மற்ற எபிசோடுகள்
Published:Updated:

4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்?

4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
News
4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்?

சர்வீஸ் அனுபவம் - தொடர் - 5விமல்நாத், ஓவியம்: ராஜன்

நான் கோவையில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம். செம அடி வாங்கிய நிலையில், ஒரு மாருதி சுஸூகி கார் எங்கள் அலுவலக வாசலில் வந்து நின்றது. அது சென்னைப் பதிவு எண் கொண்ட ஹேட்ச்பேக். ஆனால் ஊட்டியில் இருந்து வருவதாகச் சொன்னார், டிரைவர் சீட்டில் இருந்து இறங்கியவர். அவர் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் முகத்திலும் அதே பதற்றம்.

``என்னாச்சு?’’ என்று விசாரிப்பதற்குள் அவரே படபடப்புடன் பேச ஆரம்பித்தார்.

``என் கார்ல திடீர் திடீர்னு பிரேக் பிடிக்க மாட்டேங்குது. என்னானு கொஞ்சம் பாருங்க. போன மாசம்தான் சென்னையில் காரை சர்வீஸ் விட்டேன். ஒருவேளை சர்வீஸ் சென்டர்ல ஏதும் சரியா கவனிக்காம விட்டுட்டாங்களானு தெரியலை. இப்போ பாருங்க... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு! கொஞ்சம் தவறியிருந்தால் கார் மலையில உருண்டிருக்கும்’’ என்று டென்ஷனில் இடைவேளையே இல்லாமல் பேசினார்.

தனது மாருதி சுஸூகி காரில் சென்னையில் இருந்து ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருக்கிறார் அவர். சுற்றுலாவை முடித்துக்கொண்டு மலை இறங்கும்போது, ஒரு மலைச்சரிவில் ஏறிய பேருந்துக்காக வழிவிட நினைத்து காரின் பிரேக்கை அழுத்தியிருக்கிறார். ஆனால்...?

அந்த சில வினாடிகள் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பிரேக் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் கட்டுப்பாடு இழந்த காரை, வலது பக்கமாக ஒடித்திருக்கிறார். ஆனால், கீழே மலைச்சரிவு எதிர்ப்பட்டதால், வேறு வழியில்லாமல் சட்டென இடதுபக்கம் ஒடிக்க, பேருந்தின் மீது கார் உரசி... க்ர்ர்ரீச்ச்ச்ச்..! ஹாலிவுட் படத்தில் வருவதுபோல் எல்லாம் ஒரு சில வினாடிகளில் நடந்து முடிந்துவிட்டன.

4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்?

நல்லவேளையாக பயணித்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. காருக்கும் பெரிய சேதாரம் இல்லை. பானெட் மட்டும் லேசாக நசுங்கி இருந்தது. இருப்பினும் ஓடும் கண்டிஷனில் இருந்ததால் எப்படியோ காரைப் பக்குவமாக ஓட்டிக்கொண்டு வந்துவிட்டார். ``பஸ்ஸைப் பார்த்ததும் நான் சடர்ன் பிரேக் பிடிச்சேன். எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. ஹார்டு பிரேக்கிங்கூடப் பண்ணினேன். ஆனா சுத்தமா பிரேக் பிடிக்கலை. எப்படின்னே தெரியலை. மயிரிழையில் உயிர் தப்பிச்சிருக்கோம். இதை எடுத்துட்டு நான் எப்படி சென்னைக்குப் போக முடியும்?’’ என்றார்.

உடனே சென்னை சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து, அந்த கார் பற்றிய தகவல்களைக் கேட்டதும் அவர்களும் பதறிவிட்டார்கள். ``நாங்க எல்லாமே சரியா செக் பண்ணித்தான் அனுப்பினோம்!’’ என்றார்கள். உண்மைதான். நாங்கள் எங்கள் சென்டரில் காரை ஒரு தடவை முழுவதுமாகப் பிரித்து செக் செய்து பார்த்தபோது, பிரேக் வேலைப்பாடுகளில் எந்தத் தவறும் தெரியவில்லை. பிரேக் பேடுகள் நன்றாகவே இருந்தன.

வேலை முடிந்த பிறகு, சாலையில் ஒரு டெஸ்ட் டிரைவ். அவரை வைத்தே செய்து காட்டினேன். `பச்சக்’ என பிரேக் பிடித்தது. இருந்தாலும் அவருக்குப் பயம். ``இல்லை சார், நான் ஊட்டியில் இருந்து கிளம்பும்போது இது மாதிரி நல்லாதான் பிரேக் பிடிச்சது. போகப் போகத்தான் பிரச்னை ஆச்சு. அது மாதிரி இங்கேயும் ஆயிடுச்சுன்னா?’’ என்று மறுபடியும் பயந்தார். அவர் சொல்வதும் நியாயம்தான்.

மீண்டும் விசாரணை. அதாவது, ஊட்டியில் இருந்து கிளம்பும்போது நன்றாக வேலை செய்த பிரேக்குகள், மலைச்சாலையில் மட்டும் `ததிங்கினத்தோம்’ போட்டிருக்கிறது. ஆனால், ஊட்டி விபத்துக்குப் பிறகு இங்கே கோவை வரும் வரை பிரேக்குகள் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன. அப்படியானால், இவரின் பிரேக்கிங்கில்தான் ஏதோ பிரச்னை இருக்க வேண்டும். எனக்கே குழம்பிவிட்டது. துருவித்துருவி விசாரணையை முடுக்கிய பிறகுதான் எனக்கு அந்த உண்மை புலப்பட்டது.

``நீங்க மலை இறங்கும்போது, எத்தனையாவது கியரில் இறங்கினீங்க?’’

``4-வது கியர்ல!’’

``அங்கங்க போர்டு இருக்குமே... ரெண்டாவது கியர்லதான் இறங்கணும்னு!’’

``செகண்ட் கியர்ல என்னைக்கு வீடு வந்து சேர்றது... அதான் தேர்டுல இறங்கினா சீக்கிரம் போகலாமேன்னு...!’’

``அப்போ பிரேக்?’’

``பிரேக்கில் எப்பவுமே ஒரு கால் இருந்துக்கிட்டே இருக்கும்!’’

இங்கேதான் பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. பொதுவாக மலைச்சாலைகளில் கார் ஓட்டுபவர்கள், ஏறும்போது திணறமாட்டார்கள். இறங்கும்போது எல்லோருக்குமே ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். இதை `பயம்’ என்று சொல்ல முடியாவிட்டாலும், `அதீத அலர்ட்னஸ்’ எனச் சொல்லலாம். அதுவும் கார் ஓட்டுவதில் அனுபவம் குறைவானவர்களுக்கு, இந்த அலர்ட்னஸ் அதிகமாக இருக்கும். அதனால் தங்களை அறியாமலேயே, பிரேக்கில் கால் வைத்துக்கொண்டே ஓட்டுவார்கள்.

அதுவும் இவர் நான்காவது கியரில் வேறு இறங்கியிருக்கிறார். `சர்’ரென ரோலர்கோஸ்டரில் இறங்குவதுபோன்ற உணர்வு கிடைக்கும். அதனால் பிரேக்கில் எப்போதுமே கால் வைத்துக் கொண்டே ஓட்டியிருக்கிறார். இதனால் பிரேக் டிரம்களும் டிஸ்க்குகளும் பயங்கர சூடாகி, பிரேக் பிடிக்கும் தன்மையையே அது இழந்துவிட்டிருக்கிறது.

விபத்து நடந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான், காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார். இந்த இடைவெளியில் பிரேக்குகள் கொஞ்சம் கூலாகியிருக்கின்றன. அதனால்தான் சாதாரண சாலைகளில் பிரேக்ஸ் மக்கர் செய்யவில்லை.

புத்தம் புது கார் என்பதால்தான், பிரச்சனை இதோடு முடிந்திருக்கிறது. அதிக கி.மீ ஓடிய நாள்பட்ட காராக இருந்திருந்தால், பிரேக்குகள் செயலிழந்துவிடும் அபாயமும் உண்டு. ஒருசிலர் பெட்ரோல்/டீசலை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று நியூட்ரலில் இறங்குவார்கள். இன்னும் சில அதிமேதாவிகள், காரை ஆஃப் செய்துவிட்டு இறங்குவதையெல்லாம் பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம் நான் ஆன் தி ஸ்பாட்டிலேயே எச்சரித்திருக்கிறேன். நியூட்ரலிலும் ஐடிலிங்கிலும் பிரேக்குகளை முழுமையாக நம்ப முடியாது.

இவ்வளவு விஷயங்களையும் விளக்கிய பிறகுதான், அவருக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அடுத்த முறை ஊட்டிக்குப் போனபோது எனக்கு தொலைபேசினார். ``இப்போல்லாம் செகண்ட் கியர்லதான் இறங்குறேன்!’’

(சர்வீஸ் சுவாரஸ்யம் தொடரும்)

தொகுப்பு: தமிழ்

4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்?

மலைச்சாலைகளில் இறங்கும்போது...

மலைச்சாலைகளில், ஏறும் வாகனங்களுக்கு எப்போதுமே வழிவிட்டுத்தான் கீழிறங்க வேண்டும். வளைவுகளில் ஏதேனும் வாகனங்கள் ஏறுவது தென்பட்டால், தயவுசெய்து நின்றுவிடுங்கள்.

ஏறும்போது ஆர்பிஎம்-க்குத் தகுந்தாற்போல் கியரில் ஓட்ட வேண்டும். உதாரணத்துக்கு, 2,000 ஆர்பிஎம்-க்கு உள்ளே என்றால் முதல் கியர். 2,500-க்கு உள்ளே இரண்டாம் கியர். முடிந்தவரை மூன்றாவது கியரையே தவிர்க்கலாம்.

இறக்கங்களில் நிச்சயம் இரண்டாவது கியர்தான் மிகச் சரி. தாழ்வான சில இறக்கங்களில் முதல் கியர்தான் பாதுகாப்பு.

பிரேக்குகளில் கால் வைத்துக் கொண்டே பயணித்தால், பிரேக் டிரம்மும் டிஸ்க்கும் சூடாகி, சிறிது நேரத்தில் பிரேக் செயலிழந்துவிட வாய்ப்புண்டு. பிரேக்கிங்கில் தொய்வு ஏற்பட்டால், காரை நிறுத்தி அரைமணி நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள்.

மலைச்சாலைகளில் குறுகிய விசிபிலிட்டிதான் கிடைக்கும் என்பதால், ஓவர்டேக் செய்யும்போது அவசரம் கூடாது. அதிலும் வளைவுகளில் ஓவர்டேக்கிங் என்கிற விஷயத்தையே மறந்து விடுங்கள். சீக்கிரமாகப் போகவேண்டும் என்பதை விட, பாதுகாப்பாகப் பயணிப்பதே முக்கியம்.

ஜன்னலை ஏற்றிவிட்டு, குளிரக் குளிர ஏ.சி-யைப் போட்டுவிட்டு, ஸ்டீரியோவை ஆன் செய்துவிட்டுப் பயணிப்பதெல்லாம் நெடுஞ் சாலைகளுக்கு நன்றாக இருக்கும். மலைப் பயணங்களில் காட்டுக்கென ஓர் இசையும் வாசமும் உண்டு. அதை அனுபவி்க்கத் தவறாதீர்.