கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

போட்டி: ஸ்கோடா ஆக்டேவியா VS ஹோண்டா சிவிக் (பெட்ரோல்)

சென்னையில் இருந்து மதுரைக்கோ, கோவைக்கோ ஸ்மூத்தான ஒரு நெடுஞ்சாலைப் பயணம் கிளம்ப வேண்டும் என்றால், பெட்ரோல் செடான்கள்தான் செமயான சாய்ஸ். பெட்ரோல் கார்களின் ஸ்மூத்னெஸ்ஸும், ஸ்டிஃப் சஸ்பென்ஷன் கொண்ட செட்-அப்புகளும் ஹைவேஸில் பருந்துபோல் அசையாமல் பறக்க உதவும். அதுவும் ப்ரீமியம் கார்கள் என்றால், இன்னும் அலாதி சுகம்.

ஸ்கோடா ஆக்டேவியா, அப்படிப்பட்ட ஒரு பருந்து அனுபவத்தைத் தருவதில் எக்ஸ்பர்ட். 2013 இறுதியில் வெளிவந்த ஆக்டேவியாவுக்குப் போட்டியாக டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஹூண்டாய் எலான்ட்ரா போன்ற கார்கள் இருந்தாலும், ஆக்டேவியாவின் தரத்துக்கும் ஓட்டுதலுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. `இதோ வந்துட்டேன்’ என்று சரியான நேரத்தில் ஆக்டேவியாவுக்குப் போட்டியாக வந்திருக்கிறது 10-வது தலைமுறை ஹோண்டா சிவிக்.  இரண்டு பெட்ரோல் ப்ரீமியம் பருந்துகளிலும் ஒரு ஜிவ் டிரைவ். எது சூப்பர் எனப் பார்க்கலாம்.

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

செக்ஸி லுக் எது?

ரேடியன்ட் சிவப்பில் பார்த்தவுடன் மனம் கவர்கிறது சிவிக். பக்கத்தில் போய்ப் பார்த்தால், அதிபர்களின் லிமோசின் மாதிரி நீளமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இது ஆக்டேவியாவைவிட 14 மிமீ குறைவு. பழைய சிவிக் கொஞ்சம் மொழுக்கென இருக்கும். இதில் ஆங்காங்கே க்ரீஸ் கோடுகள், காரை கத்திபோல் கூர்மையாகக் காட்டுகின்றன. பின்பக்கம் டெயில் டிசைன்... நிச்சயம் யாரும் லைக் போடாமல் இருக்க மாட்டார்கள். `C’ வடிவ டெயில் லைட்கள்தான், சிவிக்கை எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அடையாளம் காட்டும். கூபே வடிவ பின்பக்க டிசைன், நேர்த்தியான வேலைப்பாடு.

ஆக்டேவியா, சிவிக் அளவு ஷார்ப் இல்லை. லேசான கொழுக் மொழுக் டிசைன். ஆனால், பார்ப்பதற்கு சிவிக்கைவிட கட்டுமஸ்தாக இருக்கிறது. சிவிக்கைவிட அலாய்வீல்கள் 1 இன்ச் குறைவு. வெறும் 16 இன்ச் வீல்கள்தான். பின்பக்க ஸ்பாய்லர், அகலமான கிரில் என்று சிவிக்குடன் போட்டி போட முயற்சி செய்திருக்கிறது. அழகான கார்தான்... ஆனால் சிவிக் அளவுக்குப் பார்த்தவுடன் செக்ஸியாக இல்லை ஆக்டேவியா.

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

அகத்தின் வழியே...

உயரம் குறைவு என்பதாலோ என்னவோ,  நிமிர்ந்தெல்லாம் சிவிக்கில் நுழைய முடியாது. டிரைவர் சீட்டில் உட்காருவதற்கு, `தொபக்’ என விழ வேண்டியிருக்கிறது. சிவிக் ஓனர்களுக்கு இது பழக்கமான விஷயம்தான். டிரைவிங் பொசிஷன்தான் தாழ்வு. ஆனால் குஷனிங், ஸ்டீயரிங், பெடல்களை கால்கள் எட்டும் விதம், கியர் லீவரை கை எட்டும் விதம் என எர்கானாமிக்ஸ் எல்லாமே பக்கா! பவர்டு டிரைவர் சீட்தான்; ஆனால், சீட் மெமரி இல்லை. லெக்ரூம் சூப்பர். எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், செம ப்ரீமியம்.

