ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

புது அவுட்லேண்டரில் ஆஃப் ரோடிங் செய்யலாமா?

புது அவுட்லேண்டரில் ஆஃப் ரோடிங் செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
புது அவுட்லேண்டரில் ஆஃப் ரோடிங் செய்யலாமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் / மிட்சுபிஷி அவுட்லேண்டர்தொகுப்பு: தமிழ்

ஜோடி எதுவும் இல்லாமல் தன்னந்தனியாக ஒரு பறவை இருப்பதுபோல், மிட்சுபிஷி ஷோரூமில் தன்னந்தனியாக வீற்றிருப்பது பஜேரோ ஸ்போர்ட்ஸ் மட்டும்தான். (மான்ட்டெரோவை ஆர்டர் செய்துதான் வாங்க வேண்டும்) இப்போது பஜேரோவுக்குத் துணையாக அவுட்லேண்டர் வரப்போகிறது. இது ஏற்கெனவே நமக்குத் தெரிந்த கார்தான். இந்தியா முழுக்க மொத்தமே 200 கார்களுக்கு மேல் விற்பனையாகாதது மிட்சுபிஷிக்குப் பெரிய சோகம். எஸ்யூவியான அவுட்லேண்டர் - உருவத்தில் ஹேட்ச்பேக் போல இருந்தது, நெடுஞ்சாலையில் போதிய ஸ்டெபிலிட்டி இல்லாதது, குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் என்று பிக் பாய் இமேஜை இழந்தது ஆகியவைதான் அவுட்லேண்டரின் சரிவுக்குக் காரணம். தொடர்ந்து ஆறு ஆண்டுகள், ‘நாட் ரீச்சபிள்’ மோடில் இருந்த மிட்சுபிஷி, இப்போது புதிய அவுட்லேண்டரின் மூலம் தொடர்பு எல்லைக்குள் வந்திருக்கிறது. புதிய அவுட்லேண்டர், மிட்சுபிஷிக்குப் பலத்தை ஏற்படுத்துமா?

தோற்றம்

கிரில்லைப் பார்த்ததும் கண்டுபிடித்து விடலாம் - மிட்சுபிஷி குடும்பம் என்று. ஸ்லிம் கிரில், LED ஹெட்லைட்ஸ், L வடிவ DRL என்று மரபை மாற்றவில்லை. ‘கிரில்தான் சின்னதாக இருக்கிறது; காரும் சின்னதாக ஃபீல் ஆகிவிடக் கூடாது' என்பதற்காக, கட்டுமஸ்தான குரோம் பார்களை வைத்து ஹெட்லைட்டிலிருந்து கீழே ஏர்-டேம் வரை கவர் செய்திருக்கிறார்கள். ‘C’ எழுத்தைக் கவிழ்த்துப் போட்டது போன்ற டிசைன் தெரிகிறது.

புது அவுட்லேண்டரில் ஆஃப் ரோடிங் செய்யலாமா?

முன்/பின்/பக்கவாட்டு என எல்லா பக்கமும் சில்வர் கிளாடிங் இருக்கின்றன. பின்னால் ‘D’ பில்லர், பல்க்கான வீல் ஆர்ச்சுகள், LED டெய்ல் லைட்டுகள் என எல்லாவற்றிலும் நேர்த்தி தெரிகிறது. அதே நேரத்தில் பயமும்! பழைய காரில் இருந்த சில மிட்சுபிஷி மரபு இதில் தெரியவில்லை. காரின் புரொஃபைலைப் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கும்போல மிட்சுபிஷி. பழைய அவுட்லேண்டரில் நிகழ்ந்த அதே தவறு இங்கே நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால், பெரிய எஸ்யூவி லவ்வர்கள் இதைப் போகிற போக்கில் கடந்துவிட வாய்ப்பு உண்டு.

ஸ்பிளிட் டெய்ல் கேட் இதில் இல்லை. ஆனாலும் லோடிங் பாயின்ட் ரொம்பவும் மேலேறவில்லை; அதனால், பொருட்களை லோடு செய்ய பெரிதாகச் சிரமப்பட வேண்டியதில்லை. க்ராஸ்ஓவர் கார் என்கிற முத்திரை விழுந்துவிடக் கூடாது என்று பயந்து பயந்து டிசைன் செய்த மிட்சுபிஷி, டயர் விஷயத்தில் ஏன் சிக்கனத்தைக் கடைப்பிடித்தது என்று தெரியவில்லை. இத்தனை பெரிய வீல் ஆர்ச்சுகளுக்குக் கீழே இருப்பது வெறும் 16 இன்ச் வீல்கள்தான். XUV-யில் 18 இன்ச் வீல் என்பதை நினைவில் கொள்க மிட்சுபிஷி!

இன்டீரியர்

எஸ்யூவி என்றால், 7 சீட்டர்தான் கெத்து. அவுட்லேண்டரில் 7 சீட்டர்தான். ஆனால், நடுப்பக்க சீட்டில் உயரமானவர்கள் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துதான் ஆக வேண்டும். ஹெட்ரூம் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டும். வழக்கம்போல், பின் பக்க சீட்டுகள் குழந்தைகளுக்குத்தான் சௌகரியமாக இருக்கும். ஆனால், தடிமனான பில்லர், வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியவிடாமல் ஜெயிலில் அடைத்ததுபோல் இருக்கிறது.

இன்டீரியர் டிசைன் போர் அடிக்கவில்லை. ஆனால், கவர்வது போன்ற அம்சங்களும் பெரிதாக இல்லை. ஃபுல் பிளாக் தீமில், ஒரே இருட்டாக இருப்பதுபோல் இருக்கிறது. கறுப்புப் பிரியர்களுக்கு இதுதான் பிடிக்கும். தரம் ‘சீ’ என்று முகம் சுழிக்கவும் வைக்கவில்லை. அதேநேரம் ‘வாவ்’ என்று வியக்க வைக்கவும் இல்லை. 35 லட்ச ரூபாய் காரில் எஸ்யூவி பிரியர்கள் இன்னும் எதிர்பார்ப்பார்களே? இப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. டச் ஸ்கிரீன் இருக்கிறது. ஆனால், வெறும் 6.1 இன்ச்தான். இதன் இன்டர்ஃபேஸ் யூனிட்டும் ஏதோ ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பொருத்தியதுபோல் இருக்கிறது. இந்த மூன்று விஷயங்களை மிஸ் பண்ணியதற்காக மிட்சுபிஷிக்குக் கண்டனம் தெரிவித்தே ஆக வேண்டும். அவை ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, நேவிகேஷன். ரொம்ப முக்கியமாக, இந்த 7 சீட்டர் காரில் ரியர் ஏ.சி வென்ட் இல்லாததற்கு ஒரு சோக ஸ்மைலி! நல்லவேளை - ரிவர்ஸ் கேமரா, பவர் டிரைவர்டு சீட், ஹீட்டட் முன் பக்க சீட்கள், சன் ரூஃப், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ ஹெட்லைட் இவையெல்லாம் மிஸ் செய்யவில்லை மிட்சுபிஷி.

புது அவுட்லேண்டரில் ஆஃப் ரோடிங் செய்யலாமா?

க்ராஸ்ஓவரா, எஸ்யூவியா?

சிஆர்-வியை பெரிய ஃபேமிலி க்ராஸ்ஓவர் என்று சொல்லலாம்; ஃபார்ச்சூனரை பெரிய எஸ்யூவி என்று சொல்லலாம்; பஜேரோவை ட்ரக் என்றுகூடச் சொல்லலாம். அவுட்லேண்டரை என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால், மோனோ காக் சேஸியில் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன், ட்ரான்ஸ்வர்ஸ் இன்ஜின் லே-அவுட் என்று பிரீமியம் க்ராஸ்ஓவர்களைப்போல் நச்சென அவுட்லேண்டரை இறக்கியிருக்கிறது மிட்சுபிஷி. ஏனென்றால், இதன் உயரமான வடிவமும் டயர்களும் ஆஃப் ரோடரோ என்றும் நினைக்க வைக்கிறது. ஆம்! இதில் அடாப்டிவ் AWD சிஸ்டம் இருக்கிறது. வழக்கமான 4 வீல் டிரைவ் மாதிரி இல்லை; இதை நாம் வேண்டிய அளவு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

ட்ரான்ஸ்மிஷன் டனலில் AWD-க்கான பெரிய பட்டன் இருந்தது. ‘ஆட்டோ’வில் செட் செய்தால், தேவையான நேரத்தில் மட்டும் பின் வீல்களுக்கு ட்ராக்ஷன் போகும். இதனால், எனர்ஜியும், எரிபொருள் செலவும் மிச்சம். ஸ்டீயரிங் கொஞ்சம் லைட் வெயிட்டாக இருக்கிறது. இதுவே சில நேரங்களில் பயமாகவும் மாறிவிடுகிறது. நம் தொடர்பிலிருந்து விடுபட்டதுபோல் தெரிகிறது. திருப்பங்களில் பாடி ரோலும் தெரிந்தது.

நேரான சாலைகளில் அவுட்லேண்டரை விரட்டும்போது, இந்தக் குறையை மறந்துவிட்டேன். ஒரு பெரிய க்ராஸ்ஓவர் ஃபீல் இருந்தது. ஹோண்டா சிஆர்-வியை ஓட்டியிருக்கிறேன். கிட்டத்தட்ட சிஆர்-வி-யின் ஃபன் கிடைத்தது. மோனோ காக் சேஸி என்றாலும், சில மேடு பள்ளங்களில் லேடர் ஃப்ரேம்போல் கெத்துக் காட்டியது அவுட்லேண்டர். சஸ்பென்ஷன் டைட் ஆகவும் இல்லை; ரொம்ப சாஃப்ட் ஆகவும் இல்லை. அதனால், சில மேடு பள்ளங்களில் வேகமாகப் போனால், கதாநாயகர்களிடம் அடிவாங்கும் வில்லன்கள்போல் ‘பவுன்ஸ்’ ஆக வேண்டியிருக்கிறது. மற்ற நேரங்களில் ஃப்ளாட்தான்.

சாஃப்ட் ரோடில் ஓகே! ஆஃப் ரோடில்? பெரிய AWD பட்டனைத் திருகிவிட்டுக் காத்திருந்தேன். ‘AWD லாக்’ என்று ஸ்கிரீனில் வந்ததும், பவர் டெலிவரியில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தது. சில பாறைகள், ஓடைகள் கொண்ட சாலைகளில் அவுட்லேண்டரை ஓட்டும்போது, தேவையான நேரங்களில் பவரை வீல்களுக்குப் பிரித்துக் கொடுப்பது ஃபீல் ஆனது. இந்த நேரத்தில் சின்ன டயர்களாக இருந்தாலும், (215/70 R16) அதன் செயல்பாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும். ரொம்பவும் கடுமையான ஆஃப் ரோடிங், அவுட்லேண்டரில் சாத்தியமா என்று தெரியவில்லை. கிரவுண்ட் கிளியரன்ஸை இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம். வெறும் 190 மிமீதான் என்பது ஓகேவா?

புது அவுட்லேண்டரில் ஆஃப் ரோடிங் செய்யலாமா?

பெட்ரோல் மட்டும்தானா?

ஒரு பெட்ரோல் பங்க்கில் எஸ்யூவியை நிறுத்தினால், ‘டீசலா சார்?’ என்று பங்க் ஊழியர்கூடக் கேட்பார். ஆனால், மிட்சுபிஷி இந்த விஷயத்தில் மட்டும் விடாப்பிடியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை? 2008-ல் இருந்து ஒரே இன்ஜின்தான். 2.4 லிட்டர் ‘MIVEC’ 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இந்த அவுட்லேண்டரிலும். டர்போ சார்ஜிங்கில்கூட மாற்றம் செய்யவில்லை. அதே 167 bhp பவரும், 22.2 kgm டார்க்கும்தான். அதற்குப் பதில் எடையில் கை வைத்திருக்கிறார்கள். பழைய காரைவிட 13 கிலோ எடை குறைவு புதிய அவுட்லேண்டர்.

1,600 கிலோ எடை கொண்ட எஸ்யூவியை சாதாரணமாக இழுக்கச் சிரமப்படுவதுபோல் தெரிந்தது இந்த 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். விருட்டென விரட்டிப் பார்த்தேன். 20-80 கி.மீ-யை 6.1 விநாடிகளில் கடந்தது அவுட்லேண்டர். 40-100 கி.மீ-க்கு 7.8 விநாடிகள் ஆனது. 0-100 கி.மீ-க்கு 10.6 விநாடிகள் எடுத்துக்கொண்டது. இது 2.4 லிட்டர் இன்ஜினுக்கு சுமார் ரகம்தான்.

இதன் ஆட்டோமேட்டிக் CVT கியர்பாக்ஸிலும் விஷயம் இருக்கிறது. டூயல் கிளட்ச் அல்லது டார்க் கன்வெர்ட்டர் போல் இந்த CVT கியர்பாக்ஸ் எப்போதுமே ஸ்மூத் ஆக இருக்கப் போவதில்லை. ஆனால், சிட்டிக்குள் இந்த CVT தான் பெஸ்ட் என்பதை மறந்துவிடாதீர்கள்!

ஸ்டீயரிங்குக்குக் கீழே பேடில் ஷிஃப்டர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், முக்கியமான நேரத்தில் பேடில் ஷிஃப்ட்டர்களை நம்புவது வீண்தான். டவுன் ஷிஃப்ட்டிங்கில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது. பேசாமல், ஆட்டோமேட்டிக்கிலேயே விட்டுவிட்டு நிம்மதியாக ஓட்டுவதுதான் பெஸ்ட்.

அவுட்லேண்டர் ஓகேவா?

கார் கட்டுமஸ்தாக 1,600 கிலோ எடையில் இருக்கிறது. ஆனால், மற்ற விஷயங்களில் ‘தடதட’ பார்ட்டியாக பம்முகிறது அவுட்லேண்டர். உதாரணத்துக்கு போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் இல்லாதது, 16 இன்ச் குட்டி டயர்கள், கேபினில் மிஸ் ஆகும் நேவிகேஷன்/ஆண்ட்ராய்டு/ஆப்பிள் ப்ளே, ரியர் ஏ.சி வென்ட் போன்ற முக்கியமான சில விஷயங்கள்... முக்கியமாக டீசல் இன்ஜின் இல்லாதது - இவையெல்லாம் எஸ்யூவி பிரியர்களைக் கடந்து போகச் செய்துவிட வாய்ப்பு உண்டு. ‘இதெல்லாம் பரவாயில்லை; 35 லட்சத்துக்குள் ஒரு நல்ல ரிஃபைன்மென்ட், கையாளுமை கொண்ட ஒரு கார் வேணும்’ என்று பெட்ரோல் எஸ்யூவி தேடுபவர்களுக்கு ஏற்ற கார். இருந்தாலும் பழைய அவுட்லேண்டர் விஷயத்தில் நடந்த அதே தவறு, புதிய அவுட்லேண்டரிலும் நடந்துவிடக் கூடாது.