கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

போட்டி - ஃபோர்டு ஆஸ்பயர் VS ஹோண்டா அமேஸ் VS மாருதி சுஸூகி டிசையர்

பெட்ரோல் செடான் வெறியர்களுக்கு, வெறித்தனமான போட்டி காத்திருக்கிறது. புது இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸுடன்  சூப்பர் விலையில் ஆஸ்பயர் பெட்ரோல் பேஸ்லிஃப்ட் வந்திறங்க... (ஆஸ்பயரின் ஃபுல் டிரைவ் ரிப்போர்ட் 36-ம் பக்கம்) புது பிளாட்ஃபார்மில் தயாராகி வரும் அமேஸும், காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக இருக்கும் டிசையரும் இப்போது இன்னும் அலெர்ட் ஆகியிருக்கின்றன. ‘மூன்று பெட்ரோல் கார்களையும் வெச்சு ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணிடுங்க’ என்று ஆசிரியர் கட்டளையிட, ஷார்ட்டாக ஒரு ரிப்போர்ட் உங்களுக்காக...!

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

ஸ்டைல்

டிசையர்:
மாருதி எது செய்தாலும் ஹிட் அடிக்கும். 3-வது ஜெனரேஷன் டிசையர், மாதம் ஆவரேஜாக 20,000 கார்கள் விற்பனையாகின்றன. பழைய டிசையரில் கொஞ்சம் ஸ்விஃப்ட் வாடை அடிக்கும். இந்த டிசையர் முற்றிலும் வேறுபட்டு இருப்பது, இன்னும் கொஞ்சம் லைக்ஸை அள்ள ஆரம்பித்து விட்டது. கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ், ஷார்ப் ஆன பாடி பேனல்ஸ் என்று கெத்து காட்டுகிறது. இந்த மூன்றில் புரொஜெக்டர் LED ஹெட்லைட் இருப்பது டிசையரில் மட்டும்தான்.

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

அமேஸ்: பழைய அமேஸ், பிரியோவின் பிளாட்ஃபார்மில் தயாரானது. இது முற்றிலும் வேறு. வெளியாகிய இரண்டு மாதங்களிலேயே காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் கிட்டத்தட்ட மாதம் 9,000 கார்கள் விற்கிறது. ஓவர் ஆலாக ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப், LED புரொஜெக்டர், ரியர் சென்ஸிங் வைப்பர்ஸ் போன்ற சில சின்னச் சின்ன விஷயங்கள் மட்டும் மிஸ் ஆகிறது அமேஸில்.

ஆஸ்பயர்:
இந்த மூன்றில் ஃப்ரெஷ் ஆக இருப்பது ஆஸ்பயர்தான். ஆஸ்டன் மார்ட்டின் இன்ஸ்பிரேஷன் அப்படியே தொடர்கிறது. கிரில்லும், பானெட்டும் வந்து முடியும் இடத்தையும் கவனியுங்கள். மல்ட்டி ஸ்போக் அலாய் வீல் செம ஸ்போர்ட்டி. ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப் உண்டு. ஆனால், டிசையர்போல் புரொஜெக்டர் லைட் இல்லை. மூன்று கார்களிலுமே புஷ் பட்டன் ஸ்டார்ட் இருப்பது... அப்பாடா! ஓவர்ஆலாக ஆஸ்பயரின் டிசைன் எல்லோருக்குமே பிடிக்கும். 

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

இன்டீரியர்

டிசையர்:
இன்டீரியர் தரம் ஓகேதான். செம பெர்ஃபெக்ட் என்று சொல்ல முடியாது. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங், பிடிப்பதற்கே ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இந்த மூன்றில் டிசையர்தான் இடவசதியில் அப்ளாஸ் அள்ளுகிறது. முன்/பின் சீட்கள்... சொகுசு. பழைய டிசையரில் லாங் டிரைவ் அடித்தால், பின் பக்கம் உள்ளவர்கள் டயர்டு ஆகிவிடுவார்கள். இதில் மூன்று பேர் சோர்வாகாமல், சொகுசாகப் பயணிக்கலாம். இந்த மூன்றில் ரியர் ஏ.சி வென்ட் இருப்பது டிசையரில் மட்டும்தான்.

அமேஸ்: லாங் ஷாட்டில் இம்ப்ரஸ் பண்ணுகிறது அமேஸின் இன்டீரியர். கிட்ட போய்ப் பார்த்தால், ஏகப்பட்ட ஏமாற்றம். பில்டு குவாலிட்டி சுமார்தான். சில பட்டன்கள் சீப் ரகம். முக்கியமாக அந்த டச் ஸ்க்ரீன், இன்னும் இம்ப்ரஸ்ஸிவ் ஆக இருக்க வேண்டும். சீட்டிலும் தொடைக்கான சப்போர்ட்டிலும் இன்னும் கொஞ்சம் கம்ஃபர்ட் தேவை. அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட் ஓகே. பின் பக்கம் உயரமானவர்களுக்குத் தலை இடிக்கலாம். பிராக்டிக்காலிட்டியில்தான் அமேஸை அடித்துக் கொள்ள முடியவில்லை. எத்தனை வாட்டர் பாட்டில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ். அப்புறம் டிக்கி இடவசதியும் இதில்தான் பெருசு. 420 லிட்டர். 

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

ஆஸ்பயர்: டச் ஸ்க்ரீன் இதில் சிறுசு. 6.5 இன்ச்தான். ஆனால், நீட் அண்ட் க்ளீன் டிசைன். முன் பக்கம் அமேஸ் மாதிரி ஸ்டோரேஜ் இடவசதி உண்டு. ஆனால், பின் பக்கம் அவ்வளவாக இல்லை. ஒரே ஒரு பாட்டில் ஹோல்டர்தான். இந்த மூன்றில் ஆஸ்பயரில்தான் பெரிய வீல்பேஸ். 2,490 மி.மீ. பின் பக்கம் தாராளமாக இருக்கும் என்று நினைத்தால்... அப்படியெல்லாம் இல்லை. ரியர் ஏ.சி வென்ட்டும் இல்லை.

டிரைவ்

டிசையர்: குழந்தைகூடச் சொல்லும் - 1.2 லி, K சீரிஸ் இன்ஜின்தான் மாருதி பெட்ரோலின் ஃபேவரைட். 83 bhp பவர், 11.3 kgm டார்க்கும் சிட்டி டிரைவிங்குக்கு சூப்பர். மற்ற இரண்டையும்விட எல்லாவற்றிலும் 2 விநாடிகள் முந்தியே இருக்கிறது டிசையர். கிளட்ச்சும் லைட் வெயிட். கியர்பாக்ஸும் செம ஸ்மூத். சிட்டிக்குள் ஏன் இத்தனை ஈஸியாக இருக்கிறது என்று கவனித்தால்... அட இதன் எடையும் செம லைட் வெயிட். 895 கிலோதான். அதனால், பெர்ஃபாமென்ஸிலும் இதுதான் டாப். 0-100 கி.மீ-க்கு 11.50 விநாடிகள்.

அமேஸ்:
வெளியே iVtech பேட்ஜ் இருந்தால், அது ஹோண்டாவின் ஃபேவரைட்டான 1.2 லி, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் என்று அறிக. ஹோண்டா பெட்ரோல் எப்போதுமே ஹைவேஸில்தான் கலக்கும். அமேஸ் இதில் அமேஸிங். 5,000 rpm-க்கு மேலே ஓடவில்லை...பறக்கிறது. அதாவது, ஹை ரெவ்களில் மட்டும்தான் கலக்குகிறது. ஓவர் டேக்கிங்கின் போது, டவுன்ஷிஃப்ட் செய்யச் சொல்லித் திணறுகிறது இன்ஜின். அப்புறம் லோ ரெவ்களில், டிராஃபிக்கில் பன்ச் போதவில்லையே ஹோண்டா? ஆனாலும் ஆஸ்பயரைவிட 1.2 விநாடிகள் 0-100 கி.மீ போட்டியிலும் முந்துகிறது அமேஸ்.

