ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!

சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / டொயோட்டா யாரிஸ்வேல்ஸ், படங்கள்: வீ.நாகமணி

வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட கார் - டொயோட்டா யாரிஸ். ஹோண்டாவின் சிட்டி, ஹூண்டாயின் வெர்னா, மாருதியின் சியாஸ்... என்று இந்த செக்மெண்டில் இருக்கும் மற்ற கார்களின் மீது வாடிக்கையாளர்களுக்கு லேசாக அலுப்புத்தட்ட ஆரம்பிக்கும் சமயமாகப் பார்த்து, யாரிஸை களம் இறக்கிவிட்டது. டொயோட்டா. இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவின் நாம் பார்த்த கார்தான் என்றாலும், இம்முறை அதை ஓட்டிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெங்களூர் விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் நெடுஞ்சாலையில், நந்தி ஹில்ஸ் வரை யாரிஸ் ஆட்டோமேட்டிக் காரையும்; நந்தி ஹில்ஸில் இருந்து பெங்களூர் விமான நிலையம் வரை மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட யாரிஸையும் டெஸ்ட் டிரைவ் செய்தோம். தற்போது யாரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினோடு மட்டும்தான் விற்பனைக்கு வந்துவிட்டது. இப்போதைக்கு டீசல் கிடையாது.

வெளித்தோற்றம்

காரை முதன்முதலாக நேரில் பார்த்தபோது மனசுக்குள், ‘அட, மினி கரோலோ மாதிரி இருக்கிறதே!’ என்று தோன்றியது. சிட்டியோடு ஒப்பிடுகையில் பார்வைக்கு சற்றே சிறிதாகத்தான் தெரிகிறது. ஆனால் யாரிஸ், சிட்டியைவிட 15 மிமீ மட்டுமே நீளம் குறைவு. யாரிஸின் 15 இன்ச் வீல்கூட காரை பெரிதாகக் காட்ட உதவவில்லை.

சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!

எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியான டிசைனில் இருக்கிறது யாரிஸின் வெளித்தோற்றம். டொயோட்டா இதை ‘எமோஷனல் டிசைன்’ என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால், இதில் நமக்குப் பிடித்தது சற்றே உயரமாக பொருத்தப்பட்டிருக்கும் ஹெட்லைட்ஸ். அதன் தொடர்ச்சியாக நீளும் ஒற்றை க்ரோம் கிரில். அதன் கீழே இருக்கும் பெரிய ஏர் டேமின் டிசைன். அதேபோல்,  காரின் பின் பக்கம் நம்மைக் கவர்ந்தது புதிய ஸ்ப்ளிட் டெயில் லைட்ஸ் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டனா.

உள்ளலங்காரம்


இதன் உள்ளலங்காரம் எட்டியோஸ் போல இல்லாமல், கரோலா போல இருக்கிறது. அருவியின் டிசைனில் இருக்கும் சென்டர் கன்ஸோல், கவர்ச்சியாகவும் பயன்படுத்த சுலபமாகவும் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், உப்பலாக இருக்கும் டோர் பேட்ஸ் ஆகியவை காருக்கு பிரீமியம் ஃபீல் கொடுக்கின்றன.

இரட்டை வண்ண அலங்கார கொண்ட காரின் உள்ளலங்காரத்தில் ஏ.சி திருகுகள், ஸ்டீயரிங் வீல், கியர் நாப் என ஆங்காங்கே க்ரோம் ஃபினிஷ் கண்ணடிக்கின்றன. பின்னிருக்கைகளில் இருப்பவர்களுக்கு ஏ.சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக, காரின் கூரையில் ஏ.சி வென்ட் வைத்திருக்கிறார்கள். பொதுவாக, பல கார்களில் பின்னிருக்கைகளுக்கான ஏ.சி வென்ட் கால் முட்டி உயரத்தில்தான் வைக்கப்பட்டிருக்கும். குளிர் காற்றும் என்பது எப்போது தரையை ஒட்டித்தான் செட்டிலாகும். அதனால், ஏ.சி வென்டை கீழே வைத்து பயனில்லை என்று கூரையில் வைத்திருக்கிறார்கள்.

விலை உயர்ந்த வேரியன்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் 4.2 இன்ச் டச் ஸ்கிரீனைத் தொடாமல், கை அசைப்பின் வாயிலாகவே சேனல் மாற்றலாம்; வால்யூம் கூட்டலாம்; குறைக்கலாம். ஆனால், இதில் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இல்லை. கொளுத்தும் வெயில் காய்ச்சி எடுக்கும் நம் ஊருக்கு சன் ரூஃப் தேவையில்லை என்று அதை விட்டுவிட்டார்கள்.

குளிர்பானங்களை வைத்துக்கொள்ள பெரிய க்ளோவ் பாக்ஸ், பின்பக்க விண்ட் ஷீல்டுக்கு சன் பிளைண்ட், 476 லிட்டர் அளவுக்கு பெரிதான டிக்கி... அதுவும் போதாது என்றால், பின்பக்க சீட்டுக்களை 60:40 என்ற விகிதத்தில் மடக்கிக்கொள்ளும் வசதி ஆகியவையும் உண்டு.

சிட்டியோடு ஒப்பிடும்போது, குறைந்த வீல்பேஸ் கொண்ட காராக இருந்தாலும் பின்னிருக்கைகளில் கால்களை நீட்டி மடக்கி உட்காரப் போதுமான இடம் இருக்கிறது. பல கார்களில் டிரான்ஸ்மிஷன் டனல், பின்னிருக்கைகளில் நடுவே உட்கார்பவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால், இதில் இருப்பது ஃப்ளாட் ஃப்ளோர் என்பதால், அதுபோன்ற பிரச்னை இல்லை.

அதேபோல, பின்னிருக்கைகள் சரியான அளவு சாய்மானத்தோடு வைக்கப்பட்டிருக்கின்றன. மிக இறுக்கமாக இல்லாமல், போதுமான அளவு குஷன் இருக்கிறது. காரின் பின்னிருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆறடி உயரமானவர்களாக இருந்தால், நிமிர்ந்து உட்காரும்போது தலை கூரையில் இடிக்கக்கூடும்.

சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!

இன்ஜின்

காரின் ஏ.சி-ஐ நிறுத்திவிட்டுக் கவனித்தால், இதன் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் சத்தமே இல்லாமல் இயங்குவதை உணர முடியும். CVT கார்கள் என்றாலே, பொதுவாக சில பிரச்னைகள் உண்டு. குறைந்த வேகங்களில் ஆக்ஸிலேட்டர் பெடலை கூடுதல் சக்தியோடு அழுத்தினால், இன்ஜின் சத்தம் அதிகமாக வருமே தவிர... தேவையான சக்தி கிடைக்க  தாமதமாகும். அந்தப் பிரச்னை இந்த காரிலும் கொஞ்சம் உண்டு.

0 - 100 கி.மீ வேகத்தை எட்ட இது ஹோண்டா சிட்டியைவிட 2.5 விநாடிகள் அதிகமாக எடுத்துக்கொள்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகர்புறச் சாலைகளில்  குறைந்த வேகங்களில் ஓட்டும்போது, மென்மையாக ஆக்சிலரேட்டர் பெடலை மிதித்து வேகத்தைக் கூட்ட பழகிவிட்டால், 7 கியர்களைக் கொண்ட யாரிஸ் நகர்புறத்தில் ஓட்ட சிறந்த காராகிவிடும். மிட் ரேஞ்சை தாண்டிவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை. முன்னே செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வதற்குத் தேவையான சக்தியையும் வேகத்தையும் யாரிஸ் கேட்டவுடன் கொடுக்கிறது. மேனுவலாக ஓட்ட விரும்புபவர்களின் வசதிக்காக ஸ்டீயரிங் வீலிலேயே பேடில் ஷிஃப்ட் பட்டன்கள் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், ஆட்டோமேட்டிக்கைவிட நம்மைக் கவர்ந்தது, 6 கியர்களைக்கொண்ட மேனுவல் டிராஸ்மிஷன் வேரியன்ட்தான்.

சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!

சஸ்பென்ஷன்

குறைந்த வேகங்களில் செல்லும்போதும், ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறி இறங்கும்போதும் சஸ்பென்ஷன் கடினமாகிவிடுகிறது. ஆனால் இதுவே, கார் வேகம் எடுத்துவிட்டால் சஸ்பேன்ஷன் சொகுசானதாக மாறிவிடுகிறது. அதனால், மேடு பள்ளங்களில்கூட காரின் வேகத்தைக் குறைக்காமல் அதே வேகத்தில் செல்ல முடிகிறது. வேகமாகச் சென்று திரும்பும்போது காரின் ஒரு முனையில் இருப்பவர்கள் மறுமுனை நோக்கி சாய்வார்கள். ஆனால், யாரிஸில் அப்படி எதுவும் நிகழவில்லை.

சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!

பாதுகாப்பு

J, G, V, VX என்று  நான்கு வேரியன்டுகளிலும் 7 காற்றுப்பைகள் கொடுத்திருக்கிறது டொயோட்டா. இதில், டிரைவரின் கால் முட்டிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்ககூட தனியாக ஒரு காற்றுப் பை உண்டு. மேலும், அனைத்து வேரியன்டுகளுக்கும் ABS ,EBD, பிரேக் அசிஸ்ட் வசதிகள் கொடுத்திருக்கிறார்கள். பார்க்கிங் செய்யும்போதுகூட எதிலும் மோதிவிடக் கூடாது என்று காரின் பின்பக்கம் மட்டும் அல்லாமல் முன்பக்கத்திற்கும் பார்க்கிங் சென்ஸார்ஸ் கொடுத்திருக்கிறார்கள். டாப் வேரியன்டுகளில் அனைத்து வீல்களுக்குமே டிஸ்க் பிரேக் மற்றும் ESP, டிராக்ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்!

போன்ற வசதிகளை கொடுத்திருக்கிறார்கள்.

ர்பாட்டமில்லாத டிசைன், தரமான உள்ளலங்காரம்,  நிசப்தமான கேபின், போதும் போதும் என்கிற அளவுக்கு பாதுகாப்பு வசதிகள், மனநிறைவைத் தரும் பர்ஃபாமென்ஸ் ஆகியவற்றை நாடுகிறவர்கள், நிச்சயம் யாரிஸை நாடுவார்கள். அதன் விலை சரியாக நிர்ணயிக்கப்பட்டால்!