கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?

டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?
பிரீமியம் ஸ்டோரி
News
டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?

ராகுல் சிவகுரு

னிதர்கள் பயன்படுத்தும் உணர்வுமிக்க பொருள்களில் முக்கியமானது கார். ஆனால் அவை, அந்தத் தன்மையை இழந்துவிடக்கூடிய நாள், வெகுதொலைவில் இல்லை. ஏனெனில் எலெக்ட்ரிக் மோட்டார்கள்/ஹைபிரிடு சிஸ்டம் மற்றும் Autonomous/ADAS தொழில்நுட்பங்கள் என அடுத்த தலைமுறை கார்கள் செல்லும் திசையை வைத்துப் பார்க்கும்போது, அதில் டிரைவர்களுக்கே வேலை இருக்காது எனத் தெரிகிறது. செல்ஃப் டிரைவிங் கார்களை நோக்கி கார் தயாரிப்பாளர்கள் செல்லும் வழி வெவ்வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றுதான்!

டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?

செல்ஃப் டிரைவிங் கார்கள்...

செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இந்த கார்களில் இடம்பெற்றிருக்கும் ரேடார், சென்சார், லேசர், கேமரா, Lidar போன்ற விஷயங்கள் ஒன்றுதான். வெளிப்புறச் சூழ்நிலையை இவற்றின் வாயிலாகத் தெரிந்துகொண்டு, கிடைத்த தகவல்கள் அனைத்தும் மென்பொருளால் (Software) செயல்முறை வடிவம் பெற்று, அவை காரின் ஆக்ஸிலரேஷன் - பிரேக்கிங் - ஸ்டீயரிங் ஆகியவற்றின் Actuator-களைக் கட்டுப்படுத்தும்.

இந்தத் தொழில்நுட்பம், போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஏற்ப, பாதுகாப்புக்கு ஏற்ப காரை தானாகவே இயக்கும். Self Learning முறையில் தட்பவெப்ப நிலை, செல்லும் வழி, டிராஃபிக் நிலவரம் ஆகியவற்றை தானாக அப்டேட் செய்துகொள்ளும். Driverless கார்களில் இருக்கும் லெவல்களை தற்போது பார்ப்போம்.

டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?

Levels of Driverless Cars:

Level 0: காரின் பெரும்பாலான அம்சங்கள், மனிதர்களாலேயே கட்டுப்படுத்தப்படும்.

Level 1: க்ரூஸ் கன்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றை, காரின் Onboard Computer கட்டுப்படுத்தும். ஆனால் ஒரே நேரத்தில், ஓர் அம்சம் மட்டுமே கன்ட்ரோல் செய்யப்படும்.

Level 2: இங்கே இரு அம்சங்களை, ஒரே நேரத்தில் காரின் Onboard Computer கட்டுப்படுத்தும். உதாரணத்துக்கு, காரின் ஆக்ஸிலரேஷன் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவை தானாக கன்ட்ரோல் செய்யப்படும் என்றாலும், காரில் ஒரு டிரைவர் ஸ்டீயரிங் வீலின் பின்னால் இருப்பது அவசியம்.

Level 3: சில விதிகளுக்கு ஏற்ப வெளிப்புறச் சூழ்நிலை அமைந்தால், காரின் பிரதான அம்சங்கள் தானாகக் கட்டுப்படுத்தப்படும். ஆனால், தவிர்க்க முடியாத நேரத்தில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால், நிலைமையைச் சமாளிக்க காரில் டிரைவர் இருக்கவேண்டும். இதுதான் Semi Autonomous கார். 

Level 4: பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் Autonomous முறையில் கார் தானாகவே இயங்கும் என்றாலும், ஆஃப் ரோடிங் போன்றவை இதில் அடங்காது.

Level 5: எந்தவிதமான நிலையிலும் காரின் கன்ட்ரோல்கள் அனைத்தும், Onboard Computer-வசமே இருக்கும். இவைதான் Fully Autonomous/Driverless கார்கள் என அழைக்கப்படும்.

செல்ஃப் டிரைவிங் கார்களின் பலம்/பலவீனம்...

தொடர்ச்சியாக ஒரு வேலையைச் செய்ய நேரிட்டால், அயர்ச்சி மற்றும் கவனச்சிதறல் ஏற்படும். இது டிரைவிங்குக்கும் பொருந்தும். இதுதான் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கான அடிப்படைக் காரணம். Autonomous/ADAS தொழில்நுட்பத்தால் இயங்கும் கார்கள், மெஷின் தன்மைக்கு மாறிவிடும். அவ்வளவு ஏன், இந்த வருங்கால கார்களில் ஸ்டீயரிங் வீல்கூட இல்லாமல்போகலாம்! எனவே நேரம்/காலம் பாராமல், போக்குவரத்து விதிகளுக்கு ஏற்ப கார் தானாக இயங்கும். சாலையில் உள்ள அனைத்து வாகனங்களும் செல்ஃப் டிரைவிங் முறைக்கு மாறும்போது, சாலைகளில் டிராஃபிக் மற்றும் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைந்துவிடும். சில நேரத்தில், இந்தத் தொழில்நுட்பம் செயலிழந்துவிடும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்திருக்கின்றன.

டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?

'Level 5 Driverless' கார்கள் பிரச்னையின்றி இயங்குவதற்கு, சாலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் இதர வாகனங்களில் பலத்த மாற்றம் தேவை. நம் ஊரைப் பொறுத்தவரை, இதற்கு அதிகப்படியான முதலீடு தேவைப்படும் என்பதுடன், இந்த ப்ரீமியம் கார்கள் தொடர்பான தெளிவும் மக்களுக்கு அவசியம். இதனால் கார் சார்ந்த அனுபவம்/டிரைவிங் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும். கார் ஓட்டப்படுவது என்னதான் ஆட்டோமேட்டிக் முறையில் இருந்தாலும், மெக்கானிக்கல் பாகங்களே அதற்குத் துணை நிற்கும். எனவே காரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைக் களைவது கடினமாகவே இருக்கும். செயற்கை நுண்ணறிவால் இயங்கும் செல்ஃப் டிரைவிங் கார்களில், மனிதனைவிடத் தொழில்நுட்பமே மேலோங்கி இருக்கும் என்பது நெருடல்.

செல்ஃப் டிரைவிங் கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் என்னென்ன?

கூகுள் நிறுவனம் தன்வசம் உள்ள மென்பொருள் திறமையின் ஊடாக, தானாகவே இயங்கும் காரைத் தயாரிக்கும் பணிகளில் சில காலமாக ஈடுபட்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களில் இருக்கக்கூடிய `AutoPilot’ வசதி, Driverless காரையே குறிக்கும். இவை தவிர ஆடி, பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, ஹோண்டா, நிஸான், மெர்சிடீஸ் பென்ஸ், டாடா மோட்டார்ஸ், வால்வோ போன்ற பல சர்வதேச கார் நிறுவனங்கள், தமது Autonomous கார்களை உலகளவில் டெஸ்ட் செய்து கொண்டிருக்கின்றன.