கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

இந்தியாவுக்கு வருது சிட்ரன்!

இந்தியாவுக்கு வருது சிட்ரன்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியாவுக்கு வருது சிட்ரன்!

ஃபர்ஸ்ட் லுக்: சிட்ரன் C5 ஏர்-க்ராஸ்

பெஜோ 309 (Peugeot 309)... இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா? பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த PSA குழுமம், இந்தியாவில் ப்ரீமியர் பத்மினி கார்களை விற்பனை செய்துவந்த PAL நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இந்தியாவுக்குள் கொண்டுவந்த முதல் கார் இதுதான். போதிய வரவேற்பு கிடைக்காததால், மிகக் குறைந்த காலமே (1994-1996) இந்தியாவில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஸ்டைலான டிசைன், பக்காவான சைஸ், சிறப்பான கட்டுமானம், தரமான இன்ஜின், அசத்தலான ஓட்டுதல் எனப் பல ப்ளஸ் பாயின்ட்களை அந்த கார் கொண்டிருந்தது. பிறகு 2011-ம் ஆண்டு இந்தியாவில், தனது செகண்டு இன்னிங்ஸை PSA குழுமம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை.

உலகளவில் ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, எம்பிவி எனப் பலதரப்பட்ட வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் Peugeot - Citroen, இந்தியாவில் நடக்கும் அதிகமான கார் விற்பனையை மனதில் வைத்து, திரும்ப வரும் முயற்சியில் இருந்தது. அதன் முதல்கட்டமாக பெஜோ(Peugeot)-வைக் களமிறக்காமல், சிட்ரன் (Citroen) பிராண்டைக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது PSA குழுமம். சர்வதேசச் சந்தைகளில் இந்த நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, அவை இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு வருது சிட்ரன்!

‘யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’ என்பதுபோல இந்தியாவில் டெஸ்ட் செய்யப்படும் சிட்ரன் C5 ஏர்-க்ராஸ் மாடலின் ஸ்பை படங்கள் வெளிவந்துவிட்டன. C5 காரின் பலம், பலவீனம் என்ன?

மிட்சைஸ் எஸ்யூவியான C5 ஏர்கிராஸ், கடந்த 2017-ம் ஆண்டு ஷாங்காயில் வெளியிடப்பட்டது. சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

PSA குழுமத்தின் EMP2 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் C5 ஏர்-க்ராஸ், 4,500மிமீ நீளம்/1,840மிமீ அகலம்/1,670மிமீ உயரம்/2,730மிமீ வீல்பேஸ்/230மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் எனும் அளவுகளைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தியாவில் களமிறங்கும்போது, ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், ஹூண்டாய் டூஸான் ஆகிய மிட்சைஸ் எஸ்யூவிகளுடன் போட்டி போடும். டூஸானைவிட 25மிமீ அதிக நீளம், 10மிமீ அதிக உயரம், 60மிமீ அதிக வீல்பேஸ் ஆகியவற்றை C5 ஏர்-க்ராஸ் கொண்டிருக்கிறது. சிட்ரன் கார்களுக்கே உரித்தான ஸ்ப்ளிட் ஹெட்லைட்களைக் கொண்டுள்ள இது, நகர்ப்புறச் சாலைகளுக்கான எஸ்யூவி போன்ற தோற்றத்தில் இருக்கிறது.

ஹேரியரின் டெரெயின் ரெஸ்பான்ஸ் மோடு மற்றும் காம்பஸின் செலெக் டெரெயின் சிஸ்டம்போல, இதிலும் கிரிப் கன்ட்ரோல் வசதி உண்டு. சர்வதேசச் சந்தைகளில் பலவிதமான பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் C5 ஏர்-க்ராஸ் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் 130bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி மட்டுமே முதலில் கிடைக்கும் எனத் தெரிகிறது. பின்னர் 130bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 180bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் கொண்டு வரப்படலாம். போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது, சிட்ரன் மிட்சைஸ் எஸ்யூவியில் 6 ஸ்பீடு MT மிஸ்ஸிங்.

இந்தியாவுக்கு வருது சிட்ரன்!

உலகளாவிய Euro NCAP அமைப்பு, C5 ஏர்-க்ராஸ் எஸ்யூவியை க்ராஷ் டெஸ்ட் செய்தது. அந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாடலில் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், 6 காற்றுப்பைகள், ISOFIX, சீட்பெல்ட் லோடு லிமிட்டர் என பாதுகாப்பு வசதிகள் இருந்தன.டெஸ்ட்டிங்கில் 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியிருந்தது இந்த சிட்ரன் எஸ்யூவி.

திருவள்ளூரில் அமைந்திருக்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸின் கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கும் C5 ஏர்-க்ராஸ்,  அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரில் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களே இடம் பெறும் என்பதால், இதன் விலை உத்தேசமாக 30 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கலாம்.

சர்வதேச அளவில் ஸ்டைலுக்கும் சொகுசுக்கும் பெயர்பெற்ற சிட்ரன் நிறுவன கார்கள், இந்தியாவிலும் அதையே முன்னிறுத்த விரும்பும். எனவே, நம் நாட்டில் இந்த பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் கார் விலை அதிகமாக இருந்தாலும், 2021-ம் ஆண்டு முதல் வருடத்துக்கு ஒரு கார் என்ற ரீதியில் வெளிவரப்போகும் மாடல்கள், அந்த எண்ணத்தை மாற்றியமைக்கும் எனத் தெரிகிறது.

உள்நாட்டு உதிரிபாகங்கள் மற்றும் உள்நாட்டுப் பொறியாளர்கள் (TCS, AVTEC) என மேக் இன் இந்தியா ஸ்டைலில், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க கார்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது சிட்ரன். இவை கேட்க நன்றாக இருந்தாலும், PSA குழுமத்தின் முதல் இந்தியப் பயணம் தோல்வியில் முடிந்ததற்கு, குறைவான டீலர் நெட்வொர்க் - சர்வீஸ் சென்டர்கள் ஒரு காரணம். எனவே, தனது முந்தைய தோல்வியிலிருந்து PSA குழுமம் பாடம் படித்திருக்கும் என்றே நம்புவோம்.

- ராகுல் சிவகுரு