Published:Updated:

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

ஒப்பீடு - ஹேரியர் VS காம்பஸ் VS XUV 5OO

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

ஒப்பீடு - ஹேரியர் VS காம்பஸ் VS XUV 5OO

Published:Updated:
எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

ஸ்யூவி... இந்தியர்களுக்குப் பிடித்தமான கார். இதனாலேயே கார் தயாரிப்பாளர்கள் அனைவரும், இந்த செக்மென்ட்டில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டே இருக்கின்றனர். பெரிய சைஸ், ஸ்டைலான டிசைன், அதிக சிறப்பம்சங்கள், சிறந்த விலை, லேட்டஸ்ட் தொழில்நுட்பம் என எஸ்யூவிகளை அதன் உரிமையாளர்கள் விரும்புவதற்கான காரணங்கள் மிக அதிகம்! இவையெல்லாம் ஓர் இந்திய நிறுவனத்தின் தயாரிப்பில் இருந்தால், அதற்கு இன்னும் மவுசு அதிகம். ஆம், ஹேரியர் பற்றித்தான் இங்கே குறிப்பிடுகிறேன்! லேண்ட்ரோவரின் ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட பெரிய சைஸ் எஸ்யூவியாக இருந்தாலும், விலை விஷயத்தில் மிட் சைஸ் எஸ்யூவிகளுக்குச் சவால் கொடுக்கிறது ஹேரியர். தவிர, இதன் மாடர்ன் டிசைன், மிகப்பெரிய ப்ளஸ்.

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

இந்த எஸ்யூவிக்குப் போட்டியாக, ஜீப் காம்பஸ் கம்பீரமாக நிற்கிறது. `இதை எடுத்துக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் செல்லலாம்’ எனும் நம்பிக்கை, அதன் டிரைவருக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிறது. லக்ஸுரி விஷயத்திலும் இது ஸ்கோர் செய்வது வரவேற்கத்தக்கது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சோடை போனதில்லை என்ற கருத்தை உடைத்த பெருமை, இந்த காரையே சேரும். `கார் ஆஃப் தி இயர் 2017’ விருதை வழங்கி காம்பஸைக் கெளரவித்தது மோ.வி.
இந்த நேரத்தில் மஹிந்திராவின் எஸ்யூவிகளை அவ்வளவி சுலபமாகக் கடந்துவிட முடியாது. அதிலும் எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் எக்ஸ்யூவி 500-க்குத் தனி மரியாதை உண்டு. எக்ஸ்யூவிக்கு இன்னும் புக்கிங்குகள் குவிந்து கொண்டிருப்பதே  இதற்குச் சாட்சி. இந்த 7 சீட்டர்தான், மஹிந்திராவின் புதிய முகத்தை எடுத்துரைக்க உதவியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

எதிர்பார்த்தபடியே, காம்பஸ் மற்றும் XUV 5OO-யைவிடக் குறைவான விலையில் வெளிவந்திருக்கிறது ஹேரியர். வரும்போதே பலத்த அதிர்வலைகளை உண்டாக்கிய இந்த டாடா எஸ்யூவி, இதே செக்மென்ட்டில் ஏற்கெனவே வலுவாகக் கால் ஊன்றியிருக்கும் ஜீப் மற்றும் மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு டஃப் கொடுக்குமா? விலை, பிராண்ட் மதிப்பு, கெளரவம் ஆகியவை பெரிதாகப் பார்க்கப்படும் நிலையில், இந்த எஸ்யூவிகளின் 2 வீல் டிரைவ் மாடல்களைக் கோதாவில் களமிறக்கினோம். 2 வீல் டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் ஹேரியரின் டாப் மாடலின் விலையில்தான் காம்பஸின் ஆரம்ப மாடல் கிடைப்பதால், அதன் டாப் வேரியன்ட்டுக்கு முந்தைய வேரியன்ட்டையே ஒப்பீட்டுக்கு எடுத்திருக்கிறோம்.

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

இன்ஜின்

காம்பஸில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் ஹேரியரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது குறைவான 140bhp பவரை வெளிப்படுத்துகிறது என்றாலும், (காம்பஸ்: 173bhp) டார்க்கில் இரண்டுமே சமமாக உள்ளன (35kgm). இன்ஜினில் டர்போ லேக் இருந்தாலும், அது டிரைவரைக் கடுப்பேற்றும் அளவுக்கு இல்லை. 1,800 ஆர்பிஎம்மில் டர்போ சார்ஜர் இயங்க ஆரம்பித்தாலும், பவர் டெலிவரி ஒரே சீராக இருக்கிறது. நகர நெரிசலைச் சமாளிக்கும் அளவுக்கு, இன்ஜினின் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் நன்றாக உள்ளது. தனக்கே உரித்தான டிரைவிங் மோடுகளை ஹேரியரில் வழங்கியிருக்கும் டாடா (Sport, City, Eco), ஒவ்வொன்றிலும் பெர்ஃபாமென்ஸை வித்தியாசப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதில் ஸ்போர்ட் மோடு செம ரெஸ்பான்ஸிவ்வாக இருந்தால், எக்கோ மோடு மிகவும் டல். மேலும் எக்கோ மற்றும் சிட்டி டிரைவிங் மோடுகளைப் பயன்படுத்தும் போது, இன்ஜின் அதன் அதிகபட்ச ஆர்பிஎம்மை எட்டாது! எனவே டிராஃபிக்கில் ஓட்டும்போது, இன்ஜின் கொஞ்சம் ஜெர்க் ஆவதுபோலத் தோன்றலாம். ஸ்போர்ட் மோடில் இன்ஜின் 5,000 ஆர்பிஎம் வரை எந்தச் சிக்கலும் இல்லாமல் ரெவ் ஆகிறது. பவர் டெலிவரியும் ஜெர்க் இல்லாமல் உள்ளது. ஆனால் ஐடிலிங்கில்கூட இன்ஜின் சத்தம் காருக்குள்ளே கேட்பது மைனஸ். இந்த நேரத்தில் ஸ்டீயரிங் மற்றும் க்ளட்ச்சில் அதிர்வுகள் தென்படுவது நெருடல்.

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

இங்கு இருக்கும் எஸ்யூவி களிலேயே பவர்ஃபுல் காம்பஸ்தான் என்பதால், வேகப் போட்டியில் அது எதிரொலிக்கிறது. 10 விநாடிக்குள்ளாகவே 0 - 100 கி.மீ வேகத்தை எட்டிப் பிடிப்பதுடன், முதல் நான்கு கியர்களுக்கு இடையேயான வேகமும் சிறப்பாக உள்ளது. 1,500 ஆர்பிஎம் முதலே டர்போ சார்ஜர் இயங்கத் தொடங்கி விடுவதுடன், டீசல் இன்ஜினின் மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸும் அதிரடியாக இருக்கின்றன. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸின் செயல்பாடு மிகத் துல்லியம் என்றாலும், க்ளட்ச்சின் எடை அதிகம்தான். 2,000 ஆர்பிஎம்முக்கு மேலே பவர் மற்றும் டார்க் டெலிவரியாகும் விதம், கார் ஆர்வலர்களுக்குப் பிடிக்கும். ஹேரியர் போலவே காம்பஸும் வெளிச்சத்தத்தைக் காருக்குள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால், அதிக வேகத்தில் இன்ஜின் சத்தம் கேபினுக்குள்ளே வருகிறது.

பெரிய டீசல் இன்ஜினைக்கொண்டிருக்கும் XUV 5OO (2,179சிசி), 155bhp பவர் மற்றும் 36kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. டர்போ லேக் தெரியாதது ப்ளஸ் என்பதுடன், பவர் டெலிவரியும் ரெஸ்பான்ஸிவ்வாக உள்ளது. ஆனால் ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, காரின் முன்பக்கச் சக்கரங்கள் பவரை சாலைக்குக் கொண்டுவருவதில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது. எனவே மற்ற எஸ்யூவிகளைவிட இங்கே Torque Steer அதிகமாகத் தெரிகிறது. 5-வது மற்றும் 6-வது கியரின் ஷார்ட் ரேஷியோக்கள் காரணமாக, நெடுஞ்சாலையில் டாப் கியரில் க்ரூஸ் செய்யும்போது, இன்ஜின் அதிக rpm-ல் இயங்க நேரிடுகிறது. எனவே கியரை மாற்றாமல் ஓவர்டேக் செய்ய இயலும் என்றாலும், அந்தச் சமயத்தில் இன்ஜின் அதிக சத்தம்போடுகிறது. மேலும் 20 லட்சம் ரூபாய் காரில், வெளிச்சத்தம் காருக்குள்ளே கேட்பது நெருடல்.

