கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

போட்டி: மாருதி சுஸூகி வேகன்-R VS ஹூண்டாய் சான்ட்ரோ VS டாடா டியாகோ

முதல் முறை கார் வாங்குபவர்களின் பட்டியலில் ஹேட்ச்பேக் கார்கள்தான் அதிகம் இருக்கும். எளிமையான டிசைன், பிராக்டிக்கலான வசதிகள், டிராஃபிக்கில் சிரமமில்லாத டிரைவிங், பராமரிப்பு குறைவான இன்ஜின், லாங் டிரைவ் செல்லும்போது நம்மைக் குதூகலப்படுத்த இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் என ஒரு பட்ஜெட் காருக்குப் பல தேவைகள் உண்டு. தற்போது சந்தையில் டாடா டியாகோவும், ஹூண்டாய் சான்ட்ரோவும் மக்களுக்குப் பிடித்த கார்களாக இருக்கின்றன. புதிதாகக் களமிறங்கியிருக்கும் மாருதி சுஸூகி வேகன்-R,  இந்த இரண்டு கார்களுக்கு இடையில் தனி இடத்தைப் பிடிக்குமா?!

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

ஓட்டுதல் தரம்

பழைய வேகன்-R காருடன் ஒப்பிடும் போது புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் K-சீரிஸ் இன்ஜின், காரின் கேரக்டரையே மாற்றுகிறது. 83bhp பவர் மற்றும் 11.3kgm டார்க் தரும் இந்த  4 சிலிண்டர் இன்ஜினில் வைப்ரேஷன் குறைவாகவே உள்ளது. கிளட்ச் லைட்டாக இருப்பதால், டிராஃபிக்கில் கியரை மாற்றி ஓட்டுவது சிரமமாக இல்லை. நெடுஞ்சாலையில் முரட்டுத்தனமாக பவரை அள்ளிக் கொடுக்கிறது இன்ஜின். பவர் லீனியராக இருப்பது ஒரு ப்ளஸ் என்றால், காரின் எடை மற்றுமொரு நன்மை. 100bhp/ton பவர் டு வெயிட் ரேஷியோ இருக்கும் வேகன்-R, 0-100 கி.மீ வேகத்தை 11.66 நொடியிலேயே தொட்டுவிடுகிறது. இது டியாகோவைவிட 1.68 விநாடியும், சான்ட்ரோவைவிட 3.64 விநாடியும் குறைவு. கார் வேகமெடுக்கும்போது இன்ஜின் சத்தம் கேபினில் அதிகமாகக் கேட்பதால், தொலைதூரப் பயணங்களில் பிரச்னையாக இருக்கிறது.

சாஃப்ட் சஸ்பென்ஷன் இருப்பதால், சிறிய குழிகளில் அவ்வளவாக அதிர்வுகள் தெரியவில்லை. இருந்தாலும் பெரிய பள்ளங்களில் கார் தரை தட்டுகிறது. நெடுஞ்சாலையில் ஸ்டெபிலிட்டி மற்ற இரண்டு கார்கள் அளவுக்குச் சிறப்பாக இல்லை. ஸ்டீயரிங் லைட்டாக இருப்பது டிராபிக்கில் காரை ஓட்டுவதை சுலபமாக்குகிறது. அதிகவேகங்களில் ஸ்டியரிங் ஃபீல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். டால் பாய் டிசைன் என்பதால், பாடிரோல் நன்றாகத் தெரிகிறது. பிரேக் நச்செனப் பிடித்தாலும், அதிக சென்சிட்டிவாக இருப்பதால் கொஞ்சம் பழக்கப்பட வேண்டியுள்ளது.

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

ஹூண்டாய் சான்ட்ரோவில் பழைய i10-ல் இருந்த அதே 1.1 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின்தான். 69bhp பவர் மற்றும் 10.1kgm டார்க் தரும் இந்த இன்ஜின், வேகன்-R காரின் இன்ஜினைவிட ஸ்மூத். ஆரம்பத்தில் பெர்ஃபாமென்ஸ் அற்புதமாக இருந்தாலும், த்ராட்டிலை அழுத்த அழுத்த பவர் குறைபாடு அப்பட்டமாகத் தெரிகிறது. கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இருந்தாலும், க்ளட்ச் வேகன்-R அளவு லைட்டாக இல்லை. ஓட்டுதல் தரத்தில் வேகன்-R காரைவிட சான்ட்ரோ அருமை. இதற்குக் காரணம் குழிகளைச் சத்தமில்லாமல் கடந்துபோகும் சஸ்பென்ஷன். பெரிய பள்ளங்களில்கூட கார் தரைதட்டுவதில்லை. சரியான எடையில் ஸ்டீயரிங் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கிறது. ஆனால், திரும்பிய பிறகு மீண்டும் அதே பொசிஷனுக்கு வர மறுக்கிறது. கடுமையாக பிரேக் போட வேண்டிய சமயத்தில், கார் நம்பிக்கை கொடுக்கும்படியாக இல்லை.

இந்த ஒப்பீட்டில் பெரிய இன்ஜின் என்றால் அது டியாகோவின் 1.2 லிட்டர் இன்ஜின்தான். ஐடிலிங்கில் இன்ஜினில் இருந்து வரும் `கிர்ர்ர்’ சத்தம் கேபினில் கேட்கிறது. ஆரம்பத்தில் சுமார் என்றாலும், 1500ஆர்பிஎம் தாண்டிவிட்டால் பெர்ஃபாமென்ஸ் ஆச்சர்யம் தரும். இன்ஜின் ரெட்லைன் குறைவு என்பதால், கியர்பாக்ஸை அடிக்கடி பயன்படுத்த வேண்டியுள்ளது. கியர்பாக்ஸ் பயன்படுத்த சுலபமாக இருந்தாலும் செக்மென்ட்டின் பெஸ்ட் இல்லை. இன்ஜினில் கோட்டைவிட்ட இடத்தை ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் பிடித்துவிட்டது டியாகோ. சஸ்பென்ஷன் மிக மோசமான சாலையையும் அசால்ட்டாகக் கையாள்கிறது. 15 இன்ச் அலாய் வீல் மற்றும் 175/65 செக்‌ஷன் டயர்கள் வேகமாகப் போகும்போது சாலையை நன்றாகப் பிடித்துக்கொண்டு நம்பிக்கை தருகின்றன. டியாகோவின் ஸ்டீயரிங் மற்ற இரண்டு கார்களையும்விட பயன்படுத்துவதற்கு அருமையாக உள்ளது.

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!
பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

இன்டீரியர்

டால் பாய் டிசைன் என்பதால், வேகன்-R காரின் விண்ட்ஷீல்டு மற்றும் ஜன்னல்கள் பெரிதாக இருக்கின்றன. டேஷ்போர்டு டிசைன் சுமாராக இருந்தாலும், பீஜ் மற்றும் கறுப்பு இன்டீரியர் ஸ்டைலை மேம்படுத்திக்காட்டுகிறது. சீட் தட்டையாக இருப்பதுடன், தொடைகளுக்கான சப்போர்ட் சரியாக இல்லை. முன்பக்கம் லெக்ரூம் அதிகம். பின்பக்க கேபின் நல்ல அகலம். இருவர் தாராளமாக உட்காரலாம். சீட் உயரமும் அதிகம். அதனால் ஹெட்ரெஸ்ட்டை உயரம் குறைவாகப் பொருத்தியுள்ளார்கள். இதை அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பதால், உயரமானவர்களுக்கு பின் சீட் சிரமத்தைத் தரலாம். இந்த ஒப்பீட்டில் வேகன் R-ன் பூட் ஸ்பேஸ்தான் பெரிது... 341 லிட்டர்.

வேகன் R-போல பெரிய கேபின் இல்லையென்றாலும், சான்ட்ரோ சளைத்ததல்ல! முன் சீட் உயரம் குறைவாக இருப்பதால், காரில் ஏறும்போது சீட்டில் உட்கார்ந்து உள்ளே நுழைய வேண்டியுள்ளது. கேபின் டிசைன் மற்றும் தரம் இரண்டுமே பிரமாதம். சீட்டில் முதுகு, தொடை, பின்பக்கம் என உடலின் எல்லா பகுதிகளுக்கும் நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. குஷனிங்கும் நன்றாகவே உள்ளது. சீட்டின் உயரம் மற்றும் ஸ்டீயரிங் இரண்டையும் அட்ஜஸ்ட் செய்ய முடியாததால், உயரமான டிரைவர்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். பின் சீட் செங்குத்தாக இல்லாமல் சாய்ந்திருப்பது சொகுசாக இருக்கிறது. லெக்ரூம் மற்றும் ஹெட்ரூமுக்குப் பஞ்சமில்லை. பின்பக்கம் ஏசி வென்ட் இருப்பது சிறப்பு.

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

மற்ற இரண்டு கார்களையும்விட கேபின் பெரிதாக இருந்தாலும் டியாகோவின் சிறிய ஜன்னல்களும், கறுப்பு இன்டீரியரும் சிறிய காரில் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறது. சீட்டின் உயரம் குறைவு. டச் ஸ்க்ரீன் மற்றும் டேஷ்போர்டில் இருக்கும் க்ரோம் ஃபினிஷ், விலை உயர்ந்த கார் போன்ற தோற்றத்தைத் தருகிறது. முன் சீட்டில் முதுகு மற்றும் தொடைகளுக்கு சப்போர்ட் அருமையாக இருந்தாலும், சீட் குஷன் மிருதுவாக இருப்பதால் அதிக நேரம் சீட்டில் உட்கார முடியவில்லை. சீட் உயரம் மற்றும் ஸ்டீயரிங் ஆங்கிள் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிவதால், நம் வசதிக்கு ஏற்ப டிரைவிங் பொசிஷனை அமைத்துக்கொள்ள முடிகிறது. பின் சீட்டில் பேக்ரெஸ்ட் சாய்ந்திருப்பது சொகுசாக இருக்கிறது. லெக்ரூம் சுமார், ஹெட்ரூம் சூப்பர். டியாகோவில் பின் சீட் பயணிகள் நிறையவே அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

மூன்று கார்களிலுமே 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. சான்ட்ரோவின் டச் ஸ்க்ரீன், மற்ற இரண்டையும்விட பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, ப்ளூடூத், USB மற்றும் AUX கனெக்டிவிட்டி வேகன் R-ல் உள்ளன. சான்ட்ரோவில் AUX இல்லை. டியாகோவில் கார் ப்ளே இல்லை. சான்ட்ரோவில் இருக்கும் 4 ஸ்பீக்கரின் சவுண்டு குவாலிட்டி வேகன்-R காரைவிட நன்றாக இருக்கிறது. டியாகோவில் இருக்கும் 8 ஸ்பீக்கர் ஹர்மான் சவுண்டு சிஸ்டம் மற்ற இரண்டையும்விட பல மடங்கு தரமாக உள்ளது. வேகன்-R காருடன் ஒப்பிடும்போது சான்ட்ரோவில் ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ரியர் ஏசி வென்ட் கூடுதலாக இருக்கின்றன. டியாகோவில் கூல்டு க்ளோவ்பாக்ஸ், புரொஜெக்டர் ஹெட்லைட், 15 இன்ச் அலாய் வீல் கூடுதல் வசதி. பாதுகாப்பைப் பொறுத்தவரை மூன்று கார்களின் டாப் வேரியன்ட் டிலும் 2 காற்றுப்பை, ஏபிஎஸ், EBD மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் வருகின்றன. டியாகோவில் கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் கூடுதலாக இருக்கிறது.

பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!
பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!

சான்ட்ரோ, சிட்டியில் ஓட்டுவதற்குத் தரம். ஆனால், நெடுஞ்சாலை என வந்துவிட்டால் பவர் இல்லாமல் பம்முகிறது. டிரைவிங் சொகுசாக இருந்தாலும் வேகமெடுக்கும்போது, சான்ட்ரோவின் நிலைத்தன்மை நம்பிக்கை கொடுக்கவில்லை. டியாகோ நெடுஞ்சாலையில் செம சொகுசான டிரைவிங்கைத் தருகிறது. இந்த செக்மென்ட்டிலேயே சிறப்பான சஸ்பென்ஷன் உள்ள கார் டியாகோ. தரமான கட்டமைப்பு மற்றும் ரைடிங் இதன் ப்ளஸ். சௌகரியமில்லாத பின் சீட், மூன்று சிலிண்டர் இன்ஜினில் இருந்து வரும் தேவையில்லாத சத்தம், கடினமான கியர்பாக்ஸ் டியாகோவின் பிரச்னைகளாக  இருக்கின்றன. சாலைக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் வேகன் R-ன் ஸ்டீயரிங், பெரிய குறை. எடை குறைவு என்பதால் நெடுஞ்சாலையில் ஸ்டெபிலிட்டியும் குறைவாகவே இருக்கிறது. ஆனால், கொடூரமான டிராஃபிக்கிலும் சிரமமில்லாத டிரைவிங், பெர்ஃபாமென்ஸில் அதகளப்படுத்தும் 4 சிலிண்டர் இன்ஜின், கேபினில் ஏகப்பட்ட இடவசதி என பிராக்டிக்கலாகப் பார்க்கும்போது வேகன் R, முதல் முறை கார் வாங்குபவர்களின் பட்டியலில் வெளியே தள்ள முடியாத ஆப்ஷனாக உட்கார்ந்து கொள்கிறது. டீலக்ஸ் கார்களுக்கு மத்தியில் சூப்பர் டீலக்ஸ் வேகன் R-தான். நான் சாட்சி!

- தொகுப்பு:  ரஞ்சித் ரூஸோ