
எலெக்ட்ரிக் ஸ்பெஷல்: ஹூண்டாய் கோனாதொகுப்பு: தமிழ்
விமான நிலையத்துக்கோ, பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கோ, மால்களுக்கோ போனால் உள்ளே சத்தமே போடாமல் சில வாகனங்கள் சுற்றிக் கொண்டிருக்கும். எலெக்ட்ரிக் கார்களின் ஸ்பெஷலே அதுதான். மால்களில் உலவும் எலெக்ட்ரிக் கார்கள் சாலைகளில் வந்துவிட்டால், சுற்றுச்சூழலுக்கு அதைவிட வேறென்ன வரம் வேண்டும்! இனி எலெக்ட்ரிக் கார்களின் காலமாக மாறலாம் என்பதற்குச் சாட்சியாக, அவை வரிசையாக அறிமுகமாக இருக்கின்றன.

அந்த வகையில் ஹூண்டாய் கோனா, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. எலெக்ட்ரிக் கார் என்பதைத் தாண்டி கோனாவின் இன்னொரு ஸ்பெஷல், இது ஒரு எஸ்யூவி என்பது! வென்யூபோல காம்பேக்ட் எஸ்யூவி இல்லை கோனா. க்ரெட்டாபோன்ற மிட்சைஸ் எஸ்யூவி என்றும் சொல்லலாம். இருப்பினும் இதன் நீளம் (4,180 மிமீ) க்ரெட்டாவைவிடக் குறைவுதான்.
கோனாவின் கிரில் டிசைன், காருக்குக் கண்ணைக் கட்டியதுபோல இருக்கிறது. வீல்களும் அதே! மற்றபடி பெரிய வீல் ஆர்ச்சுகள், கட்டுமஸ்தான பானெட், டைட் ஃபிட்டிங் கூரை என பக்கா எஸ்யூவி லுக். சிட்டிக்குள் காரை விரட்டினால், எல்லோருக்கும் கோனா மீதுதான் கண் இருக்கும். உள்ளே, டேஷ்போர்டு செம ப்ரீமியம். தரத்தில் ஹூண்டாய் மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறது. டிரைவிங் மோடுகளுக்கு பட்டன் சிஸ்டம் புதுமை. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதுமையாக இருக்கிறது. டச் ஸ்க்ரீன், இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம். கோனாவை டிரைவர் வைத்து ஓட்ட நினைப்பவர்கள் பாவம்... பின்பக்க இடவசதி மிகவும் குறைவு மக்களே!
காரை ஆன் செய்தால்... அடடா! ‘தட தட’ அதிர்வுகளே இல்லாமல், எஸ்யூவியா இது என வியப்பாக இருக்கிறது. இதில் இருப்பது 64kWH பவர் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரி. 150kWH பவர் கொண்ட இதன் மோட்டார், 204 bhp பவரை வெளிப்படுத்துகிறது. இது பெரிய XL சைஸ் எஸ்யூவிகளுக்கு இணையான பவர். டார்க்கும் சூப்பர்; 39.5 kgm. ஆனால் நமது மார்க்கெட்டுக்கு வரும் கோனா, இதைவிட குறைவான பேட்டரி - பவர் - டார்க்கையே கொண்டிருக்கும் என்கிறார்கள். எனவே ரேஞ்ச்சும் வேகமும் குறையலாம்.

எலெக்ட்ரிக் கார் என்றாலே ரேஞ்ச்தானே முக்கியம். அதாவது இருக்கும் சார்ஜில், எத்தனை கி.மீ காரை ஓட்டலாம் என்பது. ஃபுல் சார்ஜ் செய்யப்பட்ட கோனாவின் டிஜிட்டல் கன்ஸோலின் ரேஞ்ச் மீட்டரைக் கவனித்தால்... 490 கி.மீ எனக் காட்டியது. 50 கி.மீ கொண்ட தினசரிப் பயன்பாட்டுக்கு, ஒரு வாரத்துக்கு இது தாராளம்தானே!
உள்ளே எக்கோ, கம்ஃபர்ட், ஸ்போர்ட் என்று 3 டிரைவிங் மோடுகள். எக்கோ மோடு கொஞ்சம் சுமார்தான். பேட்டரி அவுட் ஆஃப் ரேஞ்சில் இருக்கும்போது, இந்த மோடுதான் கைகொடுக்கும். சிட்டிக்குள் ‘கம்ஃபர்ட்’ மோடு அருமையாக இருக்கும். டிரைவிங் ஜாலியாக இருந்தது. ஆளே இல்லாத சாலையில், வேறென்ன... ஸ்போர்ட் மோடுதான்! ஆக்ஸிலரேஷன் கொடுத்ததும், வீல்களுக்குச் சக்தி கிடைத்து அவை ஸ்பின் ஆகி, சீட்டுக்குப் பின்னால் நம்மைத் தள்ளுவது தெரிந்தது. நீங்கள் எந்த நேரத்தில் த்ராட்டில் ஓப்பன் செய்தாலும், பவர் டெலிவரி அருமை. 20, 30, 50 கி.மீ-யை விடுங்கள்... 90, 120 கி.மீ வேகத்தில்கூட ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்... ‘ஓ கோனா... ஐ லவ் யூ லவ் யூடா’ என்று 'வாலி' அஜித் மாதிரி பாடத் தோன்றுகிறது.


0-100 கி.மீ-யை 10 விநாடிகளுக்குள்ளாவது தொட்டுவிடுமா என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் ஆச்சர்யம் - வெறும் 7 விநாடிகளுக்குள் 100 கி.மீ-யைத் தொட்டு விடுகிறது கோனா. அப்படியென்றால், டிரைவிங் அலுக்காது. இன்னொரு காரணம், பேடில் ஷிஃப்ட்டர்கள். வாவ்! சில கார்னரிங்கில் மட்டும் ஸ்போர்ட் மோடு வேலைக்கு ஆகவில்லை. டல்லான பிரேக்குகளும், லைட் வெயிட் ஸ்டீயரிங்கும் கொஞ்சம் உதவியிருக்கலாம். ஆனால் இல்லை.

எடை அதிகமான பேட்டரியும், ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப்பும் ஓட்டுதல் தரத்தில் நம்மை இம்ப்ரஸ் செய்யவில்லை. இறுக்கமாகவே பயணிக்க வைக்கிறது கோனா. மோசமான குண்டு குழிகளில் வேகத்தைக் குறைக்காமல் போனால், முதுகு காலி! கேபினில் இடவசதி சூப்பர் இல்லை. ஓகே ரகம்தான்; ஸ்பேர் வீலுக்குப் பதிலாக சார்ஜர் கொடுத்திருக்கிறார்கள்.
கோனா, மார்க்கெட்டுக்கு வரும்போது குறைந்த சக்தி கொண்ட பேட்டரியுடன் வரலாம். பவரும் குறைவாகத்தான் இருக்கும். ரேஞ்ச் 312 கி.மீ-யாக இருக்கலாம். ஹூண்டாய் சொன்னபடியே, சுமார் 25-30 லட்சத்துக்கு உள்ளே இந்த எஸ்யூவி வந்தால், மக்கள் மனதில் கோனா இடம்பிடிக்கலாம்.
- தொகுப்பு: தமிழ்