கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஹோண்டா சிவிக் கார் வைத்திருக்கிறேன். தற்போது அதில் LPG கிட் பொருத்தத் திட்டமிட்டுள்ளேன். அதன் சாதக-பாதகங்கள் என்னென்ன என்பதைத் தெரிவிக்கவும்.
- டி. புருஷோத்தமன். இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது Lovato - MG Auto Gas - Innovative போன்ற அரசுச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் பரிந்துரைக்கப்பட்ட LPG கிட்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை காரின் பூட் ஸ்பேஸில் வைக்க வேண்டியிருக்கும் என்பதால், அந்த இடம் பயனற்றுப் போகலாம். மேலும் காரின் பின்பகுதியில் LPG சிலிண்டரின் எடை ஏறுவதால், பின்பக்க சஸ்பென்ஷன் - டயர்கள் - பிரேக்ஸ் போன்றவற்றின் தேய்மானம், சில சந்தர்ப்பங்களில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கலாம். தவிர பெட்ரோலைவிட LPG-யின் மைலேஜ் குறைவாக இருந்தாலும், இதன் ரன்னிங் காஸ்ட் குறைவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால், பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, LPG-யில் இயங்கும்போது இன்ஜினின் பெர்ஃபாமென்ஸும் குறைவாகவே இருக்கும். எனவே நீங்கள் ஃபுல் லோடில் காரை இயக்குபவர் என்றால், இது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. LPG கிட் பராமரிப்பு குறித்து பெரிதும் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், காரின் ரீ-சேல் மதிப்பு இதனால் குறைந்துவிடும்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் கார்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் 100-120 கி.மீ. இது கடந்த ஆண்டில்தான் திருத்தி அமைக்கப்பட்டது என்றாலும், பெரும்பாலான கார்கள் இதைத் தாண்டி ஓடுவது நிதர்சனம். சாலையில் நிகழக்கூடிய விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இதுவே முக்கியக் காரணம். பள்ளி/கல்லூரி வாகனங்கள் மற்றும் டாக்ஸி களுக்கு உள்ளதுபோல, அனைத்து கார்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தினால் என்ன? ஏதாவது சட்டச்சிக்கல்கள் உண்டா? 
- ஜெய்கணேஷ், கொச்சி.


வரும் ஜூன் 2019 முதலாக, புதிய கார்களில் ஸ்பீடு வார்னிங்/ஸ்பீடு அலர்ட் சிஸ்டத்தைக் கட்டாயமாக் கியுள்ளது சாலைப் போக்குவரத்து அமைச்சகம். அதன்படி 80 கிமீ வேகத்தை கார் எட்டிய பிறகு, இரு நிமிடத்துக்கு ஒரு சுழற்சியில் இது ஒலித்து டிரைவரை எச்சரிக்கும். 120 கிமீ வேகத்தைத் தாண்டியவுடன், இது இரண்டு விநாடிக்கு ஒரு சுழற்சி என்ற ரீதியில் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கும். எனவே, அந்த இரைச்சலைத் தவிர்க்கும்பொருட்டு, காரின் டிரைவர் வேகத்தைக் குறைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார். இது சிறிய விஷயமாக இருப்பினும், கார்களைப் பாதுகாப்பாக இயக்குவதில் மத்திய அரசின் சார்பில் இதுவும் ஒரு முயற்சியே! லக்ஸூரி கார்களில் 250 கிமீ என்றளவில் வேகக்கட்டுப்பாடு உள்ளது.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

கடந்த நான்கு ஆண்டுகளாக, ஹோண்டா டியோ ஸ்கூட்டரைப் பயன்படுத்தி வருகிறேன். இதைக்  கையாளும்போது தோள்பட்டை மற்றும் முதுகில் வலி இருப்பதுபோன்ற உணர்வு உள்ளது. இது எனது ஸ்கூட்டரில் மட்டுமே இருக்கும் பிரச்னையா அல்லது பொதுவானதா என்பதை விளக்கவும்! 
- பிரான்சிஸ் மேனுவல், இமெயில்.

நீங்கள் வைத்திருக்கும் டியோ முதல் தற்போது விற்பனை செய்யப்படும் லேட்டஸ்ட் டியோ வரை அனைத்திலுமே இருப்பது, இறுக்கமான செட்-அப்பைக்கொண்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷன். எனவே ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கக்கூடிய ஜூபிட்டர்/ரே போன்ற டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன்கொண்ட ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, டியோவின் ஓட்டுதல் அனுபவம் சுமாராகவே இருக்கும். ஆனால் உங்கள் வண்டியின் பியரிங்குகள் - டயரின் காற்றழுத்தம் ஆகியவற்றை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள்..

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

கடந்த சில நாள்களாக Engine Decarbonizing பற்றிய விளம்பரங்களை, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பார்கிறேன். அதைச் செய்தால் கார் நன்றாக இருக்குமா? 
- ராஜா, இமெயில்.


இன்ஜின் Decarbonizing என்றால், இன்ஜினுக்குள்ளே (இன்ஜின் ஹெட் & சிலிண்டர்) கார்பன் Deposit-களை நீக்குவது. இதனால் அதிக கி.மீ ஓடிய இன்ஜின்கள் ஸ்மூத்தாக இயங்கும் என்பதுடன், அதன் பெர்ஃபாமென்ஸ் - மைலேஜ் - மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் முன்பைவிடச் சிறிய முன்னேற்றம் தெரியும். ஆனால் இதற்கான தொகை கொஞ்சம் அதிகம் என்பதுடன், அனுபவம் வாய்ந்த மெக்கானிக் குகளிடம் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். இந்தியாவில் இது குறித்து அவ்வளவு விழிப்புஉணர்வு இல்லையென்றாலும், உலகளவில் இது ஏற்கெனவே பயன்பாட்டில் இருப்பது தான். பெட்ரோல் பங்க்குகளில் கிடைக்கும் ப்ரீமியம் பெட்ரோல்/டீசல், இதற்கான மாற்றாக இருக்கும்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

1980-1990 ஆண்டைச் சேர்ந்த டீசல் புல்லட்டை, யூஸ்டு மார்க்கெட்டில் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?
- குணசேகர், இமெயில்.


நீங்கள் குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த வாகனங்கள் அனைத்துமே, RTO-வில் இரண்டாவது முறையாக ஃபிட்னெஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும். தவிர, தமது வாழ்நாளில் பல ஓனர்களை டீசல் புல்லட் சந்தித்திருக்கும் என்பது உறுதி. எனவே அந்த பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக் பாகங்கள் ஆகியவை, ஓரளவாவது சிறப்பான கண்டிஷன் - பக்காவான ஆவணங்கள் ஆகியவற்றுடன் இருக்கின்றனவா என்பதை செக் செய்யவும். தற்போதைய புல்லட் பைக்குகளைவிட இதன் உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகம் என்பதுடன், அனைத்து மெக்கானிக்கு களாலும் இந்த பைக்கை சரிசெய்ய இயலாது. ஆக உங்கள் பகுதியில் டீசல் புல்லட்டுக்கான மெக்கானிக்கைக் கண்டறிந்து  விட்டு பைக்கை வாங்கவும்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

யூஸ்டு கார் மார்க்கெட்டில், டால் பாய் டிசைனைக் கொண்ட ஆட்டோமேட்டிக் காரை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். நானோ அல்லது ரெடி-கோ ஆகிய இரண்டில் ஒன்றை வாங்க விரும்புகிறேன். எனது பட்ஜெட்டில் கிடைப்பதால், நானோ எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனது முடிவு சரியா? வேறு ஏதேனும் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா? 
- சக்தி, இமெயில்.


உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மாருதி சுஸூகி வேகன்-R நல்ல சாய்ஸாக இருக்கும். ஆனால் இதற்கு நீங்கள் பட்ஜெட்டைக் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட டாடா நானோ சிறப்பான காராக இருப்பினும், இது விற்பனையில் சாதிக்கவில்லை. மேலும் இதன் உற்பத்தி விரைவில் நிறுத்தப்பட உள்ளதால், இதன் ரீசேல் மதிப்பு நாளடைவில் சரிவதற்கான சாத்தியங்கள் இருப்பதுடன், உதிரிபாகங்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். இதனுடன் ஒப்பிட்டால், டட்ஸன் ரெடி-கோ விலைக்கேற்ற கார். நானோவைவிட பெரிய இன்ஜின் மற்றும் கேபின் என்பதால், இடவசதி மற்றும் பெர்ஃபாமென்ஸும் அதைவிட பெட்டராகவே இருக்கும். ஆனால் இதன் கட்டுமானத்தரம் மற்றும் ஓட்டுதல் அனுபவம் அனைவருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. இதனாலேயே ஆல்ட்டோவைவிட பிராக்டிக்கலான காராக இருப்பினும், இது இந்திய கார் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com