Published:Updated:

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

போட்டி - ஏமியோ VS டிசையர் VS அமேஸ் (டீசல்)தொகுப்பு: தமிழ்

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

போட்டி - ஏமியோ VS டிசையர் VS அமேஸ் (டீசல்)தொகுப்பு: தமிழ்

Published:Updated:
டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

ஸ்டைலில் அமைதிப் படைதான். ஆனால், விற்பனையில் அதிரடிப் படை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் டாப் 10 விற்பனைப் பட்டியலில்  அதிரடி காட்டிக் கொண்டிருக்கும். மாருதி, ஹூண்டாய்க்கெல்லாம் ஒரு வகையில் டஃப் கொடுத்துக்கொண்டிருக்கிறது ஹோண்டா.  இது வரை பிரியோ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டு வந்த அமேஸ், ஒரு  ஃபேமிலி காராகத்தான் இருந்து வந்தது. ஆனால், அமேஸ், இப்போ அதையும் தாண்டி அற்புதமான காராக மாறியிருக்கிறது. ஆம்! முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாராகி, ‘வேங்கையன் மவன்’போல் மிட் சைஸ் செடான் செக்மென்ட்டில் ஒத்தையாகக் களமிறங்கியிருக்கிறது அமேஸ்.

அமேஸுடன் போட்டி போட டிசையருக்குத்தான் முழுத் தகுதி உண்டு., ஆனால், இந்த முறை ‘நானும் வருவேன்’ என்று ஃபோக்ஸ்வாகன் ஏமியோவும் போட்டிக்கு ரெடியாகி இருந்தது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் மூன்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பொருத்தப்பட்ட டீசல் வேரியன்ட்ஸ்.

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!
டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

டிசைன்

அமேஸ்: பிளாட்ஃபார்ம் புதுசு என்பதால், காரும் புதுசு. இனி வரும் ஹோண்டா கார்களுக்கு இந்த பிளாட்ஃபார்ம்தான். பழசு, கொஞ்சம் மொழுக். புது அமேஸ் ரொம்பவும் மொழுக் இல்லை; ரொம்பவும் ஷார்ப் இல்லை. ஹை டென்ஸில் ஸ்டீல், அதே நேரத்தில் எடை குறைவு. பழைய அமேஸைவிட 40 கிலோ எடை குறைவு. ஆனால், நீளமும் அகலமும் அதிகம். பெட்ரோல் பங்க்கில் இருந்து ஒரு அமேஸ் வெளிவரும்போது, அக்கார்டு அல்லது சிவிக் நினைவுக்கு வரும். அந்தளவு பிரீமியம் லுக்! சிட்டி போல் LED ஹெட்லைட் இருந்திருந்தால், அமேஸ் அடுத்த லெவலுக்குப் போயிருக்கும்.

டிசையர்: டிசையருக்கு இது மூன்றாவது தலைமுறை. செகண்ட் ஜென் டிசையரைவிட 40 மிமீ நீளம் கூடியிருக்கிறது. 40 மிமீ உயரம் குறைந்திருக்கிறது. 20 மிமீ வீல்பேஸ் கூடியிருக்கிறது. 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், LED DRL கொண்ட புரொஜெக்டர் ஹெட்லைட் என்று டிசையர், கவர்ச்சி காட்டுகிறது! இதுவும் ஹை டென்ஸில் ஸ்டீல்தான். மாருதியின் புதிய ‘ஹார்ட்டெக்’ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவது டிசையரின் ஸ்பெஷல்.

ஏமியோ: வென்ட்டோவின் ட்வின் பிரதர் என்று இதை ஆரம்பத்தில் சொல்லி வந்தார்கள். ஆனால், உண்மையில் இது போலோவின் மூத்த அண்ணன். ஆம்! நன்றாகக் கவனியுங்கள். காரின் பானெட்டில் இருந்து பின் பக்க சீட் கதவுகள் வரை போலோவுக்கும் ஏமியோவுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இருக்காது. நீளம் அதிகமாகி இருப்பதால், ஏமியோவின் ரூஃப் கீழிறங்கி இருக்கும். இதுகூட நல்ல டிசைன்தான். டிக்கி டிசைன் பற்றி காமெடியாகவும் கமென்ட்கள் வருகின்றன. ஆனாலும் இந்த ஐரோப்பிய டிசைன் தீம், நிறைய வாடிக்கையாளர்கள் பார்வைக்கு எடுப்பாக இருப்பதாகவும் கருதுகிறார்கள்.

