கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

வாங்கிய புது கார் பிடிக்கலையா?

வாங்கிய புது கார் பிடிக்கலையா?
பிரீமியம் ஸ்டோரி
News
வாங்கிய புது கார் பிடிக்கலையா?

கார் வாங்குவது எப்படி? - 8தமிழ் - படங்கள்: விநாயக்ராம்

ந்த விஷயத்தைச் செய்யும்போதும், ‘இது சரியா தப்பா’ என்று பல தடவை யோசிக்க வேண்டும்; செய்து முடித்தபின் ஒரு தடவைகூட யோசிக்கக் கூடாது. கார் வாங்கும் விஷயத்துக்கு இது மிகவும் பொருந்தும். கார் வாங்கும் முன், இது நமக்கு செட் ஆகுமா? நம் குடும்பத்துக்கு ஏற்ற காரா என்று பல முறை யோசிக்கலாம். ஆனால், வாங்கிய பிறகு அந்த கார்தான் நமக்கு எல்லாமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சில கார்கள் வாங்கும் வரை மயக்கும். வாங்கிய பிறகு ‘ஏண்டா வாங்கினோம்’ என்று சலிக்க வைத்துவிடும்.  காரின் டிசைன் நன்றாக இருக்கும்; மைலேஜும் பட்டையைக் கிளப்பும்; பராமரிப்புச் செலவும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், காரில் இருக்கும் ஒரு சின்ன வசதிக் குறைபாடு, மன உளைச்சலை ஏற்படுத்தும்.

நண்பர் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். டிசையர் கார் புக் செய்தார். மாருதி கார்களில் மைனஸ் ஏது? டிசையர் பற்றிச் சின்னக் குழந்தை கேட்டால்கூட, ‘ஃபியட் இன்ஜின், நல்ல மைலேஜ், ‘ஃபன் டு டிரைவ்’... என்று சொல்லும். ஆனால், கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீதான். நண்பரின் வீட்டில் காரை பார்க் செய்ய, லேசான மேட்டில் ஏறி/இறங்க வேண்டும். இதுதான் அவருக்குப் பெரிய பிரச்னை. ஒவ்வொரு தடவை காரை ஏற்றி, இறக்கும்போதும் ‘மடால் மடால்’ என முன் பக்க பம்பர் அடி வாங்கும்போது, அவர் மனசு வலிப்பதாகப் புலம்புவார்.

வாங்கிய புது கார் பிடிக்கலையா?

பரபரப்பான தெரு என்பதால், வெளியேயும் காரை பார்க் பண்ண முடியாது. ‘எப்படா காரை மாற்றுவோம்’ என்று 2 ஆண்டுகள் காத்திருந்து, குறைந்த விலைக்கு டிசையரை விற்றுவிட்டு, எக்கோஸ்போர்ட் வாங்கிவிட்டார். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ. ‘‘இப்பதாங்க நிம்மதியா இருக்கேன். டிசையர்ல எத்தனை தடவை பம்பரை மட்டும் மாத்தியிருக்கேன் தெரியுமா?’’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் நண்பர்.

இன்னொரு நண்பர் - ‘மாருதிதான் எல்லோரும் வாங்குறாங்களே... யூனிக்கா தெரியணும்’ என்று அவர் வாங்கிய கார் ஹூண்டாய் எலீட் i20. ஹூண்டாய் கார்களைப் பற்றிய அவரின் கணிப்பு இது. மாருதியைவிட டிசைன் அசத்தலாக இருக்கும்; இடவசதி தாராளமாக இருக்கும்; எத்தனை தூரம் பயணித்தாலும் பயண அலுப்பு தெரியாது; ரியர்வியூ கேமராவில் இருந்து காற்றுப் பைகள் வரை ஏகப்பட்ட வசதிகள் உண்டு. இந்தக் கணிப்புகள் எல்லாமே சரிதான். ஆனால், அவர் வாங்கியது பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார் என்பதால், நினைத்த அளவுக்கு மைலேஜ் தரவில்லை என்பதில் அவருக்கு பெரிய ஏமாற்றம். கார் வாங்கும் முன்பு i20 பற்றி விசாரித்த அவர், பெட்ரோலுக்கான மைலேஜை விசாரிக்கவில்லை என்பது சோகம். ‘‘பெட்ரோல் விக்கிற விலையில் ஒரு லிட்டருக்கு ரொம்பக் கம்மியா மைலேஜ் தந்தா எப்படி வண்டியை ஓட்டுறது?’’ - இப்படித்தான் இருக்கிறது அவரது புலம்பல்.

பில்டு குவாலிட்டிக்காக ஃபியட் வாங்கி விட்டு சர்வீஸுக்கு அலைந்தவர்கள்... பிராண்டுக்காக ஃபோக்ஸ்வாகன் வாங்கிவிட்டு பராமரிப்புச் செலவுகளால் பர்ஸ் காலியானவர்கள்... ‘6 சீட்டர் இருக்கே’ என்று KUV1OO வாங்கிவிட்டு, குறைவான பூட் வசதியால் (243 லிட்டர்) அவதிப்படுபவர்கள்... இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை இருக்கும்.

