பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளுக்கும், BS-6 மாசு விதிகளுக்கும் ஏற்ப டஸ்ட்டர் காரை மேம்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ரெனோ. ஆம்! கடந்த 2012-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டர், இரண்டாவது முறையாக பேஸ்லிஃப்ட் பெறவிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் களமிறங்கப்போகும் புதிய டஸ்ட்டர் சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டபோது அதனைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான வி.அஸ்வின் கெளதம்.

பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கும் விதமாக, புதிய டஸ்ட்டரின் பானெட் உயரத்தை அதிகரித்துள்ளது ரெனோ. மேலும் அதற்கேற்ப, புதிய கிரில்லுடன் கூடிய பம்ப்பரும் இடம்பெறும். ஹெட்லைட்டின் டிசைன் தற்போதைய மாடலில் இருப்பது போலவே இருந்தாலும், LED DRL சேர்க்கப்பட்டிருப்பது ப்ளஸ். மேலே புதிய ரூஃப் ரெயில். சன்ரூஃப் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அலாய் வீல்கள் - பின்பக்க பம்ப்பர் - டெயில் லைட் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். புதிய டஸ்ட்டரில் கேபினில்தான் பெரும்பான்மையான மாற்றம் இருக்கும். முன்பைவிடத் தரமான ப்ளாஸ்டிக்கால் ஆன டேஷ்போர்டில், முற்றிலும் புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இடம்பெறலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போதைய மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் H4K பெட்ரோல்/K9K டீசல் இன்ஜின்களே BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ஆனால் 110bhp (THP) பவரில் மட்டுமே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வெளிவரும் என்பதுடன், 85bhp மாடலின் விற்பனை நிறுத்தப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது. மற்றபடி பெட்ரோல் இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல்/CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் தொடரும்.
*புதிய டஸ்ட்டர் காரைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர் அஸ்வின் கெளதமுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.