ஓட்டுதல் அனுபவம்

இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருந்தாலும், கரடுமுரடான சாலைகளை எளிதாகச் சமாளிக்கிறது ஹேரியர். முன்பக்கத்தைவிட பின்பக்க சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருப்பதால், சில சந்தர்ப்பங்களில் சாலை தரும் அதிர்வுகளை, பின்பக்க இருக்கையில் இருப்பவர்கள் உணர முடிகிறது. ஒருவேளை ஹேரியரின் பின்னால் இருக்கும் சிம்பிளான Non-Independent டார்ஷன் பீம் சஸ்பென்ஷன் இதற்கான காரணமாக இருக்கலாம். உயரமான காராக இருப்பினும், திருப்பங்களில் காரைச் செலுத்துவது நல்ல அனுபவம். மேலும், பாடிரோல் மற்றும் Vertical Movement பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. குறைவான வேகத்தில் ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கின் எடை அதிகமாக இருப்பதுடன், சில சந்தர்ப்பங்களில் டிரைவருக்குத் தேவையான ஃபீட்பேக்கை அது தரவில்லை. ஆனால், காரின் நிலைத்தன்மை நச்!

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

கையாளுமை மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது ஜீப் காம்பஸ். குறைவான வேகத்தில் செல்லும்போது சஸ்பென்ஷன் இறுக்கமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், அதிக வேகத்தில் இதுதான் காரின் நிலைத்தன்மைக்கு உதவுகிறது. பாடிரோல் மிகக் குறைவாக இருப்பதுடன், சாலையில் காரின் ரோடு கிரிப்பும் செம. காரின் ஸ்டீயரிங் துல்லியமாக இருப்பதால், திருப்பங்களில் காரின் கையாளுமை அற்புதம்.

மோசமான சாலைகளில் செல்லும்போது XUV 5OO-ன் சஸ்பென்ஷன் சத்தம்போடுகிறது என்பதுடன், கேபினில் அதிர்வுகளையும் உணர முடிகிறது. மேலும் சீரற்ற சாலையில் செல்லும்போது காரில் Vertical Movement இருப்பது மைனஸ். தவிர, அதிக வேகத்தில் செல்லும்போது, XUV 5OO-ன் நிலைத்தன்மை ஓகே ரகம்தான். காரின் பவருடன் ஒப்பிடும்போது, சேஸி அதற்கேற்ற திறனைக் கொண்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதனால் திருப்பங்களில் காரைச் செலுத்தும்போது அதிகப்படியான பாடிரோல் தெரிவதுடன், ஸ்டீயரிங்கின் ஃபீட்பேக்கும் சுமார்.

கேபின்

ஹேரியரின் கேபினில் இருக்கும் டாடா லோகோவை எடுத்துவிட்டுப் பார்த்தால், ஒரு ப்ரீமியம் ஜெர்மன் எஸ்யூவி என்று நினைத்துவிடுவார்கள். அந்தளவுக்கு இதன் டிசைன் தெளிவாக இருப்பதுடன், டேஷ்போர்டில் இருக்கும் Fake Wood & பியானோ ப்ளாக் ஃபினிஷ் வாவ் ரகம். டாடா கார்களிலேயே உயர் ரக மெட்டீரியல்கள் மற்றும் ஃபிட் அண்ட் ஃபினிஷ் கொண்ட கேபின் என ஹேரியரைச் சொல்லலாம். ஆனால் ஸ்டீயரிங் வீலின் ஃபினிஷ் மற்றும் கேபினின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக்கின் தரம் மைனஸ்.

கேபினில் அதிக இடவசதி இருப்பதால், ஒரு பெரிய காரில் இருக்கிறோம் என்ற உணர்வு தானாக வந்துவிடுகிறது. என்றாலும் உயரமான பானெட் - தடிமனான பில்லர்கள் - பெரிய ரியர் வியூ மிரர்கள் காரணமாக, வெளிச்சாலை சிலருக்குத் தெளிவாகத் தெரியாமல் போகலாம். அதேபோல கியர் லீவர் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும், அதை இயக்குவது காம்பஸ் மாதிரி ஸ்மூத்தாக இல்லை. முன்பக்க இருக்கைகள் அகலமாக இருப்பதுடன், முதுகுக்குத் தேவையான சப்போர்ட் இருக்கிறது. கேபினில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதுடன், ஆர்ம்ரெஸ்ட்டுக்கு கீழ் Cooled Bin இருப்பது நீட் டச். ஆனால் USB போர்ட் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், விமானத்தின் த்ராட்டில்போலக் காட்சியளிக்கும் ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்த வசதியாக இல்லை. இங்கு  இருக்கும் கார்களிலே பின்பக்க இடவசதியில் ஸ்கோர் செய்வது ஹேரியர்தான். அந்தளவுக்கு அதிக லெக்ரூம் இருப்பதுடன், தொடைகளுக்கான சப்போர்ட்டும் அருமை. காரின் அகலம் காரணமாக, சீட்டும் நீளமாக உள்ளது. எனவே பின் இருக்கையில் மூன்று பேர் உட்காருவது சுலபம்.

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

ஜீப் காம்பஸின் கேபினில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மெட்டீரியல்களின் தரம் அட்டகாசம். மேலும் ஃபிட் அண்ட் ஃபினிஷும் நன்று. கதவுகள் மூடும் விதத்தை வைத்தே, இதன் கட்டுமானத் தரத்தைப் புரிந்து கொள்ளலாம். சிறப்பான சீட்டிங் பொசிஷன் - அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் காரணமாக, டிரைவர் சீட்டிலிருந்து வெளிச்சாலை தெளிவாகத் தெரிவதுடன், டிரைவிங் பொசிஷனும் கச்சிதமாக இருக்கிறது. ஆனால் கேபினில் ஸ்டோரேஜ் வசதிகள் குறைவுதான். மேலும் காரின் விலையுடன் ஒப்பிடும்போது, லிமிடெட் (O) வேரியன்ட்டில் இருக்கும் வசதிகள் போதவில்லை. பின்பக்க இருக்கையின் பேக் ரெஸ்ட் மேல்நோக்கி இருப்பதுடன், குஷனிங்கும் இறுக்கமாக உள்ளது. மேலும் தொடைகளுக்கான சப்போர்ட்டும் குறைவுதான். தவிர பின் இருக்கையின் அகலம் குறைவு என்பதால், மூன்று பேருக்கான இடவசதி காம்பஸில் இல்லை.

இங்கு இருக்கும் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, டைம் மெஷினில் ஏறி ப்ளாஷ்பேக்குக்குச் சென்றதுபோல இருக்கிறது மஹிந்திரா XUV 5OO-ன் கேபின். சென்டர் கன்சோலில் அதிக பட்டன்கள் மற்றும் இரட்டை நீல நிற டயல்கள் ஆகியவை, கார் வந்த புதிதில் பார்க்க மாடர்ன்னாக இருந்தது என்றாலும், தற்கால கார்களுடன் வைத்துப் பார்த்தால் டல்லடிக்கிறது. மென்மையான பிளாஸ்டிக்ஸ் மற்றும் லெதர் சீட்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றின் தரம் மற்றும் ஃபிட் அண்ட் ஃபினிஷ் விஷயங்களில் பின்தங்கிவிடுகிறது. உயரமான டிரைவர் சீட்டிலிருந்து வெளிச்சாலை நன்றாகத் தெரிவதுடன், அதை எலெக்ட்ரிக் கலாகவும் அட்ஜஸ்ட் செய்ய முடிகிறது.

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

சீட்டின் பேக்ரெஸ்ட் மேல்நோக்கி இருக்கிறது. ஆனால் ஸ்டீயரிங்கின் டில்ட் அட்ஜஸ்ட்மென்ட் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்பதால், சொகுசான சீட்டிங் பொசிஷன் டிரைவருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. முன்பக்க இருக்கையை விடப் பின்பக்க இருக்கை உயரம் அதிகமாக இருப்பதால், இங்கிருந்தும் வெளிச்சாலை தெரிவது ப்ளஸ். தவிர இதன் அகலம் பெரிது என்பதுடன், ஃப்ளாட் ஃப்ளோர் இருப்பதால் நடுவரிசை இருக்கையில் மூன்று பேர் வசதியாக உட்காரலாம்.

மேலும் தேவைக்கு ஏற்ப பேக்ரெஸ்ட்டை ரிக்-லைன் செய்ய முடியும் என்பது ப்ளஸ். இங்கு இருக்கும் எஸ்யூவிகளிலே மூன்றாவது வரிசை இருக்கைகொண்ட ஒரே கார் XUV 5OOதான். எதிர்பார்த்தபடியே இங்கே இடவசதி குறைவுதான் என்றாலும், மற்ற கார்களில் இது ஆப்ஷனலாகக்கூட இல்லை. ஆனால் இங்கே தனித்தனியாக ஃப்ளோயர் செட்டிங் இருப்பது ஆறுதல். மூன்றாவது வரிசை இருக்கைக்குப் பதிலாக லக்கேஜ் ஸ்பேஸைக்கொண்டிருக்கும் காம்பஸ் மற்றும் ஹேரியரின் பூட் ஸ்பேஸ், முறையே 438 லிட்டர் மற்றும் 425 லிட்டர்தான். XUV 5OO காரின் கடைசி வரிசை இருக்கையை மடித்தால், 702 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

மேலோட்டமாகப் பார்க்கும்போது, புதிதாக ஒரு எஸ்யூவியை வாங்க விரும்புபவரின் தேவைகளை மஹிந்திரா XUV 5OO பூர்த்திசெய்கிறது. பெரிய சைஸ் - பவர்ஃபுல் இன்ஜின் - 7 சீட்கள் - சன் ரூஃப், 18 இன்ச் அலாய் வீல்கள் போன்ற ப்ரீமியம் வசதிகள் - உயரமான சீட்டிங் பொசிஷன் - அதிக இடவசதியுடன்கூடிய இரண்டாவது வரிசை இருக்கை என இதன் ப்ளஸ்  பாயின்ட்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் கேபின் பழைய டிசைனில் இருப்பதுடன், அதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் மற்றும் தரம் ஆகியவை மைனஸ். மேலும் வெளிச்சத்தம், 20 லட்சம் ரூபாய் காரின் கேபினுக்குள்ளே கேட்பதை பலர் விரும்ப மாட்டார்கள். தவிர இதன் ஓட்டுதல் அனுபவமும் சிறப்பாக இல்லை... இப்படி காரில் மைனஸ்களும் அதிகம்.
 
`எஸ்யூவி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்ற ஃபீலிங், ஜீப் காம்பஸைப் பார்த்த மாத்திரத்திலேயே கிடைத்துவிடுகிறது. இங்கிருக்கும் கார்களிலேயே சிறப்பான கையாளுமை மற்றும் ஓட்டுதலைக்கொண்டிருக்கும் இது, கேபின் விஷயத்திலும் ஸ்கோர் செய்கிறது. இப்படி தனித்தன்மையான எஸ்யூவியாக தனது கடமையைச் செவ்வனே செய்யும் காம்பஸ், சில விஷயங்களில் சறுக்கிவிடுகிறது. ஆம், இடவசதி, விலை, சிறப்பம்சங்கள்தான் அவை. மேலும் இங்கு நாம் ஒப்பீட்டுக்கு எடுத்திருப்பது டாப் வேரியன்ட்டுக்கு முந்தைய லிமிடெட் (O) வேரியன்ட்தான் என்றாலும், அதன் விலையே ஹேரியரின் டாப் வேரியன்ட்டைவிட 4.5 லட்சம் ரூபாய் அதிகம்!

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

இங்கு இருக்கும் எஸ்யூவிகளிலேயே பெரிய மற்றும் விலை குறைவான காராக இருக்கும் டாடா ஹேரியர், ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜாக அசத்துகிறது. ஸ்டைலான டிசைன் - மாடர்ன் கேபின் - அதிக இடவசதி - கொடுக்கும் காசுக்கேற்ற சிறப்பம்சங்கள் - ப்ரீமியம் ஃபீல் எனக் கவர்கிறது. இந்தப் போட்டியில் பவரில் பின்தங்கினாலும், டிரைவிங் மோடுகள் அந்தக் குறையை ஓரளவுக்குச் சரிகட்டிவிடுகின்றன. ஆனால் XUV 5OO-ல் இருக்கும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் ஹேரியரில் மிஸ்ஸிங் என்பதுடன், இதன் பெரிய ரியர் வியூ மிரர்கள் நம் ஊரின் நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் நெருக்கடியைத் தரலாம். மற்றபடி இதில் பெரிய குறைகள் ஏதும் இல்லாததால், மற்ற இரண்டு எஸ்யூவிகளை எதற்குப் பார்க்க வேண்டும்; எல்லாவற்றுக்குமான பதிலாக நானே இருக்கிறேன் என இந்த ஒப்பீட்டில் அசால்ட்டாக வெல்கிறது ஹேரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism