கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?
பிரீமியம் ஸ்டோரி
News
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

எக்ஸ்க்ளூஸிவ் டிரைவ் - மாருதி சுஸூகி எர்டிகாதொகுப்பு: தமிழ்

“புது எர்டிகா மாடல் எப்போது விற்பனைக்கு வரும்’’ என்பதுதான் எர்டிகா பிரியர்களின் பல நாள் கேள்வி. பதில் விரைவில் கிடைக்கப்போகிறது என்பதுதான் நல்ல செய்தி. இப்போது இந்தோனேஷியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் எர்டிகாதான் தீபாவளிப் பரிசாக இந்தியாவுக்கு வரவிருக்கிறது. எப்படி இருக்கிறது புதிய எர்டிகா?

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

சைஸ்?

எர்டிகாவுக்கு இது 2-வது தலைமுறை. சத்தியமாய் நம்ப முடியவில்லை. எர்டிகாவா இப்படி வரப் போகிறது? இப்போதைய எர்டிகாவை மொத்தமாக மெட்டல் சர்ஜரி செய்துவிட்டார்கள். பல்க்கியாக இருக்கும் எர்டிகா. முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கிறது. புது எர்டிகாவின்  கிரில்லை நேராக நின்று பார்த்தால், பெரிய எஸ்யூவி போல இருக்கிறது. பானெட் பார்வையை ஈர்க்கிறது.

பார்வையை அப்படியே பக்கவாட்டில் திருப்பினால், அப்போதுதான் இதன் எம்பிவி உருவம் தெரிகிறது. இனோவா கிரிஸ்டா மாதிரி நீளத்தில் பெரியதாக இருக்கிறது. பார்ப்பதற்கு அப்படித் தெரிந்தாலும், இதன் நீளம் 4,395 மிமீதான். (தற்போது விற்பனையில் இருக்கும் எர்டிகாவின் நீளம் 4,296 மிமீ) மாருதியில் இப்போது புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். புது எர்காடிவின் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுக்கு க்ரோம் மற்றும் மெட்டல் பாதுகாப்புடன் நன்றாக ஃபினிஷிங் கொடுத்திருக்கிறார்கள். பனி விளக்குகளுக்கான ‘C’ வடிவ பிராக்கெட்டுகள்,  புஷ்டியான தாடைபோல் இருக்கின்றன. காரின் பக்கவாட்டில் ஷார்ப் லைன்கள் கதவுக் கைப்பிடிகளுடன் இணைவது தனித்துவமாக இருக்கிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

பின் பக்கம் பார்வையைத் திருப்பினால், மொத்தமாக மாறிவிட்டிருக்கிறது. முன் பக்கம் ‘C’ ஷேப் என்றால், பின் பக்கம் ‘L’ ஷேப் டெயில் லைட்கள் சூப்பர். சின்ன ஸ்பாய்லர், மடிப்புகள் கொண்ட பின் பக்கம், ஏனோ வால்வோ காரை நினைவுப்படுத்துகின்றன. டயர் அளவுகளைக் கொஞ்சம் பெரிதுபடுத்தியிருக்கலாம். ஃபர்ஸ்ட் ஜென் எர்டிகாவில் இருக்கும் அதே 15 இன்ச் வீல்கள், இந்தப் பெரிய எம்பிவிக்குக் கொஞ்சம்கூட ஒட்டவே இல்லை.

இன்ஜின்

இந்தோனேஷியாவில் பெட்ரோல் இன்ஜினில் தான் புதிய எர்டிகா ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இது முன்பைவிடப் பெரிய VVT  இன்ஜின். இதற்குப் பெயர் K15B. தற்போது இந்தியாவில் இருக்கும் எர்டிகாவைவிட 88 சிசி அதிகமாக, அதாவது 1,462 சிசியுடன், 105 bhp பவருடன் இருக்கிறது. 92 bhp-யை ஒப்பிடும்போது, இதன் செயல்திறன் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். டார்க் 13.8 kgm.

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

புல்லிங் பவரில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தற்போதைய 1.4 லிட்டர் இன்ஜினின் பர்ஃபாமென்ஸ், குறைந்த வேகத்தில் இருந்தே நன்றாக இருக்கும். அதேபோலத்தான் இந்தப் புதிய 1.5 லிட்டர் இன்ஜினின் செயல்பாடும். இழுவைத்திறன் சூப்பர். காருக்குள் முழுமையாக 7 பேர் உட்கார்ந்து பயணித்தாலும் பர்ஃபாமென்ஸில் எந்தக் குறையும் இருக்காது. லோ கியரிலேயே எக்ஸ்ட்ரா டார்க் கிடைப்பதால், எனர்ஜெட்டிக்காக இருக்கிறது இன்ஜின். அதாவது, குறைந்த வேகங்களில் கியரை டவுன்ஷிஃப்ட்  செய்யத் தேவையில்லை. ஆனால், அதிகம் பேர் பயணிக்கும்போது டவுன் ஷிஃப்ட்டிங் தேவைப்படலாம். பவர் மற்றும் டார்க் டெலிவரி  சீராக இருப்பதால், 3 பேர் உட்கார்ந்து பயணித்தபோது செம ரிலாக்ஸ்டாக இருந்தது இன்ஜின். அதிவேகங்களில் 6,200 rpm வரை ரெவ் ஆகிறது. அதனால் அதிகவேகங்களிலும் இன்ஜினின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கும். ஆனால், டாப் ஸ்பீடில் இன்ஜின் அதிகமாகவே சத்தம் போடுகிறது. ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும் - ஹோண்டா சிட்டியின் 1.5 லிட்டர் இன்ஜின் அளவுக்கு இதன் இன்ஜின் ஸ்மூத்னெஸ் இல்லை.

ஹேண்ட்லிங்

மாருதி சுஸூகியின் புதிய Heartect பிளாட்ஃபார்மில் தயாராகி இருக்கிறது எர்டிகா. உள்ளே உட்கார்ந்து ஓட்டும்போது ஒரு எம்பிவி காரை ஓட்டுவதுபோல் இல்லை. கொஞ்சம் பெரிய ஹேட்ச்பேக் காரை ஓட்டுவதுபோல் இருக்கிறது. ஹேண்ட்லிங்  மிகவும் ஈஸியாக இருந்தது. ஸ்டீயரிங், பெலினோ போல மிகவும் ஈஸி ஹேண்ட்லிங்காக இருக்கிறது. கிளட்ச்சும் அப்படியே!

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

தற்போதைய எர்டிகாவைப்போலவே புதிய எர்டிகாவின் டர்னிங் ரேடியஸும் 5.2 மீட்டர்தான். பெரிய வளைவுகளில் மட்டும் திருப்ப சிரமமாக இருந்தது. பாடி ரோலும் கொஞ்சம் அதிகம். இதிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுத்திருக்கலாம். ஆனாலும், ஹேட்ச்பேக் கார் ஓட்டுவதுபோலவே ஈஸியாக இருந்தது. சஸ்பென்ஷன் ஸ்டிஃப் என்பதால், பயணம் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. ஆனாலும் ரைடு குவாலிட்டியில் எந்த வசதிக்குறைவும் இல்லை. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ என்பது 5 சீட்டர் எஸ்யூவியாக இருந்தால் ஓகே. இது 7 சீட்டர் என்பதால், அதிகம் பேர் உட்கார்ந்து பயணிக்கும்போது, நிச்சயம் காரின் அடிப்பகுதி தரையில் தட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான்.

இடவசதி

மாருதி சுஸூகி என்கிற பிராண்டைத் தாண்டி, 7 சீட்டர் ஆப்ஷனுக்காகத்தான் எர்டிகாவுக்குப் பெரிய வரவேற்பு. இரண்டாவது வரிசை இருக்கைகளை, போதுமான லெக்ரூம் கிடைக்கும்வரை முன்பக்கம் இழுத்து மடித்து, மூன்றாவது வரிசைக்குப் போனோம். உள்ளே போவது தற்போது விற்பனையில் இருக்கும் எர்டிகா அளவுக்குச் சிரமமாக இல்லை. ஆனால், குனிந்து, வளைந்துதான் போக வேண்டியிருந்தது. போய் செட்டில் ஆகிவிட்டால்... வாவ்! கிட்டத்தட்ட இரண்டாவது வரிசைக்கு இணையான லெக்ரூம் வசதி இருக்கிறது. இனி நீண்ட பயணங்களில் பெரியவர்களைக்கூட மூன்றாவது வரிசைக்குத் தள்ளிவிடலாம். இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் எர்டிகா பிரியர்களே!

