ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

போட்டி / மஹிந்திரா ஸ்கார்ப்பியோ VS டாடா ஹெக்ஸாதொகுப்பு: தமிழ்

சில நபர்களைப் பார்த்தால் தானாகவே மரியாதை வரும். எஸ்யூவிகளில் ஸ்கார்ப்பியோவுக்கு அப்படி ஓர் அந்தஸ்து உண்டு. சிக்னல்களில், பார்க்கிங்குகளில், டோல்களில் என எல்லா இடங்களிலும் ஸ்கார்ப்பியோவுக்கு மரியாதை கிடைக்கும். இத்தனைக்கும் ஸ்கார்ப்பியோ, பற்பல லட்சங்கள் கொண்ட பெரிய லக்ஸூரி கார் கிடையாது.

 அப்படிப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட்டில், S11 என்றொரு வேரியன்ட் வந்திருக்கிறது. புதிய கியர்பாக்ஸ், எக்ஸ்ட்ரா பவர் இவைதான் S11 வேரியன்டின் முக்கியமான மாற்றங்கள். ஸ்கார்ப்பியோ S11 மேனுவலின் விலை சுமார் 18.50 லட்சம். ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றால், அவருக்கு எப்படிப்பட்ட ஸ்டார் வேல்யூ இருக்க வேண்டும்? அதேபோல, ஸ்கார்ப்பியோவுக்குப் போட்டியாக ஒரு கார் இருக்க வேண்டும் என்றால், அது எப்படி கட்டுமஸ்தான ஒரு காராக இருக்க வேண்டும்?

அப்படிப்பட்ட கார்தான் - டாடா ஹெக்ஸா! இது கிரிஸ்டாவைவிட நீள/அகலத்தில் பெரியது. அதே 7 சீட்டர், நான்கு பக்கமும் டிஸ்க், 4 வீல் டிரைவ் என்று கம்பீரத்தோடு நிற்கிறது ஹெக்ஸா. ஸ்கார்ப்பியோ - ஹெக்ஸா - இந்த இரண்டில் எது பெஸ்ட்?

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

உள்ளே...

ஸ்கார்ப்பியோ: S11 இன்டீரியரில் லெதர் ஹைலைட்டாகத் தெரிகிறது. கியர் லீவர், ஸ்டீயரிங் வீல் என எல்லாம் லெதர் மயம். டேஷ்போர்டு மற்றும் மெட்டீரியல்ஸ் எல்லாமே பழைய ஸ்கார்ப்பியோதான். டூயல் டோன் கலர், பியானோ பிளாக் சென்டர் கன்ஸோல் எல்லாம் லாங் ஷாட்டில் ஓகே! பிளாஸ்டிக் சுவிட்ச்கள், பட்டன்களின் தரம் ஆகியவற்றில் மஹிந்திரா இன்னும் சிரத்தை எடுக்க வேண்டும். இதை காம்ப்ரமைஸ் செய்ய பிரீமியம் லுக்கில் ஏ.சி வென்ட்டுகளில் குரோம் ரிங்குகள் பொருத்தியிருக்கிறார்கள். ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தால்... ஸ்கார்ப்பியோவை யார் வேண்டுமானாலும் தன்னம்பிக்கையோடு ஓட்டலாம். அத்தனை கம்ஃபர்ட்டான டிரைவிங் பொசிஷன், வெளிச்சாலை பக்காவாகத் தெரியும்படியான அசத்தல் விஸிபிளிட்டி. சீட் அட்ஜஸ்ட்டும் உண்டு.  சீட்கள் பெரிதாகவும், ஃப்ளாட்டாகவும் இருக்கின்றன.

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

பழைய ஸ்கார்ப்பியோவைவிட, இரண்டாவது வரிசை சீட்டுகளில் ஹெட்ரூம், லெக்ரூம் தாராளம். வாட்டசாட்டமான மூன்று பேர்கூட வசதியாக உட்காரலாம். கேப்டன் சீட் வேரியன்ட்கூட இருக்கிறது. அதாவது, இரண்டு பேர் வசதியாக அமரும்படியான புரொஃபெஷனல் சீட்டிங் பொசிஷனுடன், ஹேண்ட் ரெஸ்ட் கொண்ட சீட்கள். மூன்றாவது வரிசை சீட்டுகள், ஜம்ப் சீட்டுகள். அதாவது, எதிரெதிரே பார்த்து அமரும்படியான சீட்ஸ். இதற்கு சீட் பெல்ட்டும் கிடையாது என்பதால், நீண்ட தூரப் பயணங்களுக்கு... ப்ச்! ஜம்ப் சீட்களை மடித்துவிட்டால். 820 லிட்டர் இடவசதி கிடைக்கும்.

