Rule of one third
எந்த உருவாக்கத்துக்கும் ஓர் அடிப்படைக் கட்டமைப்பு அவசியம். கம்போசிஷன் எனும் அந்த அடித்தளம் உறுதியாக இருக்க கோல்டன் புரபோஷனைத் துணை கொண்டோம். அதற்கு அடுத்து ‘Element of Design’ அவசியம் கவனிக்கவேண்டிய ஒன்று.
Hormony என்றால், தமிழில் ஒத்தமைதி. Balance என்பது சமன்பாடு. Emphasize என்றால், அழுத்தம். இயற்கையிலிருந்தே நாம் வடிவமைப்பின் உத்திகளைப் பெற்று கையாள்கிறோம். மாம்பழத்தின் வாசனை அந்தப் பழத்தில் மட்டுமா வருகிறது? அதன் மரத்தைக் குடைந்து நுகர்ந்து பாருங்கள்; இலைகளைக் கசக்கி நுகர்ந்தாலும் மா மணம் மணக்கும்? மாமரத்தைப் பொறுத்தவரை அதன் மணம் பொதுவானது. பழம், காய், பூ, இலை, கிளை என ஒவ்வொரு பாகத்திலும் ஒத்த மணம் Hormonious ஆக இருக்கிறது. இந்தச் சுவையும் மணமும் இந்த தாவர வகைக்குப் பொதுவென்றாலும், நம்மால் இலைக்கும் கனிக்கும் ஒருவித பேதத்தை நுகர முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதிலும் மாமரங்களின் பல வகைக் கனிகள் தன் பொதுவான மாம்பழ வாசனைக்கு உட்பட்டு பல வெரைட்டிகளைக் கொண்டிருப்பது இயற்கையின் சுவாரஸ்யம். உதாரணமாக, பிஎம்டபிள்யூ கார்கள் ஒன்றுபோல ஒரே மாதிரியாக இருப்பதுதான் ஹார்மனி. ஆனால், X3 காரும், X5 காரும் ஒரே நிறுவனத்திலிருந்து வருகின்றன என்று யாராலும் பார்த்த உடனே சொல்லிவிட முடியும். மேலும், அவை பல தனித்துவ அடையாளங்கள் கொண்டவை என்பதும் உண்மைதானே? இதுதான் வெரைட்டி. இமாம் பசந்துக்கும், பங்கனப்பள்ளிக்கும், நீலத்துக்கும் தனித் தனி மணமும் சுவையும் உண்டு. ஆனால், பொதுவில் அது மாம்பழம்தானே?!
Balance என்பதைத் தமிழில் சமன்படுத்தும் சொல் சமன்பாடு. இரு வெவ்வேறான தன்மையுள்ள காரணிகளை, சில இடங்களில் முற்றிலும் எதிர்நிலையிலுள்ள காரணிகளைச் சரியாக விகிதத்தில் சமன்படுத்தும் செயல், இந்த பேலன்ஸிங் ஆக்ட். இதைக்கூட இயற்கையின் சமன்பாடுகளிலிருந்தே புரிந்துகொள்வோம்.
இரவு - பகல், ஆண் - பெண், இன்பம் - துன்பம் என்று பலவற்றை மேலும் நாம் அடுக்கலாம். இரவாகவே தொடர்ந்து வருடக்கணக்கில் நீண்டுகொண்டிருந்தால், எப்படி இருக்கும்? உலகத்தில் பெண்களில்லாமல் போனால்? மனிதர் யாவரும் நிறைகளையும் குறைகளையும் உள்ளடக்கியவர்கள். நிறை குறைகளை பேலன்ஸ் செய்யும் திறமையே வாழ்க்கை முறைமை. ஆனால், நாம் மதிக்கும், நேசிக்கும் ஒருவர் நிறைகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும் இந்த சமன்பாடும் தேவைப்பட வேண்டும். இந்த சமன்பாட்டுத் தத்துவத்தை இயற்கைக் கடைபிடித்தலால்தான் உலகில் உயிர்கள் நிலைத்திருக்கின்றன. வடிவமைப்பில் இந்த பேலன்ஸை எப்படிப் புரிந்துகொள்வது?
அழுத்தம், முக்கியத்துவம் என்பதே emphasize. வழக்கமாக திரைப்படங்களில் வரும் ஒரு நீதிமன்றக் காட்சியைக் கண்முன் கொண்டுவருவோம். அந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வந்தவர்கள், வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் எனப் பலர் அமர்ந்திருந்தாலும், நடுநாயகமாக நீதி அரசரை எவ்வாறு ஒரு பாமரனும் அறிந்துகொள்ள முடிகிறது என்று சிந்தித்தால், Emphasize என்பது என்ன என்பது தெரிந்துவிடும்.

உடையமைப்பில், அமரும் உயர்ந்த மேடையில், அருகில் சீருடை அணிந்த டவாலியின் பவ்யத்தில் என நீதிபதிக்கான முக்கியத்துவம் உறைந்திருக்கிறது. நீதிபதிக்கு ஏன் முக்கியத்துவம்? ஏனென்றால், அவர் தீர்ப்பு சொல்கிறவராக இருக்கிறார். தீர்ப்பின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைக்கு இந்த அழுத்தம் தேவைப்படுகிறது.
தேவையைப் பூர்த்தி செய்வதே ஒரு சிறந்த வடிவமைப்பின் நோக்கமாக இருக்கிறது. தேவைகள் பல கேள்விகளாக எழுப்பப்படுகின்றன. வடிவமைப்பாளன் தன் வடிவமைப்பின் மூலமாக அதற்குத் தக்க பதில் தருகிறான். மேற்சொன்ன Harmony, Balance, Emphasize ஆகிய மூன்றும் அவனுக்குத் துணைவரும் உத்திகள். மனித உடல், இயற்கையின் ஆகச் சிறந்த வடிவமைப்பு. அதிலும் மனித முகத்தை எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால், வடிவமைப்பின் அத்தனை கூறுகளையும் புரிந்துகொண்டு, அன்றாட வாழ்க்கையிலும் வடிவமைப்பிலும் பயன்படுத்தி சிறப்படையலாம்.
நமது முகத்தின் கம்போசிஷன் போல துல்லியமான கப்போசிஷன் எதுவுமில்லை. உருண்டையும் முக்கோணப் பெட்டகத்தாலும் ஆனது நம் முகம். கேட்டல், பார்த்தல், நுகர்தல், சுவைத்தல் இவற்றோடு ஒலி எழுப்புதல் ஆகிய ஐந்துவகை தலைசிறந்த உயிர்மைப் பண்புகள் தலைக்கு உண்டு. ஆகவே, தலை உச்சத்திலிருக்கிறது அல்லது உச்சத்திலிருக்கும் யாவையும் தலையென அறியப்படுகிறது.
ஒலி அலையாகப் படரும். எந்த நேரமும் நம்மைச் சுற்றி நிகழும் ஒலிகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோம். கண்களை மூடி உறங்கும்போதும் காதுகளை நாம் மூடுவதே இல்லை. கும்மென்ற இருளிலும் சப்தங்களால்தான் நமக்குவரும் ஆபத்தை அறிகிறோம். 360 டிகிரியும் ஒலியால் கவரப்பட இரு காதுகள். வலது இடது என 180 டிகிரிக்கு ஒன்றாக, தலையின் பக்கவாட்டின் நுனியில் அமைந்திருக்கும் இரண்டு காதுகளில், பல ஒலிகளை ஒரே நேரத்தில் கேட்க முடியும். உதாரணமாக, பாடல் கேட்கும்போது, வரிகளும் வயலின்களும் தபேலாவும் ஒருசேரவோ, தனித் தனியாகவோ கேட்க முடியும். அதனால்தான் வள்ளுவர், ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்கிறார். முகத்தின் முன் நெற்றியிலிருந்து தாடை முனை வரை உள்ள நீளத்தை மூன்றாகப் பிரித்தால், முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் துவங்கும் புள்ளியில் தொடங்குகிறது காது. கண்கள் அதன் நேர்கோட்டில்.
தங்கவிகிதத்தின் தங்கைதான் இந்த முப்பகுதி விதி. Rule of thirds. இரண்டாவது பகுதி கண்களின் மேல் தொடங்கி மூக்கின் அடிப்பகுதிக்கு ஒரு நேர்க்கோட்டில் முடியும்.

points of attraction என்று சில புள்ளிகளை முப்பகுதி விதி குறிப்பிடுகிறது. அந்த இடத்தில் சரியாக நம் கண்கள் இருக்கின்றன. இந்த கண்கள் இரண்டும் காதுகளைவிடவும் அருகில் இருக்கின்றன. கண்கள் இரண்டு, காட்சி ஒன்றுதானே!
நாம் ஏன் மற்றவர் கண்களைப் பார்த்தே பேசுகிறோம் என்றால், இயற்கையின் முப்பகுதி விதியில் Emphasize இந்த கண்கள்தான். மூடித் திறக்கிறோம். வலதும் இடதுமாக இரு காதுகள், கண்கள் இது Balance. இரு நாசித்துவாரங்கள் இப்போது இன்னும் அருகருகே வந்து ஒரே பாகமாக. மூக்கு ஓர் அவையம்தான். ஆனால், தனித்தனி துவாரங்கள். அதற்குக் கீழே வாய், ஒன்றே ஒன்று. இரண்டு செயல் உண்ண, பேச. தேவை, முக்கியத்துவம், சமன்பாடு என இறைவன் ஓர் அதிசய படைப்பாளி.
ஒலி புகும் செவி திறந்தே இருக்கும். ஒளி புகும் விழி நொடியில் மூடித் திறக்கும். வளி(காற்று) புகும் நாசி கெட்ட நாற்றத்துக்கு விரல்களால் மூடித்திறக்கலாம்.
காற்று, நீர், திடம் (உணவு) உள்புகும் வாய். ஒத்தமைதியும், பிரதிநிதித்துவ முக்கியத்துவமும் சமன்செய்கையுமாக வடிவமைப்பின் ஆகச் சிறந்த inspiration ஆக மனித முகம் இருப்பது பெரும் சுவராஸ்யமான ஒன்று.
இப்படிப்பட்ட முகத்தின் பாகங்களை மாற்றி கலைத்து வைத்து யோசித்துப் பாருங்கள். உதாரணமாக, கண்களுக்கு மேல் வாய் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்.
காரசாரமான கறி விருந்து சாப்பிடும்போது, உடையில் குழம்பு சிந்தி வழிந்துவிடுவது சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். இப்போதோ வாய்க்குக் கீழ் கண்கள்.... நினைத்துப் பார்க்கவே திகுதிகுவென எரிகிறது. இதிலிருந்து வடிவமைப்பில் கம்போசிஷன் என்பது என்ன என்று புரிந்துகொள்வது மட்டுமல்லாது, அதன் அவசியம் தெளிந்திருக்கும். அத்தோடு வடிவியல் கட்டமைப்பின் மூன்று காரணிகளும், முப்பகுதி விதியில் அவற்றின் நிலைகளும் கண்ணாடியில் முகம் தெரிவதுபோல பளிச்சென்று விளங்கியிருக்கும்.
- வடிவமைப்போம்