Published:Updated:

கார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க!

கார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க!

கார் வாங்குவது எப்படி? - 13 - தொடர்

சிலருக்கு ராசி, பாசமாகப் பக்கத்தில் உட்கார்ந்து தடவிக்கொடுக்கும். பலருக்கு வாலன்டினோ ராஸி மாதிரி வேகமாய்த் துரத்தியடிக்கும். புது கார் வாங்குபவர்களுக்கும் இது பொருந்தும்.

கார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க!

வாசகர் ஒருவர் செடான் கார் ஒன்றை டெலிவரி எடுத்து, ஒரு வாரம்தான் ஆனது. அபார்ட்மென்ட் வாசலில் பார்க்கிங் இல்லை. எனவே, வெளியே பொதுவெளியில் காரை மரங்களுக்கு அடியில் பார்க் செய்துவிட்டுப் போனார். மறுநாள் காலை, மரக்கிளை ஒன்று விண்ட்ஷீல்டில் விழ, இன்ஷூரன்ஸில் கவர் செய்தாலும், பர்ஸ் பழுத்துவிட்டது.

இன்னொருவர், அக்டோபர் மாதம் ஒரு எஸ்யூவி காரை டெலிவரி எடுத்தார். டெலிவரி எடுக்கும்போதே மழை. அடுத்த மாதம் வீசிய புயல் மழையில், அவர் ஏரியாவில் வெள்ளம். புது கார் வெள்ளத்தில் மூழ்க, மறுபடியும் புது ஜென்மம் எடுத்தது அந்த கார்.

‘எல்லாம் என் நேரம்; என்ன பண்றது’ என்று இவற்றைக் கடந்து போய்விட முடியாது. பல சமயங்களில் நம் கவனக்குறைவுதான் புது கார் பிரேக்டவுன் ஆகி, சர்வீஸ் சென்டரில் குடித்தனம் நடத்தப் போவதற்கான காரணம்.

காரில் ஏற்படுகிற பிரச்சனைகளுக்கு மேனுஃபேக்சரிங் தவற்றை எப்போதாவது தான் காரணம் சொல்ல முடியும். பல நேரங்களில் நாமே தவற்றுக்குக் காரணம் ஆகிறோம்.

ஹெட்லைட்டை ஆனிலேயே விட்டுவிட்டு, மறந்துபோய் காரின் இக்னீஷனை ஆஃப் செய்துவிட்டுக் கிளம்புவது... காரில் கவர் போடாமல் நாட்கணக்கில் வெயிலில் நிறுத்திவிட்டு ‘பெயின்ட் போயிடுச்சே’ என்று கவலைப்படுவது... இக்னிஷன் ஆன்-ல் இருப்பது தெரியாமலேயே மீண்டும் சாவியைத் திருகி இக்னிஷனை ஆன் பண்ணுவது... கிளட்ச்சை சரியாக மிதிக்காமலேயே கியர் போடுவது - இவை எல்லாமே நாம் நம்மை அறியாமலேயே செய்யும் தவறுகள்.

ஒரே கார்தான் - ஆனால் பலருக்கும் பலவிதமாக மைலேஜ் தரும். இது காரின் பிரச்னை அல்ல; டிரைவிங் ஸ்டைல், வாகனப் பராமரிப்பு, எரிபொருளின் தரம் எல்லாமே இதற்குக் காரணம்.  அதனால் புது கார் ஓனர்கள், அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் இந்த மாத டாபிக்.

* வாரம் ஒருமுறை வேண்டாம்; மாதம் ஒரு தடவை மேனுவலாக வாட்டர் வாஷ் செய்யுங்கள். உள்ளே வேக்குவம் க்ளீனரை வைத்துச் சுத்தம் செய்வதும் அவசியம். விண்ட்ஷீல்டில் ஆரம்பத்திலேயே வைப்பர் போடாதீர்கள். மெல்லிய காட்டன் துணி அல்லது நியூஸ் பேப்பர் வைத்துத் துடைத்த பிறகே தண்ணீர் போட்டு வைப்பரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் ஸ்க்ராட்ச்களைத் தவிர்க்கலாம்.

* நேரம் ஒதுக்குவது மட்டுமல்ல; மாதம் ஐநூறோ, ஆயிரமோ - ஒரு குறிப்பிட்ட தொகையையும் காருக்கென்று சேமித்து வைத்து விடுங்கள். இது சரியான நேரத்தில் கைகொடுக்கும். அதேபோல், ஆண்டு முடியும்போது இந்தத் தொகையிலிருந்தே இன்ஷூரன்ஸும் எடுத்துக் கொள்ளலாம்.

* காரை பார்க் பண்ணும்போது, முடிந்தவரை நிழலாக இருந்தால் நல்லது. அதேநேரம், மரங்கள் கவனம். கார் கவர் இதற்குச் சரியான பாதுகாப்பு. இப்போதெல்லாம் கார் கவர்கள் ஆக்சஸரீஸ்களிலேயே வந்து விடுகின்றன. வெயிலால் பெயின்ட் நிறம் மங்குவது, பறவைகளின் எச்சம், மழையால் சேதாரம் ஏற்படுவது போன்றவற்றை கார் கவர்கள் நிச்சயம் தடுக்கும்.

கார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க!

* முடிந்தளவு ஒரே பெட்ரோல் பங்க்கையே பயன்படுத்துங்கள். சிலர் காஸ்ட்லியான பெட்ரோல் தான் தரமான எரிபொருள் என்று நினைப்பார்கள். அப்படியல்ல; உங்கள் கார் யூஸர் மேனுவலை ஒரு தடவை புரட்டுங்கள். என்ன பெட்ரோல் பயன்படுத்த வேண்டும் என்ற ஐடியா கிடைக்கும் என்பதைத் தாண்டி, பல தெரியாத விஷயங்களும் புலப்படும்.

* டயர்களுக்கும் எப்போதுமே ஒரே காற்றைத்தான் நிரப்ப வேண்டும். நைட்ரஜன் அடித்துவிட்டு, அதே டயரில் சாதா காற்றை நிரப்பக்கூடாது. டயர் மீது குறிப்பிட்டிருக்கும் ப்ரெஷர் என்பது அதிகபட்ச அளவு. கார் மேனுவலில் கொடுக்கப்படும் ப்ரெஷரையே டயர்களில் அடிக்க வேண்டும்.

* காரில் எப்போதுமே பஞ்சர் கிட்டுடன், எலெக்ட்ரிக் இன்ஃப்ளேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலங்களில் பெட்ரோல் பம்ப்பைத் தேடி அலைய வேண்டியதில்லை. காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, 12V ஸாக்கெட்டில் பிளக்கைச் சொருகி, டயர்களில் வேண்டிய போது காற்றை நிரப்பிக் கொள்ளலாம். நீண்ட நாள் கழித்து காரை எடுக்கும்போது... அல்லது பஞ்சர் நேரங்களில்...  இது நிச்சயம் கைகொடுக்கும்.

* கார் வைத்திருக்கும் எல்லோருக்குமே எலித்தொல்லை உண்டு. பானெட்களில், சீட்களில், டிக்கியில் என்று எலிகள் கும்மியடிப்பது நடக்கும். வயர்களைக் கடித்தால்... பிரச்னை பெரிதாகிவிடும். நாப்தலின் உருண்டைகள், நாட்டுப் புகை யிலை, மிளகு போன்றவற்றுக்கு எலி ‘விலகு விலகு’ என்று ஓடிவிடும். எலிகளுக்கான மெஷினும் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது. இது எல்லாமே வேலைக்கு ஆகவில்லை என்பவர்களுக்கு, இன்னொரு ஐடியா. அதாவது, நீண்ட நாள் காரை எடுக்காத பட்சத்தில்தான் எலிகள் வந்து கும்மியடிக்கும். எனவே, சும்மானாச்சுக்கும் அடிக்கடி காரை ஸ்டார்ட் செய்து தினமும் பத்து நிமிடம் ஐடிலிங்கிலாவது வையுங்கள். எலிகள் அண்ட வாய்ப்பிருக்காது.

* ஒவ்வொரு தடவை வாகனத்தை எடுக்கும்போதும்... டயர் பிரஷர், தேவையற்ற சத்தங்கள், பானெட்டைத் திறந்து ஒயர்களின் வாசனை, விண்ட்ஸ்க்ரீன் வாஷர், கூலன்ட் ஆயில், பிரேக் ஆயில், ஸ்டீயரிங் ஆயில், ஹெட்லைட் என்று எல்லாவற்றையும் பாருங்கள். ஹெட்லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திவிட முடியும்.

கார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க!

* காரைக் கிளப்பும்போது, உங்கள் காரின் டேஷ்போர்டைக் கவனியுங்கள். எந்த வார்னிங் லைட்டுமே ஒளிராத பட்சத்தில்தான் காரைக் கிளப்ப வேண்டும். நிறைய பேர் ஹேண்ட்பிரேக்கை எடுக்காமலேயே வண்டியைக் கிளப்பிவிடுவார்கள். சீட்பெல்ட் வார்னிங், ஹேண்ட்பிரேக், கதவு லாக் ஆனதற்கான வார்னிங் சிம்பல் எல்லாவற்றையும் செக் செய்தபிறகே ஆக்ஸிலரேட்டரில் கால் வையுங்கள்.

* ஃப்ளோர் மேட்டுகளில் ரொம்பவும் கவனமாக இருங்கள். சரியாக அது பெடல்களுக்குக் கீழே பொருந்தியிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். ஃப்ளோர்மேட்டுகள் ஆக்ஸிலரேட்டரிலோ, பிரேக்கிலோ சிக்கினால் விபத்துக்கு அதுவே காரணமாகிவிடும்.

* பெட்ரோல் கார்கள் ஸ்மூத்தாக இருக்கும். இதனால், கார் நிற்கும்போது ஐடிலிங்கில் இருப்பது தெரியாது. இது தெரியாமலேயே மீண்டும் சாவியைத் திருகி, இக்னிஷனை ஆன் செய்வார்கள். இப்படி அடிக்கடி செய்தால் பேட்டரியும் இன்ஜினும் பெரிய செலவு வைக்கும்.

* எப்போதுமே காரை எடுக்கும்போது, 40 முதல் 60 விநாடிகள் ஐடிலிங்கில் விட்டுத்தான் காரைக் கிளப்ப வேண்டும். அதேபோல், இன்ஜினை ஆஃப் செய்யும்போதும் ஐடிலிங்கில் சில விநாடிகள் விட்டே நிறுத்துங்கள். இன்ஜினுக்கான வார்ம்-அப் இது.

* இரவு நேரங்களில் காரை நிறுத்தும்போது, முதலில் ஹெட்லைட்டை அணைத்து விட்டுத்தான் இக்னிஷனை ஆஃப் செய்ய வேண்டும். ஃபாலோ மீ லேம்ப் வசதி கொண்ட கார்களில் பிரச்னை இல்லை. கார் ஐடிலிங்கில் இல்லாமல் ஹெட்லைட் மட்டும் ஆன் ஆகியிருக்கும் பட்சத்தில், பேட்டரி சார்ஜ் சர்ரென இறங்கும். அப்புறம் ஜம்ப் ஸ்டார்ட் செய்யவேண்டும்.

* சிலருக்கு கிளட்ச் மீது அளவுக்கதிகமாகப் பாசம் இருக்கும். அதாவது, சிக்னலில் நின்றாலும் கிளட்ச்சில் கால் வைத்தபடியே இருப்பார்கள். முடிந்தவரை கியரை நியூட்ரலில் விட்டு, கிளட்ச்சில் இருந்து காலை எடுத்துவிட்டுக் காத்திருங்கள். எரிபொருளைக் கணிசமாகச் சேமிக்கலாம்.

- கார் வாங்கலாம்

தமிழ் - படங்கள்: கே.அருண்