Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி

புது பைக் வாங்க இருக்கிறேன். பெரும்பாலும் அதை நகரத்தில்தான் பயன்படுத்துவேன் என்றாலும், வார இறுதி நாள்களில் தோழியுடன் நெடுஞ்சாலையிலும் பயணிப்பேன். எனவே பில்லியன் சீட் சொகுசும் முக்கியம். என் உயரம் 6.1 அடி. எனக்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். க்ளாஸிக் 350/தண்டர்பேர்டு 350 ஆகியவற்றில் எதை வாங்கலாம்?
 - விவேக், திருவண்ணாமலை.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நீங்கள் உங்களின் தேவைகளைத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். அதன்படி பார்த்தால், க்ளாஸிக் 350 உங்களுக்குப் பொருத்தமான சாய்ஸ். தண்டர்பேர்டு பைக்கை விடக் கொஞ்சம் குறைவான எடை மற்றும் விலை, நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற ஃப்ளாட்டான ஹேண்டில்பார், தடிமனான பில்லியன் சீட் எனக் கவர்கிறது. இதில் தேவைப்பட்டால், வெளிமார்க்கெட்டில் பின்பக்க சீட்டுக்கு பேக் ரெஸ்ட் (தண்டர் பேர்டில் இருப்பது போல) பொருத்திக் கொள்ளலாம். க்ரூஸர் பைக்காக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் தண்டர்பேர்டு - அனலாக் டிஜிட்டல் மீட்டர், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், LED டே டைம் ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் லைட், 20 லிட்டர் பெட்ரோல் டேங்க், பில்லியன் பேக் ரெஸ்ட், Ape Hanger ஸ்டைல் ஹேண்டில் பார், ப்ரொஜெக்டர் ஹெட்லைட் எனத் தனது அதிக விலையை நியாயப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

நான் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் முடித்துள்ளேன். எனக்கு கம்பெனிகளில் வேலை செய்வதில் விருப்பமில்லை. அதனால் கார்களை சர்வீஸ் செய்யும் மெக்கானிக் தொழிலைக் கற்றுகொள்ளலாமா? இதனால் பிற்காலத்தில் என்ன மாதிரியான பலன் கிடைக்கும்? இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய சூழல் இருப்பதால், சர்வீஸ் தொழிலில் பாதிப்பு எற்படுமா? சர்வீஸ் துறையில் அடுத்த 10-20 வருடங்களில் இந்திய ஆட்டோமொபைல் துறை எப்படி இருக்கும்?
- கண்ணன் அறிவு, இமெயில்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

சுருக்கமாகச் சொல்வதென்றால், இன்ஜினீ யரிங்குக்கு முன்பாக நீங்கள் ஆட்டோமொபைல் டிப்ளமோ/ITI ஏதாவது படித்திருந்தால், உங்களுக்கு கார்களின் சர்வீஸ் குறித்த பரிச்சயம் ஓரளவுக்கு இருந்திருக்கும். பொறியியல் படிப்பில் அதற்கான சாத்தியம் மிகவும் குறைவுதான். இருப்பினும் தற்போதைய சூழலில் மெக்கானிக் தொழில் என்பது குறைந்த வருமானம் மற்றும் வாய்ப்பு களைக் கொண்ட துறையாகவே இருக்கிறது. ஏனெனில், சர்வீஸ் தொழில் என்பது அந்தந்த வாகன நிறுவனங்கள் தமக்காக வைத்திருக்கும் டீலர்களின் (சேல்ஸ் & சர்வீஸ்) கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. எனவே, தொழிலைக் கற்றுக்கொண்டு, பிறகு தன்னிச்சையாக சர்வீஸ் சென்டர் தொடங்குவது என்பது, எடுத்த எடுப்பிலேயே நிச்சயம் லாபகரமானதாக இருக்காது.

Multi Brand கார் சர்வீஸ் சென்டர்கள் மீது மக்களிடையே ஒருவித தயக்கம் இருப்பதே இதற்கான காரணம். 2023-ம் ஆண்டில் 3-வீலர்களையும், 2025-ம் ஆண்டில் 2-வீலர்களையும் எலெக்ட்ரிக் மயமாக்குவதில் (150சிசி-க்கும் குறைவான வாகனங்கள்) மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது, எலெக்ட்ரிக் கார்கள் கட்டாயமாக்கப்படுவதும் வெகுதொலைவில் இல்லை. தவிர, இது சர்வீஸ் துறையில் வருமானத்தைப் பெருமளவில் குறைக்கும் என்பதே நிதர்சனம்.


