கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?
பிரீமியம் ஸ்டோரி
News
நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

போட்டி: எக்கோஸ்போர்ட் VS விட்டாரா பிரெஸ்ஸா VS நெக்ஸான் VS XUV300

ஹிந்திரா என்றாலே எஸ்யூவி; எஸ்யூவி என்றாலே மஹிந்திராதான். ஆம்! மஹிந்திராவில் வெரிட்டோவைத் தவிர எதுவுமே செடான் இல்லை. எல்லாமே எம்பிவிகளும் எஸ்யூவிக்களும்தான். சமீப காலமாக 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட் பக்கம் மஹிந்திரா திரும்பியிருக்கிறது.

குவான்ட்டோ(அதுதான் நுவோஸ்போர்ட்டாக மாறிவிட்டது), TUV300, KUV100கூட எஸ்யூவிதான் என்கிறது மஹிந்திரா. இவையெல்லாம் விற்பனையில் பெரிதாகச் சோபிக்கவில்லை. காரணம், முழுமையான எஸ்யூவிகளாக இவை இல்லை என்பதுதான். ‘அந்தக் குறையை இதில் சரிக்கட்டிவிட்டோம்’ என்று தனது XUV300 காரை உயர்த்திப் பிடிக்கிறது மஹிந்திரா. டிவோலி ப்ளாட்ஃபார்மில் ஆரம்பித்து, மராத்ஸோவின் ட்யூன் செய்யப்பட்ட டீசல் இன்ஜின், ஆல் வீல் டிஸ்க், 7 காற்றுப் பைகள், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டீயரிங்குக்குக்கூட மோடுகள் என பக்காவாக வந்து இறங்கியிருக்கிறது XUV300. அப்படியென்றால் மார்க்கெட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் மற்ற காம்பேக்ட் எஸ்யூவிகள், கொஞ்சம் கலங்கத்தானே செய்யும்?

ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் - இந்த மூன்றும் அலெர்ட் ஆக வேண்டிய நேரம் இது. டாடா, மாருதி சுஸூகி, ஃபோர்டு, மஹிந்திரா என நான்கு லெஜெண்ட்களுக்குள் நடக்கும் இந்தப் போட்டி, ஐபிஎல்-லைவிட சுவாரஸ்யம்.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

யார் ஸ்டைல்?

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸாவின் டிசைன் பார்த்துப் போர் அடித்துவிட்டது. எங்காவது நெடுஞ்சாலைகளில் 3 இலக்கங்களுக்கு மேல் பறந்தால்கூட, ‘பிரெஸ்ஸாதானே’ என்று எளிதாகக் கடந்து போய்விட முடிகிறது. இதில் நெக்ஸான் அப்படியில்லை. கறுப்பு நிற லிமிடெட் எடிஷனெல்லாம் கொண்டுவந்து கலக்குகிறார்கள். நாம் இங்கே ஓட்டியது, நீல வண்ண டாப் மாடல்தான். கூபே வடிவ டிசைனும், உயரமான தோற்றமும் நெக்ஸானை ஒரு க்ராஸ்ஓவர் போல் காட்டினாலும், இது ஒரு பக்கா எஸ்யூவி. சிரிப்பதுபோன்ற கிரில் கொண்ட நெக்ஸானுக்கு ஒரு ஸ்மைலி லைக்.

இதில் கொஞ்சம் கோபக்கார இளைஞனாக இருப்பது எக்கோஸ்போர்ட்தான். அதிலும் ‘S’ டாப் வேரியன்ட்டில் கிரில், அலாய் வீல், பம்பர், ரூஃப் ரெயில் ஆகியவை கறுப்பு வண்ணத்தில் இன்னும் கொஞ்சம் கெத்து. அறுங்கோண வடிவில் அலாய் வீல்கள்... வித்தியாசமான டிசைன். இந்த நான்கில் ஸ்டெப்னி வீல், டெயில்கேட்டில் இருப்பது எக்கோஸ்போர்ட்டில்தான். இந்த ஒரு காரணமே எக்கோஸ்போர்ட்டை, எஸ்யூவி என்று ஒப்புக்கொள்ள வைக்கிறது.

அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கிறது XUV3OO-யின் டிசைன். பார்க்க ஃப்ரெஷ்ஷான டிசைன் என்பதாலோ என்னவோ, பார்த்தவுடன் இம்ப்ரஸ் செய்கிறது. சிறுத்தையை இன்ஸ்பிரேஷனாக வைத்து XUV3OO-யை டிசைன் செய்ததாகச் சொல்கிறது மஹிந்திரா. அது நிஜம்தான்; கிரில்லை உற்றுப் பார்த்தால், சிறுத்தையின் உடல்வரிகளைப் போன்றுதான் இருக்கிறது. டாடாவிலும் மாருதியிலும் 16 இன்ச் வீல்கள் இருக்க, XUV3OO-யிலும் எக்கோஸ்போர்ட்டிலும் 17 இன்ச் வீல்கள் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் என்பது சூப்பர். கொஞ்சம் போல்டான பியூட்டியில் ஜொலிக்கிறது XUV3OO.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?
நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

மிஸ்டர் க்ளீன் இன்டீரியர் எதில்?

இன்டீரியரைப் பொறுத்தவரை இதுவரை எக்கோஸ்போர்ட்தான் ஆம்பியன்ட் லைட்டிங்கில் கலக்கி வந்தது. XUV3OO அதை நெருங்கிவிட்டது. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களைக் கவனியுங்கள். சும்மா ‘பளிச்’ என மின்னுகிறது. இதில் டயர் டைரக்ஷன் இண்டிகேட்டர், டயர் பிரஷர் மானிட்டர் எல்லாம் உண்டு. ஸ்மார்ட் வாட்ச் வசதிக்குப் பெரிய லைக். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மோடுகள் என்று வேற லெவலுக்குப் போய்விட்டது மஹிந்திரா. டூயல் ஸோன் ஏ.சி அருமை. கேபினின் பல இடங்களில் டிவோலி வாசம். முக்கியமாக HVAC கன்ட்ரோல். ஆனால் இது அவுட்டேட்டட் ஆகிவிட்டதே?

2017 ஃபேஸ்லிஃப்ட்டுக்குப் பிறகு தோற்றப் பொலிவுடன் இருக்கிறது எக்கோஸ்போர்ட். அங்காங்கே ஆரஞ்ச் நிற வேலைப்பாடுகள், ஸ்போர்ட்டி லுக். இந்த நான்கில் இதில்தான் பெரிய டச் ஸ்க்ரீன். 8 இன்ச் டச் ஸ்க்ரீன், டேஷ்போர்டில் இருந்து துருத்திக் கொண்டிருப்பது அருமை + வசதி. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களின் TFT ஸ்க்ரீனும் சூப்பர் லுக். ஃபோர்டின் கதவைத் திறந்து  நுழைந்தால், ஒரு பெரிய ப்ரீமியம் காருக்குள் என்ட்ரி கொடுப்பதுபோல் இருக்கிறது.

நெக்ஸானின் இன்டீரியர் டிசைன் அருமை. பார்த்தவுடனேயே இம்ப்ரஸ் செய்கிறது. டேஷ்போர்டுக்குக் கீழே பதவிசாகப் பரவும் அந்த கிரே கலர் டிசைன், மேலே ஏ.சி கன்ட்ரோல் - கீழே ஸ்விட்ச் கியர் என்று சென்டர் கன்சோலை அழகாகப் பிரிக்கிறது. ஃபோர்டு மாதிரியே டச் ஸ்க்ரீன் துருத்திக் கொண்டிருப்பது சூப்பர். ஆனால், இந்த நான்கில் நெக்ஸானில்தான் சின்ன டச் ஸ்க்ரீன் (6.5 இன்ச்). கேபினில் சில எர்கானமிக்ஸ் குறைபாடுகள் தென்பட்டன. முக்கியமாக ஏ.சி கன்ட்ரோல்களுக்கான விவரங்கள், டச் ஸ்க்ரீனில் ஒரு மூலையில் சின்னதாகத் தெரிகின்றன. ஸ்டோரேஜ் பாக்ஸ், ரொம்ப ஆழமாகவும் குறுகலாகவும் இருப்பதால், அதனைக் கார் ஓட்டும்போது பயன்படுத்த முடியவில்லை.

இங்கிருப்பதில் பழைய கார் விட்டாரா பிரெஸ்ஸா. வெளியே மட்டுமில்லை; உள்ளேயும் கொஞ்சம் டல் அடிக்கிறது. அதே சிங்கிள் டோன் கறுப்பு நிற டேஷ்போர்டு, அதே உள்ளடங்கிய டச் ஸ்க்ரீன் என்று செம போர். ஸ்விட்ச்கள் மற்ற மாருதி சுஸூகி கார்களில் இருப்பவைதான். சில விலை மலிவான பிளாஸ்டிக்குகளை இவர்கள் மாற்றவே மாட்டார்கள் போல! விட்டாரா பிரெஸ்ஸாவின் இந்த ஓல்டு டிசைன் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இன்டீரியருக்கான ஆக்சஸரீஸ்களை உங்களுக்குப் பிடித்தவாறு கலர்ஃபுல்லாக கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?
நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

வசதிகளில் தாராள பிரபு யார்?

இங்கே XUV-யிலும் எக்கோஸ்போர்ட்டிலும் மட்டும் லெதர் வேலைப்பாடுகள்கொண்ட சீட்கள். நெக்ஸானிலும் பிரெஸ்ஸாவிலும் இது மிஸ்ஸிங்! அடுத்து சன் ரூஃப்! அதிலும் ஃபோர்டுக்கும் மஹிந்திராவுக்கும்தான் ஓட்டு விழுகிறது. மாருதி சுஸூகியும் டாடாவும் இன்னும் தாராளம் காட்ட வேண்டும். எல்லாவற்றிலும் இருக்கும் ஒரே பொதுவான அம்சம் - ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ரியர்வியூ கேமரா மட்டும்தான். மற்றபடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தில் சறுக்குகிறது/ஏறுகிறது.

இங்கே பின் பக்கம் ஏ.சி வென்ட் மற்றும் இன்ஜினுக்கான டிரைவிங் மோடுகள் இருப்பது நெக்ஸானில் மட்டும்தான். ஆனால் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஆட்டோ வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இல்லாத ஒரே காரும் நெக்ஸான்தான்.

அதேபோல எக்கோஸ்போர்ட்டிலும் நெக்ஸானிலும் ஜிபிஎஸ் இல்லை; பிரெஸ்ஸாவிலும் நெக்ஸானிலும் 2 காற்றுப் பைகள் மட்டும்தான். ஃபோர்டில் 6. ஒரு குறிப்பிட்ட வசதியைக் காட்டி, இதில் கலக்குவது மாருதி சுஸூகி மட்டும்தான் என, விட்டாரா பிரெஸ்ஸாவை எதிலுமே குறிப்பிட முடியவில்லை. வசதிகளில் இன்னும் தாராளம் காட்ட வேண்டும் மாருதி சுஸூகியாரே!

XUV3OO, வசதிகளில் வள்ளலாகச் சிரிக்கிறது. இந்த 4 மீட்டர் காரில் மட்டும்தான் 7 காற்றுப் பைகள், எல்லா வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், முன்பக்க பார்க்கிங் சென்ஸார், ஸ்டீயரிங் வீலுக்கான மோடுகள், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் (இடது/வலது என இரு பக்கப் பயணிகளுக்கும் சூடு/குளிர் என்று காற்றைப் பிரித்துத் தரும் வசதி), ஹீட்டட் மிரர்ஸ் என... அடடா! இதில் பல விஷயங்கள் செக்மென்ட் ஃபர்ஸ்ட் வேறு! வெல்டன் மஹிந்திரா!

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?
நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

நீயா நானா? சொகுசில் எது வின்னர்?

நான்கு எஸ்யூவிகளிலுமே நல்ல டிரைவிங் பொசிஷன். நான்கு கார்களிலுமே பின்பக்கம் ஆர்ம்ரெஸ்ட் இருக்கின்றன. விட்டாரா பிரெஸ்ஸாவின் சீட்கள் பெரிதாகவும், ஓகே எனும் அளவுக்கான குஷனிங்கையும் கொண்டிருக்கின்றன. மற்றவற்றை ஒப்பிடும்போது கொஞ்சம் தட்டையாகவும், சப்போர்ட் குறைவாகவும் இருப்பதுபோலத் தெரிகிறது. டிரைவர் சீட் ஓகே! வெளிச்சாலை நன்றாகவே தெரிகிறது. ‘ஏ’ பில்லர்கள் சாலையை மறைக்கவில்லை. பின் சீட்களும் குஷனிங்கில் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கின்றன. ஆனால் இங்கே மூன்று பேர் தாராளமாக உட்காரலாம். ஹெட்ரூம்/லெக் ரூம் ஓகே! தொடைகளுக்கான சப்போர்ட் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பிரெஸ்ஸாவின் பூட் ஸ்பேஸ் - 328 லிட்டர். லோடு ஏற்றி இறக்க வசதியாகவே இருக்கிறது.

நெக்ஸான் ஒரு எஸ்யூவிதான். என்றாலும் டிரைவர் சீட்டில் அமர்ந்தால், கார் ஓட்டுவதுபோன்ற ஃபீல்தான் கிடைத்தது. அதாவது சீட் கொஞ்சம் தாழ்வாக இருக்கிறது. நெக்ஸானில் ஒரு குறை - பின் பக்க விஸிபிலிட்டி. கூபே டிசைன்... அதாவது சாய்வான பின்பக்கக் கூரை என்பதாலோ என்னவோ, பின்னாலே அமர்ந்திருப்பவர்களுக்கு வெளியே நடப்பது பாதிதான் தெரிகிறது. ஆனால் ஆச்சர்யம் - இந்த கூபே டிசைன் ஹெட்ரூமை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஐந்தரை அடி உள்ளவர்களுக்குக்கூட, கூரை தலையில் இடிக்காது. லெக்ரூமும் சூப்பர். வேறு எந்த கார்களிலும் இல்லாத வசதியான பின்பக்க ஏ.சி வென்ட்டுக்காகவே நெக்ஸானை புக் செய்யலாம். பூட் ஸ்பேஸும் 350 லிட்டர்.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

எக்கோஸ்போர்ட், கொஞ்சம் உறுதியான கார். அதனால் பில்லர்கள் கட்டுறுதியானவை. ஆனால் இதுவே இங்கே பிளைண்ட் ஸ்பாட் ஏற்படக் காரணமாகிறது. ஸ்டீயரிங்கைப் பிடித்தாலே, ஸ்போர்ட்டி ஃபீல் கிடைக்கிறது. பெரிய டிரைவர் சீட், சொகுசாகவும் நல்ல குஷனிங்குடனும் இருக்கிறது. ஆனால் காருக்கு வெளியே, பானெட் எங்கே முடிகிறது எனத் தெரியவில்லை. புதிதாக கார் ஓட்டுபவர்கள் கவனம். எக்கோஸ்போர்ட்டின் பின்பக்க சீட்டில், மற்ற கார்களைவிட இடவசதி கொஞ்சம் சுமார்தான். இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் பழைய எக்கோஸ்போர்ட்டைவிட இதில் பின் சீட்   சொகுசாக இருக்கிறது. இந்த நான்கில் ஃபோர்டின் பூட் ஸ்பேஸ்தான் அதிகம். ஆனால் இந்த 352 லிட்டர் பூட், கொஞ்சம் உயரமாகவும் ஆழமாகவும் இருப்பதால், பொருட்களை ஏற்றி இறக்கத் தனியாக அசிஸ்டென்ட் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மற்ற கார்களைப்போல, இதன் டிக்கி கதவு மேல்நோக்கித் திறக்காமல், பக்கவாட்டில் திறப்பதுபோல இருப்பது (இதில் ஸ்டெஃப்னியின் எடை வேறு) நிறைய பேருக்கு இது பிடிக்குமா எனத் தெரியவில்லை.

XUV3OO-ன் டிரைவிங் சீட், நல்ல குஷனிங். நல்ல சொகுசு. எஸ்யூவி ஓட்டுவதுபோன்ற ஃபீல் கிடைக்கிறது. வெளிச்சாலை நன்றாகவே தெரிகிறது. பில்லர்களால் பிளைண்ட் ஸ்பாட் பிரச்னை ஏற்படவில்லை. மற்ற கார்களை ஒப்பிடும்போது, ஹெட்ரூம் ரொம்ப சுமார்தான். ஆனால் லெக்ரூம் தாராளமாக இருந்தது. இங்கே நடுப்பக்கப் பயணிக்குக்கூட அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. இது போக 3 பாயின்ட் சீட் பெல்ட்டும் எக்ஸ்ட்ரா போனஸ். சீட்கள் கொஞ்சம் தாழ்வாகவே இருப்பதால், முன்னால் என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பே இல்லை. எனவே விறைப்பாகத்தான் உட்கார்ந்து வர வேண்டியிருக்கிறது. அதுபோல பூட் ஸ்பேஸ் விஷயத்தில் மஹிந்திராவுக்கு என்னாச்சு? வெறும் 257 லிட்டர்தான். 341 லிட்டர் கொண்ட குட்டி ஹேட்ச்பேக்குகளெல்லாம் மார்க்கெட்டில் திரிந்து கொண்டிருக் கின்றனவே? ஏகப்பட்ட வசதிகளைக் கொட்டிக் கொடுத்த மஹிந்திரா, ரியர் ஏ.சி வென்ட்டிலும் பூட் ஸ்பேஸிலும் கொஞ்சம் கரிசனம் காட்டியிருந்தால், XUV3OO இன்னும் முழுமையடைந்திருக்கும்.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

வேகமும் விவேகமும்!

விட்டாரா பிரெஸ்ஸாவின் இன்ஜின் பற்றிக் குழந்தைகளுக்குக்கூடத் தெரியும். ஃபியட்டின் 1.3 லிட்டர்  மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின். இங்கிருப்பதிலேயே இதுதான் பழசு. பழசானாலும் இதற்கு மவுசு குறையவில்லை. காரை ஓட்ட ஓட்ட ஜாலி குறையாமல் இது பார்த்துக் கொள்கிறது. (ஒரு ஸ்கூப் நியூஸ்: புதிய 1.5 லிட்டர் இன்ஜினை எர்டிகாவுக்கும் எஸ்-க்ராஸுக்கும் பொருத்த இருக்கிறது மாருதி சுஸூகி. சியாஸில் ஏற்கெனவே வந்துவிட்ட நிலையில், இது அப்படியே விட்டாரா பிரெஸ்ஸாவுக்கும் இடம் பெயரலாம்) இந்த காரில் வெறும் 90 bhpதான். ஆனால் அண்டர்பவர் என்று சொல்ல முடியவில்லை. 0-100 கி.மீ-யை 12.96 விநாடிகளில் எட்டிவிடுகிறது விட்டாரா பிரெஸ்ஸா. ஒருவேளை காரின் லைட் வெயிட் (1,195 கிலோ) காரணமாக இருக்கலாம். 2,000 ஆர்பிஎம்-க்குப் பிறகு மிட்ரேஞ்சில் ஃபியட் இன்ஜின், தான் யாரென்பதை நிரூபிக்கிறது. 2000-த்தில் அப்படியே ஓட்டினாலும் சரி; அல்லது இதைத் தாண்டினாலும் சரி - செம ஜாலியாக இருக்கும். ஆனால் 2,000-க்குக் கீழே இறங்கினால், டர்போ லேக் படுத்தி எடுத்துவிடும். சிட்டிக்குள் பயன்படுத்த கிளட்ச்சும் கியரும் கொஞ்சம் எடை அதிகமாக இருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால் ஹைவேஸில், அதாவது டாப் எண்டில் பட்டையைக் கிளப்புகிறது விட்டாரா பிரெஸ்ஸா.

நெக்ஸானிலும் கொஞ்சம் டர்போ லேக் தெரிகிறது. ஆனால் இது விட்டாரா பிரெஸ்ஸா அளவுக்கு டார்ச்சர் செய்யவில்லை. சொல்லப் போனால், இதை டர்போ லேக் என்று கூடச் சொல்ல முடியாதுதான். பவர் டெலிவரி ஜெர்க்கியாக இருப்பதால்தான் இந்தப் பிரச்னை. இதன் 1.5 லிட்டர் இன்ஜின், 110 bhp பவரையும் 26 kgm டார்க்கையும் தாரை வார்க்கிறது. சிட்டிக்குள் கால்வாசி பவர்கூடக் கிடைக்காதுபோலத் தெரிகிறது. 0-100 கி.மீ போட்டியில் நெக்ஸான் லூஸர்தான். 13.68 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. ஆனால், மிட்ரேஞ்ச் தாண்டினால் இது செம பவர்ஃபுல் இன்ஜின்.ஹைவேஸில் 160 கி.மீ வரை கூட நெக்ஸானைப் பறக்கவிடலாம். கிளட்ச்சும் கியர்பாக்ஸும் இன்னும் கொஞ்சம் லைட்டாக இருந்திருக்கலாம்.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

இந்த நான்கில் எக்கோஸ்போர்ட் தான் ஓட்டுவதற்கு செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது. முன்பெல்லாம் பெட்ரோலில்தான் கெத்து காட்டும் ஃபோர்டு. இப்போது டீசலில்கூட பெட்ரோல் அளவுக்கு ஃபன் டு டிரைவ் கிடைக்கிறது. இதன் 1.5 TDCI டீசல் இன்ஜினின் பவர் 100 bhpதான். டார்க்கும் 20.5 kgmதான். ஆனால் குறைந்த வேகங்களில் இது டார்க்கை வெளிப்படுத்தும் விதம் சூப்பர். அதாவது ஸ்பீடு பிரேக்கர்களில் வேகத்தைக் குறைத்தாலும், 3-வது கியரில்கூட ஏற்றி இறக்கி அப்படியே பறக்கலாம். 0-100 கி.மீ போட்டியில் இரண்டாவது இடம் எக்கோஸ்போர்ட்டுக்குத்தான். 12.74 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தைத் தொடுகிறது ஃபோர்டு எக்கோஸ்போர்ட்

சிறப்பம்சங்கள், தொழில்நுட்பத்துக்குப் பிறகு மஹிந்திரா ஜொலிக்கும் இன்னொரு விஷயம் - இன்ஜின். முதலில் ஒரு பெரிய கைத்தட்டல். 0-100 கி.மீ போட்டியில் வின்னர், XUV3OOதான் (11.85 விநாடிகளே!). மராத்ஸோவில் இருக்கும் 1.5 லிட்டர் இன்ஜினைச் சிறிய எஸ்யூவிக்கு ஏற்ப ட்யூன் செய்திருக்கிறது மஹிந்திரா. 117 bhp பவரும், 30 kgm டார்க்கும், இந்த 1,405 கிலோ காரை இழு இழுவென இழுத்துப் போகிறது. ஒரு விஷயம் - ஃபோர்டு அளவுக்கு செம பெப்பி என்று XUV3OO-யைச் சொல்ல முடியாது.  ஆனால் பவர் டெலிவரி அத்தனை லீனியராக இருக்கிறது இதன் 1.5 லி இன்ஜினில். டர்போ லேக்கை உணர முடிந்தாலும், அடுத்த சில விநாடிகளிலேயே இது காணாமல் போவது ஸ்பெஷல்.

டைனமிக் போட்டி!

இந்த நான்குமே மோனோகாக் சேஸி ப்ளாட்ஃபார்மில்தான் தயாராகி இருக்கின்றன. எல்லாமே ஃப்ரன்ட் வீல் டிரைவ் செட்-அப். அதனால் நான்கையும் எஸ்யூவி என்று சொல்லலாமே தவிர, ஆஃப்ரோடர் என்று சொல்ல முடியவில்லை.

டிரைவிங்கில் ஒரு ஃபன்னும், கார்னரிங்கில் ஒரு த்ரில்லும் கிடைக்க வேண்டுமென்றால், எக்கோஸ்போர்ட்தான் சரியான சாய்ஸ். பழசைவிட புதுசில் சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொஞ்சம் சாஃப்ட் ஆக்கியிருக்கிறார்கள். காரின் ஸ்டீயரிங்கிலும் வேலை பார்த்துள்ளது ஃபோர்டு. பாடி ரோல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. தரையில் இருந்து 200 மிமீ உயரம் வரை, எக்கோஸ்போர்ட் செமையாக இருக்கும் (கிரவுண்ட் கிளியரன்ஸ்). 17 இன்ச் வீல்கள் நல்ல ரோடு கிரிப்.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

நெக்ஸானின் ஓட்டுதலும் கையாளுமையும் அடடா ரகம்! ‘ஆஃப்ரோடர் என்று என்னை ஏன் சொல்லக்கூடாது’ எனக் கேட்கிறது நெக்ஸான். அட ஆமாம்.. 209 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்! நான்கில் இதுதான் அதிகம். சும்மா மேடு பள்ளங்களில் பூகுந்து விளையாடலாம். மோசமான ஏரியாக்களையும் அசால்ட்டாக உள்வாங்குகிறது இதன் சஸ்பென்ஷன். ஸ்டீயரிங் செம ஷார்ப். சட் சட் என வளைவுகளில் காரைத் திருப்ப முடிகிறது. ஆனால் இது ஃபோர்டு அளவுக்கு இல்லை. பாடி ரோல் இங்கேயும் நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ் என்றாலும், நெடுஞ்சாலைகளில் ஜிவ்வெனப் பறக்கிறது நெக்ஸான். நெக்ஸானைப்போலவே விட்டாரா பிரெஸ்ஸாவிலும் 16 இன்ச் வீல்களே உள்ளன. வளைவுகளில் பாடி ரோல் தெரிகிறது. ஆனால் மற்ற மாருதி சுஸூகி கார்களைப்போல இல்லை; ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸும் சூப்பர். இதனால் ஹேண்ட்லிங்கில் தப்பித்துவிடுகிறது பிரெஸ்ஸா. சில மோசமான பள்ளங்களில் இறங்கும்போது, கேபினுக்குள்ளே அதை உணர முடிகிறது. அதிவேகங்களில் பிரெஸ்ஸாவின் நிலைத்தன்மை ஓகே. சில திருப்பங்களில் பாடி ரோல் தவிர! XUV3OO-ல் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப், சிட்டிக்குள் ஓகே ரகம். ஷார்ப்பான ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறி இறங்கும்போது, கேபினுக்குள் செமையாகச் சத்தம் போடுகிறது XUV3OO. இவ்வளவு இருந்தும் XUV3OO-யைத்தான் டிரைவர்களின் கார் என்று சொல்லலாம். காரணம் ஸ்டீயரிங் மோடு. இந்த செக்மென்ட்டில் ஸ்டீயரிங்குக்கே மோடு கொடுத்தது மஹிந்திராவாகத்தான் இருக்கும். நான்கு மோடுகள் மூலம் ஸ்டிஃப், லைட், டைட் என்று வெரைட்டியாக ஸ்டீயரிங் செட்-அப்பை மாற்றிக் கொள்ளலாம். இதை உணரவும் முடிந்தது. சிட்டிக்குள் லைட் வெயிட்டும், ஹைவேஸில் டைட் செட்-அப்பும் வைத்துக்கொள்ளுங்கள். அற்புதமான டிரைவிங் அனுபவம் கிடைக்கும்.

நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?

ந்த நான்கில் விலை குறைவான கார், விட்டாரா பிரெஸ்ஸா. சர்வீஸ் நெட்வொர்க், பின்பக்க இடவசதி, நல்ல மைலேஜ், பூட் ஸ்பேஸ் என்று பிராக்டிக்கலான விஷயங்களில் பட்டையைக் கிளப்பும் காரும் இதுதான். ஆனால் வசதிகளில் கஞ்சத்தனமும், பார்த்துப் பார்த்து போர் அடித்துவிட்ட இன்டீரியரும், படுத்தி எடுக்கும் டர்போ லேக்கும் விட்டாரா பிரெஸ்ஸாவுக்குப் பின்னடைவு. அதனால்தான் இதன் பேஸ்லிஃப்ட்டை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

டாடா கார்கள் இப்போதெல்லாம் வேற லெவல். நெக்ஸானும் அப்படித்தான். கி.கிளியரன்ஸைப் பாருங்கள்... 209 மிமீ! பெரிய ஆஃப்ரோடருக்கு இணையான டைமென்ஷன் இது. ஹைவேஸிலும் சூப்பர். அந்த ரியர் ஏ.சி வென்ட் அருமை டாடா! ஓட்டுதல் தரமும் சூப்பர். ஆனால் இதன் ஹெவி க்ளட்ச்சும் கியர்பாக்ஸும் சிட்டிக்குள் காரை ஓட்ட ஃப்ரெண்ட்லியாக விடவில்லை. நெக்ஸானின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இன்னும் வளர வேண்டும். அதேநேரம் விட்டாரா பிரெஸ்ஸாவைவிட  இது முழுமையான கார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இது அறிவைத் தொடுகிறது. ஆனால், மனதைத் தொடவில்லை.

வெளியே முரட்டுத்தனம், உள்ளே ஸ்போர்ட்டி, ஓட்டுதலில் ஜாலி, டைனமிக்ஸில் ஷார்ப், இன்ஜினில் நல்ல ரிஃபைன்மென்ட், சிறப்பம்சங்களில் உச்சம் - இதெல்லாம் எக்கோஸ்போர்ட். ஆனால் இதை ஒரு நல்ல குடும்ப கார் என்று சொல்லத் தயக்கம் ஏற்படுகிறது. காரணம், இதன் பின்பக்க இடநெருக்கடி, வசதியில்லாத பூட் மற்றும் கதவு. விலையும் நெக்ஸான், விட்டாரா பிரெஸ்ஸாவைவிடச் சுமார் 2 லட்ச ரூபாய் அதிகம்.

குறைவான பூட் ஸ்பேஸ், கி.கிளியரன்ஸைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், XUV3OO-யில் பெரிதாகக் குறைகள் தென்படவில்லை. விலையும் எக்கோஸ்போர்ட்டை விட சுமார் 20,000 ரூபாய்தான் அதிகம். ஆனால், ‘செக்மென்ட் ஃபர்ஸ்ட்’ என்று சொல்லக்கூடிய ஏகப்பட்ட வசதிகள்... முக்கியமாக பாதுகாப்பில் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ESC, EBD, உறுதியான பெர்ஃபாமென்ஸ் என்று கொடுக்கும் விலைக்கு நம்மைத் திருப்திப்படுத்தும் XUV3OO, அறிவைத் தாண்டி மனசையும் தொடுகிறது.

- தொகுப்பு:  தமிழ்