கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!

புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!

ஃபர்ஸ்ட் லுக்: மாருதி சுஸூகி சியாஸ் 1.5 டீசல்

`போதும்டா சாமி’ என டீசல் இன்ஜின் தயாரிப்பில் சில நிறுவனங்கள் தயக்கம் காட்ட, மாருதி சுஸூகி புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைச் சொந்தமாகத் தயாரித்து, அதை சியாஸ் பேஸ்லிஃப்ட்டில் பொருத்தி அழகு பார்த்திருக்கிறது. இதுவரை ஃபியட்டிடம் இருந்தே டீசல் இன்ஜினை வாங்கிப் பயன்படுத்தி வந்த மாருதி சுஸூகி, தனது 80 வருட வரலாற்றில் முதன்முறையாக தனது தொழிற்சாலையில் தயாரான டீசல் இன்ஜினை மார்க்கெட்டில் உறும விட்டிருக்கிறது. உண்மையிலேயே தரமான, சிறப்பான இன்ஜினாக இது இருக்கிறதா?!

புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!

ஷ்ஷ்..ஷ்... சத்தம் போடாதே!

முதலில் இந்த இன்ஜினின் பெயரைத் தெரிந்து கொள்வோம். E15A, இன்லைன், 4 சிலிண்டர் டர்போ டீசல். செலெரியோவின் E08A-2 சிலிண்டர் (793 சிசி) டீசல் இன்ஜின் தயாரான அதே வேலைப்பாட்டின்படிதான் இந்த இன்ஜினும் தயாராகியிருக்கிறது. அதாவது, 77 மிமீ Bore கொண்ட இரண்டு 2 சிலிண்டர்களை ஒன்றாகச் சேர்த்து 4 சிலிண்டர்களாக்கி, 1,498 சிசியாக  (ஸ்ட்ரோக்கை 85.1 மிமீ-ல் இருந்து 80.4மிமீ-யாகக் குறைத்து) ரிலீஸ் செய்திருக்கிறது. 1,500 சிசிக்குள்ளாக இருக்கும் டீசல்  இன்ஜின்களுக்கான வரிவிலக்குக்காக இந்த ஐடியா.

இந்த E15A-வில் இருப்பது அலுமினிய சிலிண்டர் பிளாக் என்பதால், இரும்பு பிளாக்குகள்கொண்ட ஃபியட்டின் 1.3 மல்ட்டிஜெட் இன்ஜினைவிட எடை குறைவாக இருக்கும். ஏற்கெனவே தனது முதல் தயாரிப்பான 2 சிலிண்டர் டீசல் இன்ஜின் தயாரிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களை வைத்து, இந்த 4  சிலிண்டர் இன்ஜினைத் தயாரித்திருக்கிறது மாருதி சுஸூகி. காரணம், செலெரியோ டீசல் இன்ஜினின் அலறல் சத்தம், செலெரியோ டீசல் வைத்திருப்பவர்களைக் கேட்டால் தெரியும். இதில் அந்த மாதிரி இல்லாமல், ரிஃபைன்மென்ட்டில் பக்காவாகக் கலக்கும் என்கிறது மாருதி சுஸூகி.

நிஜம்தான். இந்த E15A இன்ஜின்கொண்ட சியாஸை ஸ்டார்ட் செய்தபோது, NVH என்றுசொல்லப்படும் சத்தம், அதிர்வுகள் மற்றும் இன்ஜின்கடுமை அளவுகளில் நன்றாகவே கட்டுப்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஐடிலிங்கில் அதிர்வுகள் தெரியவில்லை. பெட்ரோல் இன்ஜின்போல ஸ்மூத்தாக இருந்தது. சொல்ல முடியாது - அநேகமாக இந்த இன்ஜின்தான் `பெஸ்ட் இன் க்ளாஸ்’ ஆக இருக்கலாம். ரெவ் செய்ய ஆரம்பித்த பிறகுதான் டீசல் இன்ஜின் என்பது தெரிந்தது. ஆனாலும் சத்த அளவுகள் அடக்கமாகவே இருந்தன. சொல்லப்போனால், வெளிச்சாலைச் சத்தம் இன்ஜின் சத்தத்தை காருக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால், சியாஸ் காரின் சவுண்ட் இன்சுலேஷன் மிகவும் சுமார்.

புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!
புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!

ஃபியட் இன்ஜினைவிட சூப்பரா?

சியாஸை ஓட்டிவிட்டு வந்த பிறகும் ஆச்சர்யம் அடங்கவில்லை. இன்ஜின் ரிஃபைன்மென்ட்டுக்கு ஹோண்டாதான் எப்போதும் பெஸ்ட். சமயங்களில் ஹோண்டா இன்ஜின்கள்கூட அதிர வைக்கின்றன. ஹோண்டாவால் முடியாததைக்கூட மாருதி சுஸூகி எப்படி நிகழ்த்திக் காட்டியது? இதில் இரண்டு ரகசியங்கள் அடங்கியுள்ளன. 1) டூயல் மாஸ் ஃப்ளைவீல். 2) குறைந்த கம்ப்ரஷன் ரேஷியோ.