‘ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும்’ என்பதை கார் வாங்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இட வசதி அதிகமாக இருக்கும் காரில், எக்யூப்மென்ட் வசதிகள் அவ்வளவாக இருக்காது. வசதிகள் இருக்கும் கார், பராமரிப்புச் செலவுகளில் பின்னி எடுக்கும். சில கார்களில் கி.கிளியரன்ஸ் அதிகமாக இருக்கும்; ஆனால், பர்ஃபாமென்ஸ் மிஸ் ஆகும். பர்ஃபாமென்ஸ் இருக்கும் காரில் மைலேஜை எதிர்பார்த்தால், அது நம்ம தப்பு!

இதைப் புரிந்து கொண்டுவிட்டால், ஆல் இஸ் வெல். சரி; அதையும் தாண்டி வாங்கிய கார் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றால், அடுத்த நடவடிக்கை என்ன? அதனால் வரும் பாதிப்புகள் என்ன? இதற்கும் ஒரு கதை சொல்ட்டா சார்?

வாங்கிய புது கார் பிடிக்கலையா?

காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார் ஒன்றை புக் செய்து, டெலிவரியும் எடுத்துவிட்டார் அவர். ஆனால், வீட்டில் உள்ளவர்களுக்கு புது காரைப் பார்த்த சந்தோஷம் இருந்தாலும், பயணத்தில் மகிழ்ச்சி இல்லை. காரணம், வயதானவர்களால் அந்த காரில் எளிதாக ஏறி இறங்க முடியவில்லை. காரின் உயரம் குறைவு என்பதால், ஹெட்ரூமும் குறைவு. இதனால், தலையைக் குனிந்து கொண்டே பயணிப்பது அவர்களுக்குப் பெரிய தண்டனையாக இருந்தது. விஷயம் இதுதான் - காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது இவர் தனியாகச் சென்று புக் செய்ததால்தான் இந்தப் பிரச்னை. ‘‘இது வேணாம்டா... எங்களால முடியலை’’ என்று குடும்பத்தினர் போர்க்கொடி தூக்கியதன் விளைவு - வாங்கிய இரண்டே மாதங்களுக்குள், அதாவது இரண்டாவது சர்வீஸ்தான் முடிந்திருக்கிறது. அதற்குள் காரை விற்கும் முடிவுக்கு வந்துவிட்டார் அவர்.

ஷோரூமிலேயே இது அட்வைஸபிள் இல்லை என்று மறுத்துவிட்டார்கள். அதுவுமில்லாமல், பயங்கரமான பண இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றார்கள். OLX போன்ற வலைதளங்களிலும் காரை விளம்பரம் செய்ய, ‘புது காரை ஏன் விற்கிறீங்க’... ‘கார்ல ஏதும் பிரச்னை இருக்கோ’ என்று நாலு பேர் நாலுவிதமாகக் கேட்டு, அடிமாட்டு விலைக்கு காரைப் பேரம் பேசினார்கள். இப்போது வேறு வழியே இல்லாமல், அதே காரைத்தான் ஓட்டி வருகிறார் அவர்.

புது காரை விற்கலாமா?

எந்த காரையுமே 2 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தால், அது உரிமையாளருக்கு நிச்சயம் நஷ்டம்தான். அதிலும் வாரக் கணக்கில் காரை விற்றால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். காரின் எக்ஸ் ஷோ-ரூம் விலையிலிருந்துதான் டிப்ரிஷியேஷன் நடக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் 5.60 லட்சத்துக்கு ஒரு காரை ஆன்ரோடு விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை -  கிட்டத்தட்ட ரூ.4.65 லட்சமாக இருக்கும். இதிலிருந்து சுமார் 25%-த்தில் இருந்து 30% வரை மதிப்பீடு குறையும். உங்கள் கார் 3.25 லட்ச ரூபாய்க்குத்தான் விலை போகும். இதனால் உங்களுக்கு சுமார் 1.50 லட்சம் வரை இழப்பு!

இதைத் தாண்டி, நேர விரயம் செய்து வலைதளங்களில் காரை பிளாக்கில் விற்பது உங்கள் திறமையைச் சார்ந்தது. எனினும் கார் வாங்கும் விஷயத்தில், ‘வரும் முன் காப்பது’தான் மன உளைச்சலைத் தடுக்கும். உங்கள் கார்; உங்கள் உரிமை!

- கார் வாங்கலாம்

சென்ற இதழில் கேஷ்பேக் ஆஃபர் குறித்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸின் மேலாளர் கேசவனின் பேட்டியில், ‘கேஷ்லெஸ் சர்வீஸ்’ என்பதற்குப் பதில் ‘கேஷ்பேக் ஆஃபர்’ என்று பிரசுரமாகி விட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.