கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

FAME-II கெடுபிடி... மின்சார வாகனங்களின் விற்பனையைப் பாதிக்குமா?

FAME-II கெடுபிடி... மின்சார வாகனங்களின் விற்பனையைப் பாதிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
FAME-II கெடுபிடி... மின்சார வாகனங்களின் விற்பனையைப் பாதிக்குமா?

FAME-II கெடுபிடி... மின்சார வாகனங்களின் விற்பனையைப் பாதிக்குமா?

மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க, மத்திய அரசு `Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles’ (FAME) என்ற திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குகிறது. முதல்கட்டம் முடிவடைந்து, இரண்டாம்கட்ட FAME மானியம் தரும் பணிகள் தொடங்கி விட்டன. ஆனால் மத்திய அரசின் தடாலடி கெடுபிடிகள், மின்சார வாகனம் வாங்குவதை இன்னும் சிக்கலாக்கிவிட்டன.

FAME-II திட்டத்தில் முன்பைவிட 11 சதவிகிதம் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் 15,62,090 வாகனங்களுக்கு மானியம் வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள். நிதியை அதிகரித்திருந்தாலும், கடுமையான விதிமுறைகளால் தற்போது விற்பனையில் இருக்கும் பல வாகனங்கள் மானியத்தின்கீழ் வரவில்லை.

FAME-II கெடுபிடி... மின்சார வாகனங்களின் விற்பனையைப் பாதிக்குமா?

மின்சார கார்களைப் பொறுத்தவரை, 140 கி.மீ குறைந்தபட்ச ரேஞ்ச், 70 கி.மீ அதிகபட்ச வேகம் மற்றும் அதிகபட்சம் 30kWh பேட்டரி திறன் இருந்தால் மட்டுமே, FAME II-ல் மானியம் கிடைக்கும். அதிலும் காரின் விலை 15 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால்தான் மானியம் என்று கூறியுள்ளார்கள். இதனால் தற்போது விற்பனையில் இருக்கும் சிறிய கார்களான மஹிந்திரா E2O+ போன்ற கார்கள் மானியத்துக்குத் தகுதியற்றவையாகி விட்டன. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த விதிமுறைகளின்கீழ் வரும் கார்களை உருவாக்குவது, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குக் கடினமான வேலை.

விலை உயர்ந்த சொகுசு வாகனங்களுக்கு மானியம் கிடைப்பதைத் தடுப்பதற்காகவே இந்த விலைக் கட்டுப்பாடு என்றாலும் இன்னொரு புறம், புதிய தொழில்நுட்பங்கள் வருவதை இது குறைத்துவிடும். இதன் இன்னொரு பக்கவிளைவாக டீசல் எஸ்யூவி கார்களுக்கு நிகராக எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களைக் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படுகிறது. வெகுஜன சந்தையில் மின்சார வாகனங்களின் விற்பனையைப் பரவலாக்க, மாருதி வேகன்-R EV மற்றும் டாடா அல்ட்ராஸ் EV போன்ற கார்கள் வரும் இவ்வேளையில் புதிய கட்டுப்பாடுகள் இதன் விற்பனையையும் விலையையும் பாதிக்கும். ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் EV டாக்ஸி ஓட்டுநர்களையும், பொதுப் போக்குவரத்து நிறுவனங்களையும் பாதிக்காது.

FAME-II கெடுபிடி... மின்சார வாகனங்களின் விற்பனையைப் பாதிக்குமா?

கார்களைவிட இரு சக்கர வாகனங்களுக்குத்தான் சிக்கல் அதிகம். FAME-II-ல் விலை உயர்ந்த லித்தியம் அயன் பேட்டரி இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் என்ற விதிமுறை உள்ளது. Society of Manufacturers of Electric Vehicles (SMEV)-ன் அறிக்கைப்படி 97 சதவிகித மின்சார டூவீலர்கள் விற்பனையில், வெறும் 4 சதவிகிதம் மட்டுமே லித்தியம் அயன் பேட்டரி டூவீலர்கள் விற்கப்பட்டுள்ளன. மேலும், மானியத்தில் வரும் வாகனங்கள் 50 சதவிகிதம் உள்நாட்டுப் பாகங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறது விதிமுறை. இது பேட்டரிகள் உள்நாட்டில் தயாரிப்பதில்லை என்பதை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவையோ!

இந்த மானியத்தொகை, 1kWh பேட்டரிக்கு ரூ.10,000 என்று பேட்டரி அளவை மட்டும் வைத்து வழங்கப்படுகிறது. நகரங்களில் பயன்படுத்தப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் பெரிய பேட்டரியை எதிர்பார்க்க முடியாது. பெரிய பேட்டரி இருக்கும்பட்சத்தில் அதன் விலை அதிகரிக்கிறது. இதன் மூலம் தற்போது பரவலாக விற்பனையாகும் 95 சதவிகித மின்சார ஸ்கூட்டர்கள் மானியத்தின்கீழ்  வராது என்கிறது CRISIL எனும் ஆய்வு நிறுவனம்.

FAME-II விதிமுறைகள் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க சரியான வழிதான் என்றாலும், இதில் இருக்கும் குறைகளைக் களைய வேண்டும். ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டை மனதில் வைத்து இந்த விதிமுறைகளை அரசு இன்னொரு முறை பரிசீலிக்க வேண்டும்.

-  ரஞ்சித் ரூஸோ