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

ஆஸ்பயர்: ஆஸ்பயரில் எல்லாமே புதுசு. 96 bhp பவர், 1.2 லிட்டரில் இருப்பது டிராகன் 3 சிலிண்டர் இன்ஜின். 4 சிலிண்டர் மாதிரி ஸ்மூத்னெஸ். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், நல்ல ஸ்மூத். இந்த மூன்றில் இதில்தான் அதிக பவர்; டார்க். இது பெர்ஃபாமென்ஸாக மாற வேண்டுமே! அதுதான் இல்லை; இனிஷியல் ரெஸ்பான்ஸில் பம்முகிறது டிராகன். டிசையர் அளவுக்கு ஓர் ஆர்வம் ஏற்படவில்லை. எல்லாமே 2,000 rpm-க்குக் கீழேதான். ஹைவேஸில், ஃபோர்டின் ஃபன் டு டிரைவ் கிடைக்கும். ஜாலியாக 7,000 rpm வரை பெர்ஃபாமென்ஸைக் கக்குகிறது டிராகன்.

தொகுப்பு: தமிழ்

4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்?

அமேஸ்: 420 லிட்டர் பூட் ஸ்பேஸ், ஏகப்பட்ட வாட்டர் பாட்டில் ஸ்டோரேஜ்கள், ரைடு கம்ஃபர்ட்டும் நைஸ். ஆனால், பிளாஸ்டிக் தரம் மற்றும் டச் ஸ்க்ரீன் குவாலிட்டி.. முக்கியமாக அந்த லோ மற்றும் மிட் ரேஞ்ச்களில் பம்மும் இன்ஜின், ஹோண்டாவா இது என்று ஏமாற்றுகிறது. இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வெல் பேக்கேஜ்டு அமேஸ், குடும்பத்தை ஏமாற்றாத கார்.

ஆஸ்பயர்: இங்கிருப்பதிலேயே பாதுகாப்பான கார் ஆஸ்பயர்தான். 4 மீட்டருக்குட்பட்ட காரில் 6 காற்றுப் பைகள் என்றால்... ஹேப்பிதானே! ஷார்ப் ஸ்டீயரிங், ஃபன் டு டிரைவ் அனுபவம், அற்புதமான ஹேண்ட்லிங் என்று வெல் எக்யூப்டு கார் ஆஸ்பயர். முக்கியமாக விலை. எல்லா வசதிகளும் கொண்ட டாப் வேரியன்ட்டே 8.31 லட்சம் எனும்போது ஜாக்பாட்தான். மற்ற இரண்டையும்விட கிட்டத்தட்ட 1.5 லட்சம் குறைவு. ஆனால், இந்த செக்மென்ட்டில் இந்த பெட்ரோல் இன்ஜின் பெஸ்ட் இல்லை என்றே சொல்லலாம். பின் பக்க இடவசதியும் செம டைட். இது பரவாயில்லை; விலைதான் முக்கியம் என்பவர்கள் ஆஸ்பயரை ஸ்டார்ட் பண்ணலாம்.

டிசையர்: இந்த செக்மென்ட்டில் பெஸ்ட் இன்ஜின் மாருதியின் K சீரிஸ். சிட்டி டிராஃபிக்கில் டிசையரை ஓட்டிப் பாருங்கள். அற்புதமாக இருக்கும். இடவசதியும் டிசையரில் தாராளம். பெரிய கார் ஃபீல் தருகிறது. மாருதியின் விலை அதிகம்தான். ஆனால், சர்வீஸ் காஸ்ட்டும் ஸ்பேர்ஸும் நெட்வொர்க்கும்தான் மாருதியை எப்போதுமே வின்னர் ஆக்குகின்றன. டிசையரும் அப்படித்தான். பெட்ரோல் டிசையருக்குப் பூங்கொத்து!