தற்போது மாருதி சுஸூகி டிசையர் காரைப் பயன்படுத்தி வருகிறேன். புதிதாக ஒரு எம்பிவி வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அது சொகுசான மூன்றாவது வரிசை இருக்கையைக் கொண்டிருப்பது அவசியம். மஹிந்திரா மராத்ஸோ மற்றும் டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா ஆகியவற்றில் எதை வாங்கலாம்? எர்டிகா மீது எனக்குப் பெரிய ஈர்ப்பில்லை. இனோவாவின் விலையும் அதிகமாகத் தோன்றுகிறது. என்ன செய்யலாம்?
 - தாமரைக் கண்ணன், திருச்சி.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

உங்களுக்கு மஹிந்திரா மராத்ஸோ நல்ல சாய்ஸாக இருக்கும். எர்டிகாவுடன் ஒப்பிடும்போது இதன் விலை அதிகமாக இருந்தாலும், க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் பெற்றிருப்பதே அந்த எண்ணத்தைத் தகர்த்து விடுகிறது. மேலும் மாடர்ன் டிசைன், தரமான கேபின், போதுமான வசதிகள், மனநிறைவைத் தரும் இடவசதி, சிறப்பான ஓட்டுதல் என ஆல்ரவுண்டருக்கான பேக்கேஜாக இது அசத்திவிடுகிறது. மராத்ஸோவுடன் இனோவா க்ரிஸ்ட்டாவை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றாலும், கொடுக்கும் காசுக்கேற்ற பிராண்டு மதிப்பு - அசைக்க முடியாத நம்பகத்தன்மை - அட்டகாசமான ரீசேல் வேல்யூ - கேபினின் லக்ஸூரித்தன்மை - பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ் என இந்த டொயோட்டா கார், எம்பிவி-யின் அடுத்த செக்மென்ட்டில் தடம் பதித்துக் கலக்குகிறது.  மராத்ஸோ, க்ரிஸ்ட்டா - இரண்டையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தால், உங்கள் குழப்பம் தீர வாய்ப்புண்டு.

எனது பட்ஜெட் 50-60 ஆயிரம் ரூபாய். இதில் எந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்கலாம்? எனக்கு ஒன் ப்ளஸ் 7 ப்ரோ மிகவும் பிடித்திருக்கிறது. என் மகளோ சாம்சங் கேலக்ஸி S10 ப்ளஸ்தான் வேண்டும் என்கிறாள். எனவே இந்த விலைக்கு எந்த மொபைல் நல்ல சாய்ஸாக இருக்கும்?
 - பாலசுப்ரமணியன், கோயம்புத்தூர்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

இரு மொபைல்களிலும் ட்ரிப்பிள் ரியர் கேமரா, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ஃபிரின்ட் சென்ஸார், டூயல் Curved டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், NFC, ப்ளூடூத் 5.0, ஆண்ட்ராய்டு 9 (Pie) இயங்குதளம், டைப்-சி யுஎஸ்பி போர்ட் (வெர்ஷன் 3.1) எனச் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் இதில் விலை குறைவான ஒன் ப்ளஸ் 7 ப்ரோ, பெரிய 6.67 இன்ச் Fluid AMOLED டிஸ்ப்ளே (90Hz) - அதிக கேமரா ரெசொல்யூஷன் மற்றும் Exmor-RS CMOS சென்சார் - பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ் - பின்பக்கத்தில் கொரில்லா க்ளாஸ் 3 & டூயல் LED ஃப்ளாஷ் - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் - 12ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - லேஸர் ஆட்டோ Focus & EIS - வேகமான UFS 3.0 ஸ்டோரேஜ் - PDAF வசதி என அசத்திவிடுகிறது.
இதில் சாம்சங்கில் இருக்கும் மெமரி கார்டு ஸ்லாட் (512 ஜிபி வரை) மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை இங்கே மிஸ்ஸிங் என்பது மைனஸ். தவிர கேலக்ஸி S10 ப்ளஸ் ஸின் டிஸ்ப்ளேவுக்கு கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6 - வயர்லெஸ் சார்ஜிங் - கொஞ்சம் பெரிய பேட்டரி (4,100 maH) - IP68 ரேட்டிங் (Dust & Water Proof) - Punch Hole Notch டிஸ்ப்ளே - முன்பக்க கேமராவின் டூயல் ஆட்டோ Focus - Heart Rate மானிட்டர் - வைஃபை டைரக்ட் வசதி - மெலிதான டிசைன் - குறைவான எடை - Barometer சென்சார் - 10X டிஜிட்டல் Zoom என ஈர்க்கிறது. என்னதான் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் பிராண்டு ஷோரூம்களின் என்ணிக்கையில் சாம்சங் இதயத்தைக் கவர்ந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒன்ப்ளஸ் 7 ப்ரோதான் மனதைத் தொடுகிறது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு