களிமண்ணைச் சிலையாக்கி, அதற்கு உயிர் கொடுத்து ஓடவிடுவதில் இருந்தே `இன்ஜினீயரிங் டிசைன்’ ஆரம்பிக்கிறது. ஆனால், `க்ரியேட்டிவ் டிசைன்’ என்ற ரகசிய வித்தையை நாம் கையிலெடுக்கப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் இது என்ன என்று தொட்டுப்பார்க்கிறோம். இதில் நிபுணத்துவம் பெறவேண்டும் என்றால், இதற்கான முன் பயிற்சிகளை கல்வித்துறை கையில் எடுப்பது மிக மிக அவசியம். ஓவியம் மற்றும் சிற்பக்கலைக் கல்விக்கு - கார் டிசைன், கார் ஸ்கெட்சிங், கார் க்ளே மாடலிங் போன்ற விஷயங்கள் இன்னும் சென்று சேரவில்லை. சொல்லப்போனால், பாடத்திட்டத்தில் இருக்கும் `பெர்ஸ்பெக்டிவ் டிராயிங்’ (Perspective Drawing) என்ற ஓவிய உத்தி குறித்த அடிப்படை, இன்னும் ஓவிய, சிற்ப, வடிவமைப்பு, பொறியியல் கல்விக்கூடங்களைச் சென்றடையவில்லை. அது பாடத்திட்டத்தில் அப்படியே அதே இடத்தில் இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய ஓவியர்களால் 15-16ம் நூற்றாண்டிலேயே ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளது. இந்த யுக்தியைச் சரிவரப் புரிந்து கொள்ளாமலேயே இன்றைக்கும் நம்முடைய ஓவியம், வடிவமைப்பு, அனிமேஷன் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு நல்ல கார் க்ளே மாடல் உருவாவதற்கு, முதல் அடிப்படைத் தேவை, நல்ல டிசைன் ஸ்கெட்ச். ஒரு நல்ல டிசைன் ஸ்கெட்ச் உருவாவதற்கு டிசைனருக்குத் தேவை, பெர்ஸ்பெக்டிவ் சென்சிட்டிவிட்டி (Perspe ctive Sensitivity). இது 2D எனச் சொல்லப்படும் நீள, அகலமாக பேப்பரில் வரையும் யுக்திதான். ஆனால், அதில் 3D எனும் முப்பரிமாணப் அடையாளம் இருக்கும். அதாவது, நீள, அகல, உயரம் பளிச்சென்று விளங்கும்வண்ணம் வரையப்படும் யுக்தி இது. உதாரணமாக, கடற்கரையில் அமர்ந்திருக்கும் நீங்கள், நகரும் கப்பல் ஒன்றைப் பார்க்கும்போது, அது நம்மைவிட்டு விலகி தூரம் செல்லச் செல்ல மிகச் சிறிய புள்ளிபோல் ஆகி, ஒருகட்டத்தில் மறைந்தேபோகும். இப்படியாக பார்வையிலிருந்து தூரத்துக்கும், பார்வைக்கும், அடி வானத்துக்கும் நடுவில் உள்ள பொருளுக்கும் அவற்றின் நீள, அகல, உயர அளவுகளுக்குமான தொடர்பை புரிந்து கொண்டால்தான் பெர்ஸ்பெக்டிவ் டிராயிங் பிடிபடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, பெர்ஸ்பெக்டிவ் டிராயிங் என்பது, தேர்வு செய்யப் பட்ட கான்செப்ட் ஸ்கெட்சிலிருந்தும், பேக்கேஜ் டிராயிங் (Package Drawing) மற்றும் டேப் டிராயிங் (Tape Drawing) ஆகியவற்றின் துணைகொண்டும் க்ளே மாடல் உருவாக்குவது. இது ஒரு நீண்ட, கடினமான, அதிக செலவு வைக்கும் என்பதை மறுக்க முடியாது. ஒரு க்ளே மாடல், அதிலும் ஓர் அழகிய காரின் க்ளே மாடல் உருவாவதை அருகில் அமர்ந்து பார்ப்பது பரவசமான அனுபவம். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, க்ளே மாடல் செய்யப் பயன்படும் செயற்கைக் களிமண். இந்தக் களிமண்ணை `இண்டஸ்ட்ரியல் க்ளே’ (Industrial Clay) என்பார்கள். அடிப்படையில் இது Plastcine Material. எனவே, காய்ந்து உலர்ந்துவிடாது; கடினமாக செட் ஆகிவிடாது. அதனால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் டிசைனை மாற்றிக்கொள்ளலாம். இந்த க்ளே மாடல்கள் வடிவமைப்பவர்கள் `Clay Modeller’ என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பெருந்திறன் கொண்டவர்களாகவும், சிற்பத்திறன், தெரிந்தவராகவும் இருத்தல் அவசியம். இந்தக் களிமண், செங்கற்கள்போல பிளாக்குகளாக (Block), செவ்வக வில்லைகளாக சந்தையில் கிடைக்கின்றன. இந்த பிளாக்குகளை க்ளே ஓவன்களில் (Clay oven) 70 டிகிரிக்குச் சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டும்.

சூடான களிமண்ணை க்ளே ஆர்மச்சூர் என்கிற தோராயமான உருவம்கொண்ட, முன்பே தயார் செய்து வைத்திருக்கும் மாடலின் மீது பூசிய பிறகு, இதற்கென்றே இருக்கும் பிரத்தியேகமான கருவிகளால் கவர்ச்சியான காரின் பரப்புகளை, பாகங்களை இழுத்து இழுத்து உருவாக்குவதுதான் க்ளே மாடலிங். இந்த மொத்தச் செயலும் க்ரியேட்டிவ் டிசைனர் மேற்பார்வையில் நடக்கும். ஸ்கெட்ச்சாக இருக்கும்போது வெறும் கோடுகளாக இருந்தது, க்ளே மாடலிலில் 3D உருவமாக மாறும்போது காரின் டிசைனில் மேலும் மெருகேற்றலாம். ஸ்கெட்ச்சில் இருக்கும் சில இயல்பான குறைபாடுகளைச் சரிசெய்துவிடலாம்.
க்ளே மாடல் வேலை நிகழும் சமயத்தில் ஸ்டூடியோவுக்குள்ளே பல ரெவ்யூக்களை ஸ்டைலிங் ஹெட் நடத்தக்கூடும். இந்தச் சமயத்தில் நிறுவனத்தின் பெருந்தலைகள் வந்து பல முக்கிய முடிவுகளை, டிசைன் சம்பந்தமான முன்னேற்பாடுகளைச் செய்வது அடிக்கடி நடக்கும். இந்த க்ளே மாடல்தான் பொறியாளர் களுக்குத் தேவையான பல முக்கியத் தகவல்களைக் கொடுக்கும்.

* Eye Point * Vanishing Point (VP) * Horizon (H) * Light Source(L)
இந்த நான்கையும் பயன்படுத்தி, நம் கண்களுக்கும் மறையும் புள்ளிக்கும் இடையில் உள்ளவற்றை நடு விதிக்கு உட்பட்டுப் பொருத்தினால், பெர்ஸ்பெக்டிவ் டிராயிங்.
One Point Perspective என்பது, ஒரு மறையும் புள்ளிகொண்டது.
Two Point Perspective என்பது, இரு மறையும் புள்ளி.
Three Point Perspective மூன்று புள்ளிகள்.
இவற்றைத்தான் ஓவியங்களில், கட்டட வடிவமைப்பில், திரைப்படத் திட்டமிடலில், கார் டிசைனில் பயன்படுத்துகிறார்கள். இந்த உத்தி, பள்ளிக் குழந்தைகள்கூட புரிந்துகொள்ளும் வகையில் எளிதானது. கார் டிசைனர்களில் ஸ்கெட்ச்சுகள் முழுக்க முழுக்க இந்த பெர்ஸ்பெக்டிவ் டிராயிங்தான். இந்தப் புரிதலைப் பயன்படுத்தி, நம் பார்வையில் படும் கைபேசி முதல் அளவில் பெரிய பல அடுக்குமாடிக் கட்டடம் வரை ஒரு பேப்பரில் துல்லியமாக வரைந்துவிட முடியும்.
பெர்ஸ்பெக்டிவ் டிராயிங்கைப் புரிந்துகொண்டால், கற்பனையாக ஒரு கட்டடத்தை, தெருவை, சாலையை, அதனருகில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களை, சாலையில் வரும் கார்களை, பஸ்களை முழுக்க முழுக்கக் கற்பனையிலிருந்து நாம் நம்பும்படியான தத்ரூபமான காட்சிகளை உருவாக்கிவிட முடியும். இந்த அடிப்படையிலேயே ஹாலிவுட் பேன்டசி படங்களின் ஸ்டோரி போர்டுகளும் அனிமேஷன்களும் உருவாக்கப் படுகின்றன.
கார் டிசைனர்கள் பெர்ஸ்பெக்டிவ்வைப் புரிந்து கொண்டு பயன்படுத்துவதால்தான் முற்றிலும் புதிய ஒன்றை கற்பனையில் கண்டு, அதைக் காகிதத்தில் வரைந்து, ஒரு பாமரனும் புரிந்து அதிசயிக்கும்படியான கான்செப்ட்டாக உருவாக்க முடிகிறது. துல்லியமான கான்செப்ட் ஸ்கெட்ச் இருந்தால், க்ளே மாடலர் எந்தவித சந்தேகமும் சங்கடமும் இன்றி ஒரு கார் மாடலைக் கண்முன் நிறுத்திவிடலாம்.
- வடிவமைப்போம்
- க.சத்தியசீலன்