Published:Updated:

ஹெட்லைட் ஹைலைட்ஸ்!

ஹெட்லைட் ஹைலைட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெட்லைட் ஹைலைட்ஸ்!

ஏன் எதற்கு எப்படி? - ஹெட்லைட்தமிழ்

ஹெட்லைட் ஹைலைட்ஸ்!

ஏன் எதற்கு எப்படி? - ஹெட்லைட்தமிழ்

Published:Updated:
ஹெட்லைட் ஹைலைட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெட்லைட் ஹைலைட்ஸ்!

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதுபோல், ஒரு வாகனத்தின் மொத்த அழகும் அதன் ஹெட்லைட்டிலேயே தெரிந்துவிடும். அழகு மட்டுமில்லை; இரவில் இருள் விலக்கி வழியில் ஒளிவீசி, நம் பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதும் ஹெட்லைட்தான். ஹெட்லைட் நமக்கு மட்டுமில்லை; அடுத்தவர்களுக்கும் பாதுகாப்பு. அதற்குத்தான் இப்போது பகலிலேயே எரியும்படி டே டைம் ரன்னிங் ஹெட்லைட் ஆப்ஷனும் சட்டமாகிவிட்டது. ‘சுவிட்சைப் போட்டால் லைட் எரியும்’ என்பதைத் தாண்டி சில ஹெட்லைட் ஹைலைட்ஸ்கள் இதோ!

1890-களில் சிம்னி விளக்குபோல், காற்று-மழை ரெஸிஸ்டென்ட்டான Acetylene எனும் திரவம் ஊற்றி எரியும் சாதாரண விளக்குகளைத்தான் வாகனங்களுக்குப் பயன்படுத்தி வந்தனர். அதற்கப்புறம் 1898-ல் எலெக்ட்ரிக் ஹெட்லைட் வந்தது. இது எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில்தான் வந்தது. இவற்றின் வாழ்நாள் கொஞ்ச காலம்தான். கெடிலாக் நிறுவனம்தான், கார்களில் எலெக்ட்ரிக் ஹெட்லைட்ஸை முதன் முதலாக ஸ்டாண்டர்டு ஆப்ஷனாகக் கொண்டுவந்தது.

அதன் பிறகு, டயனமோ ஹெட்லைட் வந்தது. அதாவது, நீங்கள் கொடுக்கும் ஆக்ஸிலரேஷனுக்கு ஏற்ப இந்த ஹெட்லைட்டில் பவர் கிடைக்கும். பழைய டிவிஎஸ் 50, பஜாஜ் M80 போன்ற வாகனங்களில் இதைப் பார்த்திருக்கலாம். ஐடிலிங்கில் டல் அடிக்கும் ஹெட்லைட், ஆக்ஸிலரேஷனில் ‘கிர்’ரென எரியும். அப்புறம், 1990-களில் வட்ட வடிவ ஹெட்லைட்கள் கார்களில் ஸ்டைலாக வந்தன. பிறகு படிப்படியாக ஹாலோஜன், HID, புரொஜெக்டர் என்று ஹெட்லைட்டிலேயே வெரைட்டி காட்ட ஆரம்பித்துவிட்டன நிறுவனங்கள்.

ஹெட்லைட் ஹைலைட்ஸ்!

எத்தனை வகை?

சாதாரண டியூப் லைட்களில் இருக்கும் ஃபிளமன்ட் (Filament) கொண்ட ஹெட்லைட்டுகளுக்குப் பெயர் Incandescent பல்புகள். பேட்டரியில் இருந்து கிடைக்கும் அதிக ஆற்றலை எடுத்துக்கொண்டு, சுமாரான வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்த இந்த பல்புகளுக்கு ஆயுள் குறைவு. வாகனத்தை ஆஃப் செய்துவிட்டு ஹெட்லைட்டை மட்டும் ஆஃப் செய்ய மறக்கும்பட்சத்தில், இதன் பேட்டரி சர்ரென இறங்குவதுதான் இதன் மைனஸ்.

இதை ஓரளவு தடுக்கத்தான் ஹாலோஜன் பல்புகள் வந்தன. இப்போதைக்கு இருக்கும் பாதி பட்ஜெட் கார்களில் இருப்பது ஹாலோஜன் பல்புகள்தான். இந்த வகை பல்புகளுக்கு இன்காண்டிஸன்ட் பல்புகள் அளவு எனர்ஜி வீணாகவில்லை. ஒளியும் டபுள் ஓகே! பேட்டரி டிரெய்னிங்கும் அந்தளவு இருக்காது.

அடுத்தது, HID எனும் (High Intensity Discharge) பல்புகள். இதில் ஸெனான் எனும் வாயு பயன்படுத்தினால், இதை ஸெனான் லைட்ஸ் என்றும் சொல்லலாம். பெரிய ஸ்டேடியங்கள் மற்றும் தெரு விளக்குகளில் இருப்பது HID பல்புகள்தான். இதில் ஃபிளமன்ட் கிடையாது. அதற்குப் பதில் இதில் இரண்டு எலெக்ட்ரோடுகள் உண்டு. வாயு மற்றும் உலோகக் கலவை. ஸெனான் எனும் வாயு மற்றும் சில உலோகக் கலவைகள் எலெக்ட்ரிக்கலாக சூடாக்கப்பட்டு, அதில் கிடைக்கும் ஒளிதான் HID பல்பின் வெளிச்சம். நல்ல பிரைட்டாக வெள்ளை குளோவுடன் நீல நிற அவுட்லைனுடன் வெளிச்சம் தெரிந்தால், அது ஸெனான் லைட்.

இது ஹாலோஜன் பல்புகளைவிட மூன்று மடங்கு வெளிச்சம் பாய்ச்சும். அதேநேரம், இதில் பவர் கன்ஸம்ப்ஷனும் குறைவு. ஹாலோஜன் பல்புகள் 55 வாட் பவரை எடுத்துக்கொண்டால், HID ஹெட்லைட்டுகள் 35 வாட் பவரை மட்டும்தான் எடுத்துக்கொள்கின்றன. HID லைட்டுகள், நல்ல தரமான வெளிச்சத்தைப் பீய்ச்சியடிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், இதில் ஸெனான் வாயு 10 விநாடிகளுக்குள் இந்த வேலையை முடிக்க உதவுகிறது. இதிலேயே பை-ஸெனான் ஹெட்லைட்ஸ் உண்டு. இது ஹைபீம் வெளிச்சத்துக்கான பல்ப். ஹூண்டாய், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் HID பல்புகளைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன.

அடுத்து, புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ். 1980-ல்தான் புரொஜெக்டர் ஹெட்லைட் முதன்முதலாக வந்தது. எனவே, இப்போதைக்கு புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் கொண்ட ஒரு கார், பிரெஸ்டீஜியஸ் கார் என்பதை நினைவில் கொள்க. சுற்றிலும் கண்ணாடிகள் கொண்ட ஒரு ஸ்டீல் கிண்ணம், அதற்குள் ஒரு பல்ப் - இதுதான் இங்கே ரெஃப்ளெக்டர். இங்குள்ள லென்ஸ் மூலம் லோ பீமில்கூட ஒளியின் வேகம் பல மீட்டர்களுக்கு, சரியான கோணத்தில் டவுன்சைடில் பீய்ச்சி அடிப்பதுதான் புரொஜெக்டர் ஹெட்லைட்டின் ஸ்டைல். ஹாலோஜன், LED, HID என்று எந்த பல்புகளிலும் புரொஜெக்டர் லென்ஸைப் பொருத்திக்கொண்டால், அதுதான் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்.

ஹெட்லைட் ஹைலைட்ஸ்!

LED ஹெட்லைட்ஸ் அடுத்த லக்ஸூரி ஐட்டம். Light Emiting Diode. இதுதான் LED. இங்கே ஃபிளமன்ட் கிடையாது. அதனால், எரிந்து விடுமோ அல்லது உடைந்து விடுமோ என்கிற பயம் தேவையில்லை. சின்ன செமி கண்டக்டர் சிப் மூலம், ஏகப்பட்ட எலெக்ட்ரான்களின் பயணத்துக்கு ஏற்ப வெளியே வரும்போது கிடைக்கும் வெளிச்சம் LED லைட்டிங். சுருக்கமாகச் சொன்னால், சின்ன பல்புகள் ஒரு எலெக்ட்ரிக்கல் சர்க்யூட்டுக்குள் ஃபிட் செய்யப்பட்டிருப்பதுதான் LED. ரொம்ப தூரத்துக்கு இதன் LED டயோடுகள் வெளிச்சத்தைப் பீய்ச்சும். DRL, ஹெட்லைட், டெயில் லைட் என்று எல்லா வற்றுக்கும் LED பயன்படுத்துவதுதான் லேட்டஸ்ட் ஸ்டைல். ஹாலோஜன், ஸெனானை ஒப்பிடும்போது, இதில் ஆற்றலைக் குறைவாக எடுத்துக்கொண்டு, பவரை அதிகமாகக் கொடுக்கும். LED ஹெட்லைட்ஸ், 300 - 350 மீட்டர் வரை வெளிச்சம் அடிக்கும்.

அடுத்து, லேஸர் லைட். உருவத்தை வைத்து எடை போடக் கூடாது என்பது லேஸர் லைட்டுக்குப் பொருந்தும். சின்ன லேஸர் டயோடுகள் மூலம் கிடைக்கும் இந்த வெளிச்சம், அபாரமானது. இத்தனைக்கும் LED லைட்ஸைவிட பாதி எனர்ஜி கன்ஸம்ப்ஷன்தான் இதற்குத் தேவைப்படும் என்றால், இதன் சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள். அதாவது, பேட்டரி ஆற்றல் அவ்வளவாக வேஸ்ட் ஆகாது என்பதுதான் இதன் ஸ்பெஷல். LED-யைவிட அப்படியே பாதி மடங்கு, அதாவது 600 மீட்டர் வரை வெளிச்சத்தைப் பீய்ச்சியடிக்கும் லேஸர் லைட்ஸ். பிஎம்டபிள்யூ i8, ஆடி R8 போன்றவற்றில் இருப்பது லேஸர்தான்.

ஆயுள் எவ்வளவு?

மற்ற பாகங்களைப்போல் இல்லை; ஹெட்லைட்டுகளுக்கென்று வாழ்நாள் காலம் உண்டு. வயது ஆக ஆக, இதன் சக்தியும் குறைந்துகொண்டே வரும் என்பது நிஜம். பொதுவாக, ஹாலோஜன் பல்புகளுக்கு வாழ்நாள் காலம் என்பது ஓர் ஆண்டு. இதுவே HID மற்றும் ஸெனான் பல்புகளுக்கு இரண்டு ஆண்டுகள். LED ஹெட்லைட்கள், 4 முதல் 5 ஆண்டுகள் வரைகூட எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.

எப்படிப் பராமரிப்பது?


சில பல்புகள் சரியாக ஒளி வீசாமல், மங்கலடிக்கும். ஹெட்லைட்டுகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது, ஃபிளமென்ட் பக்கத்தில் அழுக்குப் படிவது, மழை நேரங்களில் தண்ணீர் உள்ளே செல்வது, ஆல்டர்னாட்டர் கோளாறு என்று சில காரணங்களால் இந்தப் பிரச்னை இருக்கும். இது தவிர, ஹெட்லைட்டுகளில் விரிசல் இருக்கிறதா, பல்புகள் உடைந்திருக்கிறதா என்றும் சோதனை செய்துகொள்ளுங்கள். லேட்டஸ்ட் மாடல் கார்களில், பல்பு மாற்றுவது அத்தனை ஈஸி இல்லை. எனவே, ஷோரூம் மெக்கானிக்குகளிடம் சொல்லி மாற்றுவதே சிறந்தது. சிலர் ஹெட்லைட்டுகளைச் சுற்றி பம்பர் ஃபிட் செய்திருப்பார்கள். இது ஹெட்லைட்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் நமக்கு?

ஹெட்லைட் ஹைலைட்ஸ்!

லோ பீம் ஹை பீம் எப்போது பயன்படுத்த வேண்டும்?

ஒளியை தேவையான இடங்களுக்கு டிஸ்ட்ரிப்யூட் செய்யும் முறைதான் ஹை பீம், லோ பீம் முறை. லோ பீம், கொஞ்சம் கீழ்நோக்கி சாலை தெரியும்படி இருக்கும். இது எதிரில் வரும் டிரைவர்களைப் பாதிக்காது. ஹை பீம், அப்படியே நேரெதிர். மேல்நோக்கியும், சாலையில் உள்ள தடைகள் எல்லாம் நன்கு தெரியும்படியும் இருப்பது ஹைபீம். நெடுஞ்சாலைகளில் 4-வே ட்ராக்குகளில், காட்டுப் பயணங்களில் மட்டும்தான் ஹைபீம் நல்லது. அல்லது டிராஃபிக் இல்லாத இடங்களில் ஹைபீம் பயன்படுத்தலாம். லோ பீமைவிட ஹைபீம் வெளிச்சம், 100 அடிக்கு இருக்கும். இதனால் நல்ல விஸிபிளிட்டி கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், எதிரில் வரும் டிரைவர்களுக்குக் கண்ணைக் கூசி, அவர்களின் பார்வையை மறைக்கும். இந்த நேரத்தில் சாதாரண லோ பீமுடன், பனி விளக்குகளையும் ஆன் செய்து கொண்டால் ஓரளவு விஸிபிளிட்டி கிடைக்கும். ஆஃப்டர் மார்க்கெட்டில் சைடு லைட்ஸ்கூட வாங்கி, காரின் பக்கவாட்டில் பொருத்திக்கொள்ளலாம். நீங்கள் வழக்கமாகச் செல்லும் சாலைகளில், டிராஃபிக் அதிகமான ஏரியாக்களில், தெருக்களில் ஹைபீம் வேண்டாமே!