருதி சுஸூகி - பிரீமியம் கார் என்ற கணக்கை, மக்கள் ஸ்விஃப்ட் மூலம்தான் ஏற்றுக்கொண்டனர்.

இதற்குக் கிடைத்த அமோக ஆதரவின் வெளிப்பாடாக, தற்போது மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் வெளிவந்து, அதுவும் இந்திய கார் சந்தையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. எந்தளவுக்கு என்றால், ஆல்ட்டோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் ஸ்விஃப்ட்தான்!

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த முதல் தலைமுறை ஸ்விஃப்ட், ஓட்டுதல் அனுபவத்தில் அடுத்த பரிமாணத்தைக் காட்டியது (கல்லூரி மாணவன்). ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட், அனைத்து ஏரியாக்களிலும் கொஞ்சம் பக்குவப்பட்ட மாடலாக இருந்தது (வேலைக்குச் செல்லும் இளைஞன்). ஆனால், மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் வெளிவந்த நேரத்தில், போட்டியாளர்கள் அனைவரும் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தனர். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது பிரீமியம் ஹேட்ச்பேக் ரேஞ்ச்சை விரிவுபடுத்தியது மாருதி சுஸூகி. அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்களுடன் கூடிய கார் வேண்டும் என்றால், பெலினோ; டால் பாய் டிசைன் போன்ற டிசைனில் கார் வேண்டும் என்றால், இக்னிஸ்; சொகுசான காம்பேக்ட் செடான் வேண்டும் என்றால், டிசையர் என வெரைட்டி விருந்து படைத்தது. ஸ்விஃப்ட்டில் இருந்து முளைத்த கார்தான் டிசையர் என்றாலும், அதிலிருந்து ஸ்விஃப்ட் பெயரை நீக்கிவிட்டு, புதிய டிசையரை முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்! இதனால் புதிய ஸ்விஃப்ட் எப்படி இருக்கும் என்ற ஐடியாவுக்கு வாடிக்கையாளர்கள் வந்துவிட்டனர். மேலும், ஒரே செக்மென்ட்டில் இருப்பதால், ஒரு மாடலின் விற்பனையை மற்றொரு கார் பாதித்துவிடக் கூடாது என்பதில் மாருதி சுஸூகி கவனமாக இருந்தது. எனவே, பெலினோ - இக்னிஸ் - டிசையர் ஆகிய கார்கள் கலந்த கலவையாக, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட்  வெளிவந்தது. முன்னே சொன்ன கார்கள் அனைத்தையும், இந்நிறுவனம் தனது Heartect பிளாட்ஃபார்மில் தயாரித்துவருகிறது. எனவே, இன்ஜின் - கியர்பாக்ஸ் தொடங்கி பல பாகங்களில், இந்த நான்கு கார்களில் ஒற்றுமையை உணர முடியும்.

மாருதி சுஸூகியின் மூன்றாம் தலைமுறை மாணிக்கம்...  ஸ்விஃப்ட்!

புதிய டிசையரை முன்பே ஓட்டிவிட்டதால், புதிய ஸ்விஃப்ட்டை முதன்முறையாகப் பார்த்தபோது, முந்தைய மாடல்களில் இருந்த அந்த ஆச்சர்யம், வியப்பு ஆகியவை இங்கே மிஸ்ஸானதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அவற்றைவிட டிசைன், இடவசதி, சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் காலத்துக்கு ஏற்ப மாறியிருந்தது புதிய ஸ்விஃப்ட். நீங்கள் இங்கே படங்களில் பார்க்கும் கார்கள் அனைத்தும் ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டவை என்பதால், ஸ்விஃப்ட்டின் ஓட்டுதலில் முன்பிருந்த அந்த தனித்துவமான உணர்வு கிடைக்கவில்லை. இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக டியூன் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்டீயரிங்கில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. தனது பிரதான அஸ்திரத்தை ஏறக்குறைய இழந்துவிட்ட நிலையில், பெலினோ - இக்னிஸ் - டிசையர் ஆகியவற்றில் இருந்து ஸ்விஃப்ட் எப்படி வித்தியாசப்படுகிறது?

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

2 பாக்ஸ் டிசைன் (இன்ஜின் - கேபின்), கறுப்பு நிற பில்லர்கள், ஷார்ப்பான ஹெட்லைட் என ஸ்விஃப்ட் காருக்கே உரித்தான அம்சங்கள் இதிலும் தொடர்ந்தன. என்றாலும் ஃப்ளோட்டிங் ரூஃப், LED டெயில் லைட்,  பின்பக்கக் கதவின் கைப்பிடி எனப் புதிய அம்சங்களும் இதில் இருந்தன. ஸ்விஃப்ட்டின் கறுப்பு நிற கேபினில் வட்டமான ஏசி வென்ட்கள், வித்தியாசமான ஏ.சி கன்ட்ரோல் யூனிட், ஸ்போர்ட்டியான இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் என ஸ்டைலான அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், பெலினோ மற்றும் டிசையரில் இருந்து பல பாகங்களை இதில் கட் பேஸ்ட் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. கேபினில் இடம்பெற்றுள்ள முன்பக்க இருக்கைகள், சுவிட்ச்கள், சிறப்பம்சங்கள் ஆகியவை ஒன்றுதான் என்பதால், விலை விஷயத்தில் முன்னே சொன்ன கார்கள் அனைத்தும் ஏறக்குறைய சமமாகவே இருக்கின்றன.

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

பெலினோ... மாருதி சுஸூகியின் பிரீமியம் ஹேட்ச்பேக்!

ஸ்விஃப்ட் நல்ல காராக இருந்தாலும், இடவசதி, சிறப்பம்சங்கள், தரம் ஆகியவற்றில் அது ஹூண்டாய் எலீட் i20 காருடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருந்தது. எனவே, இந்த காருக்குப் போட்டியாக, மாருதி சுஸூகி களமிறங்கிய கார்தான் பெலினோ. இதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்காவிட்டாலும், கேபின் இடவசதி மற்றும் சிறப்பம்சங்களில் எகிறியடித்தது மாருதி சுஸூகி. இந்நிறுவனத்தின் மற்ற கார்களில் 15 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்த நிலையில், பிரீமியம் பொசிஷனிங்கைக் கொண்டிருக்கும் பெலினோவில் 16 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் விலை அதிகமான CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை இந்நிறுவனம் வழங்கியிருக்கிறது. ஆனால், என்னதான் எலீட் i20 காரைவிட விலை குறைவாக இருந்தாலும், இந்த மாருதி சுஸூகி ஹேட்ச்பேக்கின் விலை கொஞ்சம் அதிகம்தான். மேலும் இதன் எடை குறைந்த கட்டுமானம் மற்றும் சுமாரான ஓட்டுதல் அனுபவம் ஆகியவை, ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக்குக்கான வரையறைக்குள் இல்லை.

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

இக்னிஸ்... மில்லினியல்களுக்கான காம்பேக்ட் கார்!

இங்கிருக்கும் கார்களிலேயே காம்பேக்ட் சைஸ், மெலிதான டயர், சிறிய வீல்பேஸ், அதிக உயரம், விலை குறைவான கார் இக்னிஸ்தான். ஆனால், முன்னே சொன்ன விஷயங்கள் காரணமாக, இக்னிஸின் ஓட்டுதல் அனுபவம் அவ்வளவு திருப்தியாக இல்லை. 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன், பார்ப்பதற்கு க்ராஸ்ஓவர் போலக் காட்சியளிக்கும் இந்த கார்தான், சமீப காலத்தில் மாருதி சுஸூகியிடமிருந்து வெளிவந்த வித்தியாசமான டிசைன். ரெட்ரோ பாக்ஸ் வடிவம், சி-பில்லரில் இருக்கும் டிசைன் அம்சங்கள், சதுரமாக இருக்கும் அலாய் வீலின் தோற்றம், அகலமான கிரில்லின் இருபுறமும் உள்ள ஹெட்லைட் ஆகியவை இதற்கான உதாரணங்கள். பாடி கலரில் இருக்கும் கதவுக் கைப்பிடிகள், உருளையான ஏ.சி கன்ட்ரோல்கள், ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன், வித்தியாசமான டேஷ்போர்டு டிசைன் என ஸ்டைலான டிசைன் அம்சங்கள் கேபினில் நிறைந்திருக்கின்றன. ஆனால், மக்களுக்கு இதன் எடுப்பான தோற்றம், அவ்வளவு கவரவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், இங்கிருக்கும் கார்களிலேயே குறைந்த விற்பனை எண்ணிக்கையைக் கொண்டிருப்பது இக்னிஸ்தான்.

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

டிசையரில் என்ன ஸ்பெஷல்?

தற்போது விற்பனையில் இருக்கும் டிசையரில், ஸ்விஃப்ட் பெயரை நீக்கிவிட்டது மாருதி சுஸூகி. எனவே, ஸ்விஃப்ட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் ஒரு புதிய கார் போன்ற உணர்வு தானாக வந்துவிடுகிறது. 4 மீட்டர் நீளத்துக்குள் எவ்வளவு இடவசதியை அளிக்க முடியுமோ, மாருதி அதற்காக அவ்வளவு முயற்சி செய்திருக்கிறது. எனவே, முந்தைய மாடலைவிட இதன் பின்பக்க இடவசதி, பூட் ஸ்பேஸ் ஆகியவை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. தனித்துவமான கிரில், பீஜ் நிற அப்ஹோல்ஸரி, Faux Wood உள்ளலங்காரம், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சென்டர் கன்ஸோல் ஆகியவை ஸ்விஃப்ட்டில் இருந்து டிசையரை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. தவிர, இங்கிருக்கும் கார்களிலேயே, விலை அதிகமான மற்றும் ரியர் ஏ.சி வென்ட் இருக்கும் ஒரே கார் இதுதான். இதை வைத்தே, இது குடும்பங்களுக்கான காராக மாருதி சுஸூகி முன்மொழிவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதைவிடக் கொஞ்சம் குறைவான விலையில் கிடைக்கும் பெலினோ, டிசையரைவிட அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. இங்கிருக்கும் கார்களின் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் மிக டல்லாக இருக்கின்றன என்றாலும், அதில் டிசையர்தான் மிக மோசமான காராக இருக்கிறது.

மாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்?

ங்கிருக்கும் கார்களின் வரிசைபடுத்தினால், எந்த ஏரியாவிலும் ஸ்விஃப்ட் டாப்பாக இருக்கவில்லை. அதிக சிறப்பம்சங்கள் - சிறந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - பெரிய வீல்களை பெலினோ கொண்டிருந்தால், கேபின் இடவசதி - பூட் ஸ்பேஸ் - வேரியன்ட்கள் எண்ணிக்கையில் டிசையர் முன்னிலை வகிக்கிறது. குறைவான விலை, கிரவுண்ட் கிளியரன்ஸில் இக்னிஸ் கவர்கிறது. இதுபோன்ற குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் எதுவுமே ஸ்விஃப்ட்டில் இல்லாதது மைனஸ். ஆனால், ‘Jack of all Trades’ என்ற சொலவடை, இந்த காருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. இக்னிஸ் நம் ஊர் சாலைகளுக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருந்தாலும், இடவசதியில் கொஞ்சம் பின்தங்கிவிடுகிறது. டிசையரின் கேபின் ரிச் லுக்கில் இருந்தாலும், அதனை நாளடைவில் அழுக்கு அடையாமல் பராமரிப்பது கடினம். ஸ்விஃப்ட்டின் கேபின் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், மற்றபடி முந்தைய மாடல்களில் கிடைத்த அந்த ஸ்பெஷல் உணர்வு, இங்கே துளியும் இல்லை. மற்றபடி டிசையர் அளவுக்கு பூட் ஸ்பேஸ் மற்றும் இக்னிஸ் அளவுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் இல்லாவிட்டாலும், வசதிகளில் சொல்லியடிக்கிறது பெலினோ. மாருதி சுஸூகி பெலினோதான் இந்த ஒப்பீட்டின் வெற்றியாளர்.