கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மீண்டும் சான்ட்ரோ!

மீண்டும் சான்ட்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் சான்ட்ரோ!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் சான்ட்ரோ

* கீழே இயான், மேலே கிராண்ட் i10 

* போட்டிக்கு செலெரியோ, டியாகோ

ந்தியாவைப் பொறுத்தவரை, சான்ட்ரோ என்பது ஒரு லெஜெண்ட். ஹூண்டாய் என்ற கார் கம்பெனி, நம் நாட்டில் காலூன்ற அடித்தளம் அமைத்ததே இந்த சான்ட்ரோதான். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சான்ட்ரோ உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்திவிட்டதாக அறிவித்தபோது, பல சான்ட்ரோ ரசிகர்கள் கவலையடைந்தார்கள். உறுதியான கட்டமைப்பு, விசாலமான கேபின், தரமான உதிரிபாகங்கள், அனைத்துக்கும் மேலாக ‘டால் பாய்’ என்ற அடைமொழிக்கு ஏற்ப சாலையைத் தெளிவாகப் பார்ப்பதற்கு வசதியாக இருந்த இதன் உயரமான இருக்கைகள், சான்ட்ரோவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டத்தைச் சேர்த்திருந்தன. வேகன்- ஆர் போன்ற போட்டி கார்கள் வருவதற்கும் ஹூண்டாய் காரணமாக அமைந்தது.

மீண்டும் சான்ட்ரோ!

‘‘பழைய காதலுக்குத்தான் ('96') இப்ப மவுசு. பழசுதான் இப்ப புதுசு!’’ என்று மக்களின் டேஸ்ட் மாறியிருக்கும் இந்த நேரத்தில், இப்போது சான்ட்ரோ ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது - ‘ஆல் நியூ சான்ட்ரோ’ என்ற பெயரில்.

பழைய சான்ட்ரோ போலவே, ஆல் நியூ சான்ட்ரோவும் டால் பாய் டிசைனில் இருக்கும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ‘டால் பாய்' என்று சொல்வதைவிட ‘Wide Boy’ என்று சொல்லும் அளவுக்கு, பழைய சான்ட்ரோவைவிட புது சான்ட்ரோ அகலத்திலும் நீளத்திலும் பெரிதாகியிருக்கிறது. உயரம் ஏறக்குறைய அதேதான். ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் கிராண்ட் i10 சாயல் தெரிகிறது. காரணம், இது உற்பத்தியாவதும் கிராண்ட் i10 உற்பத்தியாகும் அதே பிளாட்ஃபார்மில்தான். ‘ஸ்வெப்ட் பேக்’ ஹெட் லாம்ப் மற்றும் கேஸ்கேடிங் கிரில் ஆகியவை, கிராண்ட் i10  காரில் இருப்பதைப் போன்றே  இருக்கின்றன.

மீண்டும் சான்ட்ரோ!

ஆனால் சான்ட்ரோவின் கிரில், பனி விளக்கையும் அரவணைத்துக் கொண்டு அகலமாகியிருக்கிறது. காரின் இன்ஜினைக் குளிர்ச்சியாக வைக்க, இந்த அகலமான கிரில் உதவும் என்கிறது ஹூண்டாய்.

முன் சக்கரத்திற்கு மேலே, பூமராங் வடிவில் ஒரு க்ரீஸ் டிசைன். பின் சக்கரத்திற்கு மேலே இன்னொரு க்ரீஸ் டிசைன் என்று சான்ட்ரோவின் பக்கவாட்டு டிசைனும் பக்காவாக இருக்கிறது. அதேபோல காரின் ஷோல்டர் லைன், பின் சீட் கண்ணாடிக்குக் கீழே திடீரென்று இறங்குவதுபோல டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. காரணம் - பின் சீட் பயணிகளுக்கு ஜன்னல் கண்ணாடி அப்போதுதான் பெரிதாக இருக்கும் என்பதால்.

மீண்டும் சான்ட்ரோ!

சற்றே தூக்கலாக, கரிய நிறத்தில் காட்சியளிக்கும் ரியர் பம்பர்தான் டிசைன் ஏரியாவில் நம்மைக் கவர்ந்த ஹைலைட்.  கருப்பு வண்ண பம்பரில், சிகப்பு வண்ண ரெஃப்ளெக்டர்கள் அழகு. விலை உயர்ந்த கார் போல காட்சி தரும் சான்ட்ரோவில், கண் திருஷ்டி மாதிரி இருப்பது உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கதவு கைப்பிடிகள்தான்.

உள்ளலங்காரம்

இரட்டை வண்ண டேஷ்போர்டின் நட்டநடுவே, யானையின் முகத்தைப் போல இருக்கும் சென்டர் கன்சோல், அதில் இருக்கும் 7 இன்ச் டச் ஸ்கீரின் ஆகியவை காரின் கதவைத் திறந்தவுடன் கவர்கின்றன. ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர்வியூ கேமரா, ரிவர்ஸ் சென்ஸார், ஸ்டீயரிங் வீலிலேயே கன்ட்ரோல் பட்டன்கள் என்று பயனுள்ள பல அம்சங்களை சான்ட்ரோவிற்கு ஹூண்டாய் கொடுத்திருக்கிறது. 

மீண்டும் சான்ட்ரோ!
மீண்டும் சான்ட்ரோ!

அதேபோல, காரை ஸ்டார்ட் செய்து முன்னே நகர்த்தினால், கதவுகள் அனைத்தும் தானாகவே ஆட்டோ லாக் ஆகிவிடுகின்றன. பாதுகாப்பு கருதி முன் இருக்கைகளுக்கு இரட்டைக் காற்றுப் பைகளை ஹூண்டாய் கொடுத்திருக்கிறது (டாப் வேரியன்ட்டில்). அழகான டேக்கோமீட்டர், ஸ்பீடோ மீட்டர் டயல்களுடன், ட்ரிப் மீட்டரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை i20 தரத்துக்கு இல்லை என்றாலும், குறை சொல்ல முடியவில்லை.

ஸ்டீயரிங் வீல், கியர் லீவர், கதவின் கைப் பிடிகள், ஏசி வென்ட் ஆகிய இடங்களில் இளகிய தங்க வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பூச்சு ரசனை மிகுந்ததாக இருக்கிறது. இந்தச் சின்ன செக்மென்ட் காரில் இப்படிப்பட்ட வேலைப்பாடுகள்... வெல்டன் ஹூண்டாய்!

ஸ்டீயரிங் வீலில் இருக்கும் ஹூண்டாய் லோகோ, க்ரோம் நிறத்தில் இல்லாமல் கறுப்பு பிளாஸ்டிக்கில் இருக்கிறது. பின்பக்க பார்க்கிங் சென்ஸாரும் இரண்டே இரண்டுதான். டிரைவர் சீட்டுக்கு ஹைட் அட்ஜஸ்ட் இல்லை; ஸ்டீயரிங் வீலையும் அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை. ஹெட் ரெஸ்ட்டுகளையும் வசதிக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்ய முடியவில்லை.

சென்டர் கன்சோல் அருகே ஒரே ஒரு கப் ஹோல்டர்தான் கொடுத்திருக்கிறார்கள். பொருட்களை வைக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் இடங்களும் குட்டிக் குட்டியாக இருக்கின்றன. ஆனால், பாட்டில்களை வைக்க கதவுகளில் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். க்ளோவ் பாக்ஸின் அளவு டீசன்ட்டாக  இருக்கிறது. டெயில் கேட்டை நன்றாக மேலே தூக்கினால்தான், பொருட்களை டிக்கியில் ஏற்ற முடிகிறது.

முன் பக்கச் சீட்டுகள், இயான் காரை நினைவுபடுத்துகின்றன. சீட்டுகள் சிக்கனமாக இருந்தாலும், அவை நம்மை அரவணைத்து இதமான உணர்வைக் கொடுக்கின்றன. பருமனான பயணிகளாக இருந்தாலே ஒழிய, டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருப்பவரோடு தோள்கள் உரச வாய்ப்பில்லை.

இப்போது பின் இருக்கைகள். இதில் உட்காருவது பழைய சான்ட்ரோவில் உட்காருவதைப்போல இல்லை. ஆனால், காலை நன்றாக நீட்டி மடக்கி உட்கார முடிகிறது. தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. கூரையில் தலை இடிக்கவில்லை. தோள்பட்டையும் பக்கத்து சீட்டில் இருப்பவரோடு உரசவில்லை. பின் சீட் பயணிகளின் வசதிக்காக, ரியர் ஏ.சி வென்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். சில  செடான் கார்களே வெட்கப்பட வேண்டிய இடம் இது.

