கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!

காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!
பிரீமியம் ஸ்டோரி
News
காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!

மஹிந்திரா - மான்சூன் சேலஞ்ச்ரஞ்சித் ரூஸோ - படங்கள்: கா.பாலமுருகன்

காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!

ரேஸ் என்றால், அதற்கு வேகம் மட்டும்தான் தேவை. ராலி என்றால், அதற்கு வேகம், விவேகம், சமயோசிதம், பொறுமை எல்லாமே தேவை! ராலியில் TSD (Time, Speed, Distance) என்பது, செம பாப்புலர். மஹிந்திராவும் இந்தியன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பும் (IMSC) இணைந்து நடத்தும் மஹிந்திரா மான்சூன் சேலஞ்ச் ராலியில், இந்த ஆண்டும் மோட்டார் விகடன் கலந்துகொண்டது. மஹிந்திரா KUV 100 காரின் ஸ்டீயரிங்கை உற்சாகத்தோடு பிடித்தோம். நேரம், வேகம், தூரம் மூன்றையும் எப்படித் துல்லியமாகக் கணிக்கிறோம் என்பதே TSD ராலியின் சூட்சுமம்.

மஹிந்திரா மான்சூன் சேலஞ்சின் 8-வது சீஸன், ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்றது. ஓப்பன், சேலஞ்ச், நோவைஸ், கார்ப்பரேட், டாக்டர், லேடீஸ், கப்புள்ஸ், மீடியா என மொத்தம் எட்டு தனிப்பிரிவுகளில் ஒரு டீமுக்கு இரண்டு பேர் என பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், துபாய், இலங்கை ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் கலந்துகொண்டனர். ஓப்பன் மற்றும் சேலஞ்ச் கிளாஸ்கள், புரொஃபஷனல் ரேஸர்கள் ஓட்டுவது. இரண்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். சேலஞ்ச் கிளாஸில் இந்தியன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பால் அங்கீகரிக்கப்பட்ட நேவிகேட்டர்கள் இருக்க மாட்டார்கள்.

காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!

வெரிட்டோ முதல் TUV 300 வரை எல்லா மாடல் மஹிந்திரா கார்களுடனும் போட்டியாளர்கள் வந்திருந்தனர். XUV 500 மற்றும் Thar-தான் போட்டியில் அதிகம். காரணம்,  XUV 500 காரில் 4வீல் டிரைவ் உள்ளது. மஹிந்திரா தார், ஆஃப் ரோடிங்குக்காகவே உருவாக்கப்பட்டது. மங்களூரிலிருந்து கோவா வரை செல்வதுதான் இலக்கு. காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் குறிப்பிட்டு, அந்த நேரத்தில் அவர்கள் ஸ்டார்ட் லைனிலிருந்து புறப்படவேண்டும். ரேஸ் ஆரம்பிக்கும் முன்பு, போகும் இடத்துக்கான மேப் மற்றும் டைம் ஷீட் கொடுக்கப்படும். டைம் ஷீட்டில், இலக்கை அடையவேண்டிய நேரமும், குறிப்பிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்ட வேகத்தையும் பதிவுசெய்திருப்பார்கள். பஸ்ஸில் செக்கிங் நிற்பதுபோல ராலியில் Time Checker (TC) எங்கேயாவது மறைந்து நிற்பார். அவரிடம் கையெழுத்து வாங்குவது அவசியம். நாம் சரியான வேகத்தில்தான் செல்கிறோமா என்பதை இவர் கவனிப்பார். வேகம் குறைவாகச் சென்றால் ஒரு மடங்கு பெனால்ட்டி; வேகம் அதிகமாகச் சென்றால் டபுள் பெனால்ட்டி!

எல்லா ரேஸ்களிலும் டிரைவர்தான் முக்கிய நபராக இருப்பார். ஆனால், ராலியில் நேவிகேட்டர்தான் முக்கிய நபர். நேவிகேட்டர் என்றால், மேப்பை மட்டும் பார்த்து வழி சொல்பவர் அல்ல. ஒரு கண் சாலையிலும், மறு கண் ஓடோ மீட்டரிலும் எப்போதுமே இருக்கவேண்டும். ராலி முழுவதும் நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். காரின் வேகத்தையும் பார்க்க வேண்டும். எங்கேயாவது TC நிற்கிறாரா என்பதையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லாமே சரியாக இருந்தால்தான் ஜெயிக்க முடியும்.

காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!

டிரைவரின் வேலை, நேவிகேட்டர் சொல்லும் வேகத்தில் காரை ஓட்டவேண்டியது. ஒரே வேகத்தில் காரை ஓட்டுவது என்பது ஒரு திறமை. அதுவும் நெடுஞ்சாலை, டிராஃபிக், ஹேர்பின் பெண்டு, குறுகலான மலைச்சாலை, சகதி என எல்லாவிதமான ஆன்ரோடு ஆஃப் ரோடு சாகசச் சாலைகளிலும், ஒரே வேகத்தை மெயின்டெயின் செய்வது சுலபமல்ல. நாம் வளைவுகளிலும் ஸ்பீடு பிரேக்கரிலும் குறைக்கும் வேகத்தை, எப்படி நேர்சாலையில் ஈடுகட்டுவது என்பதை டிரைவர் பார்த்துக்கொள்வார். இதிலும் நேவிகேட்டருக்கு ஒரு பங்கு உண்டு. நேரத்தையும், வேகத்தையும், தொலைவையும் கணக்கிட்டு, சரியான வேகத்தில் செல்கிறோமா? வேகத்தை எவ்வளவு கூட்ட வேண்டும்; எவ்வளவு குறைக்க வேண்டும் என்பதை அடிக்கடி கணக்கிட்டுச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கணக்குகள் எல்லாம் சவாலே அல்ல. இதைவிடப் பெரிய சவால், மழையில் காரை ஓட்டுவதுதான்! அதிர்ஷ்டவசமாக, போட்டியின்போது எங்குமே பெரிய மழையில்லை என்பதால், மரம் விழுவது மண் சரிவு போன்றவற்றிலிருந்து தப்பித்தோம்.

ராலி எப்போதும் காட்டுப் பகுதியில்தான் நடைபெறும். மூடுபிதிரி, கர்காலா வழியாகச் சென்று குரின்ஜல் மலையைக் கடந்து, பெகார் வழியாக ஆகும்பே காடுகளுக்குள் நுழைந்து, மீண்டும் நெடுஞ்சாலையைப் பிடித்து முர்டேஷ்வருக்குச் செல்வதுதான் முதல் நாள் பிளான். குரின்ஜல் மலைப்பகுதியும், ஆகும்பே காடும் போதும்... மேற்குத் தொடர்ச்சி மலையின் செழிப்பைச் சொல்ல! வழியெங்கும் அருவிகள், பச்சை மரங்கள், புல்வெளிப் பிரதேசங்கள், மலைகள். காரை நிறுத்திவிட்டு ஒரு செல்ஃபி எடுத்துவிட்டுப் போகலாம் எனத் தோன்றும் அளவுக்கு அழகு. ஆனால், TSD ராலியில் நேரத்தை மெயின்டெயின் செய்யவேண்டும் என்பதால், செல்ஃபி கனவை ஓரம் வைத்துவிட்டு கார் ஓட்டினோம்.

காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!

மோட்டார் விகடனுக்கு ராலி புதிதல்ல. ஆனாலும், முதல் நாள் ராலி ஆரம்பித்த உடனேயே வழியைத் தவறவிட்டோம். மீண்டும் வழியைக் கண்டுபிடித்து வேகத்தைக் கூட்டி வெறும் 00.01:34 நிமிடத் தாமதத்தில் முதல் TC-யை அடைந்தோம். அடுத்தடுத்த பாயின்ட்களைத் தவறவிடாமல் சரியான நேரத்தில் சென்றதால், பெனால்ட்டியே இல்லாமல் தப்பித்தோம். கடுமையான பாதைகள் வரவர, நேரம் அதிகமாகச் செலவானது. முதல் நாள் முடிவில் முர்டேஷ்வரை அடைந்தோம். கடற்கரை அருகில் கடலுக்குள் இருக்கும் சிறிய ஒரு தீவுதான் `முர்டேஷ்வர்’. ஒரு சிவன் கோயிலுக்குள் ஒரு ரிசார்ட். அதைச் சுற்றி மருத்துவமனை, பள்ளி, கடைகள் என எல்லாமே இருக்கும். முர்டேஷ்வரில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலை இரண்டாவது சுற்றை ஆரம்பிக்க ஆயத்தமாகியிருந்தோம்.

இரண்டாம் நாள் காலை நேரம் முடிவு செய்யப்பட்டு, மீண்டும் போட்டி தொடங்கியது. இந்த முறையும் காட்டுவழிதான். மற்றவர்களுக்கு நாள் முழுவதும் ரேஸ். மீடியாவுக்கு மதியமே ரேஸ் முடிந்துவிடுகிறது. இந்த முறை எங்கள் இலக்கு ஜோக் ஃபால்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் நாள் வழி, முந்தைய நாளைவிடக் கடுமையானது. ஆனால், முன்பைவிட செழிப்பான பகுதிகளில் பயணித்தோம். போகும் வழியெங்கும் நீரூற்று, பாலங்கள், கால்வாய், விவசாயம், பச்சை நிறம். வேறு எதையுமே பார்க்க முடியவில்லை. காட்டு வழியில் ஒரு ரேஸ் டிராக் போன்று இருந்தது சாலை.

ஜோக் ஃபால்ஸ் அருகே நெருங்கும்போது, சாலையின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் இல்லை. வெளிர்பச்சை நிறப் புல் மட்டுமே. சாலையின் முன் மலை. அயர்லாந்து சினிமாக் காட்சிகளில் வருவதுபோல இருந்தது இடம். ஜோக் ஃபால்ஸோடு எங்கள் ரேஸ் முடிவடைந்தது.

காடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி!

ஹொன்னாவர் வழியாக கோவா பயணத்தைத் தொடர்ந்தோம். போகும் வழி எங்கும் குரங்குகள். அதிலும் சிங்கவால் குரங்குகள்தான் அதிகம். ஜோக் ஃபால்ஸில் இருந்து வரும் தண்ணீர் அருகில் இருக்கும் விவசாய பூமிகளைக் கடந்து கடலில் கலக்கிறது. நாம் போகும் வழியெங்கும் காயல்நீரைப் பார்க்கலாம். அருவித் தண்ணீரை ஃபாலோ செய்தாலே நெடுஞ்சாலையை அடைந்துவிடலாம். நெடுஞ்சாலையிலேயே சென்று கார்வார் வழியாக கோவாவை அடைந்தோம். இரண்டாம் நாள் முடிவில் வெறும் 02:29 நிமிடம் மட்டுமே பெனால்ட்டி. நேரத்தைக் கச்சிதமாக மெயின்டெயின் செய்திருந்தோம். மூன்று கார்கள் கலந்துகொண்ட மீடியா பிரிவில் முதல் இடத்தை மோட்டார் விகடன் பெற்றது.

ராலி ரேஸ்களில் தமிழர்களின் ஆதிக்கம்தான் அதிகம். இந்த முறை ஈரோடு, கோயம்புத்தூரைச் சேர்ந்த டிரைவர்களே ரேஸை வென்றிருந்தார்கள். நாங்கள் சென்ற  KUV 100 கார், ராலியில் ஓட்டுவதற்கோ ஆஃப் ரோடுக்காகவோ வடிவமைக்கப்பட்டதல்ல. இருந்தாலும், சிறிய கார் என்பதால் எல்லா இடங்களிலும் எல்லா பாதைகளிலும் நுழைந்து வர முடிந்தது. பெட்ரோல் போடும் நேரத்தை மிச்சம் பிடித்தோம். மதிய உணவுக்குப் பெரிதாக நேரம் செலவிடவில்லை. தண்ணீர் பாட்டில் போன்றவற்றை முதல்நாளே வாங்கி வைத்திருந்தோம். இதனால் நேரத்தை மிச்சம் பிடிக்க முடிந்தது. செலவிடும் ஒவ்வொரு நிமிடத்தையும் எங்கு சேகரிக்க வேண்டும் எனத் தெரிந்தால், ராலியில் சுலபமாக வெற்றிபெற முடியும். இதில் தமிழர்கள் கில்லாடிகள். இந்தியாவில் ராலி எங்கு நடைபெற்றாலும் அங்கு வெற்றி பெறுபவர்கள் ஈரோடு, கோவைப் பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். மான்சூன் சேலஞ்சில் வெற்றிபெற்றவர்களும் அவர்களே!