பெட்ரோல், டீசலால் இயங்கும் இன்ஜின் வந்த பிறகு வாகன உலகில் ஏற்பட்ட மாற்றம் பெரியது. அதில், `ஸ்டைலிங்’ முக்கியமானது.

ஸ்டைலிங்கின் முக்கியத் துவத்தைப் புரிந்துகொள்ள, உதாரணத்துக்கு அடையாள அட்டைகளை எடுத்துக்கொள்வோம். பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் நம் முகத்தைத்தான் புகைப்படமாக வைத்திருக்கிறோம். நம் முகத்தைப் போன்றதுதான் கார் ஸ்டைலிங்.
ஆடி போன்ற நிறுவனங் களின் தனித் துவத்துக்கும், விற்பனைக்கும் முக்கியக் காரணமாக இருப்பது, அதன் ஸ்டைலிங் மற்றும் டிசைன்தான். மக்களின் மனங்களில் ஆடியாக, பிஎம்டபிள்யூ-வாக, பென்ஸாகப் பதிந்திருப்பது ஸ்டைலிங் டிசைன்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரின் உதிரிபாகமான டிரைவ் ஷாஃப்ட் அல்லது கியர்பாக்ஸைத் தனியாக வைத்து, `இது எந்த கார் நிறுவனத்தின் தயாரிப்பு?’ என்று ஒரு சாமானிய கார் ஓட்டுநரைக் கேட்டால், அவரால் பதில் சொல்ல இயலுமா?
உருவங்களை உருவாக் குவதுதான் வடிவமைப்பு. அதிலும் மனங்கவர் வடிவம் படைப்பது தனித்துவமான ஓர் ஆற்றல். மனங்கவர் வடிவம் என்பது, மிகவும் பெர்சனலான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும். இது பல்முனை உடைய தேர்வு. அதாவது, ஒருவருக்குப் பிடிப்பது மற்றொருவருக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அழகு என்பது ரசனை சார்ந்த விஷயம். அழகியல், ஆடம்பரம் என்ற வரையறையில் அடங்காது. அது ஒரு வரையறைக்குள் அடங்கும் கணிதமல்ல; பலவிதமான பார்வை, நம்பிக்கை மற்றும் பல தலைமுறைகள் தொடர்ந்து வருவது; பன்முகத்தன்மை கொண்ட ஒரு புதிர்.
வடிவமைப்பில் அத்தனை அடிப்படைக் கூறுகளும், தேர்ந்த அழகியல் கோட்பாடுகளும், மிகச்சிறந்த சிற்பக்கலைத் திறனும், ஓவியத்திறனும், சொல் ஆளுமையும் சேர்ந்து உருவாக்கும் பொறியியல் அதிசயம்தான் ஒரு வாகனம் என்பது. இந்த அதிசயம், சாலை மற்றும் வாகன சட்ட விதிமுறைகள், சந்தை எதிர்பார்ப்பு என அனைத்தையும் பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக அது உட்கார்ந்து செல்லவும் இயக்கவும் வசதியானதாக இருக்க வேண்டும்.
கார் டிசைனர் என்பவர் யார்? இதில் இருக்கும் கலைச்சொற்களைப் புரிந்துகொள்வது எப்படி? காரினுடைய வடிவம் எப்படி படிப்படியாக உருவாகிறது என்று எழும் கேள்விகளுக்கெல்லாம் மிக சுவாரஸ்யமான பதில்கள் இருக்கின்றன.

கார் டிசைனர்கள் அமர்ந்து வேலை செய்யும் இடத்தை `டிசைன் ஸ்டூடியோ’ என்கின்றார்கள். இது மிகவும் ரகசியமான இடம். கார் டிசைனர்களின் அலுவலகக் கட்டடம் பிரத்யேகமான இடமாக இருக்கிறது. இங்கு சென்று வர எல்லோருக்கும் அனுமதி கிடைக்காது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தையில் அறிமுகமாக இருக்கும் கார் அல்லது பைக் ஆகியவற்றுக்கான உருவாக்கம் இங்கு நடப்பதால், டிசைன் பணியாளர்கள் வேலை செய்யும் பணியிடமே ஒரு பாதுகாப்புக் கேந்திரமபோல ரகசியம் காக்கும் இடமாகப் பராமரிக்கப்படும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு கார் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்திருந்தால், உற்பத்தித் துறை, அசெம்பிளி லைன், குவாலிட்டி கன்ட்ரோல் போன்ற துறைகளுக்குச் செல்ல முடியும். ஆனால், ஸ்டைலிங் ஸ்டுடியோவுக்குச் செல்ல அனுமதி கிடைக்காது.
தொடக்க காலத்தில் ஓவியர்களே கார் ஸ்டைலிஸ்ட்டுகளாக இருந்தார்கள். கலைஞர்களின் கற்பனையை காராக மாற்ற, பொறியியல் வல்லுநர்கள் திணறிப் போயிருக்கக் கூடும். அமெரிக்க கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸில் பணிபுரிந்த ஹார்லே ஏர்ல் (Harley Earl) என்பவர்தான் வடிவமைப்பின் பயிற்சி முறைகளை நெறிப்படுத்திய பிதாமகன். 1927-ம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸில் உலகத்தின் முதல் டிசைன் ஸ்டூடியோவைத் தொடக்கியவர் அவர்.
அவர் வகுத்தமுறைதான்,
1) பேப்பர்களில் கார் ஸ்கெட்ச் வரைவது.
2) தேர்ந்தெடுத்த சில கான்செப்டுகளை 1:1 என்ற அளவில் பெரும்ஓவியமாகத் தீட்டிக்கொள்வது.
3) சம அளவிலான வண்ணப்படங்களை க்ளே மாடல் (Clay Model) எனும் அச்சு அசலான காரைப்போலவே சிற்பமாக வடிப்பது.
இந்தச் சரிவிகித அளவினால் செதுக்கப்பட்ட மாடலில் இருந்து பொறியாளர்கள் தங்கள் வேலைகளைத் தொடங்கி, தனித்தனி பாகங்களை மோல்டுகளாகத் தயாரித்து, மாதிரி பாகங்களை (PROTO TYPE PARTS) கொண்டு வாகனங்களை உருவாக்கினர். பின்னாளில் கம்ப்யூட்டர்கள் வந்த பிறகு, இந்த புராசஸ் மேலும் மேம்படுத்தப்பட்டாலும், அடிப்படையில் பெரும்பாலும் இதே அணுகுமுறைதான்.
இன்றைய ஸ்டூடியோவுக்குள் ஐந்து குழுக்கள் இயங்குகின்றன. அவை:
1. CREATIVE DESIGN
2. PHYSICAL MODELLING
3. DIGITAL DESIGN
4. CMT (COLOR MATERIAL & TEXTURE)
5. VR (VIRTUAL REALITY DESIGN)
க்ரியேட்டிவ் டிசைனர் (CREATIVE DESIGNER) என்கிற வடிவமைப்பாளர், ஒரு கற்பனையாளர். தன் கற்பனையில் உதிக்கும் ஐடியாக்களை பேப்பரில் வரையும் வித்தை கற்றவர். பேப்பர், பென்சில், பால்பென், மார்க்கர்தான் இவரின் ஆயுதங்கள். அழகான ஒரு கார் கான்செப்ட்டைத் தேடிக் கண்டடைய, இவர்கள் ஆயிரக்கணக்கான `கீ ஸ்கெட்ச்’ (Key Sketch) என்று அழைக்கப்படும் அதிவிரைவு ஸ்கெட்ச்களை வரைந்து, பிறகு அதைப் பற்றி விவாதிப்பர். பெரும்பாலும் ஒரு சிறு குழுவாகவே இவர்கள் ஸ்கெட்ச் வரைவார்கள். பெர்ஸ்பெக்ட்டிவ் (Perspective) எனும் கவர்ச்சியான முறையில் அமைந்த படங்களாக இவை இருக்கும்.
ஒரு கார் புரோக்ராமுக்கு க்ரியேட்டிவ் ஹெட் (Creative Head) இருப்பார். இவர் நூற்றுக்கணக்கான ஐடியாக்களில் இருந்து தேறுகின்ற சிலவற்றைத் தேர்ந்தெடுப்பார். முதலில் இந்தக் குழு பல வழிகாட்டலின்படியே இயங்கும். கார் நிறுவனத்தின் பல துறைகளின் இன்புட் கார் தயாரிப்புக்கு மிக அவசியம்.
அதாவது, யார் நமது வாடிக்கையாளர், அவரது வாங்கும் சக்தி என்ன, இந்த காரின் விலை எவ்வளவு இருக்க வேண்டும், நாம் தயாரிக்கவிருக்கும் மாடலுக்குப் போட்டியாக களத்தில் எப்படிப்பட்ட கார்கள் இருக்கின்றன, எப்போது நாம் உற்பத்தியைத் தொடங்குவோம், உலக அளவில் நடக்கும் மாற்றங்கள் என்ன, டெக்னாலஜியை மக்கள் எந்த அளவுக்கு எதிர்பார்க்கக்கூடும் என வரையறுக்கப்பட்ட கைடுலைனை ப்ரீஃப் எனும் வடிவில் கொடுப்பார்கள். இந்த ப்ரீஃப், பெரும்பாலும் மார்க்கெட்டிங் டீமிடம் இருந்தே வரும்.
ஏனெனில், வாகனங்களை விற்பனை செய்கிறவர்களுக்குத்தானே வாடிக்கை யாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது தெரியும்.
- வடிவமைப்போம்
க.சத்தியசீலன்