சிவிக்கின் கறுப்பு நிற டேஷ்போர்டு, செம ஸ்போர்ட்டி. ஸ்டீயரிங்கைப் பிடிக்கும்போதே இதை உணர முடிகிறது. சென்டர் கன்ஸோலைப் பார்க்கப் பார்க்க, புத்துணர்வு கிடைக்கிறது. 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டைலாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மூன்று பாகங்களாகப் பிரிந்திருப்பது அருமை. ஸ்பீடோவும் டேக்கோவும் டிஜிட்டல். பின்பக்க சீட்களுக்கும் நல்ல குஷனிங். கம்ஃபர்ட்டும் லெக்ரூமும் சூப்பர். ஆனால், நினைத்ததுபோலவே பின்பக்க ஹெட்ரூம் குறைவு. காரணம், அந்த கூபே வடிவ ரூஃப் லைன். பின்பக்கப் பயணிகளுக்கு ஆடியோ கன்ட்ரோல் மிஸ்ஸிங். ஆர்ம் ரெஸ்ட்டும் டிரைவர் சீட்போல் தாழ்வாக இருக்கிறது. சார்ஜிங் பாயின்ட்களைத் தேடிப்பார்த்தால் அதுவும் இல்லை. பழைய ஹோண்டா கார்களைப்போலவே யுஎஸ்பி போர்ட்டுகளை ஏதாவது துப்பறியும் நிபுணர்களை வைத்துத்தான் தேட வேண்டும்.

ஆக்டேவியாவில் அகம், அற்புதம். நல்ல உயரமான கார் என்பதால், சிவிக்போல் உள்ளே ஏறி இறங்க கஷ்டப்பட வேண்டியதில்லை. உள்ளே நுழைந்து டேஷ்போர்டைப் பார்த்ததும் சொல்லி விடலாம்... இது பிசினஸ் கிளாஸ் கார் என்று. க்ளீன் கட் டேஷ்போர்டில், ஆங்காங்கே சாஃப்ட் டச் மெட்டீரியல்கள். டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிவிக்கைவிட பெரியது. ஆம்... 8 இன்ச்! பெரிதாக இருந்தாலும், சிவிக்கைவிட ஸ்லிம் அண்டு ஸ்லீக்காக மயக்குகிறது. டாப் வேரியன்ட்டான L&K மாடலில், ஆடி ஸ்டைல் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில், டிஜிட்டல் டிஸ்ப்ளே அருமை. இரவில் பார்த்தால் ஜொலிக்கும்.

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

ஃபன் டிரைவ்

ஹோண்டாவின் ஃபன் டு டிரைவ் பற்றி சந்தேகப்பட வேண்டியதில்லை. சிவிக்கிலும் அப்படித்தான். ஹைவேஸில் விரட்டினால் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவது போன்ற உணர்வு கிடைக்கிறது. இத்தனைக்கும் 141 bhp பவர்தான். ஏன் இப்படிச் சொல்கிறோம் என்றால், இது ஆக்டேவியாவைவிட மிகவும் குறைவு (39bhp). இதன் 1.8 லிட்டர் i-VTEC, நான்கு சிலிண்டர் இன்ஜினில் நல்ல ஸ்மூத்னெஸ். ரிஃபைன்மென்ட் சூப்பர். 17.4kgm டார்க், சிட்டிக்குள் ஓட்டவும் அற்புதம். அதாவது, லோ எண்டு பவர் டெலிவரி சூப்பர். ஸ்டீயரிங்கும் லைட் வெயிட். சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்ட ஜாலி.

CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், துல்லியமாக வேலை செய்கிறது. சில ஆன்-ஆஃப் த்ராட்டில் சமயங்களில் மட்டும் லேசான ஜெர்க் தெரிந்தது. சாலை காலியானால் சிவிக்கும் ஜாலியாகிவிடுகிறது. ஒரே மிதி... 6,500 rpm-ல் 141 குதிரை சக்திகளையும் உணர முடிந்தாலும், CVT கியர்பாக்ஸ்களில் ஒரு சிக்கல் உண்டு. அது ரப்பர் பேண்டு எஃபெக்ட். அதாவது, ஹைஸ்பீடுகளில் ஃப்ளோர் வரை ஆக்ஸிலரேட்டர் மிதித்துவிட்டு ஆர்பிஎம் மீட்டரைக் கவனியுங்கள்... முள் எகிறிக்கொண்டிருக்கும். ஆனால், பவர் கிடைப்பதில் கொஞ்சம் சுணக்கம் இருக்கும். டீசல்களில் டர்போலேக் இருக்குமே... அதேபோல! ஆனால், CVT கியர்பாக்ஸ்களின் குணமே இதுதான். மைலேஜுக்கு இது பெரிய வகையில் உதவும். ஆனால், டிரைவிங்கில் சோர்வு காட்டும்.  சிவிக்கில் பேடில் ஷிஃப்டர் இருக்கிறது. 7 ஸ்டெப் வரை ஜாலியாக ஏற்றி, இறக்கி காரை ஓட்டலாம்.

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

ஆக்டேவியாவில் இருப்பதும் 1.8 லிட்டர் இன்ஜின்தான். ஆனால், பவர்... 180 bhp. டைரக்ட் இன்ஜெக்‌ஷன், டர்போ சார்ஜர் கொண்ட பெட்ரோல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட் அருமை. டார்க்கும் சிவிக்கைவிட அதிகம். 25kgm. ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகனில் இருக்கும் வழக்கமான 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் கியர்பாக்ஸ்தான் ஆக்டேவியாவிலும். லோ எண்டு பெர்ஃபாமென்ஸைவிட மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்டுக்குத்தான் என் ஓட்டு. டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் என்பதால், `எப்படா ஆக்ஸிலரேட்டரை மிதிப்பான் இவன்’ எனக் காத்துக்கொண்டிருக்கிறது. இன்ஜினுக்கு சரியான பார்ட்னர்ஷிப். அதாவது, சரியான ட்யூனிங். இதிலும் பேடில் ஷிஃப்ட்டர்கள் இருக்கின்றன. 

இந்த பவர்/டார்க்கைக் கணக்கில்கொண்டு நீங்கள் நினைப்பது சரிதான். பவர் போட்டியில் ஆக்டேவியாதான் வின்னர். 0-100 கி.மீ-யை வெறும் 8.01 எண்ணுவதற்குள் கடந்துவிடுகிறது ஸ்கோடா. இதுவே சிவிக்குக்கு 11.48 விநாடி ஆகிறது. கியர் ஆக்ஸிலரேஷனிலும் அப்படித்தான். 20-80 கி.மீ-க்கு 4.95 விநாடி, 40-100 கி.மீ-க்கு 5.53 விநாடி என்று ஆக்டேவியாதான் `வாவ்’ சொல்லவைக்கிறது. சிவிக்குக்கு 6.68; 9.04 விநாடி ஆகிறது. அதற்காக சிவிக்கின் இன்ஜின் சுமார் எனச் சொல்லவில்லை. பெர்ஃபாமென்ஸில் சிவிக் அற்புதம் என்றால், ஆக்டேவியா பேரற்புதம். இதற்கு நான் சாட்சி.

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?
ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

ஆளுமையும் சஸ்பென்ஷனும்...

சிவிக்கில் சரியான எடை கொண்ட ஸ்டீயரிங், வேலையில் செம ஷார்ப். கார்னர் வருகிறது என்றால், தானாகத் திரும்ப ஆயத்தமாகும் அளவுக்கு இதன் ஸ்டீயரிங், வேகமும்கூட! அதேபோல் கார்னரிங்கில் சிவிக்கின் கையாளுமை அருமை. பாடிரோல் பெரிதாகவெல்லாம் இல்லை. இதற்குக் காரணம், குறைந்த சென்டர் ஆஃப் கிராவிட்டி. பழைய சிவிக்கில் கொஞ்சம் குண்டும்குழியுமான சாலைகளில் உள்ளே அதிர்வுகள் அலுப்பை ஏற்படுத்தும். புது சிவிக்கில் அந்தளவுக்குத் தெரியவில்லை. செடான் கார் என்பதாலோ என்னவோ, குறைவான கி.கிளியரன்ஸ் பெரிய குறையாகத் தெரியவில்லை. இந்தக் குறைந்த கி.கிளியரன்ஸ்தான், நெடுஞ்சாலையில் பருந்தைப்போல ஸ்டேபிளாகப் பறக்க உதவுகிறது. மொத்தத்தில் சிவிக், ஒரு ஃபன் ஹேண்ட்லிங் கார்.

ஆக்டேவியா... பெர்ஃபாமென்ஸில் போட்டி போட்ட அளவுக்கு  ஹேண்ட்லிங்கில் கெத்துகாட்டவில்லை. இந்த 4 மீட்டருக்கு அதிகமான பெரிய காரை ஓட்டும்போது, பெரிய கார் ஓட்டுவதுபோன்ற உணர்வே கிடைக்கிறது. சிவிக் அளவு சுறுசுறுப்பு இல்லை. ஸ்டீயரிங் லைட்வெயிட்டாக இருந்தாலும், ஃபோக்ஸ்வாகன் கார்களின் ஃபேவரைட்டான மந்தத்தன்மை தெரிவதும் இதற்குக் காரணம். ஆனால், இது பெரிய குறை கிடையாது.  எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்கும்போது ஸ்டேபிள்தான். ஆனால், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு `வெர்டிக்கல் மூவ்மென்ட்’... அதாவது தூக்கிப்போடுவது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும்.

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

சிவிக்கா... ஆக்டேவியாவா?

இந்த இரண்டுமே ப்ரீமியம் செடான்கள். ப்ரீமியம் என்றால் என்ன? வசதிகள். வசதிகளில் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை. ஆக்டேவியாவில் ரிவர்ஸ் கேமரா மட்டும் இருந்தால், கூடுதலாக பிளைண்ட் ஸ்பாட் கேமராவுடன் அசத்துகிறது சிவிக். பார்க்கிங் சென்ஸார் சிவிக்கில் பின்பக்கம் மட்டும்தான் என்றால், ஆக்டேவியாவில் முன்/பின் எனக் கலக்குகிறது.  ஆனால், இந்த வசதிகள் டாப் எண்டு மாடல்களில் மட்டும்தான்.

ஆக்டேவியாவின் டாப் எண்டு L&K-வின் ஆன்ரோடு விலை சுமார் 30 லட்சம் ரூபாய். 25 லட்சம் ரூபாய்க்கும் ஆக்டேவியா வாங்கலாம். இதற்கு ஆட்டோ பார்க்கிங், சன்ரூஃப், டிஜிட்டல் டயல், பவர்டு பின்பக்க சீட் போன்ற வசதிகளைத் துறக்க வேண்டும்.

ப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்?

சிவிக்கில் சன்ரூஃப், டிஜிட்டல் டயல், ஃபேன்ஸி அலாய்வீல் போன்ற வசதிகள்கொண்ட டாப் எண்டு மாடலான ZX-ன் விலையே 25.5 லட்சம் ரூபாய்தான். சிவிக்கின் செக்ஸியான அவுட்லுக், ஸ்போர்ட்டியான கேபின், துல்லியமான ஸ்டீயரிங் - நம்மைக் கவரும் அளவுக்கு டிரைவர்களைக் கவருமா எனத் தெரியவில்லை. அந்த ரப்பர் பேண்டு எஃபெக்ட்டை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆக்டேவியா, அப்படியே நேரெதிர். சிவிக்கைவிட குறைவாகவே சத்தம்போடுகிறது. இன்ஜினும் கியர்பாக்ஸும் வேற லெவல். குறைகள் என்று பெரிதாக ஆக்டேவியாவில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. டீலர் நெட்வொர்க்கிலும் ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸிலும் ஸ்கோடா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால்... இந்தப் போட்டியில் நாம் ஆக்டேவியாவைத்தான் பரிந்துரைப்போம்!

- தொகுப்பு:  தமிழ்