ஹெக்ஸா: டிசைன் மற்றும் தரத்தில் டாடா புதிய உயரத்துக்குப் போய்விட்டது. இரட்டைத் தையல் வேலைப்பாடுகளுடன் பிளாக் தீம் மற்றும் பியானோ பிளாக் சென்டர் கன்ஸோல் கொண்ட சாஃப்ட் டச் டேஷ்போர்டைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். டாடா இதற்காக நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கிறது. ஏ.சி வென்ட்டுகளுக்கான உலோகங்களும் அருமை. டச் ஸ்கிரீன்தான் ஒட்டவில்லை. ரொம்ப சிறுசோ என்று தோன்றுகிறது. XT Trim வேரியன்ட்டில் ஸ்டீயரிங் தொடங்கி சீட் வரை எல்லாமே பிரீமியம் லெதர் வேலைப்பாடுகள்.

சீட்கள் நல்ல சப்போர்ட்டிவ் ஆகவும், நல்ல குஷனிங்கோடும் இருக்கின்றன. ஸ்கார்ப்பியோவைவிட சீட்கள் அகலம் என்பதால், நடுப்பக்க சீட்களின் இடவசதியும் தாராளம். இதற்குக் காரணம், ஹெக்ஸாவின் நீளம் (4,788 மிமீ) ஸ்கார்ப்பியோவைவிட (4,456 மிமீ) அதிகம். சீட்களுக்கு பேக்ரெஸ்ட் இருக்கிறது. இதை அட்ஜஸ்ட் செய்து சாய்ந்து கொண்டு வந்தால், செம கம்ஃபர்ட். ஆனால், இதை அட்ஜஸ்ட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. வழக்கம்போல் மூன்றாவது வரிசை இருக்கை, குழந்தைகளுக்குத்தான் செட் ஆகும். இதை மடித்தால், 671 லிட்டர் இடவசதி கிடைக்கிறது. ஸ்கார்ப்பியோவைவிடக் குறைவுதான்.

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?
ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

வசதிகள், பாதுகாப்பு...

ஸ்கார்ப்பியோ: S11-ல் டச் ஸ்கிரீன், ஹெக்ஸாவைவிடப் பெரிதாக இருப்பதால், ஆப்பரேட் செய்ய வசதியாக இருக்கிறது. நேவிகேஷன் சிஸ்டம் இதில் உண்டு. க்ரூஸ் கன்ட்ரோல், மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், ரெயின் சென்ஸிங் வைப்பர், டயர் பிரஷர் மானிட்டர், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் என்று வசதிகளில் சூப்பர். அந்த டச் ஸ்கிரீனில் ரிவர்ஸ் கேமரா வருவதுடன், பார்க்கிங் அசிஸ்ட் வசதியும் உண்டு. ஆப்பிள் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி? ஸாரி!

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?
ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

S3 வேரியன்ட்டைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஏபிஎஸ், இரண்டு காற்றுப் பைகள் ஸ்டாண்டர்டு. கியர் லீவருக்குப் பக்கத்தில் போனும், ரியர்வியூ மிரருக்குப் பக்கத்தில் சன் கிளாஸும் வைத்துக் கொள்ளலாம்.

ஹெக்ஸா: இதில் டச் ஸ்கிரீன் உண்டு. ஆனால், நேவிகேஷன் இல்லை. மற்றபடி க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்ஸார்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ், பின் பக்கப் பயணிகளுக்கு சன் பிளைண்ட் ஆப்ஷன் மற்றும் பொருட்கள் வைக்க ஏகப்பட்ட இடங்கள் உண்டு. ஸ்கார்ப்பியோவை, ஹெக்ஸா தூக்கிச் சாப்பிடும் இடம் பாதுகாப்பில்தான். ஹெக்ஸாவில் 6 காற்றுப் பைகள், ABS, EBD, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிஸென்ட் அசிஸ்ட் என்று எத்தனை பாதுகாப்பு அம்சங்கள். வெல்டன் ஹெக்ஸா!

டிரைவ்...

ஸ்கார்ப்பியோ: டாப் வேரியன்ட்டான S11-ன் பெயரே mHawk140 இன்ஜின். அதாவது, இதன் பவர் 140 bhp. மற்ற வேரியன்ட்களைவிட 20 bhp அதிகம். டார்க்கும் கும்மென ஏறியிருக்கிறது. 32 kgm. ஸ்டார்ட் செய்ததும் இதன் பீட், எக்ஸ்யூவி இன்ஜின்போல் இருக்கிறது. இதற்குக் காரணம், 2.2 லிட்டர் இன்ஜினில் பெரிய டர்போ சார்ஜர் சேர்த்திருக்கிறார்கள். 1,500 rpm-ல் இருந்து 4,500 rpm வரை எந்த இடத்திலும் காத்திருக்கவே வேண்டியதில்லை. பழைய காரைவிட புல்லிங் பவரிலும், ரைடிங்கிலும் ஒரு பன்ச் தெரிகிறது. 10.8 விநாடிகள் ஆனது 0-100 கி.மீ-க்கு. 1,810 கிலோ கொண்ட ஒரு வெயிட்டான எஸ்யூவிக்கு இந்த டீட்டெய்லிங், செம! இது ஸ்விஃப்ட்டைவிட வேகம் என்றால், இதன் இன்ஜின் பன்ச்சைப் பார்த்துக் கொள்ளுங்கள். இனிஷியலில் இருந்து, மிட் முதல் டாப் எண்ட் வரை எல்லா இடங்களிலும் சீறுகிறது.

பழைய ஸ்கார்ப்பியோவில் 5 கியர்கள். இதில் 6-வது கியர்தான் இந்தச் சீறலுக்குக் காரணமாக இருக்கலாம். ஹைவே க்ரூஸிங்கில் செம ஜாலியாக இருக்கிறது. மூன்றாவது கியரில் 20-80 கி.மீ-க்கு 9.07 விநாடிகள் ஆனது. 4-வது கியரில் 40-100 கி.மீ-க்கு 12.28 விநாடிகள். ஹெக்ஸாவைவிட அதிகம். வழக்கமாக மஹிந்திரா கார்களில் கிளட்ச், காலைப் படுத்தி எடுக்கும். S11-ல் லைட் கிளட்ச்சும், ஈஸி வெயிட் ஸ்டீயரிங்கும் 1,810 கிலோ எடை கொண்ட காரை அசால்ட்டாக டீல் செய்ய உதவுகிறது. மோசமான இடங்களெல்லாம் ஸ்கார்ப்பியோவுக்குச் சிம்ம சொப்பனம். சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப்பின் ஸ்பிரிங் மற்றும் டேம்ப்பர் செட்-அப்பில் கொஞ்சம் வேலை பார்த்துள்ளது மஹிந்திரா. பிரேக்கிங்கிலும் பூஸ்டர் சைஸை அதிகப்படுத்தி இருக்கிறதாம். ஹார்டு பிரேக்கிங்கில் மட்டும் கவனம். ஆனால், கார்னரிங்கிலும் வளைவுகளிலும் ஸ்கார்ப்பியோவில் இன்னும் தன்னம்பிக்கை வரவில்லை. பாடி ரோல், ராட்டினத்தில் செல்வதுபோல் இருக்கிறது.

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?
ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

ஹெக்ஸா: டாடாவில் இருப்பது 2.2 லிட்டர் Varicor இன்ஜின். ஸ்கார்ப்பியோவைவிட 16 bhp பவரும், 8 kgm டார்க்கும் அதிகம். 156 bhpயும், 40 kgm டார்க்கும் பட்டையைக் கிளப்புகின்றன. 40 kgm இன்ஜின்போல் ரொம்பச் சத்தம் போடவில்லை ஹெக்ஸா. வைப்ரேஷன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது டாடா. இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. 4X2, 4X4. இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். ஆட்டோமேட்டிக் என்றால், வெறும் 2 வீல் டிரைவ் மட்டும்தான்.

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?
ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

ஆட்டோ, கம்ஃபோர்ட், டயனமிக், ரஃப் ரோடு என்று 4 மோடுகள் ஹெக்ஸாவில் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெர்ஃபாமென்ஸை உணர முடியும். ஒரு தடவை மேடு பள்ளங்கள், சேறு சகதி நிறைந்த இடத்தில் ஹெக்ஸாவை ஓட்டிச் செல்ல முயன்ற ஒருவர் இப்படிச் சொன்னார்: ‘‘ரஃப் ரோடு மோடு இருக்கும்போது கவலையே பட வேண்டியதில்லை!’’ ஆம்! ரஃப் ரோடில் கண்ணை மூடிக் கொண்டு ஆஃப் ரோடு செல்லலாம். நெடுஞ்சாலை வேகங்களுக்கு டயனமிக் மோடுதான் பெஸ்ட். 0-100 கி.மீ-க்கு 14.21 விநாடிகள் ஆகும். ஆனால், ஸ்கார்ப்பியோவைவிட குறைவுதான். எடைகூடக் காரணமாக இருக்கலாம். ஸ்கார்ப்பியோவைவிட 470 கிலோ அதிகம். அதாவது, 2 டன்னுக்கு மேல்!  ரிவர்ஸ் கியர் மாற்றுவதற்கான வித்தியாசம் எதுவும் இல்லை என்பதால்,  ஹைவேஸில் கியர் மாற்றும்போது கவனம்.

கியர் ஷிஃப்ட்டிங்கிலும் சில நேரங்களில் அதிர்வு ஏற்படுகிறது. எடை அதிகம் என்பதால், டிராஃபிக்கில் நிறுத்தி/கிளம்ப ஹெக்ஸா, கொஞ்சம் கடுப்பேற்றலாம். ஆனால், ரைடிங்கைப் பொறுத்தவரை ஹெக்ஸா கலக்குகிறது. 19 இன்ச் வீல்கள்! ஸ்கார்ப்பியோவில் 17 இன்ச்தான். பிரேக்கிங்கும் அதைவிட அசத்தல். அதேநேரம், நான்கு பக்கமும் டிஸ்க் இருக்கும் கார் ஹெக்ஸாதான். கார்னரிங்கிலும் ஸ்கார்ப்பியோவைவிட கிரிப் நன்றாகவே கிடைக்கிறது. பாடி ரோல் இருக்கிறதுதான். ஆனால், பெரிதாகத் தெரியவில்லை. அதிக வேகங்களில், இதன் ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கின் எடை அதிகரிப்பது நல்ல விஷயம்.

ஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா?

எது வாங்கலாம்?

எக்ஸ்ட்ராவாக 6-வது கியர், கூடுதல் பவர்-டார்க், சஸ்பென்ஷன் வேலைப்பாடுகள் என்று பக்கா எஸ்யூவியாக இருக்கிறது ஸ்கார்ப்பியோ. பழைய ஸ்கார்ப்பியோ போல் நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக்கிங்கில் இப்போதெல்லாம் திணற வேண்டியதிருக்காது. ஃபன் கூடியிருக்கிறது. ஆனால், பிளாஸ்டிக் தரங்கள், கார்னரிங், ரைடிங் அண்டு ஹேண்ட்லிங் மற்றும் கம்ஃபர்ட்டைப் பொறுத்தவரை ஸ்கார்ப்பியோ இன்னும் கவனம் செலுத்த வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், ஸ்கார்ப்பியோவுக்குப் போட்டி ஹெக்ஸாவே கிடையாது. ஆனால், ஏகப்பட்ட வசதிகள், 6 காற்றுப்பைகள், ABS-EBD என்று பாதுகாப்பு அம்சங்கள் என்று எதையும் மிஸ் ஆக்காமல், கொடுக்கும் காசுக்கு வேலை பார்க்கும் ஹெக்ஸாவுக்குப் பூங்கொத்து தந்தே ஆக வேண்டும்.