மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா?

கார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா?

தொடர் - 2 - சர்வீஸ் அனுபவம்விமல்நாத் - ஓவியங்கள் ராஜன்

ரு திரைப்படத்தில் கவுண்டமணி இப்படிச் சொல்வார்: ‘‘அட, டைவர்ஸ் கேஸ்லாம் என்கிட்ட வருதுப்பா... நான் என்ன கோர்ட்டா... இல்ல வக்கீலா?’’

கார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா?

என் வாழ்க்கையிலும் நான் சீன் போடும்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது. எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் கார் வாங்கி நண்பர் ஆனவர். மாருதி கார் வைத்திருக்கிறார். காரிலும் சரி; வீட்டிலும் சரி - என்ன பிரச்னை என்றாலும் என்னிடம் கலந்தாலோசிப்பார். ஒரு தடவை சர்வீஸ் சென்டருக்கு காரில் வந்தவர், வித்தியாசமானதொரு புகாரை என்னிடம் சொல்லிச் சரி செய்யச் சொல்லிக் கேட்டார். அவர் சொன்ன பிரச்னை இதுதான்.

‘‘என் ரெண்டு குழந்தைகளையும் மாசம் ஒரு தடவை வெளியூருக்கு டூர் கூட்டிட்டுப் போவேன். ஒவ்வொரு தடவை டூர் முடியும்போதும் அவங்க ரெண்டு பேருமே காய்ச்சல்ல படுத்துடுறாங்க! மற்ற நாட்கள்ல அவங்களுக்கு எதுவுமே ஆகுறதில்லை. எனக்கென்னமோ கார்லதான் பிரச்னை இருக்குனு நினைக்கிறேன். நீங்கதான் இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்..’’ என்றார்.

‘என்னடா இது வம்பாப் போச்சு! நான் என்ன டாக்டரா... இல்லை டீனா!’ என்று கவுண்டமணி ஸ்டைலில் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஆனால், நம்மை நம்பி வந்தவரிடம் கை விரிப்பது தமிழனுக்கு வீரமில்லையே?

இந்தக் காய்ச்சல் பிரச்னை கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக நடப்பதாகவும், காரில்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதையும் தெள்ளத் தெளிவாகச் சொன்னார். சர்வீஸ் சென்டரில் காரை வைத்து நோட்டம் விட்டேன். மோ.வி-யில் வெளியே, உள்ளே, இன்ஜின், கையாளுமை என்று டெஸ்ட் ரிப்போர்ட் எழுதுவார்களே... அதைப்போலவே வரிசையாகச் சோதனை செய்து டிக் அடித்துக் கொண்டேன். முதலில் வெளியே!

கார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா?

காரின் வெளிப்புறத்தில் இதற்கான எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. காரின் கிரில்லில் இருந்து, டயர், ரூஃப், டிக்கி வரை எல்லாமே சோதனை போட்டாகிவிட்டது. ஐடியா புலப்படவில்லை. இன்ஜினிலும் சஸ்பென்ஷனிலும் நிச்சயம் சம்பந்தம் இருக்காது. அப்படியென்றால் உள்ளேதான் ஏதோ அமானுஷ்யம் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஸ்டீயரிங் வீல், ஏ.சி வென்ட்கள், க்ளோவ் பாக்ஸ் என்று எல்லாமே சோதனை போட்டேன். அப்போதுதான் நோட்டமிட்டேன். அட, காரின் ஏ.சி கிரில் பளபளப்பாக இருக்கிறதே? இந்த கார் வாங்கிய புதிதிலிருந்து ஒவ்வொரு தடவையும் நான்தான் சர்வீஸ் செய்கிறேன். ஒருவேளை - ஏ.சி வென்ட்கள் ஏதும் புதுசு மாற்றியிருப்பாரோ?

டாக்டரிடம் வக்கீலிடம்... அதுபோல் மெக்கானிக்குகளிடமும் பொய் சொல்லக் கூடாது என்பது வாடிக்கையாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அவரிடம் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தேன் ஏ.சி எதுவும் மாற்றவில்லை என்றார். இக்னிஷனை ஆன் செய்துவிட்டு, ஏ.சி-யைப் போட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோவொரு வாசம் மூக்கைத் துளைத்தது. வித்தியாசமாகவும் இருந்தது. பெர்ஃப்யூம் வாசம்தான். பெர்ஃப்யூமைத் தேடினேன். இல்லை.

ஆனால், பெர்ஃப்யூம் பயன்படுத்துவதே இல்லை என்று வாதிட்டார் நண்பர். ‘கடைசியாக எப்போது பயன்படுத்தினீர்கள்’ என்று கேட்டேன். ‘அது யூஸ் பண்ணி 3 மாசமாச்சு’ என்றார். அப்புறம் நடந்த விசாரணையில்தான் தெரிந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பெர்ஃப்யூம் பயன்படுத்தியபோது, தவறுதலாக அது ஏ.சி வென்ட்களுக்குள் கொட்டிவிட்டது என்கிற தகவலைச் சொன்னார். புரிந்து விட்டது. காரில் பயன்படுத்தும் பெர்ஃப்யூம்தான் இவ்வளவுக்கும் பிரச்னையாக இருக்கும்.

‘‘என் சின்னப் பையன் தெரியாமல், பெர்ஃப்யூம் பாட்டிலைத் தட்டிட்டான். அது ஏ.சி கிரில்லுக்குள் போயிடுச்சு. அதனால் அதை க்ளீன் பண்ணிட்டேன்’’ என்றார். சரசரவென ஆக்ஷனில் இறங்கிவிட்டேன். ஏ.சி மெக்கானிக்கை விட்டு ஏ.சி கிரில்லைத் தனியே கழற்றிப் பார்த்தபோது, பிரச்னைக்கான காரணம் இதுதான் என்பது உறுதியானது. அவரது காரின் ஏ.சி கிரில்லில் மாட்டியிருந்த பெர்ஃப்யூம் தவறுதலாக புளோயருக்குள் விழுந்துவிட்டதால், ஒவ்வொரு முறை ஏ.சி போடும்போதும் ஏ.சி-யின் வழியே அந்த பெர்ஃப்யூம் வாசம் வெளியேறி, குழந்தைகளுக்கு அலெர்ஜியை ஏற்படுத்தி இருந்ததால்தான் இந்தக் காய்ச்சல் பிரச்னை என்று அவருக்கு விளக்கினேன்.

ஏ.சி-யைக் கழற்றி மாட்டிச் சுத்தம் செய்தபிறகு, இரண்டு டூர்கள் அடித்துவிட்டு வந்து, அந்தப் பிரச்னை தனக்கு வருவதில்லை என்று மகிழ்ச்சியோடு சொன்னார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால்,
ஏசி-யிலும் பெர்ஃப்யூமிலும் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள்.

- சர்வீஸ் சுவாரஸ்யம் தொடரும்

தொகுப்பு: தமிழ்

என்ன செய்ய வேண்டும்?

* காரில் பெர்ஃப்யூம் உபயோகிப்பவர்கள், குறிப்பிட்ட நாள் கழித்து பெர்ஃப்யூமை மாற்றிவிடுங்கள்.

* காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்துக் கிளம்பும்போது, ஜன்னலை இறக்கிவிட்டு வெறும் புளோயரை மட்டும் கொஞ்சநேரம் ஆன் செய்துவிட்டு, அப்புறம்தான் ஏ.சி-யைப் 'ஆன்' செய்ய வேண்டும். காரில் உள்ள நச்சுக் காற்று வெளியேறுவதற்காக இந்த ஐடியா.

* ஏ.சி கிரில்லில் சிலர் பெர்மனென்ட்டாக லிக்விட் பெர்ஃப்யூம் பாட்டிலை மாட்டிவிடுவார்கள். இது கவிழ்ந்தால், இதுபோல பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்.

* பெர்ஃப்யூம் பயன்படுத்தும்போது காரில் தும்முவது, இருமுவது போன்றவற்றாலும் தொற்று ஏற்பட்டு வியாதிகள் பரவ வாய்ப்புண்டு. தரமான ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துங்கள்.

* காரினுள்ளே தின்பண்டங்களை முடிந்தளவு தவிர்க்கலாம். சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு, காருக்குள்ளேயே கைகளைத் தட்டித் துடைப்பது நிச்சயம் கூடாது.

* காருக்குள் ஏறும்போது, தயவுசெய்து காலை வெளியே தட்டிவிட்டு உள்ளே ஏறுங்கள். அப்படியே உள்ளே ஏறினால், ஃப்ளோர்மேட்டில் மண் சேகரிப்பு நடந்து, அதுவும் ஏ.சி கிரில் வழியாக உள்ளே போனாலும் ஆபத்துதான்.

* மீதமான தின்பண்டங்களை, எக்காரணம் கொண்டும் சீட்டில் அப்படியே போடாதீர்கள்.

* ஸ்வச் பாரத் திட்டத்தை, நமது காரில் இருந்தே தொடங்கலாம்.