Published:Updated:

கிளான்ஸாவா... பெலினோவா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - டொயோட்டா கிளான்ஸா

பிரீமியம் ஸ்டோரி

ஃபியட், ஃபோக்ஸ்வாகன், ரெனோ, PSA என ஐரோப்பியச் சந்தையில் கூட்டணிதான் வெற்றி என்றாகிவிட்டது. ஆசியாவில் இப்படி இல்லையே என எதிர்பார்த்த வேளையில்தான் வந்திறங்கியிருக்கிறது சுஸூகி-டொயோட்டாவின் கூட்டணி. ஜப்பானின் இரு பெரும் தலைகள் ஒன்றுசேர்கிறார்கள் என்றால் உலகம் முழுவதும் கொண்டாட்டம்தான். இந்தக் கொண்டாட்டத்தில் நமக்குக் கிடைத்த ஸ்வீட், கிளான்ஸா.

கிளான்ஸாவா... பெலினோவா?

கிளான்ஸாவா?

பெலினோவில் சில மாற்றங்களைச் செய்து அதற்கு கிளான்ஸா என்று பெயர் வைத்துள்ளது டொயோட்டா. காரில் பேட்ஜை மாற்றிவிட்டால் எது பெலினோ, எது கிளான்ஸா எனக் கண்டுபிடிப்பது கடினம். பெயின்ட், LED, ஹெட்லைட் டிசைன், அலாய் வீல் என வெளியில் எல்லாமமே ஒன்றுதான். பெலினோவின் அதே அசெம்பிளி லைனில்தான் கிளான்ஸாவும் உருவாகிறது. முன்பக்க கிரில்லை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.

கிளான்ஸாவின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பெலினோவில் இருப்பதுதான். 83bhp பவர் தரும் 1.2 லிட்டர் K12M இன்ஜின் மற்றும் 90bhp, 1.2லிட்டர் K12N மைல்டு ஹைபிரிட் - டூயல்ஜெட் இன்ஜின் ஆப்ஷன்கள் உண்டு. ