கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மழையை சபிக்காமல் ரசிக்கலாம்! - வாகனப் பராமரிப்பு டிப்ஸ்

மழையை சபிக்காமல் ரசிக்கலாம்! - வாகனப் பராமரிப்பு டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மழையை சபிக்காமல் ரசிக்கலாம்! - வாகனப் பராமரிப்பு டிப்ஸ்

மழைக்கால டிப்ஸ் - வாகனப் பராமரிப்பு

டகிழக்குப் பருவமழை தமிழகத்தில் செட்டாகிவிட்டது. அதனால் கார் பைக் ஓட்டுகிறவர்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்களுக்கு ரெட் அலெர்ட்தான். மழைக்காலத்தில் கூல் ரைடிங் கிடைக்க, இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! 

மழையை சபிக்காமல் ரசிக்கலாம்! - வாகனப் பராமரிப்பு டிப்ஸ்

பைக் ஓட்டிகளுக்கு...

* காலையில் முதலில் பைக்கையோ, ஸ்கூட்டரையோ ஸ்டார்ட் செய்யும் போது, கிக் ஸ்டார்ட் பயன்படுத்துவதுதான் நல்லது.பேட்டரியும் நீடித்து உழைக்கும். லாங் லைஃப் இன்ஜினும் நிச்சயம்.

* குளிர்காலத்தில் வாகனத்தை ஸ்டார்ட் செய்துவிட்டு, எடுத்தவுடனேயே ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக் கிளப்பாதீர்கள். ஒன்றிரண்டு நிமிடம் ஐடிலிங்கில் விட்டுவிட்டு, பிறகு ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்துங்கள். இதனால், இன்ஜின் முழுக்க ஆயில் பரவி, இன்ஜின் பாதுகாப்பாக இருக்கும். அதேபோல், இன்ஜினை ஆஃப் செய்யும்போதும் இந்த விதி பொருந்தும்.

* மழை நேரத்தில் விசிபிளிட்டி கிடைக்காது. உங்களுக்கும் சரி; அடுத்தவருக்கும் சரி. எனவே, மழையில் பைக் ஓட்டும்போது ஆரஞ்சு வண்ணத்தில் ரெயின்கோட் அணிந்தால், லாங் ரைடிங்கில் ரெஃப்ளெக்ட் ஆகி, மற்றவர்கள் அலெர்ட் ஆக வாய்ப்புண்டு.

* அதேபோல் வாகனங்களிலும் ரெஃப்ளெக்டிங் தன்மைகொண்ட ஸ்டிக்கர்கள், அலெர்ட் லைட்டுகளை அங்கங்கே ஃபிட் செய்துகொள்வது வித்தியாசமான முயற்சி.

* மழையில் பைக் ஓட்டும்போது ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் மாட்டி, வைஸரை இறக்கிவிடுங்கள். இதனால் மழைநீர் முகத்தில் படாமல் நிம்மதியாக பைக் ஓட்டலாம்.

* சிலர் பைக்குகளில் வொயர்கள் வெளியே தெரியும்படி வைத்திருப்பார்கள். `அது பாட்டுக்குத்தானே இருக்கு’ என்று சொல்லாமல், இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால், மழைநீர் வொயர் வழியே இறங்கி ஷார்ட் சர்க்யூட் ஆவதைத் தடுக்கலாம்.

* ஈரமான சாலைகளில் கிரிப் அவ்வளவாகக் கிடைக்காது. பிரேக் பிடிக்கும்போது பைக் தானாகவே சறுக்கும். அந்நேரத்தில் டயர்களின் த்ரெட்களைக் கவனியுங்கள். நிச்சயம் தேய்ந்திருக்கும். யோசிக்கவே வேண்டாம். புது டயர்தான் சரியான வழி. பணத்தைவிட உயிர் முக்கியம் பாதுகாப்பான பயணம் முக்கியம் பாஸ்!

* மழை நீர் தேங்கியிருக்கும் சாலைகளில், எக்ஸாஸ்ட்டில் நீர் புகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பள்ளமான தண்ணீர் நிரம்பிய இடங்களில் பைக்கை இறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு.

* சிலருக்கு, பைக்கில் சென்டர் ஸ்டாண்ட் என்ற ஒன்று இருப்பதே மறந்திருக்கும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ விஜய் சேதுபதி மாதிரி முழிப்பார்கள். மழை நேரத்தில் சைடு ஸ்டாண்ட் போடும்போது என்னாகும் தெரியுமா? தண்ணீர், ஹேண்டில்பார் வழியாக கேபிள்களில் பயணம் செய்து, கார்புரேட்டரிலோ, Fi யூனிட்டிலோ மழைநீர் சேகரிப்பு நடந்து கொண்டிருக்கும். அப்புறம் எப்படி பாஸ் பைக் ஸ்டார்ட் ஆகும்?

* சிலர் பைக் டேங்க்குக்கு டிரெஸ் போடாமல், பிறந்தமேனியாகவே வைத்திருப்பார்கள். இதிலும் சிக்கல் இருக்கிறது. டேங்க் மூடி வழியாக தண்ணீர், பெட்ரோல் டேங்க்குக்குள் இறங்க வாய்ப்புண்டு. 

* பள்ளத்தில் விழுந்து பைக் ஆஃப் ஆனால், உடனே மாங்கு மாங்கு என கிக்கரை மிதித்து, செல்ஃப் ஸ்டார்ட்டைப் படுத்த வேண்டாம். பைக் கவிழ்ந்ததால் ஏர் லாக் ஆகியிருக்கும். தண்ணீர் எக்ஸாஸ்ட்டுக்குள் போகாதவரை பிரச்னை இல்லை. அப்படி இல்லாதபட்சத்தில், கொஞ்ச நேரம் கழித்து தானாகவே பைக் ஸ்டார்ட் ஆகும்.

* குளிர் நேரத்தில் குளிரும் வெப்பமும் ஸ்பார்க் பிளக்கின் தன்மைக்கு எதிராக மோதிப் பார்க்கும். பாயின்ட்டுகள் தேய்ந்திருந்தால், பைக் ஸ்டார்ட் ஆவதில் முரண்டு பிடிக்கும். கைவசம் எப்போதும் ஒரு ஸ்பார்க் பிளக் வைத்திருங்கள். ஆபத்தில் இது ரொம்பக் கைகொடுக்கும்.

* மழைநேரத்தில் முக்கியமாக செயின் ஸ்ப்ராக்கெட்டை மறந்துவிடாதீர்கள். மழை முடிந்தவுடன் கறகறவென நாராசச் சத்தம் எரிச்சலூட்டும். செயின் ஸ்ப்ரே வைத்திருந்தால் நல்லது.

கார் ஓட்டிகளுக்கு...

* பைக் மாதிரியேதான்... காரை ஸ்டார்ட் செய்ததும் ஐடிலிங்கில் கொஞ்ச நேரம் வைத்திருந்துவிட்டு, பிறகு ஆக்ஸிலரேட்டர் மிதியுங்கள்.

* மழை நேரங்களில் கார்களில் துருப்பிடிக்கும் பெரும்பான்மையான விஷயம் - டிஸ்க் பிரேக்குகள். இதில் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

* பார்க் செய்த காரின் விண்ட்ஷீல்டில் தூசு தும்புகள் நிறைந்திருக்கும். `வாஷ் வைப்பர் போட்டால் போதும்’ என்று வைப்பரை ஆன் செய்யாதீர்கள். விண்ட்ஷீல்டில் கோடுகள் விழுந்தால், விசிபிளிட்டி கிடைக்காது. வாளி நிறைய தண்ணீர் ஊற்றி விண்ட்ஷீல்டைக் கழுவி விட்டு, பிறகு வைப்பர் ஆன் செய்வதுதான் சிறந்தது. 

மழையை சபிக்காமல் ரசிக்கலாம்! - வாகனப் பராமரிப்பு டிப்ஸ்

* ஓப்பன் ஏரியாவில் காரை பார்க் செய்யும்போது, பாடி கவர் வேண்டாமே! கார் கவர்கள் - தண்ணீர், இலை-தழைகள் போன்றவற்றில் இருந்து காரைப் பாதுகாக்கும்தான். ஆனால், வெயில் அடித்த பிறகு காரை எடுக்கும்போது, காரின் ஆக்‌ஷுவல் கோட்டிங் உரிந்து வர வாய்ப்புண்டு.

* மழை நேரத்தில் காருக்குள் நியூஸ்பேப்பர் போன்ற வஸ்துக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரில் ஊறிப்போனால், துர்நாற்றம் அடிப்பதுடன் சுத்தம் செய்வதும் கஷ்டம்.

* விண்ட்ஷீல்டில் பனி படர்ந்து, கார் ஓட்டும்போது பெரிய சிக்கல் ஏற்படுத்தும். டீஃபாகர் உள்ள கார்களில் இதை ஆன் செய்து கொள்ளலாம். இந்த வசதி இல்லாத கார்களில், புளோயரை ஓடவிட்டு, ஃப்ரெஷ் ஏர் மோடு இன்டேக்கை ஆன் செய்துவிட்டு, (ரீ-சர்க்குலேட் மோடு வேண்டாம்) ஏர் வென்ட்டை முன்பக்க டீஃபாகர் பொசிஷனில் வைத்து ஏ.சி-யை ஆன் செய்யவும். பனி சட்டெனக் காணாமல் போகும்.

* ஹெட்லைட் விசிபிளிட்டி குறைவு, இரவு மழை நேரத்தில் பாடாய்ப்படுத்தும். எப்போதும் ஹெட்லைட்டுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெள்ளை நிற பற்பசையை வைத்து, ஈரத்துணிகொண்டு ஹெட்லைட்டுகளைச் சுத்தம் செய்யலாம். பளிச் என ஆகும்.

* எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்தான் மழைக் காலத்தில் மிகப்பெரிய எதிரி. இன்டீரியரிலும் சரி; பேனெட்டிலும் சரி - வொயர்கள் வெளியே தெரியும்படி இருந்தால் சரி செய்யவும். தண்ணீர் கொட்டிக் கிடக்கும் இடங்களில் காரை ஐடிலிங்கில் நிறுத்திவிட்டு, ஏ.சி போட்டு நீண்ட நேரம் இருக்கக் கூடாது.

* தண்ணீர் நிறைந்த ஏரியாவில் எப்போதும் காரை முதல் கியரிலேயே மூவ் பண்ணவும். இதிலும் எக்ஸாஸ்ட்டுக்குள் தண்ணீர் போகாத வரைதான் மகிழ்ச்சி.

* எக்ஸாஸ்ட் மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் கார் ஆஃப் ஆகிவிட்டால்... மறந்துபோய்க்கூட காரை ஸ்டார்ட் பண்ண முயலாதீர்கள். டெயில் பைப் மூலம் இன்ஜினுக்குள் தண்ணீர் போனால், பர்ஸ் பழுத்துவிடும். காரை அப்படியே தள்ளிக்கொண்டு போய் நிறுத்துவதுதான் பெஸ்ட்.

* கார்களில் எப்போதுமே குடை வைத்திருங்கள். லேசாக நனைந்துவிட்டு சீட்டில் உட்கார்ந்தால், ஊறிய சீட்களிலிருந்து துர்நாற்றம் வீசக் கூடும். எனவே, கீழே இறங்கும்போது குடை அவசியம்.

* டோ பண்ணுவதற்குரிய ரோப் ஒன்று காருக்குள் இருப்பது நல்லது. சேற்றில் கார் சிக்கும்பட்சத்தில் இது பெரிய உதவியாக இருக்கும்.

* எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியம் - மழை நேரத்தில் குறைவான வேகத்தில் பயணிப்பதுதான் சிறந்தது. மழையைச் சபிக்க வேண்டாம். ரசிக்கலாம்.

தமிழ்