இன்ஜின்

இது தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்ம் புதிது என்றாலும், இன்ஜின் பழையதுதான். இதில் இருப்பது இயானில் இருக்கும் Kappa II இன்ஜின் இல்லை. பழைய சான்ட்ரோ ஜிங்-கில் இருந்த அதே 1.1 லிட்டர் Epsilon இன்ஜின். ஆனால் ஏறக்குறைய கப்பா-2 இன்ஜின் அளவுக்கு 69 bhp சக்தியையும், 9.9kgm டார்கையும் கொடுக்கிறது. இது மாருதி  ஆல்ட்டோ K10 காரின் 1.0 லிட்டர் இன்ஜின் அளவுக்கு இருக்கிறது. என்றாலும் டாடாவின் 1.2 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜின் அளவுக்கு இல்லை. ARAI சான்றிதழ்படி சான்ட்ரோ 20.3 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது என்கிறார்கள். ஆனால், இந்த மைலேஜ் போட்டியாளர்களைவிடக் குறைவுதான். ஆனால் AMT பொருத்தப்பட்ட சான்ட்ரோவுக்கும் இதே மைலேஜ் என்பது ஆறுதல். ஹூண்டாய் முதல் முதலாக AMT கொண்டு வந்திருப்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. 

மீண்டும் சான்ட்ரோ!

இதன் சக்தி 69 bhp என்று சொன்னாலும், ஆரம்பத்தில் அப்படித் தெரியவில்லை. 2000 rpm-ஐத் தாண்டிய பிறகுதான் சீரான சக்தி கிடைக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எப்போது நமக்குச் சக்தி தேவைப்படுகிறதோ, அப்போது ஒரு கியரைக் குறைத்து ஆக்ஸிலரேட்டரை அழுத்த வேண்டும் என்பதுதான். அதனால்தான் கார் சிட்டியில் ஓட்டுவதற்கு வசதியாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது சக்தி போதவில்லை. அதேசமயம் இன்ஜின் சத்தமும் அதிகமாக வருகிறது. ஆனால் இதன் கிளட்ச்சும் சரி, கியர்பாக்ஸும் சரி... பயன்படுத்த ஈஸியாக இருக்கிறது.

AMT-யைப் பொருத்தவரை கியர் மாறும்போது, இதில் சடர்ன் ஜெர்க்கெல்லாம் இல்லை. ஆனால், வேகத்துக்கு ஏற்றவாறு கியர் மாற இது சற்று நேரம் எடுத்துக் கொள்கிறது. அதேநேரம் மற்ற கார்களில் இருக்கும் AMT கியர்பாக்ஸைவிட, இந்த AMT நன்றாக வேலை செய்கிறது. ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டாலும் கார் மெல்ல நகர்கிறது. பாலங்களில்  நிற்கும்போது... கார் பின்னோக்கி நகராமல், இந்த க்ரீப் ஃபங்ஷன் செயல்படுகிறது.

சான்ட்ரோவில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ஸ்டீயரிங். இது சரியான எடையில் இருக்கிறது என்பதோடு, துல்லியமாகவும் வேலை செய்கிறது. வளைவுகளில்கூட கார் நிலைத்தன்மையோடு இயங்குவது இதனால்தான். சுருக்கமாகச் சொன்னால், இந்த சான்ட்ரோ - கிராண்ட் i10 காரை ஓட்டுவது போலவே இருக்கிறது.

சான்ட்ரோ முதன்முதலில் அறிமுகமான போது அதுதான் என்ட்ரி லெவல் கார். ஆனால் இப்போது நிலைமை வேறு. அதனால்தான் இயான் மற்றும் கிராண்ட் i10 ஆகியவற்றுக்கு இடையே ஆல் நியூ சான்ட்ரோவை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். இதற்குப் போட்டியாக இருக்கப்போவது, மாருதியின் வேகன்-ஆர்/செலெரியோ & டாடாவின் டியாகோான்.

முதல் தீர்ப்பு

வெளிப்புறத் தோற்றத்தில் நிறைய புதுமைகள் தெரிகின்றன. காரின் கேபினும் மனதுக்குப் பிடித்த மாதிரி அழகாகவும் வசதியாகவும் இருக்கிறது. தாராளமான கேபினில் அதிக சிறப்பம்சங்கள் இருக்கின்றன. டால் பாய் லுக் இல்லை என்றாலும், சான்ட்ரோவின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் ஆல் நியூ சான்ட்ரோவில் இருக்கின்றன. பழைய ஃபார்முக்கு சான்ட்ரோ வருமா என்பது போகப் போகத் தெரியும்.

வேல்ஸ்