கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

ஷாங்காய் வீரன்!

ஷாங்காய் வீரன்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாங்காய் வீரன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - MG HS

வெகு விரைவில்… அதாவது அடுத்த ஆண்டின் முதல் பாதியிலேயே இந்தியாவில் சீனப் படையெடுப்பு ஆரம்பமாக இருக்கிறது. படையெடுத்து வரப்போவது சீனா என்றாலும், கண்ணுக்கு முன்னே முதல் வரிசையில் நிறுத்தப்படப் போவது, இங்கிலாந்து நாட்டின் MG மோட்டார்ஸ் தயாரிப்பான HS எனும் எஸ்யூவி. 

ஷாங்காய் வீரன்!

பிரிட்டிஷ் பேரரசின் மகாராணியார் பயன்படுத்திய கார். அரச குடும்பத்தினரும் செல்வச் செழிப்புமிக்க தனவான்களும் பயன்படுத்திய ஸ்போர்ட்ஸ் கார் என்பது போன்ற பல அடைமொழிகளுக்குச் சொந்தமான MG மோட்டார்ஸ், சீன அரசு நடத்தும் SAIC மோட்டார் கம்பெனிக்கு இப்போது சொந்தம்.

MG மோட்டார்ஸ், தனது HS எஸ்யூவியின் பராக்கிரமங்களை மட்டுமல்ல; SAIC மோட்டார்ஸின் பராக்கிரமங்களையும் படை பரிவாரங்களையும், அதன் தொழிற்சாலைகள், ஆராய்ச்சி நிலையங்கள், பரிசோதனை ஓடுபாதைகள், பேட்டரி தொழில்நுட்பத்தில் அது அடைந்திருக்கும் உயரம் ஆகியவற்றையும், நம்மை சீனாவுக்கு அழைத்துக் கொண்டுபோய்க் காட்டியது! 

MG மோட்டார்ஸின் இந்த HS எஸ்யூவி, நம் ஊரில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் டூஸான் சைஸில் இருக்கிறது. விலை 20-30 லட்ச ரூபாய் இருக்கலாம்.

ஷாங்காய் வீரன்!

சீனப் பொருட்கள் என்றாலே தரம் குறைந்தவை என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. இந்த நிலையில் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்பெனியில் தயாராகும் கார் என்பதால், MG மோட்டார்ஸின் HS எஸ்யூவி, எந்தப் பாதிப்பும் அடைந்துவிடக்கூடாது என்பதில் SAIC மோட்டார்ஸ் மிகக் கவனமாக இருக்கிறது. சரி HS எஸ்யூவி எப்படி இருக்கிறது என்பதை, ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் இருக்கும் அதன் Proving Ground-க்குச் சென்று டெஸ்ட் செய்தோம்.

வெளித்தோற்றம்

ரோடு பிரெசன்ஸ், பிரம்மாண்டம், கட்டுமானத் தரம் ஆகியவற்றில் இந்த எஸ்யூவியை ஐரோப்பிய கார்களோடு தயங்காமல் ஒப்பிடலாம். ஜப்பானியக் கம்பெனியான மஸ்தா, ஜெர்மன் நாட்டின் போர்ஷே, தென் கொரியாவின் ஹூண்டாய் ஆகியவற்றின் சாயல்கள் இந்த எஸ்யூவியில் தெரிகின்றன.

உள்ளலங்காரம்

காரின் உள்ளலங்காரத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிகப்பு நிற லெதர் சீட்டுகள், ஒரு சிலரின் ரசனையோடு இயைந்து போகாது. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோ ஸ்விட்ச், கியர் செலெக்ட்டர் போன்றவை எல்லாம் ஃபோக்ஸ்வாகனில் இருப்பதுபோலவே இருக்கிறது. SAIC மோட்டார் கம்பெனிக்கு ஃபோக்ஸ்வாகனுடனும் பார்ட்னர்ஷிப் உண்டு என்பதால், இது சாத்தியப்பட்டிருக்கிறது. பெரிய வீல்பேஸ் என்பதால், முன் சீட்டில் மட்டுமல்ல; பின் சீட்டிலும் தாராள இடம். இருக்கைகளும் உட்கார ‘மெத்’ என்று உடலை இதமாகவும், கவ்விக் கொள்ளும் விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

ஷாங்காய் வீரன்!

டிரைவ்

SAIC மோட்டர்ஸின் Proving Ground-ல் மொத்தம் 19 வகையான ஓடுதளங்கள் இருக்கின்றன. சில ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலத்தில், பாதையை ஐஸ் மூடிவிடும் இல்லையா? அந்தப் பாதையில் இந்த வாகனத்தை ஓட்டினால் இது எப்படிச் செயல்படும் என்பதைப் புரிந்து கொள்வதற்காக, செயற்கையாக இங்கே அதே போன்று ஒரு பாதையைத் தயார் செய்து கொடுத்தார்கள். அந்தச் சாலையில் இந்த எஸ்யூவியை 60 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி, திடீர் பிரேக் போட்டு நிறுத்தினேன். வேறு சில கார்களாக இருந்தால், அவை நிச்சயம் பம்பரமாக மாறியிருக்கும். ஆனால் HS எஸ்யூவி திமிறித் திமிறி வேகத்தைக் குறைத்துக் கொண்டது என்றாலும், நிலைகுலையாமல் நேர்கோட்டில் சற்று தூரம் சென்று நின்றது.

அதேபோல குண்டும் குழியுமான சாலைகளிலும், கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்ட பாதைகளிலும், HS எஸ்யூவியை விரட்டிப் பார்த்தேன்.  பெரும்பாலான அதிர்வுகளை அது உள்வாங்கிக் கொண்டதால், கார் ஏறக்குறைய ஸ்மூத்தாகவே சென்றது.

ஷாங்காய் வீரன்!

இதில் இருப்பது 2.0 லிட்டர் Direct Injection டர்போ பெட்ரோல் இன்ஜின் என்பதால், மிட் ரேஞ்சில் பவருக்குக் குறைச்சலே இல்லை. 3,500 rpm-யைத் தாண்டினால், குபுக்கென்று பீறிடும் டர்போ சக்தி நாம் எதிர்பார்க்காததுதான்.

SAIC மோட்டர்ஸுக்கு GM மோட்டார்ஸிலும் பார்ட்னர்ஷிப் இருப்பதால், குஜராத்தில் இருக்கும் GM கார் தொழிற்சாலையில், MG மோட்டார்ஸ் கார்களை உற்பத்தி செய்ய அது திட்டமிட்டிருக்கிறது.

இங்கே விற்பனையாக இருக்கும் இந்த HS எஸ்யூவியில், 2.0 லிட்டர் ஃபியட் டீசல் இன்ஜின் பொருத்தப்படலாம். அப்படி வரும்போது, எஸ்யூவி பிரியர்களுக்கு ஒரு பெரிய விருந்து கிடைக்கும் என்பது நிச்சயம்.

தொகுப்பு: ஆரோக்கியவேல்