Published:Updated:

பெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?

பெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?
பிரீமியம் ஸ்டோரி
News
பெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?

கார் வாங்குவது எப்படி? - 11 - தொடர்

`எந்த மாடல் கார் வாங்கலாம்’ என்பதைத் தாண்டி முதலில் கார் வாங்கும் பலருக்கும் இருக்கும் பெரிய குழப்பம் இதுதான்: பெட்ரோல் காரா... டீசல் காரா?

பெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?

`நாங்க நாலு பேரு. எங்களுக்கு அருமையான கார் வேணும். சின்னச் சின்னதா டூர் அடிப்போம்’ என்று சொல்லும் நபருக்கு, ஹேட்ச்பேக் கார்தான் மிகச் சரியானதாக இருக்கும். கொஞ்சம் ப்ரீமியம் பார்ட்டி என்றால், அவருக்கு செடான் ஓகே. அதிலும் பெட்ரோல்/டீசல் காரைத் தேர்ந்தெடுப்பதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. `ரொம்ப யூஸேஜ் இல்லை; மாசம் 1,000 கீலோ மீட்டர் கூட ஓட்ட மாட்டேன். எப்போவாவதுதான் டூர் அடிப்பேன்’ என்பவர்கள், நிச்சயம் பெட்ரோல் காரை டிக் அடிப்பதுதான் சரி. `பெட்ரோல்தான் டீசலைவிட விலை அதிகமாச்சே... ஏன் இப்படி?’ என்பவர்கள் இதை யோசிக்க வேண்டும். அதாவது, ஒரு டீசல் கார், பெட்ரோல் காரைவிட குறைந்தது ஒன்றரை லட்சமாவது அதிகம் இருக்கும். வேரியன்ட்டுக்கு ஏற்ப இந்த லட்சங்கள் கூடலாம்.

உதாரணத்துக்கு, மாருதி சியாஸ் (Alpha) பெட்ரோல் காரின் ஆன்ரோடு விலை 11.43 லட்சம் ரூபாய். இதுவே டீசல் டாப் வேரியண்ட் சியாஸ் காரின் விலை 14.54 லட்சம் ரூபாய். பெட்ரோல் காருக்கும் டீசல் காருக்கும் உள்ள விலை வித்தியாசம், கிட்டத்தட்ட 3.11 லட்சம் ரூபாய். டீசல் காரை எதற்காக செலெக்ட் செய்கிறோம்? முக்கியமாக மைலேஜ். அப்புறம் எரிபொருள் விலை வித்தியாசம். இப்போது பெட்ரோலுக்கு டீசலுக்கும் அதிக விலை வித்தியாசம் இல்லை. பெட்ரோல் கார் கொடுக்கும் மைலேஜ் - டீசல் கார் கொடுக்கும் மைலேஜ் உடன் ஒப்பிடும்போது குறைவுதான். 

உதாரணத்துக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இந்த 3.11 லட்சத்துக்கு, 3,987 லிட்டர் பெட்ரோல் போடலாம். அதாவது, மாதம் 2,000 கி.மீ ஓட்டுகிறீர்கள் என்றால், உங்கள் கார் ஒரு லிட்டருக்கு 13 கி.மீ மைலேஜ் கொடுக்கும்பட்சத்தில் மாசம் சுமார் 153 லிட்டர் பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கும். மாதத்துக்கு 12,000 ரூபாய். ஓர் ஆண்டுக்கு 1,44,000 ரூபாய். அப்படியென்றால், அந்த 3.11 லட்சத்துக்குக் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம். அதனால் காரை குறைவாகப் பயன்படுத்துகிறவர்கள் பெட்ரோல் வேரியன்ட் காரை வாங்குவதே லாபகரமானது.

