Published:Updated:

பிஎம்டபிள்யூவின் மிரட்டல் ரோட்ஸ்டர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிஎம்டபிள்யூவின் மிரட்டல் ரோட்ஸ்டர்!
பிஎம்டபிள்யூவின் மிரட்டல் ரோட்ஸ்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: பிஎம்டபிள்யூ Z4

பிரீமியம் ஸ்டோரி

பிஎம்டபிள்யூ Z4.... இப்போது ஆறாவது தலைமுறைக்கு வந்திருக்கிறது. முந்தைய ஐந்தாம் தலைமுறை மாடலில்தான், Z4 வரலாற்றில் முதன்முறையாக Retractable Hard Top அறிமுகமானது. இந்நிலையில் புதிய மாடலில் இருப்பதோ ஃபேப்ரிக் ரூஃப்தான். புதிய பிஎம்டபிள்யூ Z4, எப்படி இருக்கிறது?

பிஎம்டபிள்யூவின் மிரட்டல் ரோட்ஸ்டர்!

வெளியே... எல்லாமே மாடர்ன்!

பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரித்தான கிட்னி கிரில்லில், வழக்கமான செங்குத்தான பார்களுக்குப் பதிலாக டைமண்ட் போன்ற மெஷ் இடம்பெற்றுள்ளது. கோடுகளுடன் கூடிய பானெட், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், வளைவுகளுடன் கூடிய பம்பர் ஆகியவை ஸ்மார்ட். இதுபோன்ற புதுமைகளால், கார் பார்க்க செம ஸ்டைலாக இருக்கிறது. பக்கவாட்டுப் பகுதி, ரோட்ஸ்டர் கார்களுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது. ஃபேப்ரிக் ரூஃப், Z4-ன் எடைக்குறைப்புக்கும் கையாளுமைக்கும் உதவியிருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. முன்பக்கக் கதவுக்கு அருகே இருக்கும் ஏர்வென்ட், பின்பக்க பம்பர் மற்றும் டெயில் லைட்ஸ், எல்லாமே செம மாடர்ன் ரகம்!

உள்ளே.. பல வசதிகள் ஆப்ஷனல்தானா?

வெளிப்புறத்தைப் போலவே, உட்புறமும் தலைகீழ் மாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறது. இரட்டை டயல்களுக்குப் பதிலாக, டிஜிட்டல் ஸ்கிரீன் இருக்கிறது. ஆனால் இது சிறிதாக இருப்பதுடன், எதிர்திசையில் இயங்குவது நன்றாக இல்லை. ஸ்போர்ட்ஸ் மோடில் காரை ஓட்டும்போது, இன்ஸ்ட் ரூமென்ட் கன்சோல் பார்க்க எலெக்ட்ரிக் கார்களில் இருப்பதுபோலத் தெரிகிறது. Z4 போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களில், வேகம் செல்லச் செல்ல அதை அனலாக் மீட்டரில் தெளிவாகப் பார்ப்பதே ஒரு அலாதியான அனுபவம் என்பதை மறந்துவிட்டதா பிஎம்டபிள்யூ?

மற்ற கார்களைப் போலவே, டச் ஸ்க்ரீன் மற்றும் கன்ட்ரோல்கள் அனைத்துமே, டிரைவரை நோக்கி வைக்கப்பட்டுள்ளன. பக்கெட் சீட்கள் சொகுசாக இருப்பதுடன், முதுகுக்கு நல்ல சப்போர்ட்டும் கிடைக்கிறது. ஆனால் சீட்களின் உயரம் குறைவாக இருப்பதுடன், விண்ட்ஷீல்டும் குறுகலாக உள்ளது. எனவே மோசமான சாலைகளில் செல்லும்போது, இவை பிரச்னையாக அமையலாம். தவிர 5.8 அடி உயரத்துக்கு அதிகமாக இருப்பவர்கள் அல்லது உடல் பருமனானவர்களுக்கு, புதிய Z4-ன் முன்பக்க இருக்கைகள், கொஞ்சம் அசெளகரியத்தைத் தரலாம். கைப்பை அல்லது பேக் வைக்க, சீட்களுக்கு இடையே இடம் இருக்கிறது. ஆனால் டேஷ்போர்டில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லை. 281 லிட்டர் பூட் ஸ்பேஸில், ஒரு பெரிய சூட்கேஸ் மட்டும் வைக்கலாம். சாஃப்ட் டாப் குறைவான இடத்தையே டிக்கியில் எடுத்துக் கொண்டாலும், ஸ்பேஸ் சேவர் அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது.

லேட்டஸ்ட் பிஎம்டபிள்யூ கார்களைப் போலவே, தரம் மற்றும் வசதிகளில் அசத்துகிறது புதிய Z4. ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, 2 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோ பார்க்கிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை உள்ளன என்றாலும், இதில் பல ஆப்ஷனல் அம்சங்களே! 10.25 டச் ஸ்க்ரீன் கொண்ட ஐ-டிரைவ் சிஸ்டம், எதிர்பார்த்தபடியே பயன்படுத்த சிறப்பாக இருக்கிறது. ரோட்டரி கன்ட்ரோலர் இருப்பதால், மெனுவுக்குள்ளே செல்வது ஈஸி.

எக்ஸாஸ்ட் சத்தமே போதும்!

இந்தியாவில் இரு வேரியன்ட்களில் வந்திருக்கிறது பிஎம்டபிள்யூ Z4. SDrive20i மாடலில் உள்ள 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் - 197bhp பவரை வெளிப்படுத்துகிறது. M40i மாடலில் இருக்கும் 3.0 லிட்டர், 6 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் - 340bhp பவரைத் தருகிறது. இரண்டுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டுள்ளன. M40i மாடலின் ஸ்போர்ட்டி பொசிஷனிங்குக்கு ஏற்ப, அதில் M ஸ்போர்ட் டிஃப்ரன்ஷியல் - M ஸ்போர்ட் பிரேக்ஸ் - 19 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. இதில் சிலவற்றை வழக்கமான sDrive20i மாடலிலும் பொருத்திக் கொள்ளலாம் என்பது ப்ளஸ்.

M40i மாடலை ஸ்டார்ட் செய்த உடனேயே, எக்ஸாஸ்ட் சத்தமே காரின் பவரை உணர்த்தி விடுகிறது. வேகம் செல்லச் செல்ல, டிரைவரின் காதுகளுக்கு எக்ஸாஸ்ட் சத்தம் செம சிம்பொனியாக ஒலிக்கிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருப்பதால், 1,700 ஆர்பிஎம் முதலேயே பவர் டெலிவரி ஆகத் தொடங்கிவிடுகிறது. 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 4.88 விநாடிகளிலேயே தொட்டு விடுகிறது பிஎம்டபிள்யூ Z4. கியர்களுக்கு இடையேயான பர்ஃபாமன்ஸும் வாவ் ரகம். இப்படி எந்த ஆர்பிஎம்மிலும் பவர் கிடைப்பதால், எந்த கியரில் இருந்தாலும் முன்னே செல்லும் காரை எளிதாக ஓவர்டேக் செய்யலாம்.

பிஎம்டபிள்யூவின் மிரட்டல் ரோட்ஸ்டர்!

ஸ்போர்ட்டியில் Z4 டல்லா?

ஸ்போர்ட்டியான காருக்கு ஏற்றபடி சஸ்பென்ஷன் செட்-அப் இருந்தாலும், அது கரடுமுரடான சாலைகளில் எதிர்பார்த்ததை விடக் குறைவான அதிர்வுகளையே கடத்துகிறது. டிரைவ் மோடுகளில் ஸ்போர்ட்ஸ் செட்டிங்கைப் பயன்படுத்தும் போதும், அது பெரிய இடர்பாடைத் தரவில்லை. அதிக ரோடு கிரிப் கிடைப்பதால் (உபயம்: 19 இன்ச் வீல்கள்),  திருப்பங்களில் புதிய Z4 காரைச் செலுத்துவது ஃபன்னாக இருக்கிறது. ஆனால் போர்ஷே பாக்ஸ்டருடன் ஒப்பிடும்போது, இந்த காரின் ஸ்டீயரிங் மற்றும் வேகம் டல்லாக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. இந்த ஏரியாவில்தான் தனது ஸ்போர்ட்டி திறனில் இருந்து பிஎம்டபிள்யூ விலகியிருக்கிறதோ?

இரண்டில் எது வேணும்?

ஷார்ப்பான டிசைன், சிறப்பான ஓட்டுதல், அதிக வசதிகள், M40i வேரியன்ட்டின் பர்ஃபாமன்ஸ் என இந்த காரின் ப்ளஸ் பாயின்ட்கள் அதிகம். ஆனால் செம ஸ்போர்ட்டி அனுபவம் வேண்டும் என்பவர்களுக்கு, கிட்டத்தட்ட இதே விலையில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ M2 காம்பட்டிஷன் கார் பக்கா சாய்ஸாக இருக்கும். ஏனெனில் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய மாடலின் கையாளுமை கொஞ்சம் டல் ரகம்தான். எனவே க்ரூஸர் பாணியில் புதிய Z4 காரைப் பயன்படுத்த விரும்புவோருக்கு, சென்னை ஆன் ரோடு விலையான 81.15 லட்ச ரூபாய்க்குக் கிடைக்கும் SDrive20i நல்ல ஆப்ஷன்; இது M40i வேரியன்ட்டைவிட 15 லட்ச ரூபாய் விலை குறைவு!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு