கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எது பெருசு... எது சொகுசு?

எது பெருசு... எது சொகுசு?
பிரீமியம் ஸ்டோரி
News
எது பெருசு... எது சொகுசு?

போட்டி - வால்வோ XC40 VS பிஎம்டபிள்யூ X1தொகுப்பு: தமிழ்

எது பெருசு... எது சொகுசு?

லகின் பாதுகாப்பான கார் எது? சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்... வால்வோ. இதன் லேட்டஸ்ட் ஸ்வீடிஷ் பியூட்டி XC40. வால்வோ எஸ்யூவி-களிலேயே இந்த என்ட்ரி லெவல் கார் ரிலீஸ் ஆனதும் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் என அத்தனை காஸ்ட்லி கார்களும் பரபரப்பாயின. அதிலும் X1-க்குத்தான் செம டஃப் காத்திருக்கிறது என்கிறார்கள். ஏனென்றால், உடல்தான் வேறு; இரண்டுக்கும் உயிர் ஒன்றுதான். இரண்டிலுமே 2 லிட்டர், 190bhp பவர், 40kgm டார்க்கொண்ட டீசல் இன்ஜின்தான். ஒரே பவர் கொண்டவர்கள் போட்டி போட்டால்?

எது பெருசு... எது சொகுசு?

உயர்ந்த எஸ்யூவி... நீளமான க்ராஸ் ஓவர்!

XC40: பிஎம்டள்பியூ X1-விட வால்வோவின் அகலமும் உயரமும் 42மிமீ/40மிமீ பெரிது. வீல்பேஸும் 32 மிமீ அதிகம். ஃப்ளாட் பானெட்டும் கம்பீரமான தோற்றமும் 18 இன்ச் பெரிய வீல்களும் பார்க்கும்போது, வால்வோவை பர்ஃபெக்ட் எஸ்யூவி என ஈஸியாகச் சொல்லிவிட முடிகிறது. உயர்த்தப்பட்ட விண்டோ லைன், டூயல் டோன் ரூஃப், டெயில் லைட்கள் இவையெல்லாம் ஸ்பெஷல் அப்பீல்.

Geely Auto என்பது, வால்வோவின் தாய் நிறுவனம். ஜீலியில் CMA (Common Modular Architecture) பிளாட்ஃபார்ம் என்பது மிகவும் புகழ்பெற்றது. இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ - XC40தான். அதனால்தான் இந்த நீள/அகல/வீல்பேஸ் மாற்றம் கிடைத்திருக்கலாம். இதன் LED  டே டைம் ரன்னிங் விளக்குகளை உற்றுப்பாருங்கள். மார்வெல் `தார்’ சுத்தியல் நினைவுக்கு வருகிறதா?

X1: பிஎம்டபிள்யூ X1 காரில் மொத்தம் மூன்று வேரியன்ட்கள் உண்டு. உயரத்தில் அகலத்தில் XC40 பெரிதாக இருந்தாலும், X1தான் நீளத்தில் 14 மிமீ பெரியது. UKL2 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூவின் பில்டு குவாலிட்டியைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். வால்வோ பர்ஃபெக்ட் எஸ்யூவி என்றால், X1  க்ராஸ்ஓவர்போல் இருக்கிறது. லோ புரொஃபைல் டயர்களையும் பின்பக்க டிசைனையும் பார்த்தால், அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

எது பெருசு... எது சொகுசு?

இன்ஜின் எனும் இதயம்

XC40: இதன் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், ஆரம்பத்திலிருந்தே அத்தனை ரெஸ்பான்ஸிவ். லேசாக ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தால் போதும். பவர் டெலிவரி சீராக வெளிப்படுகிறது. லோயர் ரெவ்களிலேயே போதுமான ஆர்பிஎம் கிடைக்கிறது. மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸும் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது. 4,200 ஆர்பிஎம் வரை மோட்டார் எளிதாக ஸ்பின் ஆகிறது. ஜெர்மன் இன்ஜின்களில் ரிஃபைன்மென்ட்டைப் பற்றிச் சந்தேகப்படவேண்டியதில்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ஸ்மூத். ஆனால், ஷார்ட் த்ரோ ஷிஃப்டிங் என்பதால், கியர் இண்டிகேட்டரை இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் செக் செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

X1: ‘அதே பவர், அதே டார்க். பர்ஃபாமன்ஸும் அப்படியேதான் இருக்கும்’ என நினைத்து ஆக்ஸில ரேட்டரில் கால் வைத்தால், ஆரம்ப வேகத்தில் கொஞ்சம் டல் அடித்ததுபோல் தெரிந்தது. ஆனால், ஆரம்ப வேகத்தைத் தாண்டியதும் தூங்கிக்கொண்டிருந்த மிருகம் விழித்துக்கொண்டதுபோல் சீற ஆரம்பித்துவிட்டது. ஒரே பவரில் ஏன் இந்த பர்ஃபாமென்ஸ் வித்தியாசம்? இதற்குக் காரணம், கியர்பாக்ஸ். டவுன்ஷிஃப்ட்டிங்கில் மாரத்தான் வீரர்போல் லேசாக மூச்சு வாங்குகிறது இதன் கியர்பாக்ஸ். இதுவே ஸ்போர்ட்ஸ் மோடில் மாற்றிவிட்டுப் பறந்தால் X1 கார், வெறித்தனமான தடகள வீரர்போல மாறுகிறது. வெறும் 8.07 விநாடியில் 100 கி.மீ வேகத்தைக் கடந்துவிட்டிருந்தது X1. வால்வோவைவிட 1.47 விநாடி வேகமாக இருக்கிறது. இதற்குக் காரணம், லாஞ்ச் கன்ட்ரோல் சிஸ்டம்.

எது பெருசு... எது சொகுசு?

சஸ்பென்ஷனில் யார் டிஸ்டிங்ஷன்?

XC40: சஸ்பென்ஷனை நன்றாகவே டியூன் செய்திருக்கிறது வால்வோ. கொஞ்சம் டைட் செட்-அப்தான். ஆனால், பெரிய 18 இன்ச் டயர்கள் அந்த இறுக்கத்தைத் தளர்த்துகின்றன. 4 வீல் டிரைவ் சிஸ்டம், எப்படிப்பட்ட கார்னரிலும் தன்னம்பிக்கை தருகிறது. மோசமான பள்ளங்களிலிருந்து `சட்’ என வெளிவரலாம். ஹார்டு டிரைவிங்கில் ஃபன் காராக இருப்பதுதான் வால்வோ கார்களின் ப்ளஸ். XC 40-யும் அதில் கில்லி. உயரமான கார் என்பதாலோ என்னவோ, லேசான பாடி ரோல் மட்டும் தெரிகிறது.

X1: பிஎம்டபிள்யூ-விலும் அதே ஃபன் கிடைத்தது. ஸ்டீயரிங் நல்ல ஷார்ப். லேன் மாற்றும்போது, கொஞ்சம் ஹெவியாக இருந்தாலும் ஃபீட்பேக் நன்றாகக் கிடைக்கிறது. இதிலும் 4 வீல் டிரைவ் சிஸ்டம், நல்ல கார்னரிங் ரிசல்ட் கொடுத்தது. பாடி ரோல் சுத்தமாகத் தெரியவில்லை. வேகங்களில் திரும்பும்போது, பயப்படாமல் உட்கார்ந்து வரலாம். இங்கே பேடில்ஷிஃப்டர்தான் ஸ்போர்ட்டினெஸ் ஃபீல் கொடுக்கிறது. இருந்தாலும், இதன் 18 இன்ச் லோ புரொஃபைல் டயர்களும், ஸ்டிஃப் சஸ்பென்ஷனும் கொஞ்சம் பயணத்தை இறுக்கமாக்குகின்றன.

எது பெருசு... எது சொகுசு?

உள்ளே எப்படி?

XC40: கதவைத் திறந்ததுமே வால்வோவில் `வாவ்’ எஃபெக்ட்தான். ஸ்டீயரிங், டச் ஸ்க்ரீன், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என எல்லா இடங்களிலும் காஸ்ட்லி கார்களின் மெட்டீரியலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். செம! க்ரோம் மற்றும் சில்வர் வேலைப்பாடுகள் லாங் ஷாட்டில் பார்த்தால், இன்னும் அற்புதம்.

வால்வோவில் சீட்களில் ஒரு புகார் வாசிக்கிறார்கள். பிஎம்டபிள்யூ அளவுக்கு இந்த லெதர் சீட்கள் சப்போர்ட்டிவ் ஆகவும் சொகுசாகவும் இல்லை. இன்னொரு புகார் - பின்பக்கக் கதவை அகலமாகத் திறக்க முடியவில்லை. சீட்டும் சிறுசு. பின்பக்கப் பயணிகள், பள்ளத்தில் அமர்ந்ததுபோல் வரவேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு வசதி, முன்பக்கம்போலவே பின்பக்கத்திலும் சீட்டை உயர்த்தும் ஆப்ஷன் இருக்கிறது. அதுபோக, வால்வோவில் எவ்வளவு ஸ்டோரேஜ் இடவசதி!

X1: சாக்லேட் பிரௌன் மற்றும் கறுப்பு டூயல் தீமில் கலக்குகிறது பிஎம்டபிள்யூ கேபின். சாஃப்ட் டச் மெட்டீரியல் ஏராளமாக இருந்தன. டபுள் ஸ்டிட்சிங் சீட்கள், மர வேலைப்பாடுகள் எல்லாமே ப்ரீமியம் லெவல். மூன்று ஸ்போக் `M’ ஸ்டீயரிங் வீல் பிடிக்கும்போதே ஸ்போர்ட்டியாக இருக்கிறது. முன்பக்க சீட்களில் ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட்கள். சைடு போல்ஸ்ட்ரிங் வசதி, அதாவது முழங்கால் சப்போர்ட்டிங்குக்கூட அட்ஜஸ்ட் உண்டு. முன்பக்கம்போலவே பின்பக்கமும் இடவசதி தாராளம். மூன்று பேர் தாராளமாக உட்காரலாம். சீட்களை 40:20:40 விகிதத்தில் மடித்துக்கொள்ளலாம். இவை தவிர டிக்கி இடவசதியும் 505 லிட்டர். மொத்தத்தில் இடவசதியில் செம பிராக்டிக்கல்!

எது பெருசு... எது சொகுசு?

எது இருக்கு... எது இல்லை?

XC40: இரண்டில் வால்வோதான் வசதிகளில் கில்லி. ரேடார் சம்பந்தமான பாதுகாப்பு வசதிகள் வால்வோவில்தான் அதிகம். உதாரணத்துக்கு, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பைலட் அசிஸ்ட், லேன் அசிஸ்ட், முக்கியமாக மோதலைக் கட்டுப்படுத்தும் கொலிஷன் மிட்டிகேஷன் சிஸ்டம் ஆகியவை. மோதல் நேரத்தில் எமர்ஜென்சி பிரேக்கிங் அப்ளை ஆகி, மோதலைத் தடுக்கும் ரேடார் சிஸ்டம் இது.

இது தவிர, விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலெக்ட்ரிக் டெயில் கேட், செமி-ஆட்டோமேட்டிக் பார்க்கிங், 9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி, ஹீட்டட் சீட்கள் என ப்ரீமியம் வசதிகளில் வால்வோ வாவ்!

X1: வால்வோவில் இருக்கும் பொதுவான வசதிகளான சன்ரூஃப், பேடில் ஷிஃப்ட்டர், ஆட்டோ LED ஹெட்லாம்ப்ஸ், ரிவர்ஸ் கேமரா, டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ வைப்பர்ஸ் என அதே லெவல்தான். ஆனால், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் பிளே, ஹீட்டட் சீட்ஸ், எலெக்ட்ரிக் டெயில் கேட், வயர்லெஸ் சார்ஜிங் எல்லாம் பிஎம்டபிள்யூவில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், வால்வோவின் முக்கிய வசதியான ஹெட்-அப் டிஸ்பிளேவை X1-ல் கொடுத்ததற்காக, ஒரு பெரிய லைக் பட்டன். இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களில் தெரியும் விஷயங்கள், டேஷ்போர்டிலேயே டிஸ்பிளே ஆகும் வசதி இது.

எது பெருசு... எது சொகுசு?

X1: சிறப்பான ஸ்டீயரிங், ஸ்போர்ட்டினெஸ் ஃபீல், ஷார்ட் ஹேண்ட்லிங், அதிக இடவசதி என பிஎம்டபிள்யூ பிராக்டிக்கலாக இருக்கிறது. இதன் க்ராஸ்ஓவர் டிசைன் எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. கூடவே, இதன் விலையும். வால்வோவைவிட கிட்டத்தட்ட 2.50 லட்சம் ரூபாய் அதிகம்.

எது பெருசு... எது சொகுசு?
எது பெருசு... எது சொகுசு?

XC40: விலை குறைவு அதனால், வால்வோவுக்குத்தான் ஓட்டு என்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. செம ஸ்டைலிஷான, யூத்ஃபுல்லான எஸ்யூவி டிசைனில் ஆரம்பித்து, இன்டீரியர் தரம், ஹைடெக்கான கேபின், ஸ்மூத் டிரைவ், எக்கச்சக்க வசதிகள், ஹேண்ட்லிங் வரை வால்வோ எல்லாவற்றிலும் அவுட்ஸ்டேண்டிங். நெருக்கடியான பின் சீட் இடவசதியும், சர்வீஸ் நெட்வொர்க்கும் உங்களுக்குப் பிரச்னை இல்லை என்றால், காசுக்கேற்றதைவிட பெரிய கார் வால்வோதான்!