கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?
பிரீமியம் ஸ்டோரி
News
மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

ஒப்பீடு - மஹிந்திரா மராத்ஸோ VS மாருதி சுஸூகி எர்டிகா

ங்கு நீங்கள் பார்க்கும் இரண்டுமே எம்பிவிகள்தான். என்றாலும், இரண்டுக்கும் இடையே ஒரு சில வித்தியாசங்கள்தான். ஆம், லேட்டஸ்ட்டாக எம்பிவி கோதாவில் குதித்திருக்கும் மராத்ஸோ, மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இன்னொருபுறம் வரும் நவம்பர் 21-ம் தேதி, முற்றிலும் புதிய அவதாரத்தில் இரண்டாம் தலைமுறை எர்டிகா அறிமுகமாக இருக்கிறது. 

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

நாங்கள் ஒப்பீட்டுக்கு எடுத்திருப்பது, முதல் தலைமுறை எர்டிகாதான். மராத்ஸோவுக்கு முதல்கட்ட வரவேற்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. என்றாலும், இன்றுமே எம்பிவி விற்பனையில் இனோவாவுக்கு அடுத்தபடியாக இருப்பது எர்டிகாதான். தற்போது வழங்கப்படும் தள்ளுபடியும் இதற்கு ஒரு காரணம். அடுத்ததாக இது போட்டியாளர்களைவிடக் குறைவான விலை (மராத்ஸோவைவிட 3 லட்சம் ரூபாய் குறைவு). அது மட்டுமல்ல; மாருதியின் பிராண்ட் மதிப்பும் கைகொடுக்கிறது.
சரி, இந்த இரண்டு எம்பிவி-களில் எதை வாங்கலாம்?

டிசைன்

எம்பிவி-கள் எக்கனாமிக்கலாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி, அது பலதரப்பட்ட மக்களையும் கவரும் விதத்தில் இருப்பதும் அவசியம். அதனாலேயே, தங்கள் எம்பிவி-களை அந்தந்த நிறுவனங்கள் அதிரடியாக வடிவமைக்கவில்லை. இரண்டையும் பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது, வேன் போன்று காட்சியளிக்கின்றன. என்றாலும், சுறாவை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் மராத்ஸோ, இங்கே எதிர்பார்த்தபடியே பலரது கவனத்தை ஈர்க்கிறது. எர்டிகாவைவிட 289 மிமீ அதிக நீளம், 171 மிமீ அதிக அகலம், 89 மிமீ அதிக உயரம் என இருப்பதால், Transverse Mounted இன்ஜின் (ஃப்ரன்ட் வீல் டிரைவ்) மற்றும் லேடர் ஃப்ரேம் சேஸியைக்கொண்டிருக்கும் மராத்ஸோ, சாலையில் பார்க்க கெத்தாக இருக்கிறது.

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

முந்தைய ஸ்விஃப்ட்டின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் எர்டிகா, ஃப்ரன்ட் வீல் டிரைவ் அமைப்பு மற்றும் மோனோகாக் சேஸியைக்கொண்டுள்ளது. கார் காம்பேக்ட்டாகவே இருந்தாலும், இதன் வீல் பேஸ் மராத்ஸோவைவிட 20மிமீதான் குறைவு. எனவே, இருக்கின்ற இடத்தில் 7 சீட்களை பேக்கேஜ் செய்ததில் வெற்றி பெற்றிருக்கிறது மாருதி சுஸூகி. `தினசரி பயன்படுத்தக் கூடிய எம்பிவி வேண்டும்’ என்பவர்களுக்கு, எர்டிகா ஏற்ற சாய்ஸாக மாறியதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. 2015-ம் ஆண்டில் வெளிவந்த பேஸ்லிஃப்ட் மாடலில், க்ரோம் வேலைப்பாடுகள், டச் ஸ்க்ரீன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

கேபின்

வெளிப்புற டிசைனைப்போலவே, மராத்ஸோவின் உட்புறமும் ஸ்மார்ட்டாகவே அமைந்திருக்கிறது. டூயல் டோன் கேபினில் இருக்கும் Textured பிளாஸ்டிக்ஸ் மற்றும் Gloss Black ஃப்னிஷ் ப்ரீமியம் ரகம். கேபினின் ஃபிட் அண்ட் ஃப்னிஷ் மற்றும் கட்டுமானத் தரம் மிகச் சிறப்பு. ஆங்காங்கே தேவையான ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் இருந்தாலும், அவை பயன்படுத்த பிராக்டிக்கலாக இல்லை. முன்பக்க இருக்கைகள் பெரிதாக இருப்பதுடன், அவற்றுக்குத் தனித்தனியாக ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பயணங்கள் சொகுசாக இருக்கலாம். தவிர, டிரைவர் சீட்டிலிருந்தே வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. 7 சீட்டர் மாடலில், 2-வது வரிசைக்கு கேப்டன் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தேவைக்கேற்ப Recline செய்து கொள்ளலாம்.

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

மராத்ஸோவின் டாப் வேரியன்ட்டான M8-ல், இரண்டாவது வரிசைக்கு SunBlind கொடுக்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். காரின் ரூஃப்பில் இருக்கும் ஏசி யூனிட், விமான ஸ்டைலில் அசத்துகிறது. மூன்றாவது வரிசை இருக்கைக்குச் செல்ல, இரண்டாவது வரிசையின் இடதுபுற இருக்கையை, லீவரைப் பயன்படுத்தி சுலபமாக Flip & Tumble செய்யலாம். இங்கே கால்களை மேல் நோக்கி வைத்துத்தான் உட்கார வேண்டுமென்றாலும், அது அசெளகரியத்தைத் தரும் அளவுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், எர்டிகாவின் மூன்றாவது வரிசையைவிட, மராத்ஸோவின் மூன்றாவது வரிசை இருக்கைகள் சொகுசாகவே உள்ளன. ஒட்டுமொத்தத்தில், 7 சீட்டருக்குத் தேவையான இடவசதி, நிச்சயம் மராத்ஸோவில் இருக்கிறது. 

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

காரின் உயரம் குறைவு என்பதால், எர்டிகாவுக்குள்ளே செல்வது சுலபமாக உள்ளது. கேபினைப் பொறுத்தவரை, இதுவும் டூயல் டோன் கலரில்தான் இருக்கிறது. ஆனால் மராத்ஸோவுடன் ஒப்பிடும்போது, இங்கே இடம்பெற்றுள்ள பிளாஸ்டிக்ஸ் மற்றும் அதன் ஃபிட் அண்ட் ஃப்னிஷ் ஆகியவை சுமார் ரகம்தான். சீட்கள் கச்சிதமான குஷனிங் மற்றும் சப்போர்ட் உடன் இருப்பது ஆறுதல். வெளிச்சாலை தெளிவாகத் தெரிந்தாலும், காருக்குப் பின்னால் நடப்பவற்றைத் தெரிந்துகொள்வது சிரமமாகவே இருக்கிறது. மேலும் கேபினில் ஸ்டோரேஜ் ஸ்பேஸும் குறைவாகவே இருக்கிறது. இடவசதியும் அவ்வளவு ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தப்படவில்லை.

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

எர்டிகாவின் இரண்டாவது வரிசை இருக்கை சொகுசாகவே உள்ளது. 40:60 விகிதத்தில் இதை Recline செய்யவும் முடிகிறது. ஆனால், மராத்ஸோவுடன் ஒப்பிடும்போது மூன்றாவது வரிசை இருக்கையை எட்டுவது சற்று கடினமாகவே இருக்கிறது. ஏனெனில், இதற்கு Tumble வசதி இல்லாததே காரணம். மேலும் மூன்றாவது வரிசை இருக்கையில், போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இல்லை. குழந்தைகளுக்கு மட்டுமே இது வசதியாக இருக்கும். மூன்று வரிசை இருக்கைகளும் பயன்பாட்டில் இருக்கும்போது, இரண்டு பைகளை வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்குத்தான் பூட் ஸ்பேஸ் இருக்கிறது (185 லிட்டர்). இது மராத்ஸோவைவிட 5 லிட்டர் குறைவு.

வசதிகள்

இரண்டு கார்களிலும் சாட்டிலைட் நேவிகேஷன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா & பார்க்கிங் சென்சார், ரியர் வைப்பர், 2 காற்றுப்பைகள், பின்பக்க ஏசி ஆகியவை மட்டுமே பொதுவானவை. மற்றபடி இங்கு இருப்பதிலேயே புதிய கார் என்பதால், சிறப்பம்சங்களில் எகிறியடிக்கிறது மராத்ஸோ. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், பார்ட் லெதர் அப்ஹோல்ஸரி, 17 இன்ச் அலாய் வீல்கள், LED DRL, புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், சன்ஷேடு, 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் என எர்டிகாவைவிட அதிக வசதிகள் இருக்கின்றன. ஆனால், அங்கே இருக்கும் ஆப்பிள் கார் ப்ளே, இங்கே மிஸ்ஸிங். 

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

மராத்ஸோவில் இருக்கும் புதிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின், செம சைலன்ட்டாக தனது வேலையைப் பார்க்கிறது. ஐடிலிங் மற்றும் குறைவான வேகங்களில், க்ளட்ச் மற்றும் கியர் லீவரில் எந்த அதிர்வுகளும் தெரியவில்லை. க்ளட்ச் எடை குறைவாக இருப்பதுடன், டர்போ லேக்கும் கொஞ்சமே கொஞ்சம்தான் என்பதால், நகரத்தில் இந்த காரை ஓட்டுவது சுலபமாக இருக்கிறது. 121bhp பவரை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், ஆரம்பகட்ட மற்றும் மிதவேகப் பயன்பாட்டை மனதில் வைத்து டியூன் செய்யப்பட்டிருக்கிறது.  அந்த வேகங்களில் சீராக இருக்கும் பவர் டெலிவரி, 3,500 ஆர்பிஎம்-மைத் தாண்டிய பிறகு சுணங்கி விடுகிறது. கார் ஃபுல் லோடில் இருக்கும்போது, இது பெரிய குறையாக மாறிவிடுகிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, திடீரென ஓவர்டேக் செய்வதற்குத் திட்டமிடல் செய்வது நலம். ஆனால் 0 - 100 கிமீ வேகத்தை 14.47 விநாடியில் எட்டிப்பிடிக்கும் மராத்ஸோவின் கியர்களுக்கு இடையேயான வேகம் சிறப்பாக உள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், நெடுஞ்சாலைகளில் இன்ஜின் ரிலாக்ஸாக இயங்குவதற்கு உதவுகிறது.

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

ஃபியட்டின் 1.3 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைக்கொண்டிருக்கும் எர்டிகா, அதில் VGT மற்றும் SHVS தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது. 90bhp பவரை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், டர்போ லேக்குக்குப் பெயர்பெற்றது. இதனால் 2,000 ஆர்பிஎம் வரை டல்லாக இயங்கும் இன்ஜின், அதன் பிறகு தடாலடியாக பவரை வெளிப்படுத்தத் தொடங்கிவிடுகிறது. இதனால் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் நன்றாக இருப்பதுடன், இன்ஜினும் 5,000 ஆர்பிஎம்-மைத் தாண்டிப் பறக்கிறது. நெடுஞ்சாலைகளில் இது கைகொடுத்தாலும், நகரப் பயன்பாட்டில் அடிக்கடி கியர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. குறைவான வேகத்தில் போதுமான பவர் இல்லாததே இதற்குக் காரணம். ஆனால், மராத்ஸோவைவிட 31bhp குறைவான பவர் மற்றும் 10kgm டார்க் குறைவாக வெளிப்படுத்தினாலும் (20kgm), அதைவிடச் சுமார் 400 கிலோ குறைவான எடையைக் கொண்டிருப்பதால், 0 - 100கிமீ வேகத்தை விரைவாகவே (13.3 விநாடி) எட்டிப் பிடித்து விடுகிறது எர்டிகா. ஆனால், எர்டிகாவில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான்.

ஓட்டுதல் அனுபவம்


எந்த வேகத்தில் கரடுமுரடான சாலைகளில் பயணித்தாலும், மராத்ஸோவின் சஸ்பென்ஷன் அதைச் சமாளித்துவிடுகிறது. ஆனால், குறைவான வேகத்தில் சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதால், சீரற்ற சாலைகளில் செல்லும்போது கார் கொஞ்சம் தூக்கிப்போடுகிறது. மூன்று இலக்க வேகத்தில் நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வது நல்ல அனுபவமாக இருப்பதுடன், மராத்ஸோவின் நிலைத்தன்மையும் அசத்தலாக இருக்கிறது. உயரமான காராக இருப்பினும், பாடி ரோல் கட்டுக்குள்தான் உள்ளது. மேலும் திருப்பங்களில் நம்பிக்கையாகச் செலுத்த முடிவது பெரிய ப்ளஸ். நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக் இருப்பதால், இந்த பல்க்கான வாகனத்தை உடனடியாக நிறுத்திவிட முடிகிறது. ஸ்டீயரிங் மற்றும் கியர்பாக்ஸ் காம்போ, காரை எளிதாக ஓட்டுவதற்குத் துணை நிற்கின்றன. எர்டிகாவைவிட அளவில் பெரிதாக இருப்பினும், இதன் டர்னிங் ரேடியஸ் 0.05 மீட்டர்தான் அதிகம். (5.25 மீட்டர்). 

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

பெரிய வீல்பேஸ் மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் செட்டப்பைக் கொண்டிருக்கும் எர்டிகா, சொகுசான ஓட்டுதலை வழங்குகிறது. கரடுமுரடான சாலைகளில் இது மராத்ஸோ அளவுக்கு இல்லாவிட்டாலும், பெரிய மேடு பள்ளங்கள் தரும் அதிர்வுகளைத்தான் கேபினின் உள்ளே உணர முடிகிறது. இந்த காரின் ஸ்டீயரிங் சரியான எடையில் இருப்பதுடன், நிலைத்தன்மையும் சிறப்பாகவே இருக்கிறது. ஸ்விஃப்ட்டின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருப்பதால், ஒரு எம்பிவி-யை ஓட்டுவது போன்ற உணர்வு இல்லாமல், ஒரு டால் பாய் ஹேட்ச்பேக்கை ஓட்டுவதுபோல ஈஸியாக எர்டிகாவைக் கையாள முடிகிறது. இதனால் எந்த வேகத்திலும் திருப்பங்களில் காரைச் செலுத்த முடிவது ப்ளஸ். ஆனால், க்ளட்ச் கொஞ்சம் ஹெவியாக இருப்பதுடன், கியர் மாற்றுவதற்குக் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

தொகுப்பு: ராகுல் சிவகுரு

மஹிந்திராவா... மாருதியா? எது ஓகே?

ற்போதைய மாடலைவிட அளவில் பெரிய மற்றும் கூடுதல் வசதிகளுடன் வரவிருக்கிறது புதிய எர்டிகா. இதனால் காரின் விலையும் முன்பைவிட அதிகம் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. முதல் தலைமுறை எர்டிகாவை இன்னுமே வாங்குவதற்கான காரணம், அதன் விலைதான். உங்கள் பட்ஜெட் ப்ரீமியம் ஹேட்ச்பேக்/செடான் அல்லது காம்பேக்ட் எஸ்யூவி அளவுக்கு இருந்தால்கூட, 7 சீட்டர் கார்தான் வேண்டும் என்றால், தாராளமாக இந்த எம்பிவி-யை வாங்கலாம்.

எர்டிகாவைவிட 3 லட்சம் ரூபாய் அதிகமாக இருக்கும் மராத்ஸோ, அதை நியாயப்படுத்தும் விதமான தயாரிப்பாக இருக்கிறது. இதன் டிசைன், இடவசதி, கேபின், வசதிகள், கட்டுமானத் தரம், ஒட்டுமொத்தத் தரம் ஆகியவையே இதற்கான உதாரணம். முழுமையான 7 சீட்டராகத் திகழும் இந்த எம்பிவி, எர்டிகாவைவிட இனோவா க்ரிஸ்டாவுடன் போட்டி போடவே விரும்புகிறது. எளிதான ஓட்டுதல், பவரை சீராக வெளிப்படுத்தும் இன்ஜின் என அதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால், ஃபுல் லோடில் காரின் பவர் அவ்வளவு போதுமானதாக இல்லை என்பதுடன், கேபினில் சில Ergonomic Flaws இருக்கத்தான் செய்கின்றன. தனது மொத்த வித்தையையும் மராத்ஸோவில் காட்டியிருக்கும் மஹிந்திராவின் பெஸ்ட் எம்பிவி என இதைக் கட்டாயமாகச் சொல்லலாம். இப்போதைக்கு இந்தப் போட்டியின் வெற்றியாளர் மராத்ஸோதான். புதிய எர்டிகா வரும்போது, ஒருவேளை காட்சிகள் மாறலாம்!