6 அடி உயரமானவர்களுக்கு ஹெட்ரூம் மட்டும் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். வேகமாகப் போகும்போதும் ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறும்போதும், மேற்கூரையில் தலை இடிக்க வாய்ப்புண்டு. 7 பேர் உட்கார்ந்து விட்டால் இதன் டிக்கியில் இடவசதி 153 லிட்டர்கள்தான். இது தற்போதைய எர்டிகாவை விடக் குறைவு. இதை ஈடு கட்ட, ஃப்ளோருக்கு அடியில் ஒரு பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

இனி இரண்டாவது வரிசை. நல்ல ஹெட்ரூம். போதுமான அளவு தொடைக்கான சப்போர்ட் கிடைத்தது. பின் பக்கம், அதாவது 3-வது வரிசையில் யாரும் இல்லாத பட்சத்தில், பேக்ரெஸ்ட்டை இன்னும் சாய்த்து புஷ்பேக் பஸ்ஸில் வருவதுபோல் சொகுசாக வரலாம். பெரிய லிமோசினில் பயணிப்பது போல் கால்களை நீட்டும் அளவுக்கு இடவசதி இருக்கிறது. மேலும் சீட்களை 60:40 விகிதத்தில் மடித்துக் கொள்ளலாம். ஆனால், சென்டர் ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், யுஎஸ்பி போர்ட் என்று எதுவுமே பின் பக்கம் இல்லை.

மேலே, ஏ.சிக்கான ப்ளோயர் மட்டும் இருந்தது. கம்ப்ரஸர் இல்லை. அதாவது, வெறும் காற்றாடியாக மட்டும்தான் வேலை செய்யும். ஆனாலும், காரை ஸ்டார்ட் செய்த சில விநாடிகளிலேயே ஜில்லென்ற காற்று நம் உடம்பை நிறைக்கிறது.

முன் பக்கம் USB போர்ட், 12 வோல்ட் பவர் ஸாக்கெட், கூல்டு கப்ஹோல்டர்கள் என்று எதிர்பார்த்ததுபோலவே நிறைய வசதிகள் உண்டு. எர்டிகாவின் டேஷ்போர்டு வியக்க வைக்கிறது. ஸ்டீயரிங், டேஷ்போர்டு என்று இன்டீரியரில் ஆங்காங்கே மர வேலைப்பாடுகள் ப்ரீமியம் லெவல். இவை டிசையரை நினைவுப்படுத்தின. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிசைன்கூட நீட் அண்ட் க்ளீன். இதன் ஃபாக்ஸ் வென்ட்கள் சூப்பர். 40 லட்ச ரூபாய் ஃபோக்ஸ்வாகன் பஸாத் காரில்தான் இப்படி ஒரு ஏர்வென்ட் டிசைனைப் பார்க்க முடியும்.

டிசையரில் பிளாஸ்டிக் தரம் நன்றாக இருக்கும். புது எர்டிகாவில் அது மிஸ்ஸிங். முக்கியமாக அந்த டோர் பேடுகள், டேஷ்போர்டின் கீழ்ப்பகுதி, சீட் ஃபேப்ரிக் போன்றவை விலை மலிவானதாக இருக்கின்றன. இதில் இருக்கும் JVC டச் ஸ்க்ரீன், ஆஃப்டர் மார்க்கெட்டில் வாங்கிப் பொருத்தியது போல உள்ளது. நம் ஊருக்கு கார் வரும்போது, இதற்குப் பதிலாக SmartPlay டச் ஸ்க்ரீன் சிஸ்டம் வந்துவிடும். எலெக்ட்ரானிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசியும் இருக்கும்.

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே?

காத்திருக்கலாமா?

பவர்ஃபுல் இன்ஜின், ஈஸி ஹேண்ட்லிங், அதிக சிறப்பம்சங்கள்... முக்கியமாக அந்த மூன்றாவது வரிசை இடவசதி என எல்லாவற்றிலும் சரவெடி வெடிக்கிறது புது எர்டிகா. ஆனால் பிளாஸ்டிக்கின் தரம் சுமாராக இருக்கிறது. இப்போதிருக்கும் எர்டிகாவைவிட 50,000 ரூபாய் விலை அதிகமாக வரலாம். அதேபோல், எர்டிகாவில் டீசலுக்குத்தான் இங்கே மவுசு அதிகம். தீபாவளிக்கு பெட்ரோல் என்றால், பொங்கலுக்குள் டீசலை எதிர்பார்க்கலாமா மாருதி சுஸூகி?