கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?
பிரீமியம் ஸ்டோரி
News
ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

ஒப்பீடு - மாருதி சுஸூகி வேகன்-R VS ஹூண்டாய் சான்ட்ரோ VS டட்ஸன் கோ VS டாடா டியாகோ

ட்ஸன் கோ, வேகன்-R, டியாகோ போன்ற கார்கள் விற்பனையாகும் பட்ஜெட் ஹேட்ச்பேக் மார்க்கெட் சிக்கலானது. முதல் முதலில் கார் வாங்குபவர்களை ஆல்ட்டோ, க்விட் பக்கம் போகவிடாமல் தடுக்க வேண்டும். அதேசமயம் அவர்கள் ஒரேயடியாக ஸ்விஃப்ட், கிராண்ட் i10, ஃபிகோ பக்கம் போகாமலும் பிடித்து வைக்க வேண்டும். இப்படிப்பட்ட சந்தையில் இப்போது புதிதாக ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகமாகியிருக்கிறது.

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

இந்த செக்மென்ட்டைக் குத்தகைக்கு எடுக்க, ஸ்டைலையும் சிறப்பம்சங்களையும் துருப்புச் சீட்டாக எடுத்துக் கொண்டு சான்ட்ரோ களம் புகுந்திருக்கிறது.  பெரிய இன்ஜின், குறிப்பிடத்தக்க வசதிகள், குறைவான விலை என்று டியாகோ ஏற்கெனவே இங்கே கடை போட்டிருக்கிறது. இதே ஏரியாவில், டட்ஸன் கோ ஃபேஸ்லிஃப்ட் ஒரு ஓரமாக தனிக் கச்சேரி செய்து கொண்டிருக்கிறது. டாப் 10 லிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 'டால் பாய்' வேகன்-R கோலோச்சும் களமும் இதுதான். சான்ட்ரோவின் வருகை இந்தச் சந்தையை எப்படி மாற்றப் போகிறது?

ஸ்டைல்

ஒரு சின்ன காருக்கான சாமுத்ரிகா லட்சணங்களுடன் சான்ட்ரோ வடிவமைக்கப் பட்டிருக்கிறது. பெரிய சைஸ் கிரில், கொஞ்சம் தட்டையான டிசைன், பெரிய ஜன்னல் என்று இருக்கிறது சான்ட்ரோ. பின் பக்கம் ஷார்ப்பான கதவுகளும், வீல் ஆர்ச்சில் அந்த பூமராங் டிசைனும் ஓகே! அலாய் வீல் எங்கே ஹூண்டாய்?.

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

வேகன்-R... இருப்பதிலேயே உயரமான கார். ஒல்லி பெல்லி காரும் இதுதான். ஸ்லிம்மான ப்ரொஜெக்டர் ஹெட்லைட், அதோடு சேர்ந்ததுபோல பளபளப்பான கிரில் டிசைன் என வேகன்-R ஸ்டிங்-ரே  வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. பழைய ஸ்டைலை விட ஸ்டிங்ரே ஸ்டைல் வேகன்-R, பார்க்க கெத்தாக இருக்கிறது. 

இருப்பதிலேயே பெரிய கார் டட்ஸன் கோ. காரைக் கொஞ்சம் அக்ரஸ்ஸிவாகக் காட்ட, பாடியில் நிறைய கோடுகள் வைத்துச் செதுக்கியுள்ளார்கள். புதிய அலாய் வீல், ரியர் ஸ்பாய்லர், பம்பரிலும் கொஞ்சம் செதுக்கல்,  LED DRL என கோ ஃபேஸ்லிஃப்ட்டில் முன்பைவிட ஸ்டைல் கூடியிருக்கிறது. இங்கே LED DRL இருக்கும் ஒரே கார் இதுதான்.

பழைய டாடா கார்கள் போல டல் அடிக்காமல் ‘அட, இது டாடாவா' என்று புருவம் உயர்த்த வைத்துள்ளது டியாகோ. ரிஸ்க் எதுவும் இல்லாமல் பக்கா ஹேட்ச்பேக்காக டிசைன் செய்யப் பட்டிருக்கும் இது, சாலையில் மற்ற கார்களை விட கம்பீரமாகத் தெரிகிறது. க்ளாஸ் பிளாக் கிரில், காரின் எல்லா நிறங்களோடும் பொருந்துகிறது. முன்பக்க டிசைன் ஒகே ரகம். ஆனால், பக்கவாட்டில் ஸ்போர்ட்டியான லைன்களும், பின் பக்கம் அக்ரஸ்ஸிவான வடிவமைப்பும் காருக்கு எலிகன்ட் லுக்கைக் கொடுக்கின்றன. டியாகோவில் மட்டும்தான் விலை உயர்ந்த கார் போன்ற ‘Pull Type’ டோர் ஹேண்டில்கள் உண்டு.

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

இன்டீரியர்

காரின் விலையைக் குறைக்க ,தயாரிப்பாளர்கள் எப்போதும் கைவைப்பது இன்டீரியரில்தான். சான்ட்ரோவில் இன்டீரியரைச் செல்வச்செழிப்பாகக் கொடுத்துள்ளார்கள். ஸ்டீயரிங் வீல் மற்றும் கன்ட்ரோல் பட்டன்கள் கிராண்ட் i10-ல் இருந்து இங்கே வந்துள்ளது. இன்டீரியரின் தரமும் அதே லெவலுக்கு கிராண்டாகக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் கரடுமுரடாக இருக்கிறது. யானைத் தலை வடிவில் இருக்கும் சென்ட்டர் கன்சோலின் டிசைன் கம்பீரமாக உள்ளது. அம்பு போல இருக்கும் முன்பக்க ஏசி வென்ட்டுகள், ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. பச்சை-கருப்பு காம்பினேஷன் funky ஸ்டைல் என்றால், கருப்பு-பீஜ் காம்பினேஷன் டீசன்ட் பார்ட்டிகளுக்கு. இன்டீரியரில் இரண்டுமே நல்ல பொருத்தம். 

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

டியாகோவிலும் உயர்தரமான பிளாஸ்டிக்குகள் உண்டு. சாஃப்ட்டான ரூஃப் லைனும், டேஷ்போர்டின் பிளாஸ்டிக் தரமும் சூப்பர். அகலமான சென்ட்டர் கன்சோல் பெரிய கார் ஃபீல் தருகிறது. வெளிப்பக்கத்துக்கு மேட்ச்சிங்காக ஏசி வென்ட்டுகளின் நிறம் ஸ்டைலிஷ். ஆனால், ஃபிட் அண்டு ஃபினிஷ் சரியாக இருந்திருந்தால் ‘வாவ்' சொல்லியிருக்கலாம். ஷார்ப்பான பிளாஸ்டிக் எட்ஜ்கள், சரியாக ஃபிட் செய்யப்படாத பேனல்கள், தொள தொளவென பட்டன்கள்... பர்ஃபெக்ட் இன்டீரியருக்கு, மெனக்கெடனும் டாடா! 

புது அப்டேட்டுக்குப் பின், டட்ஸனும் போட்டிக்குத் தயாராகத்தான் இருக்கிறது. க்ளோவ் பாக்ஸுக்கு மூடி கொடுத்து விட்டார்கள். முன்பக்கம் இருந்த பென்ச் சீட்டுக்குப் பதிலாக, இரண்டு தனித்தனி சீட்டுகளுக்கு அப்டேட் ஆகியுள்ளார்கள். டேஷ்போர்டில் இருந்து சீட்டுக்கு நடுவே நச்செனப் பொருந்திவிட்டது ஹேண்ட்பிரேக்! சில்வர் நிற வேலைப்பாடுகளும், கார்பன் ஃபைபர் போன்ற பிளாஸ்டிக் வேலைப்பாடுகளும் ஸ்டைலைக் கூட்டுகின்றன. பிளாஸ்டிக்கின் தரம் சுமார்தான். சீட் அட்ஜஸ்ட் லீவர், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட் இருக்கவேண்டிய இடத்தில் பெரிய ஓட்டை என விலைக் குறைப்பு நடவடிக்கைகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. முந்தைய மாடலில் காரின் கதவுகள், சி-பில்லர், ரூஃப் போன்ற இடங்கள் நிர்வாணமாக இருக்கும். இப்போது, அதெல்லாம் பிளாஸ்டிக் வைத்து மறைக்கப்பட்டிருக்கின்றன. 

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

வெளிப்பக்கம் போல உள்பக்கத்திலும் வித்தியாசம் காட்டுகிறது வேகன்-R. டேஷ்போர்டு தட்டையாகவும், செங்குத்தாகவும் நிற்கிறது. சிம்பிளான டிசைன். டீசன்ட்டான குவாலிட்டி உண்டு. பழைய ஸ்டைல் கார் என்பது பார்த்தாலே தெரிந்துவிடும். நேர்த்தி இங்கே இல்லை.

வசதிகள்

காரில் இருக்கும் வசதிகளை வைத்துத்தான் அந்த கார், கொடுக்கும் பணத்துக்கு ஏற்றதா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஹூண்டாய் அதிகம் ஸ்கோர் செய்வது இந்த இடத்தில்தான். செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகளைக் கொண்டுவந்து, தெலுங்கு ஹீரோ போல மற்ற கார்களைப் பறக்கவிடுகிறது சான்ட்ரோ. 7 இன்ச் டச் ஸ்கிரீன், ரியர் ஏசி வென்ட், ஸ்பீடு சென்ஸிங் ஆட்டோ டோர் லாக், ரியர் வியூ கேமரா... இது எல்லாமே முதல் முறையாக ஒரு என்ட்ரி லெவல் காரில் கிடைக்கிறது. மேலும் ஆப்பிள் கார்ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்கில் கன்ட்ரோல் பட்டன்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் என வசதிகள் ஏராளம். டியாகோ மற்றும் கோ கார்களில் மொத்தம் 4 சென்சார்கள். சான்ட்ரோவில் இரண்டே இரண்டு... அதுவும் பம்பரின் நடுவே வைத்திருப்பதால், கார்னரில் பீ கேர்ஃபுல்.

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

டட்ஸன் கோ காரிலும் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ /ஆப்பிள் கார்ப்ளே உண்டு. பளபளப்பான கலர்ஃபுல் திரை பயன்படுத்தப் பிடித்திருக்கிறது. ரியர் பார்க்கிங் சென்சார் உண்டு. ஆனால், ரிவர்ஸ் கேமரா இல்லை. LED DRL கொடுத்திருப்பது செக்மென்ட் ஃபர்ஸ்ட். ரேடியோ, ஆக்ஸ் ஃபோர்ட் மட்டும் இருக்கும் பழைய கோ-வை ஒப்பிடும்போது இது எவ்வளவோ மேல்!

டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் கனெக்ட்டிவிட்டி போன்ற அடிப்படை வசதிகள், வேகன் R-ல் இல்லை. பவர் விண்டோஸ் மற்றும் பவர் மிரர் அட்ஜஸ்ட்மென்ட்தான் இதில் இருக்கும் முக்கியமான வசதி. மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது கெத்து காட்ட வேகன்-R இடம் இருப்பது ப்ரொஜக்டர் ஹெட்லைட் மட்டும்தான். ஆனால் இங்கு இருப்பதிலேயே விலை குறைவானது வேகன்-R என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

டியாகோவில் வசதிகள் ‘வாவ்' சொல்ல வைக்கவில்லை. டச் ஸ்கிரீன் இல்லை, ரிவர்ஸ் கேமரா இல்லை, ரியர் ஏசி வென்ட் இல்லை. ஆனால் டிரைவர் சீட் மற்றும் ஸ்டீயரிங் உயரத்தை டியாகோவில் மட்டும்தான் ஏற்றி இறக்க முடியும். மற்ற கார்களைவிட டியாகோ கொஞ்சம் சவுண்டு பார்ட்டி. ஆம், இதில் மட்டும்தான் 8 ஸ்பீக்கர் ஹர்மான் ஆடியோ சிஸ்டம் உண்டு.

பாதுகாப்பைப் பொருத்தவரை எல்லா கார்களிலும் டாப் வேரியன்ட்டில் இரண்டு காற்றுப்பை, ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக் (EBD) கொடுத்திருக்கிறார்கள். 

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

யார் குடும்பஸ்தன்?

இந்த செக்மென்ட் கார்கள் எல்லாமே ஃபேமிலி கார்கள்தான். குடும்பமாக ஒரு சின்ன ட்ரிப் போக, இடவசதி மிக வும் முக்கியம். சான்ட்ரோ இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது. பருமனான ஆட்கள்கூட உட்காரலாம்; அவ்வளவு அகலமாக இருக்கிறது சான்ட்ரோவின் பின்பக்கம். ஹெட்ரூம், லெக்ரூம் மட்டுமல்ல; பின்பக்க ஜன்னலும் விசாலமாக இருக்கிறது. கூடுதலாக பின் பக்கம் ஏசி வென்ட்டுகளும் கொடுத்து, மனதைக் குளுமைப் படுத்துகிறார்கள். எல்லா கதவுகளிலும் பாட்டில் ஹோல்டர்கள், சென்டர் கன்சோலில் பெரிய கப்ஹோல்டர், மொபைல் வைக்க சின்ன இடம் என இதர தேவைகளுக்கும் இடமுண்டு. 

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

டட்ஸன் கோ-வில் முன்பக்கம் பெரிய பாட்டில் வைக்க இடம் கொடுத்தவர்கள், பின் பக்கம் ஒரு சின்ன கப் வைப்பதற்குக்கூட இடம் தரவில்லை. கதவுகளில் சின்ன டோர் பாக்கெட்டுகள் உண்டு. மொபைல் மட்டும்தான் அதில் வைக்க முடியும். இந்த செக்மென்ட்டில் பெரிய கார் டட்ஸன்தான். அளவுகளில் அகலமாக இருந்தாலும், கதவுகள் சின்னதாகவும் சீட் குள்ளமாக ஃபிளாட்டாக இருப்பது சொகுசாக இல்லை. ஹெட்ரூம், லெக்ரூம் குறைவு. ஹெட்ரெஸ்ட்டையும் அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை.

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

வேகன்-R, இந்த விஷயத்தில் டட்ஸனைவிட அதிக மார்க் எடுக்கிறது. உயரமான சீட் இருப்பதால், இடம் பெரிதாக இருக்கும் உணர்வு கிடைக்கிறது. ஆனால் இருக்கைகள் சொகுசாக இல்லை. மற்ற கார்களின் பின் சீட்டில், மூவரை அடைத்துக் கூட்டிப் போகலாம். ஆனால், இதில் கார் ஒல்லியாகவும் ஸ்பிளிட் சீட் கொண்டிருப்பதாலும், மூன்று பேரெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது. ஹெட்ரெஸ்ட் பிரச்சனை இல்லாத ஒரே கார் இதுதான். அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இருப்பதால், கழுத்து வலியில்லாமல் பயணிக்கலாம். 

டியாகோ பிராக்டிக்கலான கார். முன்பக்கம் 2 கப் ஹோல்டர்கள், கேபினில் ஆங்காங்கே மொபைல் வைக்க, பாட்டில் வைக்க இடமிருக்கிறது. பின்பக்கம் சீட்டின் குஷனிங் அருமை. சான்ட்ரோ அளவுக்கு இல்லையென்றாலும், இடவசதி ஓகேதான். பூட் ஸ்பேஸ் வேகன் R-ல்  ரொம்பவே குறைவு. சான்ட்ரோ அதற்கு அடுத்ததாக இருக்கிறது. டியாகோவில் பூட் ஸ்பேஸ், மூன்று பேருக்குப் போதுமான அளவு இருக்கிறது. கோ-வில் ஏகப்பட்ட இடம். ஆனால், டிக்கியைக் குறைத்துவிட்டு பயணிகளுக்குக் கொஞ்சம் இடத்தைக் கொடுத்திருக்கலாம்.

இன்ஜின்

ஒவ்வொரு காரிலும் ஒவ்வொரு வெரைட்டியான இன்ஜின் உள்ளது. டியாகோவில் மட்டும்தான் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உண்டு. மற்ற எல்லாமே பெட்ரோல்தான். எல்லா கார்களிலும் AMT இருக்கிறது. இங்கு நாம் பெட்ரோல்-மேனுவல் கூட்டணியை டெஸ்ட் செய்திருக்கிறோம். 

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

சான்ட்ரோவின் 1.1 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் - 69bhp பவர்/9.9kgm டார்க் தரக் கூடியது. கிளட்ச் லைட்டாகவும், கியர் ஷிஃப்ட் ஸ்மூத்தாகவும் இருக்கிறது. இன்ஜின் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்திருக்கலாம். மிட் ரேஞ்ச் ஓகே! ரெட்லைன் நெருங்க நெருங்க காரின் பவர் கூடும் என்று பார்த்தால், மதமதவென அங்கேயே நிற்கிறது. இதன் 890 கிலோ எடை, இன்ஜின் சலித்துப் போகாமல் தாக்குப்பிடிக்க உதவுகிறது.

டட்ஸன் கோ-வில் 68bhp பவர்/10.4kgm டார்க் தரக்கூடிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இருப்பதிலேயே இலகுவான கார் (846 கிலோ) என்பதால், சுறுசுறுப்பாக இருக்கிறது கோ. ஆரம்பம் அசத்தலாக இருந்தாலும், கார் வேகமெடுக்க அதிக RPM போக வேண்டியுள்ளது. ‘சரி போவோமே' என்று நினைத்தால் இன்ஜின் சத்தம் கேபினுக்குள் வந்து கடுப்பேற்றுகிறது. 

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

டாடவின் இன்ஜின்கள் அதிர்வுக்குப் பெயர்போனவை. டியாகோவின் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜினும், இதே போல ‘கிர்ர்ர்' என சத்தத்தோடு அதிர்வுகளையும் கொடுத்துக் கடுப்பேற்றுகிறது. 85bhp பவர்/11.4kgm டார்க் தரும் இதில், குறைவான RPM-லேயே மொத்த டார்க்கும் கிடைத்து விடுவதுபோல் ஒரு உணர்வு. சுறுசுறுப்பு இல்லாமல் ஆரம்பத்தில் அடம்பிடித்தாலும், 1,500rpm தாண்டிவிட்டால் இந்த செக்மென்ட்டில் இப்படி ஒரு பெர்ஃபாமென்ஸா என ஆச்சர்யம் வரும். கியரை மாற்றி காரை வேகமெடுக்கத் தூண்டுகிறது இன்ஜின். 1,012 கிலோ எடை இருப்பதால், டியாகோ கொஞ்சம் வெயிட் பார்ட்டிதான்.

இருப்பதிலேயே சிறிய இன்ஜின் வேகன் R-ன் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின்தான். 68bhp பவர்/9kgm டார்க் கொடுக்கக் கூடியது இது. 901 கிலோ எடை இருந்தாலும், கார் எப்போதும் உற்சாகமாகவே இருக்கிறது. ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால் டக்கென வேகமெடுத்து விடுகிறது. சுறுசுறுப்பாக இருப்பது சிட்டியில் சூப்பர். ஆனால், நெடுஞ்சாலை என்று வந்தால் பவரும் டார்க்கும் போதவில்லை. ஆட்களையும், லக்கேஜையும் ஏற்றிவிட்டால் ஆக்ஸிலரேட்டரில் எடைக் கல்லைக் கொண்டு அழுத்தினாலும், கார் பாந்தமாகத்தான் நகர்கிறது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

சாஃப்ட் ஸ்டீயரிங், குறைந்த வேகங்களில் பக்கா கார்னரிங், சாஃப்ட்டான சஸ்பென்ஷன் என உற்சாகம் எதுவும் தராமல் ஹூண்டாய் கார்களுக்கேயான சொகுசை மட்டுமே தரக் கூடிய ரைடிங் ஸ்டைல் சான்ட்ரோவில் அப்படியே இருக்கிறது. சஸ்பென்ஷன் டிராவல் பெரிதாக இல்லை; குழிகள் வந்தால் குதிக்கிறது. ஸ்டீயரிங் லைட்டாக இருப்பது சிட்டியில் ஓட்டுவதற்கு ஓகே. நெடுஞ்சாலையில், அதிக வேகத்தில் போதுமான அளவு நம்பிக்கை கிடைக்கவில்லை. 

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

சான்ட்ரோவில் எதெல்லாம் இல்லையோ, அதெல்லாம் வேகன் R-ல் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. உயரமான ரைடிங் பொசிஷன், ஒல்லியான டயர் என சிட்டியில் பொறுமையான வேகத்தில் ரைடிங் ஓகே. சான்ட்ரோவைவிட ஸ்டீயரிங் கனமாக இருக்கிறது. உயரம் அதிகம் என்பதால், வேகமாக கார்னரிங் செய்ய முயற்சி செய்யாதீர்கள்.

டட்ஸன் கோ சஸ்பென்ஷன் உயரமானது. இதனால், பாடி ரோல் அதிகம். இதைத் தவிர்த்துப் பார்த்தால் ஹேண்ட்லிங், டயர் ஃபீட்பேக், ஸ்டீயரிங் இவை எல்லாமே காரை விரட்டி ஓட்ட நம்பிக்கை தரும். கேபின் சத்தம் மட்டும் கடுப்போ கடுப்பு.

எத்தனை மோசமான சாலைகளையும் அசால்ட்டாகச் சமாளிக்கிறது டியாகோவின் சஸ்பென்ஷன். பாடி ரோல் நன்றாகவே கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பார்க்கிங் செய்யும்போதும், குறைவான வேகங்களிலும் இதன் லைட்டான ஸ்டீயரிங் வீல் உதவுகிறது. ஸ்டீரிங் துல்லியமாக இருப்பதால், நெடுஞ்சாலையிலும் சிரமப்பட தேவையில்லை. இந்த ஒப்பீட்டில் டிரைவிங்கை என்ஜாய் செய்பவர்களுக்கு டியாகோதான் பிடிக்கும்.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

போட்டியில் வேகன்-R கடைசி இடம் பிடித்திருக்கிறது. பார்த்துப் பழகிய டிசைன், கார்னரிங் பயம், மிகக் குறைவான வசதிகள், செக்மென்ட்டிலேயே கம்மியான பவர்/டார்க் - இதெல்லாம் ஃபன் பார்ட்டிகளுக்கு எந்தளவு பிடிக்கும் என்று தெரியவில்லை. நீங்கள் மாருதி சுஸூகி பிரியராக இருந்தாலும்கூட, அடுத்த தலைமுறை வேகன்-R வருவதற்குத்தான் கொஞ்சம் காத்திருங்களேன்!

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?

பெரிய கார் போன்ற தோற்றமும், பெரிய இன்ஜினும்தான் டட்ஸன் கோவின் பலம். டிரைவிங் மற்றும் ஹேண்டிலிங்கும் ரசிக்கும்படியாகவே உள்ளது. பின் பக்கப் பயணிகளுக்கு இடவசதி இன்னும் தேவை. சில வசதிகள் ஓகேதான்.. ஆனால் இன்டீரியர் தரமும், கேபின் சத்தமும் கடுப்பேற்றுகின்றன.

ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?இங்கே சான்ட்ரோவும் டியாகோவும்தான் வெவ்வேறான விஷயங்களைக் கொடுத்து உங்கள் பாசத்தையும் பணத்தையும் வாங்கிவிடுவார்கள். சான்ட்ரோவில் டிசைன், வசதிகள் இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி ஈர்த்துவிட்டார்கள். கேபின் தரமும், இடவசதியும் மற்ற கார்கள் பக்கம் போகவிடாமல் தடுக்கின்றன. வெல்டன் ஹூண்டாய்! ஆனால், சுறுசுறுப்பு இல்லாத பழைய இன்ஜின் 'போ போ' என்கிறது. மைலேஜ்கூட சான்ட்ரோவில் குறைவுதான்.

பெரிய கார் ஃபீல், டீசன்ட் லுக், தேவையான வசதிகள், பின் சீட் பயணிகளுக்கு அதிக இடம், போதுமான அளவு பூட் ஸ்பேஸ் எல்லாம் சூப்பர். சில ஃபினிஷிங் சமாச்சாரங்களிலும், முக்கியமான சில அம்சங்களிலும், சத்தமில்லாத கேபினிலும் இன்னும் தீயா வேலை செய்யணும் டாடா! சான்ட்ரோ சிறந்த சிட்டி கார்தான். ஆனால், டியாகோவில் ஃபன் டிரைவிங்கும் சேர்ந்து கிடைக்கிறது. முக்கியமாக, விலை விஷயத்தில்தான் சான்ட்ரோவுக்கு 'டாடா' காட்டிவிட்டு, நான் இருக்கும் ஷோரூமுக்கு 'வா வா' எனக் கூப்பிடுகிறது டியாகோ. சான்ட்ரோ க்யூட் பேபிதான். ஆனால், டியாகோதான் ஸ்மார்ட் பேபி.