வாசகர் ஒருவர் பயண விரும்பி. மாருதி டிசையர் டீசல் வைத்திருந்தார். மாதம் 4,000 முதல் 5,000 வரை கார் ஓட்டுவார். அண்மையில் டீசல் டிசையரை எக்ஸ்சேஞ்ஜ் செய்துவிட்டு, ஹூண்டாய் வெர்னா காரை புக் செய்தார். `நீ ஓட்டுற ஓட்டுக்கு டீசல்தான் சரியா இருக்கும்’ என்று பலர் கருத்துச் சொல்ல, அவர் வாங்கியதோ வெர்னா பெட்ரோல்.

``வெர்னா SX டீசல் விலை 14.15 லட்சம். இதுவே பெட்ரோல் SX விலை 11.45 லட்சம்தான். இப்போது பெட்ரோல், டீசலைவிட 7 ரூபாய்தானே அதிகம். நான் மாசம் 10,000 கி.மீ ஓட்டினாலும், எனக்கு டீசல் கார் நஷ்டம்தான் பாஸ். ஏன்னா, அந்தக் காசுல இன்னும் ரெண்டு வருஷத்துக்கு நான் பெட்ரோல் போட்டே ஓட்டிடுவேன். எப்படிப் பார்த்தாலும் எனக்கு லாபம்தான். அதுபோக, இன்னும் நாலு வருஷத்துல இந்த வெர்னாவை எக்ஸ்சேஞ்ஜ் பண்ணிடுவேன்’’ என்று விளக்கம் கொடுத்தார்.

ஆம், கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவருக்கு லாபம் தான் மிஞ்சும். இதை ஒரு வகையில் புத்திசாலித்தனம் என்றே சொல்லலாம்.

சிலருக்கு டீசல் காரின் இன்ஜின் பர்ஃபாமென்ஸ் மிகவும் பிடித்திருக்கும். காரணம், பெட்ரோல் காரில் பவரும் டார்க்கும் இன்ஜின் சிசியும்  டீசல்  இன்ஜினைவிட நிச்சயம் குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் விருப்பதுக்காக டீசல் வேரியன்ட்டை வாங்குவதில் தவறில்லை.

அதேபோல, டிராவல்ஸ் அல்லது வாரா வாரம் டூர் அடித்து ஆரவாரம் செய்யும் பார்ட்டிகளுக்குத்தான் டீசல் சரியாக இருக்கும்.

பிராண்ட் வேல்யூ முக்கியமா?

பெட்ரோலா... டீசலா... ஹேட்ச்பேக்கா... செடானா... எஸ்யூவியா? இதைத் தாண்டி, முதலில் கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது கார் பிராண்ட். முதல் கார் வாங்கும் ஒருவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், பிரபலமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதே மிகச் சரியாக இருக்கும். 

பெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?

தெரிந்த நண்பர் ஒருவர், இரண்டாவது கார் வாங்கினார். அவரின் முதல் கார், ஈக்கோ. மாருதி நிறுவனத்தைச் சேர்ந்த ஈக்கோ கார், 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. குடும்பம் பெரியது என்பதால், அதை வாங்கியதாகச் சொன்னார்.

விலை மலிவான ஈக்கோ, இடவசதியில் அவருக்கு மனநிறைவைத் தந்தாலும், நாளடைவில் ஈக்கோ காரின் பர்ஃபாமென்ஸ் அவருக்குப் பிடிக்கவில்லை. காரணம், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் இருப்பது 73 bhp பவர் மற்றும் 10.30 kgm டார்க்தான். 8 பேரையும் கூடவே லக்கேஜையும் ஏற்றும்போது, இந்த பெர்ஃபாமென்ஸ் நிச்சயம் சுமார் ரகமானதாகத்தான் இருக்கும். மேலும், இதன் கி.கிளியரன்ஸும் (160 மிமீ) குறைவு என்பதால், ஃபுல் லோடில் ஸ்பீடு பிரேக்கர்களில் அடி வாங்குவதாகவும் குறைப்பட்டார். அதனால், அடுத்த டீசல் மாடலுக்குத் தாவ விரும்பிய அவர் தேர்ந்தெடுத்தது, ஃபோர்ஸ் ஒன் காரின் பெரிய எஸ்யூவி. `ஃபோர்ஸ் ஒன் அப்படினு ஒரு கம்பெனி இருக்கா? கேள்விப்பட்டதே இல்லையே... பார்த்து வாங்குடா’ என்று வீட்டில் பலத்த எதிர்ப்பு. 

பெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?

பல்க்கியான உருவத்தையும் பென்ஸ் இன்ஜினையும் பார்த்து ஆசைப்பட்ட அவருக்கு, அந்த காரின் பராமரிப்புச் செலவுகள் பற்றியும், சர்வீஸ் பற்றியும் கேட்கத் தோன்றவில்லை. பிரச்னைகள் ஏற்பட ஏற்படத்தான் அவருக்கு இதில் இருக்கும் சிக்கல்கள் புரிந்தது. அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்களும் குறைவு என்பதால், மிகவும் பாடுபட்டுப் போனதாகச் சொன்னார். இந்த நண்பரின் கதை மூலம் என்ன உணரப்படுகிறது என்றால், புதிதாக கார் வாங்குபவர்கள், பிராண்ட் வேல்யூவையும் கவனிக்க வேண்டும் என்பதுதான். யூனிக்காகத் தெரிய வேண்டும் என்பதற்காக, விற்காத மாடலின்மேல் லயித்துப்போனால்... சிக்கலுக்கும் சேர்த்து ஆன்ரோடு விலை செலுத்தவேண்டியிருக்கும்.

நிம்மதி முக்கியம் மக்களே!

- கார் வாங்கலாம்

தமிழ் - படங்கள்: ஆ.வள்ளி செளத்திரி

பெட்ரோல் கார் - என்ன ப்ளஸ்... மைனஸ்?

பெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?



* பெட்ரோல் கார், டீசல் காரைவிட லட்ச ரூபாய்க்கு மேல் குறைவாக இருக்கும்.  அதனால், முதல் கார் பெட்ரோலாக இருப்பது பெஸ்ட்.

* மாதத்துக்கு ஆயிரம் கி.மீ க்கு குறைவாக ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல்தான் பெஸ்ட் சாய்ஸ்.

* இன்ஜின், கியர்பாக்ஸ் ஸ்மூத்னெஸ் விரும்புபவர்கள், பெட்ரோலைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* டீசல் வேரியன்ட்டைவிட பெட்ரோல் வேரியன்ட் காரின் பராமரிப்புச் செலவு நிச்சயம் குறைவு.

* ஸ்பார்க் இக்னிஷன் என்பதால், குளிர்காலங்களில் பெட்ரோல் இன்ஜின் நறுக்கென ஸ்டார்ட் ஆகும்.

* சுற்றுச்சூழலுக்கு பெட்ரோல் தான் பெஸ்ட். டீசல் அளவுக்கு பெட்ரோலில் எமிஷன் இருக்காது.

* பெட்ரோல் காரின் பவர் டெலிவரி செம ஸ்மூத் ஆக இருக்கும்.

* டீசல்கார் அளவுக்கு பெட்ரோல் கார் அதிகம் சத்தம் போடாது.

டீசல் கார் - என்ன ப்ளஸ்... என்ன மைனஸ்?

* டீசல் காரின் பவர், டார்க், சிசி எல்லாமே பவர்ஃபுல்.

* ஃபன் டு டிரைவ் விரும்பிகளுக்கு டீசல் சரியான சாய்ஸ்.

* பெட்ரோலைவிட டீசல் கார், அதிக மைலேஜ் தரும்.

* அதிக தூரம் செல்பவர்கள், அடிக்கடி டூர் அடிக்கும் பார்ட்டிகளுக்கு டீசல் கார்தான் பெஸ்ட்.

* கம்ப்ரஷன் இக்னிஷன் சிஸ்டம் என்பதால், குளிர்காலங்களில் சில நேரங்களில் பிரச்னை ஏற்படுத்தும்.

* டீசல் இன்ஜினின் எடை, பெட்ரோலைவிட அதிகம் என்பதால் காரின் எடை கூடும்.

* பெட்ரோலைவிட டீசல் இன்ஜினில் மாசு அதிகம்.