கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

டிகுவான் வாங்கலாமா?

டிகுவான் வாங்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
டிகுவான் வாங்கலாமா?

ரீடர்ஸ் டெஸ்ட்: ஃபோக்ஸ்வாகன் டிகுவான்

சொல்லாமல் கொள்ளாமல் நமது அலுவலகம் வந்திருந்தது ஃபோக்ஸ்வாகனின் புத்தம் புது டிகுவான். ‘‘டிகுவானில் எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ்தான் நீங்க பண்ணிட்டீங்களே.. இந்த தடவை நாங்க எக்ஸ்பீரியன்ஸ் பண்றோம்! சாவியைக் கொடுங்க!’’ என்று காரில் ஏறினார்கள் வாசகர்கள் சிவகுமார்-முத்துலட்சுமி தம்பதியர். டிகுவானைப் பற்றிய அவர்களின் ஷார்ட் டெஸ்ட் ரிப்போர்ட்.

டிகுவான் வாங்கலாமா?

டிகுவானில் பிடித்தது:

சிவகுமார்: “இந்த மாதிரி ஒரு ஸ்மூத் டிரைவ் வேறு எந்த காரிலும் நான் ஃபீல் பண்ணுனதே இல்லை. வெளியேதான் எஸ்யூவி. ஆனால், உள்ளே ஏதோ காம்பேக்ட் ஹேட்ச்பேக் ஓட்டுவதுபோல அற்புதமா இருக்கு. எக்கோஸ்போர்ட் ஓட்டும்போது பில்லர் மறைக்கும். இதில் ‘A’ பில்லர் மறைக்கவே இல்லை. ரோடு நல்லாவே தெரியுது. ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் அடடா! சஸ்பென்ஷன் கொஞ்சம் டைட்டா இருந்தாலும், உள்ளே அவ்வளவு இறுக்கமாகவெல்லாம் இல்லை. பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் தூக்கிப்போடவே இல்லை. பிரேக்கிங் செம! எந்த இடத்தில் பிடிக்கிறோமோ, அப்படியே நிக்குது! ஹைவேஸ், மலைச்சாலைகளில் தன்னம் பிக்கையா பறக்கலாம்னு நெனைக்கிறேன். ESC, EBD, ஹில்ஹோல்டு, டிராக்ஷன் கன்ட்ரோல் என்று எத்தனை வசதிகள்!! எத்தனை டிரைவிங் மோடுகள்!’’

முத்துலட்சுமி: ‘‘என்னோட சீட் இந்த கோ-டிரைவர் சீட்தான். நல்ல லெக்ரூம். காலை நீட்டி உட்கார செமையா இருக்கு. இதோட ஏ.சி பவர் ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க எக்ஸ்யூவியில் இந்தளவு ஏ.சி கூலிங் வராது. பின் பக்கமும் நல்ல கூலிங். பின்னாடி சீட்ல விமானம் மாதிரி சாப்பாட்டு ட்ரேயெல்லாம் கொடுத்திருக்காங்க. சூப்பர். எங்க காரில் ஸ்பீடா போகும்போது இன்ஜின் சத்தமோ, வெளிச்சத்தமோ கேட்டுக்கிட்டே இருக்கும். டிகுவான் செம சைலன்ட் பார்ட்டியா இருக்கு. மஹிந்திரா காரில் கதவை டமால்னு ஓங்கி அடிச்சாதான் பூட்டும். இதில் கதவை அடிக்கிறதுக்கே ஆசையா இருக்கு. அந்தளவு சாஃப்ட். பூட் ஸ்பேஸ் இவ்வளவு இருக்கா! லக்கேஜ் அள்ளிட்டுப் போலாம்! சன்ரூஃப்பும் பிடிச்சிருக்கு!’’

டிகுவான் வாங்கலாமா?

டிகுவானில் பிடிக்காதது:

சிவகுமார்: ‘‘நானும் சுத்திச் சுத்திப் பார்க் கிறேன். எந்தக் குறையுமே கண்டுபிடிக்கவே முடியலை. அப்புறம்தான் சில சின்னச் சின்னக் குறைகளைக் கண்டுபிடிச்சேன். ஆர்ம்ரெஸ்ட் சரியான உயரத்தில் இல்லை. டிரைவிங்கில் டர்போ லேக் இருப்பது மாதிரி ஃபீல் ஆகுது. 1,800 ஆர்பிஎம்-க்கு மேலதான் பவர் கிடைக்குது. ஆனா ரொம்பப் படுத்தலை. இதோட அலாய் வீலை உத்துப் பார்த்தப்புறம்தான் தெரியுது. இதில் வீல் நட்ஸ் - ஸ்பெஷல் டைப். அதாவது காரோட கிட்டில் இருக்கும் ஆலென் கீயை வெச்சுத்தான் வீலைக் கழற்ற முடியும். கீ தொலைஞ்சதுனா நாமளும் தொலைஞ்சோம். அப்புறம் வெளிப்புறம், பார்க்கிறதுக்கு இது ஒரு பெரிய எஸ்யூவி மாதிரி இல்லை! ஃபார்ச்சூனர், எண்டேவர் மாதிரியான ஒரு கம்பீரம் இதில் மிஸ்ஸிங்!’’

முத்துலட்சுமி: ‘‘40 லட்ச ரூபாய் கார்னு சொன்னவுடனே பெரிய 7 சீட்டர் காராதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா 5 சீட்டர்தான். இவ்வளவு காசுக்கு 5 சீட்டர் வாங்கினா, என் பொண்ணு திட்டித் தள்ளிடுவா! அலாய் வீல் டிசைன் எனக்குப் பிடிக்கலை. இன்னும் கொஞ்சம் ஸ்டைலா இருக்கணும். மத்தபடி வேற ஒண்ணும் எனக்குக் குறையா தோணலை!’’

எங்கள் தீர்ப்பு

‘‘சி
ல கார்கள் ஓட்டிட்டு வந்தா ரொம்ப டயர்டா இருக்கும். டிகுவான், செம ஃபீல் கிடைச்சது. இந்த மாதிரி டிரைவிங் நான் வேறு எந்த காரிலும் உணரலை. கேஷுவலா டூர் அடிக்கலாம். 4 வீல் டிரைவ், ஆஃப்ரோடு டிரைவிங் மோடுகள், பாதுகாப்பு வசதிகள் எல்லாமே சூப்பர். ரிவர்ஸ் கேமரா மட்டும்தான் இருக்கு. 360 டிகிரி கேமரா கொடுத்திருக்கலாம். ஆனால், விலைதான் அதிகமா தெரியுது. குறைந்தபட்சம் 7 சீட்டராவது இருந்திருக்கலாம். மேற்கொண்டு 5 லட்ச ரூபாய் போட்டால் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஸ்கோடா கோடியாக் வாங்கிடலாமே! இதுக்கு முன்னாடி நாங்க போலோ வெச்சிருந்தோம். சர்வீஸில் ரொம்ப அனுபவப்பட்டோம். ஃபோக்ஸ்வாகன் சர்வீஸிலும் எங்களைத் திருப்திப்படுத்தணும்!’’

- தமிழ், படங்கள்:  பா.காளிமுத்து

விலைக்கேற்ற காரா டிகுவான்?

ஐந்து பேர் பயணிக்கும் சொகுசு க்ராஸ் ஓவரான டிகுவான் சாஃப்ட் ரோடரை நாமும் டெஸ்ட் செய்தோம்!

டிஸைன்

ஃபோக்ஸ்வாகன் என்றாலே பில்டு குவாலிட்டிதான். பாகங்களின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் பிரமாதம். கதவுப்பிடிகள் தொடங்கி காருக்கு உள்ளே இருக்கும் ஸ்விட்ச், பட்டன் எல்லாவற்றிலும் தரம் தெறிக்கிறது. வீல் ஆர்ச்சுகள் பெரிதாகவும், அதேசமயம் காரின் டிஸைனுக்குப் பொருந்தும் வகையிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கிறது. 18 இன்ச் அலாய் வீல்கள் கம்பீரம்.

உள்ளே...

எல்லா ஃபோக்ஸ்வாகன் கார்களிலும் பார்க்கும் அதே இன்டீரியர்போலவே இருந்தாலும், விலைக்கேற்ற விஷயங்களும் இருக்கின்றன. LED விளக்குகள் துவங்கி வைப்பர்ஸ், சீட் மெமரி (டிரைவர் இருக்கைக்கு) என எல்லாமே ஆட்டோமேட்டிக். ஆறு காற்றுப்பைகள், ஏபிஎஸ்+எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்.

டிகுவான் வாங்கலாமா?

இன்ஜின்

2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைக் (TDi) கொண்டிருக்கிறது டிகுவான். இதன் பவர் 143bhp. கிட்டத்தட்ட 1,700 கிலோ எடைகொண்ட இந்த காருக்கு இந்த பவர் போதுமானதுபோலத் தெரிந்தாலும், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பவர்ஃபுல்லாக இல்லை. ஹூண்டாய் டூஸான் 185bhp, ஜீப் காம்பஸ் 173bhp என பவர்ஃபுல் கார்களாக இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், மிக ஸ்மூத்தாக கியர்களை மாற்றித் தருகிறது. வழக்கம்போல 2,000ஆர்பிஎம்முக்கு மேலேதான் இன்ஜின் உயிர்பெறுகிறது. ஸ்டீயரிங் கன்ட்ரோல் ஷார்ப். உயரமான எஸ்யூவியாக இருந்தாலும் பாடி ரோல் கட்டுக்குள் இருக்கிறது. சஸ்பென்ஷன் செட்அப் சூப்பர். மிக மோசமான சாலைகளில் பயணிக்கும்போது மட்டுமே, அதிர்வுகளை காருக்குள் உணரமுடிகிறது.

வாங்கலாமா?

போட்டியாளர்களைவிட ஃபிட் அண்ட் ஃபினிஷ், பில்டு குவாலிட்டியில் மட்டும் தரமாக இருந்தால் போதாதே! விலையில் எங்கேயோ இருக்கிறது டிகுவான். ஜீப் காம்பஸின் விலை உயர்ந்த மாடலின் சென்னை ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட 28 லட்சம்.  டூஸானின் விலை உயர்ந்த மாடலின் விலை 32 லட்சம். ஆனால் டிகுவான் ஹைலைனின் சென்னை ஆன் ரோடு விலை 38 லட்சம். இந்த விலைக்கு பவர் குறைவான காராகவும், 5 சீட்டர் காராகவும் இது இருக்கிறது. 38 லட்சம் ரூபாய்க்கு 7 சீட்டர்களான ஃபார்ச்சூனர், எண்டேவர் கார்களையே வாங்க முடியும். கொடுக்கும் விலைக்கு ஏற்ற காராக டிகுவான் இல்லை. ஃபோக்ஸ்வாகன் பிரியர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் கார் டிகுவான்! 

- சார்லஸ்