கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு
பிரீமியம் ஸ்டோரி
News
யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: XUV500 - டீசல்

ஸல் சிக்ஸர்களாகப் பறக்கவிடுகிறார். வெயில் செல்ஷியஸ்களாக ஏறி வியர்க்கவிடுகிறது. இந்த வெயிலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாட்டில் ரெண்டே சாய்ஸ் ஊட்டியோ, கொடைக்கானலோதான். `ஆ... ஊ...ன்னா ஊட்டிதானா?’ என்பவர்களுக்காகத்தான் பக்கத்தில் அற்புதமான அட்வென்ச்சர் ஸ்பாட் இருக்கிறது. தெப்பக்காடு. கிட்டத்தட்ட ஊட்டி க்ளைமேட்டுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மாதிரியே ஜிலுஜிலுனு வெயில் அடிக்கும் தெப்பக்காடுதான் முதுமலை யானைகள் முகாம். ஊட்டி தாண்டி கல்லட்டி வழியே இறங்கினால் மசினகுடி. அடுத்து தெப்பக்காடு. ``அங்கிள், யானைங்க பார்க்கலாமே... அங்கேயே போலாம்!’’ என்றான் செந்தில் மாரிமுத்துவின் புதல்வன் தருண்.

``ஃபர்ஸ்ட் ஹேரியர்தான் வாங்கப் போனோம். ஹேரியர் இன்ஜின் வைப்ரேஷன் எனக்குப் பிடிக்கலை. இப்போ எனக்கு ரொம்பப் பிடிச்ச கார் XUVதான்!’’ என்றான் தருண். பெரிய 7 சீட்டர் காரில் புகைப்பட நிபுணரோடு சேர்த்து ஐந்தே பேர் மட்டும் எஸ்கேப் ஆன அற்புதமான கிரேட் எஸ்கேப்பில் எக்கச்சக்க அனுபவங்கள்.

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

• டீ சாப்பிடக்கூட ஊட்டிக்கு வண்டியைக் கிளப்பும் வாண்டர்லஸ்ட் தோழர்களில் ஒருவர்தான் செந்தில். ``ஊட்டி வழி எனக்கு அத்துப்படிங்க... கல்லட்டி வழியா இறங்கலாமா... செம த்ரில்லிங்கா இருக்கும்’’ என்று போகும்போதே ஆர்வத்தைத் தூண்டினார் செந்தில்.

• மொத்தம் 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கல்லட்டி மலைப்பாதையை, தமிழ்நாட்டின் மோசமான சாலைகளில் முக்கியமான சாலை என்று சொல்லலாம்.

• சில மாதத்துக்கு முன்பு, எர்டிகா ஒன்று 34-வது வளைவில் இருந்து பாய்ந்து பள்ளத்துக்குள் விழ, மூன்று நாள் கழித்துத்தான் காரையும் ஆள்களையும் கண்டுபிடித்தது காவல்துறை. அதனால், கல்லட்டி பாதையில் எல்லோரும் இறங்கிவிட முடியாது. லோக்கல் கார்களும், முறையான அனுமதி பெற்றவர்களும்தான் இறங்க முடியும்.

• ``அங்கிள், ஹில்ஸ்ல 2-வது கியர்ல இறங்குங்க. பெண்டுல ஓவர்டேக் பண்ணாதீங்க!’’ என்று அட்வைஸ் பண்ணிக்கொண்டே வந்தான் தருண்.

34-வது வளைவு வந்தது. 35-க்குப் போகாமலே 36-க்குத் தாவி மலையில் உருண்ட அந்த எர்டிகா சம்பவம் இங்கேதான் நடந்தது. குண்டு வெடித்த பிறகு அந்த இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது மாதிரி, 34-வது வளைவில் பலத்த பாதுகாப்பு போட்டுக்கொண்டிருந்தார்கள்.

• மலை இறங்கினாலும் த்ரில்லிங் குறையவில்லை. எல்லாமே விலங்குகள் க்ராஸ் செய்யும் இடம். அதனால், அதிவேகம் இங்கே கூடாது. மாலை நேரம் என்பதால், மான்கள், கீரிப்பிள்ளைகள், காட்டுப்பன்றிகள், மலை அணில்கள் என குட்டிக்குட்டி விலங்குகள் சிக்னல் போட்டன.

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

• இடதுபுறம் திரும்பினால் பொக்காபுரம் எனும் ஏரியா. முதுமலையில் ரிஸார்ட்டுகள் கிடையாது. அதனால், முதுமலைக்கோ, பந்திப்பூருக்கோ வருபவர்கள் மசினகுடியில்தான் ரிஸார்ட் புக் செய்ய வேண்டும். ‘வைல்டு வுட் ஹெவன்’ எனும் ரிஸார்ட்டில் ஏற்கெனவே புக் செய்திருந்தோம்.

• மசினகுடியில் ஒவ்வொரு ரிஸார்ட்டின் புக்கிங் நேரம் மறுநாள் 12 வரைதான் என்பதை நினைவில்கொள்க. மசினகுடி போன்ற காட்டுப்பகுதி ரிஸார்ட்டுகளில் தங்குபவர்கள், டீ/காபி/ஸ்நாக்ஸ் என்று வயிற்றை நிரப்பிவிட்டு `தேமே’ என்று அறையில் அடைந்து கிடக்காமல், காரை எடுத்து பந்திப்பூர் வரை ஒரு ரவுண்டு போனால் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமையலாம்.

• ``என் வாழ்நாள்ல நான் இந்தத் தெப்பக்காடு கிரேட் எஸ்கேப்பை மறக்கவே மாட்டேன்’’ என்று புல்லரித்துக் கொண்டே வந்தார் மோகனப்ரியா. ஆம்! சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது மாதிரி, சிறுத்தைப் புலி ஒன்றை அதன் ஏரியாவிலேயே பார்த்து, புகைப்படமும் எடுப்பது என்றால் சும்மா இல்லையே!

• மிகவும் ரிலாக்ஸாக சிறுத்தையார் ஒருவர், மரக்கிளையில் அமர்ந்தபடி வாலை நீட்டியபடி போஸ் கொடுப்பதெல்லாம் வாய்ப்பே இல்லை. `பார்த்துப் போங்க... சிறுத்தைங்க பார்க்கலாம்’ என்று எச்சரித்த பெரியவரை ஏளனம் செய்ததை நினைத்து வருந்தினேன்.

• கூடவே யானைக் கூட்டமும். இருட்டுக்குள் அம்மா யானை, தன் குடும்பத் தலைவர் மற்றும் குழந்தைக் குட்டியுடன் சாலையை க்ராஸ் செய்யக் காத்திருந்தது, வாழ்க்கைப் புத்தகத்தில் இன்னோர் அழகான பக்கம். ஆனால், திரும்பி வரும்போதுதான் யானைகள் க்ராஸ் செய்ததில் ஓர் உண்மை புரிந்தது.

• அதாவது காட்டுப்பகுதிகளில் கார் ஓட்டுபவர்கள், தயவுசெய்து விலங்குகளைக் கண்டால் பக்கத்தில் போய் செல்ஃபி எடுப்பதற்கு மட்டும் காரை நிறுத்தாமல், கொஞ்ச அடி தூரத்திலேயே காரை நிறுத்திப் பாருங்கள். கார் நின்றால், அடுத்த நிமிடம் ரோடு க்ராஸிங்தான். அற்புதமான க்ளிக்கிங்தான்.

• காட்டேஜில் இரவு முழுக்க ஏதேதோ மிருகங்கள் பேக்ரவுண்டு வாய்ஸ் கொடுத்துக்கொண்டே இருந்தன. ``கனவா நனவான்னே தெரியலை அங்கிள்... பயமா இருந்துச்சு!’’ என்றான் தருண்.

• காலை காட்டேஜ் டவரில் ஏறி நின்றால், கிட்டத்தட்ட பாதி முதுமலை வியூ தெரிந்தது. சில காட்டேஜ்களில் பைனாகுலர் வசதி உண்டு என்றார்கள். பைனாகுலரில் பார்த்தால் காட்டுக்குள் யானைகளோ, புலிகளோ... அற்புதமான ஸ்பை ஷாட் கிடைக்கும்.

• மசினகுடி அல்லது முதுமலை வருபவர்கள், ஜீப் சவாரியை மறந்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அடர்ந்த காட்டுக்குள் ஆஃப்ரோடு கூட்டிப்போகிறார்கள். ஒரு ஜீப் சவாரிக்கு 2,500 ரூபாய் கட்டணம். 7 பேர் என்றால் ஷேர் பண்ணிக்கொள்ளலாம்.

• ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படம் பார்ப்பதுபோல் இருந்தது ஜீப் பயணம். காட்டுக்குள் எறும்பு ஊர்ந்தாலே சத்தம் கேட்கும் அமைதி. ஜீப் இன்ஜின் சத்தமே `டர்’ அடித்தது. சுடச்சுட யானைச் சாணங்களே மிரட்டின. தூரத்தில், பக்கத்தில்... என்று யானைகள் பார்த்தோம்.

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

• அடுத்து, தெப்பக்காடு. முதுமலைக் காட்டுக்கு தெப்பக்காடுதான் ஆதாரம். ஆம்! கும்கிகள் உருவாகும் இடம் தெப்பக்காடு. 8.30 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்றார்கள். அப்போதுதான் யானைகள் உண்பதைப் பக்கத்தில் நின்று ரசிக்கலாம். யானைகள்சூழ் உலகில் நுழைந்ததுமே நமக்கு `கூஸ்பம்ப்’ ஆகிவிட்டது.

• சந்தோஷ், கிருஷ்ணா, கிரி, ரகு, அண்ணா, பாமா என வெரைட்டியாக யானைகள் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன. ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு மாவூத்... அதாவது தலைமைப் பாகன். இவருக்குக் கீழ் உள்ளவர் `காவடி’. மாவூத்களுக்கும் காவடிகளுக்கும் முன்பு எல்லா யானைகளும் அன்பால் அடிபணிந்து கொண்டிருந்தன.

• `நல்லநேரம்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த யானை இது... `கேரளாவுல பத்து பேரைப் போட்டுத் தள்ளிச்சே... அதுதான் இது’... `தர்மபுரியில ஒரு அம்மா யானை சேத்துல சிக்கி இறந்துச்சே... அதோட பாப்பா யானை இது’ என்று ஒவ்வொரு கும்கிக்கும் ஒவ்வொரு `பாட்ஷா’ பட ஃப்ளாஷ்பேக் சொன்னார்கள். எல்லா பாட்ஷா யானைகளும் இப்போது மாணிக்கங்களாக, அடக்கமாக ராகி- சோறு-பனைவெல்ல உருண்டைகளை லவட்டிக்கொண்டிருந்தன.

• சில நேரங்களில் மதம் பிடிக்கும்போது யானைகள் காட்டுக்குள் தொலைந்து போய், உயிரைப் பணயம் வைத்து அதை மீட்டுவரும் சம்பவங்களைச் சொன்னபோது, மேலும் கூஸ்பம்ப் ஆனது.

• காட்டுக்குள் சிட்டுக்குருவியைப் பார்த்தாலே பரவசமாக இருக்கும். யானைகளை இவ்வளவு பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் அது என்ன மாதிரியான பரவசநிலை என்பது புரியும். ஒரு தடவை தெப்பக்காடுக்கு வண்டியை விரட்டுங்கள்.

என்ன பார்க்கலாம்? ஊட்டியில் இருந்து...

அவலாஞ்சி (23 கி.மீ)

அவலாஞ்சி என்றால், பனிச்சரிவு என அர்த்தம். பட்டப்பகலிலும் ஸ்விட்சர்லாந்தில் இருப்பதுபோன்ற அனுபவம் கிடைக்கும்.

முகுர்த்தி தேசியப் பூங்கா (80 கி.மீ)

பச்சைப்பசேல் புல்வெளியில், ஜில் க்ளைமேட்டில் செல்ஃபி எடுக்க அற்புதமான ஸ்பாட். விலங்குகள் பார்க்கலாம். பிப்ரவரி-மே, செப்-நவம்பர் வரை சீசன்.

பந்திப்பூர் (43 கி.மீ)

சும்மா காரில் ஒரு ரைடு போனாலே விலங்குகளின் அற்புத தரிசனம். சிறுத்தைகள் அடிக்கடி பார்க்கலாம்.

கோபால்சாமி பேட்டா (71 கி.மீ)

கொண்டல்பேட் எனும் ஏரியாவில், மலைமேல் உள்ள கிருஷ்ணர் கோயில், அருமையான ஆன்மிக ஸ்பாட். காரை நிறுத்திவிட்டு, மலைமேல் பஸ்ஸில் போகும்போது, கீழே கும்பலாக யானைகள் பார்ப்பது பரவசம்.

முத்தங்கா வனவிலங்குச் சரகம் (105 கி.மீ)

முதுமலை போன்றதொரு புலிகள் காப்பகம். விலங்குகள் நிறைந்த காட்டுக்குள் ஜீப் சவாரி உண்டு. செப் முதல் மே வரை சீசன்.

நீலாம்பூர் (98 கி.மீ)

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மலைச்சிகரம். தேக்கு மியூசியம், படகுச்சவாரி, அடயன்பரா அருவி என என்ஜாய் பண்ண ஏராளமான இடங்கள் உண்டு.

முதுமலைக்குப் போகும்போது...

24
மணி நேரமும் காட்டு விலங்குகளால் உயிர்ப்புடன் இருக்கும் அற்புதமான ஒரு காடு, முதுமலை. காட்டுப் பகுதியில் காரில்/பைக்கில் போகும்போது வாகனத்தை விட்டு இறங்கினால், அபராதம் என்பதை நினைவில்கொள்க. முதுமலையில் தங்கும் இடங்கள் கிடையாது. மசினகுடியில்தான் தங்க வேண்டும். 1,000-த்தில் இருந்து ரூம்களும், 3,000-த்தில் இருந்து ரிஸார்ட்டு களும் உண்டு. நடுஇரவில் நடுஇரவில் நடுக்காட்டுக்குள் இருக்கும் ரிஸார்ட்டில் தங்கினால், த்ரில்லிங் விரும்பிகள் விமோச்சனமே பெற்றுவிடுவார்கள்.

எல்லா ரிஸார்ட்களிலும் செக்-அவுட் டைமிங் பகல் 12 மணிதான். ஜீப் சவாரியை மறந்து விடாதீர்கள். ஒரு ஜீப் சவாரி 2,500 ரூபாய். ``சார், ராத்திரி நடுக்காட்டுக்குள்ள போலாம். நிச்சயம் அனிமல்ஸ் பார்த்துடலாம்’’ என்று அணுகும் சில சட்டவிரோதமான சவாரி பார்ட்டிகளிடம் சிக்கிக் கொண்டுவிடாதீர்கள். மாட்டினால்... பெரிய தண்டனை காத்திருக்கும். ரிஸார்ட்டில் மாலை நேரம் காராப்பூந்தி சாப்பிட்டுவிட்டு ரிலாக்ஸ் செய்யாமல், பந்திப்பூர் வரை மெயின் சாலையில் உங்கள் காரிலேயே சவாரி போய்ப் பாருங்கள். நிச்சயம் விலங்குகள் தரிசனம் கிடைக்கும்.

``சம்பாதிச்சு BMW பைக் வாங்குவேன்!’’

த்து வயசுதான்; இன்னும் மழலையாகத்தான் பேசுகிறான் தருண். 6-ம் வகுப்பு படிக்கும் தருணுக்கு பொழுபோக்கே ஆட்டோமொபைல்தான். கார்/பைக் ஓட்டும் வயசு வரவில்லை. ஆனால், தருணின் ஆட்டோமொபைல் அறிவு அசர வைக்கிறது. எந்த கார்/பைக்கைப் பற்றிக் கேட்டாலும் அதன் டைமென்ஷனில் இருந்து மைலேஜ், கி.கிளியரன்ஸ், டெக்னிக்கல் விவரங்கள் வரை அத்தனையும் ‘எந்திரன்’ ரஜினி மாதிரி சொல்லி அசத்துகிறான் தருண்.

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

‘‘அப்பாவோட சேர்ந்து கிக்ஸ் புக் பண்ணப் போனப்போ, நிஸான் ஷோரூம் சேல்ஸ்மேன் அங்கிள், ‘இதுல ஒரு கோடி ரூபாய் கார்ல இருக்கிற வசதிகள்லாம் இருக்கு. 560 டிகிரி கேமரா இருக்கு’னு அடிச்சு விட்டாரு. நான் 90 லட்ச ரூபாய் பென்ஸ் ‘S’ க்ளாஸில் இருக்கிற ‘அட்டென்ஷன் அசிஸ்ட்’ வசதி இருக்கா’னு கேட்டப்போ, முழிச்சாரு. அதேமாதிரி இதில் 360 டிகிரி கேமராதான் இருக்கு. 560 டிகிரி கேமரானு ஒண்ணு கிடையவே கிடையாதுன்னு சண்டை போட்டேன். அதான் எனக்கு கிக்ஸ் பிடிக்கலை.

XUV 500-விலும் அப்படித் தான்... ‘இதில் கூல்டு க்ளோவ் பாக்ஸ்; கூல்டு ஆர்ம்ரெஸ்ட், 7 இன்ச் டச் ஸ்க்ரீன், 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்லாம் உண்டு’ என்று சேல்ஸ்மேன் சொல்ல... ‘நீங்க சொல்றது எல்லாமே W11 (O) வேரியன்ட்டில்தான். W9, W11 மாடலில் வெறும் 17 இன்ச்தான் வரும். 6 இன்ச்தான் டச் ஸ்க்ரீன் வரும். அதேமாதிரி கூல்டு ஆர்ம் ரெஸ்ட்தான்; க்ளோவ் பாக்ஸ்லாம் கூலிங் கிடையாது’ என்று மெர்சல் பண்ணிவிட்டானாம் தருண். அதைத் தாண்டி டெமோவுக்கு வந்த சேல்ஸ்மேன்களே ஆபரேட் பண்ணத் திணறிய சில விஷயங்களைச் செய்து காட்டிப் பிரமாதப்படுத்தி விட்டதைப் பெருமையுடன் சொல்கிறார், தருணின் தந்தை செந்தில்.

‘‘MG ஹெக்டர்... காரோட விலை 23 லட்சத்துக்குள் பொசிஷன் பண்ணினா தேறும். டெஸ்லா இந்தியாவுக்கு வரணும்னா இன்னும் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் வேணும். ஹூண்டாய் வென்யூ, எஸ்யூவிகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கப் போகுதுனு நினைக்கிறேன்’’ என்று பொளந்து கட்டுகிறான் இந்த 10 வயது ஆட்டோமொபைல் நிபுணன்.

‘‘பிடிச்ச பைக் என்ன தம்பி?’’ என்றால்... ‘‘BMW R1250 GS அட்வென்ச்சர் PRO ‘ஹை சஸ்பென்ஷன்’ மாடல் வாங்கணும் அங்கிள்... அதோட பாக்ஸர் ட்வின் இன்ஜின் சத்தமும், 132bhp பவரும், 11.6kgm டார்க்கும் என்னைத் தூங்கவிடாமப் பண்ணுது’’ என்று தருண் சொல்லும்போது, அப்பாவும் அம்மாவும் முறைக்க... ‘‘டாடி, கவலைப்படாதீங்க... நான் சம்பாதிச்சுதான் வாங்குவேன்’’ என்கிறான் தருண் கூலாக.

XUV500  எப்படி?

``மு
தலில் ஹேரியர்தான் புக் பண்ணினேன். என் பையனுக்கு டாடாவோட சர்வீஸும் பிடிக்கலை; இன்ஜின் சத்தமும் பிடிக்கலை. அதான் XUV500 எடுத்துட்டோம்’’ எனும் செந்தில் மாரிமுத்து, இதன் டாப் எண்ட் மாடலான W11-(O) 21.5 லட்சம் விலைக்கு வாங்கியுள்ளார். வசதிகள்தான் XUV-ன் பெரிய ப்ளஸ். 7 இன்ச் டச் ஸ்க்ரீன், புளூசென்ஸ் ஆப், புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் சன் ரூஃப், வாய்ஸ் கமாண்ட், டயர் பிரஷர் மானிட்டர், புரொஜக்டர் லைட்ஸ் என்று... எக்கச்சக்கம். பாதுகாப்பு வசதிகளிலும்தான்.

யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு

18 இன்ச் அலாய் வீல்கள், சாலையில் செம கிரிப். ESP, EBD, ரோல்ஓவர் மிடிகேஷன், 6 காற்றுப் பைகள், ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ், ஆட்டோ வைப்பர், எல்லா வீல்களிலும் டிஸ்க் இருப்பதால், எங்கே வேண்டுமானாலும் XUVயை விரட்டலாம். அதிலும் மலைச்சாலையில், ஹில் டிசன்ட் கன்ட்ரோலை ஆன் செய்துவிட்டு ஓட்டினால்... பயமே இல்லை. எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங், ஹேர்பின் பெண்டுகளில் வளைத்து ஓட்ட செம ஜாலி. ``பின் சீட்ல லேசா தூக்கிப்போடும், அவ்வளவுதான். மத்தபடி எனக்கு இந்த கார்ல குறையே கண்டுபிடிக்க முடியலை அங்கிள். உங்களுக்கு வேணா எதுனா இதில் மைனஸ் தெரியலாம். என் கண்ணுக்கு XUV ஒரு பர்ஃபெக்ட் எஸ்யூவி! ஒரு பெரிய ஃபார்ச்சூனர் வாங்குறதுக்கு XUV வாங்கி ஆஃப்ரோடு பண்ணிக்கலாம்!’’ என்கிறான் தருண்.

- தமிழ், படங்கள்: கே.அருண்

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!