கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா?

இந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா TUV 300 ப்ளஸ்தொகுப்பு: மலர்

இந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா?

‘இனி 9 பேர் போகலாம்’ என்று மஹிந்திரா TUV 300 பற்றி ஸ்கூப் வெளியானது முதல் `என்னது... 9 பேர் போகலாமா, கார்ல வேற என்னவெல்லாம் மாறியிருக்கு, டெஸ்ட் ரிப்போர்ட் இல்லையா?’ என்று ஏகப்பட்ட விசாரிப்புகள். மஹிந்திரா எஸ்யூவிகள், மீடியம் பட்ஜெட்டுக்கு ஏற்ற  கார்கள். `மாருதி வாங்கலாமா, மஹிந்திரா வாங்கலாமா’ என்பதைத் தாண்டி, `மஹிந்திராவிலேயே எந்த கார் வாங்கலாம்’ என்று குழப்பியடிக்க ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உண்டு. ஸ்கார்ப்பியோ, ஸைலோ, பொலேரோ, TUV 300 என எல்லாமே 7 சீட்டர் எஸ்யூவிகள். இவை தவிர 9 பேர் போகக்கூடிய கார் ஒன்று, TUV 300 ப்ளஸ் என்கிற பெயரில் இறங்கியுள்ளது. 9 பேர் போகக் கூடிய இந்த எஸ்யூவியில் ஒன்மேனாக ஒரு டிரைவ்!

9 பேர் போக வேண்டுமென்றால், நீளத்தில் நிச்சயம் கை வைத்தாக வேண்டும். ஆம்! பழைய TUV, 4 மீட்டருக்குட்பட்ட கார். TUV ப்ளஸ்ஸை 4,440 மிமீ ஆக இழுத்துவிட்டிருக்கிறார்கள். ஸ்டாண்டர்டு கார் 3,995 மிமீ. புதிய ப்ளஸ்ஸில் எக்ஸ்ட்ராவாக 445 மிமீ ப்ளஸ் செய்திருந்தாலும், ஸ்டாண்டர்டுக்கும் ப்ளஸ்ஸுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். கிரில்லில் இருந்து பானெட், ஹெட்லைட், கிரில், கதவுகள் என்று எல்லாமே ஸ்டாண்டர்டு காரின் டிசைன்தான்.

கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். பனிவிளக்கு செட்டிங், 16 இன்ச் வீல்கள் (ஸ்டாண்டர்டில் 15 இன்ச்தான்), டெயில் லைட் எனச் சில சின்ன விஷயங்கள் தான் ப்ளஸ்ஸில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உள்ளேயும் சின்னச் சின்ன அப்டேட்கள்தான். நுழைந்ததும், Faux லெதர் சீட்கள்தான் முதல் அட்ராக்‌ஷன். ஸ்டாண்டர்டில் இருக்கும் அதே டச் ஸ்க்ரீன். இன்டீரியரின் டிசைனும் ப்ளாஸ்டிக்ஸும் அதே! விலைக் குறைப்புக்காகவோ என்னவோ, சில பாகங்களை சிறிய காரான TUV-யிலிருந்து எடுத்துப் பொருத்தியிருக்கிறார்கள். ஃபிட் அண்ட் ஃபினிஷில் மஹிந்திரா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா?

நீளம்தான் கூடியிருக்கிறது. வீல்பேஸ் அதேதான். (2,680 மிமீ) அதனால், முன்பக்க டிரைவர், கோ-டிரைவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நடுப்பக்க வரிசைக்காரர்கள், லெக்ரூமுக்கு அடித்துக்கொள்ள வேண்டும். பேக்ரெஸ்ட்டும் கொஞ்சம் மேலேறி இருக்கிறது. சென்டர் ஆர்ம்ரெஸ்ட்
டையும், ரியர் ஏசி வென்ட்களையும் எவ்வளவோ தேடியும் காணக் கிடைக்கவில்லை.

பின் பக்க சீட் கதவைத் திறந்து உள்ளே செல்பவர்கள் கொஞ்சம் உயரம் குறைந்தவர்கள் என்றால், எகிறிக் குதித்துத்தான் உள்ளே போக வேண்டும். சைடு் ஃபுட் ஸ்டெப் இவ்வளவு உயரமாக இருந்தால் எப்படி? வயதானவர்களுக்கும் இது சிரமம்தான். `9 பேர் போகலாம்னு சொன்னாங்களே’ என்று பின்னால் பார்த்தால் இரண்டு ஜம்ப் சீட்கள் இருந்தன. அதாவது, எதிர் எதிரே உட்கார்ந்து பயணிக்கக்கூடிய இருக்கைகள். முன்பக்கம் 2, நடுப்பக்கம் 3, கடைசி வரிசை 4. இதுதான் 9 பேருக்கான கணக்கு.

ஒரு ஜம்ப் சீட்டில் 2 பேர் உட்காரலாம்தான். ஆனால், கடைசி வரிசையில் உட்காருபவர்கள் கொஞ்சம் கட்டுமஸ்தானவர்களாக இருந்தால், ரொம்பச் சிக்கல்தான். கடைசி வரிசையில் சீட்பெல்ட்டும் கிடையாது. ஏர்வென்ட்டும் இல்லை. எனவே இங்கே மொத்தமாகவே 2 பேர்தான் வசதியாக உட்கார முடியும். காருக்குள் ஆள்கள் குறையும்பட்சத்தில், இரண்டாவது வரிசை சீட்களை மடித்துவிட்டால், பொருள்கள் வைத்துக்கொள்ள 888 லிட்டர் இடவசதி கிடைக்கும்.

இந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா?

4 மீட்டருக்குமேல் நீளமான TUV 300 ப்ளஸ்ஸை பார்க் செய்வது கொஞ்சம் சிரமம்தான். ஆம்! ரிவர்ஸ் கேமரா இல்லை. சென்ஸார்கள் இன்னும் கொஞ்சம் சென்சிட்டிவாக இருக்க வேண்டும். பின்னால் பார்த்துத் திருப்பலாம் என்றால், ஸ்டெப்னி வீல் மறைக்கிறது.

TUV ப்ளஸ்ஸில் இப்போது இருப்பது, 2.2 லிட்டர் - 4 சிலிண்டர் mHawk டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. கூடுதலாக ஒரு சிலிண்டரும் கியரும் சேர்ந்திருக்கிறது. ஸ்டார்ட் செய்ததும், மஹிந்திராவுக்கே உரிய டீசல் கடகடப்புச் சத்தம் கேட்டது. ஆனால், இன்ஜின் ரிஃபைன்மென்ட் ஓகே என்பதால், இன்ஜின் ஸ்மூத்தாகவே ரெவ் ஆகிறது. 120 bhp பவர். ஹைவேஸில் போதுமான பவர் கிடைக்கிறது. TUV 300போல் அதிர்வுகள் அவ்வளவாக இல்லை. வெல்டன் மஹிந்திரா!

7 சீட்டர் TUV 300 காரைவிட கிளட்ச்சும், கியர்பாக்ஸும்கூட எடை குறைந்திருக்கின்றன. கியர்பாக்ஸில் ஒரு பெரிய பஞ்சாயத்து - ரிவர்ஸ் கியருக்கும் முதல் கியருக்கும் இடையிலான குழப்பம். சில நேரத்தில் முதல் கியருக்குப் பதில் ரிவர்ஸ் கியரைப் போடும் சூழல் வந்துவிடுகிறது. ரிவர்ஸ் கியருக்கு `லாக்’  இல்லை. எனவே, கியர்கள் மாற்றும்போது அதிக கவனம் தேவை.

இந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா?

பவர்ஃபுல் இன்ஜின் என்றாலும், நெடுஞ்சாலைகளில் பெரிய ஃபன் கிடைக்கவில்லை. காரணம், இன்ஜின் பன்ச் மிஸ் ஆவதுதான். ஷார்ட் கியரிங் என்பதால், 100 கி.மீ-ல் போகும்போது ரிலாக்ஸாக இயங்குவதற்குப் பதிலாக இன்ஜின் சிரமப்பட்டு வேலை செய்வதுபோல் இருக்கிறது. ஸ்டீயரிங் ரொம்ப ஹெவி. சிட்டி டிரைவிங்கில் இது கொஞ்சம் சிக்கல்தான். ஆனால் சஸ்பென்ஷன் பிரமாதம். சாஃப்ட் சஸ்பென்ஷன், எல்லா மேடு-பள்ளங்களையும் ஈஸியாகக் கடக்கிறது. ஆனால், ‘பாடி ஆன் ஃப்ரேம்’ எஸ்யூவி என்பதாலும், சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் என்பதாலும், சில ஸ்பீடு பிரேக்கர்களில் மேலும் கீழுமாக     உட்கார்ந்தபடியே போய் வர வேண்டியிருக்கிறது. அதாவது, காருக்குள்ளேயே லேசாகத் தூக்கிப் போடுகிறது. அதேநேரத்தில் டால் பாய் டிசைனாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளில் 3 இலக்க வேகத்திலும் இதன் ஸ்டெபிலிட்டி சிறப்பு.

11.19 லட்சத்திலிருந்து 13.44 லட்சத்துக்குள் P4, P6, P8 என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் வந்திருக்கிறது TUV 300 ப்ளஸ். வெறும் சிட்டி டிரைவிங் மட்டும்தான் என்பவர்கள் பார்க்கிங்கிலும், ஹெவி ஸ்டீயரிங்கைக் கையாள்வதிலும் எக்ஸ்பெர்ட்டாக இருக்க வேண்டும். அதைத் தாண்டி `குடும்பம் பெருசு; லக்கேஜும் நிறைய’ என்பவர்கள் டூர் அடிக்க, இந்த பட்ஜெட்டில் TUV 300 ப்ளஸ்ஸை விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை.