கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!
பிரீமியம் ஸ்டோரி
News
கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ்

டிசம்பர் மாதம் குஜராத்தே அல்லோலகல்லோலப்பட்டது.  காரணம் நிஸான். கிக்ஸ் லான்ச்சை திருவிழாபோலக் கொண்டாடித் தீர்த்துவிட்டது நிஸான். ``ரோட்டில், காட்டில் ஓட்டுவதெல்லாம் பழைய ஸ்டைல். பாலைவனத்தில் `கிக்ஸ்’ ஓட்ட வர்றீங்களா?’’ என்று பாசமாக நிஸான் அழைத்தால் விடமுடியாதே! குஜராத் மாநிலம், புஜ் நகரிலிருந்து 90 கி.மீ தொலைவில் இருக்கும் `ரான் ஆஃப் கட்ச்’ எனும் வெள்ளைப் பாலைவனம் வரை கிக்ஸை விரட்டிச் செல்வதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க். இதற்காக இந்திய ராணுவத்திடம் ஸ்பெஷல் அனுமதியும் வாங்கியிருந்ததாகச் சொன்னது நிஸான். நெடுஞ்சாலையில் 169 கி.மீ வரை டாப் ஸ்பீடு தொட்டு, `உப்பு ஏரி’ எனப்படும் வெள்ளைப் பாலைவனத்தில் டிரிஃப்ட் அடித்தது வரை செம கிக்கான அனுபவம் கிடைத்தது.

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

வெளியே

கிக்ஸை முதன்முதலாகப் பார்த்தபோது, `க்ராஸ்ஓவர்’ என்றுதான் நினைத்தேன். ஆனால், கிக்ஸை `எஸ்யூவி’ என்றுதான் அழைக்கச் சொல்கிறது நிஸான். ஒருவேளை - காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்குமா என்றால், இல்லை. 4 மீட்டருக்குமேல் இருந்தது நீளம். 7 சீட்டராக இருக்குமா என்றால் இல்லை; 5 சீட்டர்தான். அப்படியென்றால், நிஸான் சொல்வது உண்மைதான். இது பக்கா மிட்சைஸ் எஸ்யூவி.

ஜியூக், முரானோ என நிஸானில் சில எஸ்யூவிகள் இருக்கின்றன. எனக்கு அதன் சாயலில்தான் கிக்ஸ் தெரிந்தது. உயரமான பின்பக்கம், பல்க்கான பாடி, ஃப்ளாட் பானெட், 17 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், பக்கவாட்டு பாடி லைன்கள் போன்ற மாடர்ன் விஷயங்கள் எஸ்யூவி பிரியர்களுக்குப் பிடிக்கும். அநேகமாக, டெரானோவுக்கு மாற்றாக இருக்கும் கிக்ஸ். 

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

ரொம்பவும் மாடர்ன் என்றால், இதைச் சொல்லலாம். ஹெட்லைட், DRL, டெயில் லைட் என எல்லாமே LED மயம். டெயில் லைட், பூமராங் ஸ்டைல். கிரே கலர் கார் என்றால் ஆரஞ்சு நிற ரூஃப். சிவப்பு கார் என்றால் கறுப்பு ரூஃப். இதுவும் ஒரு ரசனைதான்.

முன்பக்க ஏர் வென்ட் நல்ல அகலம். அதற்குக் கீழே பனிவிளக்குகள் இருந்தன. நிறைய அலுமினியம், க்ரோம் வேலைப்பாடுகள் தெரிந்தன. கிரில், வலதுபக்கம் பெட்ரோல் டேங்க் மூடி, டெயில் கேட் பட்டை இதற்கான உதாரணம். இது கேப்ச்சர் தயாரிக்கப்படும் MO பிளாட்ஃபார்ம் என்றார்கள். ரொம்ப பல்க்கியாகவும் இல்லை; மெலிந்தும் இல்லை. ஆனால், ஃபிட்டான ஒருவர் சிக்கென சிக்ஸ்பேக் வைத்ததுபோல் இருக்கிறது கிக்ஸ்.

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

க்ரெட்டாவுக்குத்தான் போட்டியாக வருகிறது கிக்ஸ். அதனால் க்ரெட்டாவைவிட அளவுகளில் பெருசுதான். அதேபோல கேப்ச்சரைவிடவும் 55 மிமீ நீளமும், 32 மிமீ உயரமும் பெருசு.

உள்ளே

முதல் பார்வையிலேயே அனைவரும் காரின் இன்டீரியரை `ஆஹா ஓஹோ’வெனப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்டீரியரைப் பார்த்ததும்தான் தெரிந்தது, கிக்ஸ் இந்தப் பாராட்டுக்குப் பொருத்தமானதுதான் என்று. 7 இன்ச்சாவது டச் ஸ்க்ரீன் கொண்டுவராவிட்டால் நிஸானுக்குக் கண்டனம் தெரிவித்திருப்போம். நல்லவேளை - அதையும் தாண்டி 8 இன்ச்சில் ப்ரீமியம் கார்களில் இருப்பதுபோல், செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் செமயாக இருந்தது. சாக்லேட் பிரவுன் மற்றும் கறுப்பு நிற இன்டீரியர், நிச்சயம் ரிச் லுக்தான். 

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

பட்டாம்பூச்சியை நினைவுப்படுத்தும் மீட்டர்கள் அற்புதம். இதில் வேகம் மட்டும் டிஜிட்டலில் தனியாகத் தெரிந்தது. லெதர் தையல் வேலைப்பாடுகள்கொண்ட சீட்கள் அருமை. ஸ்டீயரிங் வீலிலேயே கன்ட்ரோல் பட்டன்கள் இருந்தன. அங்கே சில டம்மி பட்டன்கள் இருந்ததுதான், பார்வைக்கு உறுத்தல்.

ஃப்யூல் கேஜ் ரொம்பவும் பெரிதாக இருப்பதுபோல் தெரிந்தது. சில இடங்களில் ஹார்டு பிளாஸ்டிக்ஸ் இருக்கின்றன. டிரைவர் சீட்டில் அந்த ஆர்ம் ரெஸ்ட், சொகுசுக்காகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கியர் மாற்றும்போது பலருக்கும் அது இடைஞ்சலாகத்தான் இருக்கும். நான்கு கதவுகளிலும் பாட்டில் வைக்க இடம் கொடுத்திருக்கிறார்கள். இந்த காரில் ஒரே ஒரு USB போர்ட்தான்...இந்த ஸ்மார்ட்போன் காலத்தில் இது போதுமா நிஸான்?

எஸ்யூவி என்பதால், சீட் உயரமாக இருந்தது. உட்கார்ந்து ஓட்ட வசதியாகவும் இருக்கிறது. ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட் ரேக் மட்டும்தான். ரீச் இல்லை. ஹைவேஸில் பறக்கும்போது, டெட் பெடலுக்காக என் கால் ஏங்கியது. அதைக் கொடுத்திருக்கலாமே நிஸான்?

பின்னால்...

டெரானோவுக்கு மாற்றாக, க்ரெட்டாவுக்குப் போட்டியாகத்தான் கிக்ஸ் இருக்கும் என்பதால், இது 5 சீட்டர் என்பதில் சந்தேகமே இல்லை. கதவுகள் அகலமாகவே திறந்தன. வயதானவர்கள் எளிதில் ஏறி உட்காரலாம். டார்க் இன்டீரியர் என்பதாலோ என்னவோ, கார் ரொம்பச் சின்னதுபோலத் தெரிகிறது. ஆனால், ஹெட் ரூமும் லெக் ரூமும் பக்கா! மூன்றாவது பயணிகூடத் தொந்தரவில்லாமல் பயணிக்கலாம் எனும் அளவுக்கு இடவசதி. ஃப்ளாட்டான தரையும், அகலமான சீட்டும், நீளமான வீல்பேஸும்தான் இதற்குக் காரணம். இதன் வீல்பேஸ் - 2,673 மிமீ.

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

பின் பயணிகளுக்கு இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் - டிக்கியில் உள்ள பார்சல் ஷெல்ஃப். இதை உள்ளே இருந்துகொண்டே திறந்து கொள்ளலாம். பூட் ஸ்பேஸில் 400 லிட்டர் இடவசதி கிடைக்கிறது.

டிரைவ்

கிக்ஸில் பெட்ரோல்/டீசல் இரண்டுமே உண்டு. ஆனால், இப்போதைக்கு பெட்ரோல் மாடல், டெஸ்ட் டிரைவுக்கு வரவில்லையாம். அதனால், எல்லோருக்குமே டீசல் மாடல்தான். 6 கியர்கள். டஸ்ட்டர் போலவே லீவரை மேல்நோக்கித் தூக்கிப் போடும்படி ரிவர்ஸ் கியர் இருந்தால், அது டீசல் மாடல். பெட்ரோலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். `இப்போதைக்கு ஆட்டோமேட்டிக் எதிர்பார்க்காதீர்கள்’ என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார் நிஸானின் டிசைன் சீஃப்.

ஃபெமிலியரான டீசல் இன்ஜின்தான். ஆம்! டஸ்ட்டர், டெரானோ, கேப்ச்சரில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 110 bhp பவரும் 24 kgm டார்க்கும்கொண்ட K9K டீசல் இன்ஜின்தான். நீங்கள் மைண்ட் வாய்ஸில் புலம்புவது கேட்கிறது. ஆம், அந்த டர்போ லேக்? டஸ்ட்டர், கேப்ச்சர் அளவுக்கு இல்லை. ஆனால் 2,000 rpm-க்குக் கீழே கொஞ்சம் டர்போ லேக்கை உணர்ந்தேன். லோ ஸ்பீடுகளில் கொஞ்சம் கடகடக்கவும் செய்தது கிக்ஸ். டர்போ விழித்துவிட்டால், காரை நிறுத்தத் தோன்றவில்லை. மிட் ரேஞ்சிலிருந்து வெறித்தனம் காட்ட ஆரம்பிக்கிறது கிக்ஸ்.

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

0-100 கி.மீ-யை செக் செய்யவில்லை. ஆனால், சட்டென நிமிர்ந்து பார்ப்பதற்குள் டிஜிட்டலில் மூன்று இலக்கத்தைத் தொட முடிந்தது. 2,100 - 4,000 rpm வரை பவரையும் டார்க்கையும் மிக்ஸ் செய்து அடிக்கிறது கிக்ஸ். ஸ்ட்ராங் பர்ஃபாமென்ஸ் நச். ஓவர்டேக்கிங்கில் படுத்தவில்லை. கிளட்ச்சும் சரி; கியரும் சரி - எந்த இடத்திலும் கைவிடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப். ஃபன் டு டிரைவ் பார்ட்டிகளுக்கு, செம கிக் ஏற்றும் கிக்ஸ்.

ஹேண்ட்லிங்

கிக்ஸில் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். பார்க்கிங்கின்போது மட்டும் ஸ்டீயரிங் ஹெவியாக இருப்பதுபோல் தெரிந்தது. கார் நகர ஆரம்பித்துவிட்டால், அப்படியே எடை குறைந்து லேசாகிறது. வேகமாக வந்து ஒரு ஸ்பீடு பிரேக்கரிலோ, மேடு/பள்ளத்திலோ ஏற்றி இறக்கினேன். அற்புதமாக வேலை செய்தது இதன் பேலன்ஸ்டு ஆன சஸ்பென்ஷன் செட்-அப். குறைந்த வேகத்திலும் அதிர்வுகளைப் பெரிதாக உள்ளுக்குள் கடத்தவில்லை. அதாவது, ரைடு குவாலிட்டி அருமை. சந்தோஷமான ஒரு விஷயம் - கிக்ஸில் கேப்ச்சருக்கு இணையான கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 210 மிமீ. எஸ்யூவி ஜீன் தெரிகிறது கிக்ஸில்.

கார்னரிங்கில் லேசான பாடி ரோல் தெரிந்தது. வேகங்களில் மட்டும் ஸ்டீயரிங்கை நன்றாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். டயர் கிரிப் சூப்பர். இதுவே எஸ்யூவி என்றாலும், நேர்கோட்டில் இதன் ஸ்டெபிலிட்டி அருமை. பிரேக்ஸ், நம்பிக்கையை வரவழைக்கின்றன. ஆனால், முரட்டு பார்ட்டிகள் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பார்கள்.

தமிழ் - படங்கள்: பா.காளிமுத்து

கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!

கிக்ஸில் சில எர்கானமிக்ஸ் குறைகளைத் தவிர்த்து, பெரிதாக எந்தக் குறையும் தென்படவில்லை. வெளியே சாஃப்ட்டாகத் தெரிந்தாலும், ரஃப் அண்ட் டஃப் டிரைவுக்கு ஈடுகொடுக்கிறது கிக்ஸ்.

டர்போ லேக்? வேறு வழியில்லை. இது இன்ஜினுக்கே உள்ள குணம். ஆனால், வசதிகளைப் பொறுத்தவரை, வெல் பேக்கேஜ்டு காராகக் கலக்குகிறது கிக்ஸ். இந்த மாதத்துக்குள் கிக்ஸின் விலையை அறிவித்துவிடும் நிஸான். அநேகமாக 10 - 15 லட்சம் வரை இருக்கலாம். ஆட்டோமேட்டிக் வந்தால், வாடிக்கையாளர்கள் கவனம் இந்தப் பக்கம் திரும்பும். க்ரெட்டாவுக்குப் போட்டி என்றால் சும்மாயில்லை!