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

உள்ளே

அமேஸ்:
டூயல் டோன் கேபினை  ஸ்டைலாக வடிவமைத்துள்ளது ஹோண்டா.  போட்டியில் இருக்கும் மூன்றில் அமேஸில் மட்டும்தான் இந்த டீசல் AT வேரியன்ட்டில் டச் ஸ்கிரீன் இல்லை. ஆனாலும் ஃப்ரெஷ் லுக்கில் கலக்குகிறது. மெட்டீரியல் தரத்திலும், ஃபிட் அண்டு ஃபினிஷிலும் இப்போது முன்னேற்றம்.  பெரிய மேடு - பள்ளங்களில் ‘தடால்’ என இறக்கும்போது, க்ளோவ்பாக்ஸ் திறந்துகொள்வதாக பழைய அமேஸில் இருந்த புகார், இந்த அமேஸில் சரிசெய்யப்பட்டு விட்டது. முன் பக்க சீட்களும் நல்ல பிரீமியம் லுக். தோள்களுக்கான சப்போர்ட்டும் அருமை. பழைய அமேஸில் ஹெட்ரெஸ்ட் இருக்காது. இதில் அந்தக் குறை இல்லை.

டிசையர்:
மாருதியில் மர வேலைப்பாடுகள் உண்டு. ஸ்டீயரிங் ஓரம், கதவின் பவர் விண்டோ பட்டன்களுக்குக் கீழே, டேஷ்போர்டு ஏ.சி வென்ட்களுக்குக் கீழே என்று ஸ்டைல் ஓகேதான். ஆனால், இது அவுட்டேட்டட் டிசைன் ஆகிவிட்டதே!? சீட்கள் ரொம்பப் பெருசு. காம்பேக்ட் செடான் என்று சொல்லி டிசையரைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. பிரீமியம் கார் போல் விஸ்தாரமாக இருக்கின்றன சீட்கள். அங்கங்கே ஆம்பியன்ட் லைட்டிங் வேலைப்பாடுகளும் அருமை. பீஜ் வண்ண சீட் ஃபேப்ரிக்ஸ், சீக்கிரமாக அழுக்கடைந்து விட வாய்ப்புண்டு. மற்றபடி டயல்கள் கிளாஸிக் ஸ்டைலாக இருந்தாலும், ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் செம ஸ்போர்ட்டி.

ஏமியோ:
ஃபோக்ஸ்வாகனும் ஸ்போர்ட்டி ஃபீல் கிடைக்க பிரயத்தனப்பட்டிருப்பது தெரிகிறது. இங்கேயும் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல். டில்ட் மற்றும் டெலஸ்கோப்பிக் ஸ்டீயரிங், ஓட்டும்போது இன்னும் உற்சாகமாய் இருக்கிறது. கதவை மூடும்போதே ஒரு காரின் தரத்தைக் கண்டுபிடித்து விடலாம். ஜெர்மன் கார்களில் இந்தத் தரத்தைப் பற்றிச் சந்தேகப்படவே வேண்டியதில்லை. சுவிட்ச் கியர், சன் வைஸர் என்று எல்லாவற்றிலும் ரிச்னெஸ். சீட்களும் கம்ஃபர்ட். டிரைவர் சீட்டுக்கும் கோ-டிரைவர் சீட்டுக்கும் இடையில் இன்னும் கொஞ்சம் இடம் தாராளமாக இருந்திருக்கலாம்.

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

பின் பக்கம்:

அமேஸ்:
பின் சீட் பயணிகள், நிச்சயம் அமேஸில் அமர்ந்து வரும்போது சந்தோஷப்படுவார்கள். பழைய அமேஸைவிட தாராளமான லெக் ரூம். இதற்குக் காரணம், 65 மிமீ வீல்பேஸ் அதிகமாகி இருக்கிறது. ஆனால், உயரமானவர்களுக்கு லெக்ரூம் போதாது. சின்ன ஹெட்ரெஸ்ட்டையும், சென்டர் ஆர்ம்-ரெஸ்ட்டையும் வைத்து அட்ஜஸ்ட் செய்து சப்போர்ட் கொடுத்துக்கொள்ளலாம்.  ஏசி வென்ட்கள் சூப்பர்.

டிசையர்: டிசையரின் பின் பக்க சீட்களில் தொடைக்கான சப்போர்ட் இன்னும் வேண்டும். எல்லா கார்களிலும் இருக்கும் அதே பிரச்னைதான். பின் பக்க ஏசி வென்ட் துருத்திக்கொண்டிருப்பதால், நடு சீட் பயணிக்குத் திண்டாட்டம்தான். இதிலும் ஆர்ம்-ரெஸ்ட் உண்டு. மற்றபடி கம்ஃபர்ட் லெவல் ஓகே! இங்கே பின் பக்கப் பயணிகளுக்கு 12V சார்ஜிங் பவர் ஸாக்கெட் கொடுத்திருப்பது சூப்பர்.       

ஏமியோ: இங்கே லெக் ரூம் கொஞ்சம் லிமிட்டெட்தான். சீட் கேபின் மூன்று பேர் ரொம்ப வசதியாக அமர்ந்து வர முடியுமா என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இதில் சென்டர்-ஆர்ம் ரெஸ்ட்டும் இல்லை. ஆனால், முன் பக்கம் டிரைவருக்கு இருக்கிறது.

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

இன்ஜின்

அமேஸ்: இந்த செகண்ட் ஜென் அமேஸில் இருப்பது, ஹோண்டாவின் ஃபேவரைட்டான 1.5 லிட்டர் i-DTec டீசல் இன்ஜின்தான். வாவ்! அப்போ 100 bhp-யில் பறக்கலாம் என்று ஹோண்டா பிரியர்கள் நினைத்தீர்கள் என்றால், ஸாரி! இதில் 80bhp-க்கு பவரை ரீ-ட்யூன் செய்துவிட்டது ஹோண்டா. ‘சிவிடி கியர்பாக்ஸின் ஆயுளுக்காக இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறது ஹோண்டா. டார்க்கும் கணிசமாகக் குறைந்துள்ளது. 20kgm இல்லை; இங்கே 16தான்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த மாறுபட்ட ட்யூனிங்கால், பவர் டெலிவரியில் எந்தக் குறையும் தெரியவில்லை. ஹோண்டாவின் பெயரைக் கெடுக்கவில்லை இந்த CVT கியர்பாக்ஸ். 100bhp ஓட்டுவதுபோல்தான் இருக்கிறது. திராட்டில் இன்புட்டின்போது ஸ்மூத்தாக இருக்கிறது. வீட்டிலிருந்து அலுவலகம் போகும் கடும் டிராஃபிக்கிலும் சரி; ஆளே இல்லாத ஹைவேஸிலும் சரி - ஹோண்டாவின் CVT கியர்பாக்ஸ் எந்தக் குறையும் இல்லாமல் வேலை செய்கிறது. ஓவர்டேக்கிங்கில்கூட அவ்வளவாகப் பிரச்னை தெரியவில்லை. கொஞ்சம் சத்தம் போடுகிறது அவ்வளவுதான்.

அதிலும் ‘S’ மோடு, ‘Yes’ என்று துள்ளிக் குதிக்க வைக்கிறது. அத்தனை ரெஸ்பான்ஸிவ். இதுவே மலைச் சாலைகளுக்கு ‘Low’ எனும் ‘மோடு’ பயன்படுத்திப் பாருங்கள். அதுவும் ரெஸ்பான்ஸிவ்தான். ஆனால், பெட்ரோல் அமேஸ்போல பேடில் ஷிஃப்டரை இதில் மிஸ் செய்துவிட்டது ஹோண்டா. கியர்லீவர் வழியாக மேனுவல் இன்புட்டாவது கொடுத்திருக்கலாம்.

டிசையர்: ‘மாருதியா? ஃபியட் இன்ஜின்தானே’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம்! இதில் ஃபியட்டின் 1.3 லிட்டர் DDIS 190 டீசல் இன்ஜின். இங்கே இருப்பதிலேயே டிசையரில்தான் குறைவான பவர். 75 bhp. ஆனால், டார்க்கில் 19 kgm என்பது இந்த மிட் சைஸ் செடானுக்குச் சரியானதுதான். ஓட்டுதலில் எந்தக் குறையும் தெரியவில்லை. அதானே? டர்போ லேக்... 2,000 rpm வரை பாட்டம் எண்ட் பர்ஃபாமென்ஸில் அந்த லேக் இருக்கத்தான் செய்யும். ஓவர்டேக்கிங்கில் ஆக்ஸிலரேஷனில் ஏறி மிதிக்க வேண்டியிருக்கிறது. கியர் ஷிஃப்ட்டிங்கில் திணறல் தெரிகிறது. குறைவான வேகங்களில் லாங் ஷிஃப்ட்டிங் அப்படியே கண்ணுக்குக் கண்ணாடி மாதிரி தெரிகிறது. இதற்கு ஒரு வழி இருக்கிறது. அதாவது, மேனுவல் கியர். ஓவர்டேக்கிங்கில் மேனுவலாக கியர் மாற்றி சட் சட் எனப் பறக்க வேண்டியதுதான்.

ஏமியோ: இந்த மூன்றில் பல்க்கான டெக்னிக்கல் அம்சங்கள் கொண்டது ஏமியோ மட்டும்தான். 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில், 110 bhp பவர் கிடைக்கிறது. டார்க்கைக் கவனியுங்கள் (25 kgm) பம்பர் to பம்பர் டிராஃபிக்கில் அம்சமாக இருக்கும். அமேஸில் CVT, டிசையரில் 5 ஸ்பீடு AMT இருக்க, ஏமியோவில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ். சிட்டி பயணங்களில் ஸ்மூத்தாக கிரீப் ஆகி முன்னே செல்கிறது ஏமியோ. அதே நேரத்தில், வேகத்தை அதிகரிக்க நினைக்கும்போது, இனிஷியல் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மந்தமோ என்று தோன்றுகிறது. சில ஃபன் பார்ட்டிகள் இதை ரசிக்கமாட்டார்கள். அதே ஃபன் பார்ட்டிகளுக்கு ‘S’ மோடு ஆப்ஷன், செம உற்சாகத்தைக் கொடுக்கும். ட்வின் கிளட்ச் கியர்பாக்ஸ் துல்லியமாக வேலை செய்கிறது. அதாவது கியர் ஷிஃப்ட் டைமிங் அற்புதம். ஆனால், அமேஸின் CVT அளவுக்கு ஸ்மூத்னெஸ் மிஸ் ஆகிறது. இன்ஜின் ரிஃபைன்மென்ட்டிலும் ஃபோக்ஸ்வாகன் இன்னும் வேலை பார்க்க வேண்டும்.

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

ரைடிங் அண்டு ஹேண்ட்லிங்

அமேஸ்: 1,039 கிலோ எடை கொண்ட அமேஸை கார்னரிங்கில் ஓட்ட அற்புதமாக இருக்கிறது. லைட் வெயிட் ஸ்டீயரிங், கார்னரிங்கில் துல்லியமாக இருக்கிறது. மோசமான பள்ளங்களைக் கொஞ்சம் சாஃப்ட் ஆகவே சமாளிக்கிறது அமேஸின் ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப். 15 இன்ச் டயர்கள் இந்த செடானுக்கு ஓகேதான். நீளமும் அகலும் அதிகமாக இருப்பதாலோ என்னவோ, சிறிதாகத் தெரிகின்றன. பூட் ஸ்பேஸ் 420 லிட்டர். 4 பேர் அமர்ந்து, டிக்கி நிறைய பொருட்களை ஏற்றிச் சென்றால், ஸ்பீடு பிரேக்கர்களில் காரின் அடிப்பகுதி நிச்சயம் இடிக்கும்.

டிசையர்:
அமேஸைவிட, டிசையர் நெடுஞ்சாலையில் நல்ல நிலைத்தன்மையுடன் இருக்கிறது. சஸ்பென்ஷன் செட்-அப்பை நன்றாக வடிவமைத்துள்ளார்கள். மேடு பள்ளங்களில் பயணம் ஸ்மூத்தான். ஆனால், இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக் ‘ஆஹா ஓஹோ’ இல்லை. எடை அதிகம். அதனால், நகரங்களில் ஸ்டீயரிங் செல்ஃப் சென்டர் பொசிஷனுக்கு வர நேரம் பிடிக்கிறது. அதிவேகங்களிலும் ஃபீட்பேக் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. டிசையரின் டர்னிங் ரேடியஸ் 4.8 மீட்டர்தான். நகர்ப்புறச் சாலைகளில் சட்டெனத் திருப்பி யு-டர்ன் அடிக்க முடியும். இதன் பூட் ஸ்பேஸ், 378 லிட்டர்.

ஏமியோ: ‘நம்பிக்கை - அதானே வாழ்க்கை’ என்பதுபோல், ஏமியோவை ஓட்டும்போது நம்பிக்கை பிறக்கிறது. இந்த மூன்றில் அதிக எடை கொண்ட கார் ஏமியோ. 1,184 கிலோ என்பதால், நெடுஞ்சாலைக் காற்றில் மற்ற கார்களைப்போல் அலைபாயுமோ என்று பயப்பட வேண்டியதில்லை. பூட் ஸ்பேஸில் ரொம்பக் கஞ்சத்தனம். வெறும் 330 லிட்டர்தான். ஆனால், பின் சீட்டை மடித்துக்கொள்ளும் வசதிகொண்ட ஒரே கார் ஏமியோதான். அதேபோல், க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகொண்ட காரும் ஏமியோ மட்டும்தான். ஸ்டீயரிங்கும் எப்போதுமே நம்முடன் நல்ல தொடர்பில் இருக்கிறது. மேடு பள்ளங்களில் பயணத்தை ஸ்மூத் ஆக்குகிறது. மேலும், 16 இன்ச் அலாய் வீலும் ஏமியோவில் உண்டு. அதனால் ரைடிங் அண்ட் ஹேண்ட்லிங்கில் ஏமியோ, ரோமியோ!

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!

நெடுஞ்சாலைப் பயணங்களையும், சிட்டி டிரைவிங்கையும் ஃபன் ஆக்க வேண்டும் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்தால், சட்டென முன்னே வருவது ஏமியோ மட்டும்தான். இன்ஜினில் செம பன்ச். க்விக் ஷிஃப்ட்டிங் கியர். டெக்னிக்கல் அம்சங்களும் அதிகம். ஃபோக்ஸ்வாகனின் பில்டு குவாலிட்டி பற்றித் தெரியும்தானே? மேலும், ஒரு சிறந்த காருக்குத் தேவையான எல்லா அம்சங்களும் ஏமியோவில் உண்டு. ஆனால், விலையிலும் சர்வீஸ் காஸ்ட்டிலும் ஏமியோ ஏஞ்சல் இல்லை. மிட் சைஸ் செக்மென்ட்டில்... சர்வீஸும் விலையும்தானே முக்கியம்!

டீசல் களத்தில்... AT-க்குப் போட்டி!


மாஸ் நடிகர்களின் படங்களுக்கு கதையோ, டைரக்டரோ முக்கியமில்லை. சும்மா வந்தாலே போதும். அதுபோல்தான் மாருதி. மாருதிக்கு டிசைனோ, ரைடிங்கோ, இடவசதியோகூட முக்கியமில்லை. இதன் சர்வீஸ் நெட்வொர்க்குக்கும், சர்வீஸ் காஸ்ட்டுக்கும் மட்டுமே மாருதி கார்கள் மீது பித்துப் பிடித்து அலைவார்கள் வாடிக்கையாளர்கள். டிசையர்தான் இப்போதைக்கு மார்க்கெட் லீடர். மைலேஜிலும் அப்படித்தான். ஆனால், இதன் 5 Speed AMT கியர்பாக்ஸ், ஃபன் டிரைவர்களுக்கு எந்தளவு பிடிக்கும் என்று தெரியவில்லை. அமேஸின் CVT, ஏமியோவின் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸை ஓட்டிவிட்டு, டிசையரை ஓட்டிப் பார்க்கச் சொன்னால், டிசையருக்கு ஓட்டு குறைவாக விழலாம்.

இந்த நேரத்தில் ஆல்-ரவுண்டராக அசத்துகிறது ஹோண்டா அமேஸ். இன்ஜின் - கியர்பாக்ஸ் காம்போதான் இதன் ப்ளஸ்! தாராளமான இடவசதி, சொகுசான சீட்கள் என்று ஒரு குடும்பத்தை அரவணைக்கும் செல்லமாக இருக்கிறது அமேஸ். இங்கே அமேஸ் ஜெயிப்பதற்குக் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம். விலை. இந்த மூன்றில் கணிசமான விலையில் நல்ல பேக்கேஜாகக் கிடைப்பது அமேஸ்தான். டிசையரைவிட 60,000 ஏமியோவைவிட 1.3 லட்சம் என்று அள்ளித் தரும்போது அமேஸைத் தவிர்க்க மனசிருக்காது. ஆம்! அமேஸ், இப்போ ரொம்ப அமேஸிங்!