ஓகே. இப்போது பவருக்கு வரலாம். இந்த செக்மென்ட்டில் இதுதான் குறைந்த பவர்கொண்ட டீசல் இன்ஜின். வெறும் 95bhp பவர்தான். டார்க் 22.5kgm. இது அதிகம் இல்லை; ஆனால், இந்த டீசல் செக்மென்ட்டிலேயே எடை குறைவான (1,125 கிலோ) சியாஸை இழுக்க, இந்த டார்க் போதுமானது.

பவர் டெலிவரியும் பெர்ஃபாமென்ஸும் 1.3 ஃபியட் இன்ஜினைவிட அட்டகாசம். நிச்சயம் மாருதி ப்ரியர்களை இது இம்ப்ரஸ் செய்யும். ஆனால், ஃபியட் இன்ஜினில் மிட் ரேஞ்சில் ஒரு பன்ச் இருக்குமே... அது இதில் கிடைக்காது. காரணம், பவர் டெலிவரி இதில் லீனியராக இருப்பதுதான். ஆச்சர்யம் - இதன் டாப் எண்டு செம ஸ்ட்ராங். மல்ட்டிஜெட்டைவிட ஃப்ரீயாக ரெவ்வும் ஆனது. பெரும்பாலான 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களைக் கவனித்தீர்கள் என்றால், 4,000 rpm-க்குமேல் முக்கு முக்கென முக்கும். இந்த E15A இன்ஜின், ரொம்பவே சுலபமாக 5,000 rpm-மைத் தாண்டிச் சிரிக்கிறது. டாப் ஸ்பீடில் rpm மீட்டரைக் கவனித்தேன். 5,200-ல் முள் துடித்துக்கொண்டிருந்தது.

டாப் எண்ட் சரி... சிட்டிக்குள் எப்படி?


உங்கள் கவலை புரிகிறது. சிட்டிக்குள் ஓட்ட இந்த E15A இன்ஜின் எப்படி இருக்கும் என்பதுதானே? அதேதான்... அந்த டர்போ லேக் இதிலும் தெரிந்தது. ஆனால், ஃபியட் இன்ஜின்கொண்ட சியாஸ் அளவுக்குப் படுத்தி எடுக்கவில்லை. லோ ரெவ்களில் கொஞ்சம் திணறத்தான் செய்தது.

1,500 rpm-க்குக் கீழே இன்ஜின் `சங்கி மங்கி’ மாதிரி தூங்கி வழிகிறது. 2,000-க்கு மேல்தான் விழிக்கிறது E15A.

இதற்கு கியர்களுக்கு இடையேயான ரேஷியோ அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம். அதாவது, இந்த 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் 2-வது கியருக்கும் 3-வது கியருக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். கியர் ரேஷியோவை மாருதி சுஸூகி கொஞ்சம் குறைத்து செட் செய்திருந்தால், சிட்டிக்குள் ஓட்ட அலாதியாக இருந்திருக்கும். ஆனால், தனக்குப் பெயர் வாங்கிக்கொடுக்கும் எக்கானமி விஷயத்தில் அடிவாங்கிவிடும் என்பதால், மாருதி இதைச் செய்யவில்லை. ஆவரேஜாக 26.8 கி.மீ (ARAI) மைலேஜ் கிடைக்கும் என்கிறது மாருதி சுஸூகி.

புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!

இந்த 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், சுஸூகியின் பாகங்களில் இருந்து வந்திருக்கிறது. பயன்படுத்த எளிதாக இருக்கிறது. அட, கிளட்ச்சும் லைட் வெயிட். இனிவரும் மாருதி சுஸூகி கார்களில் இந்த 1.5 இன்ஜினும் இதே  6 ஸ்பீடு கியர்பாக்ஸும் பார்ட்னர்ஷிப்பும் இருக்கலாம். இனி இன்ஜின்போலவே கியர்பாக்ஸிலும்  தனது சொந்தக் காலிலேயே நிற்கும் மாருதி.

ஓகே! சியாஸுக்கு வருவோம்... இன்ஜின்-கியர்பாக்ஸ் தவிர்த்து அதே அழகான டிசைன்... அதே இடவசதிகொண்ட கேபின்... அதிக வசதிகள்... சிறப்பான ஓட்டுதல் தரம்... எல்லாமே அதே!

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா வாங்கக் காத்திருப்பவர்கள், புது சியாஸையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம்!

- தொகுப்பு:  தமிழ்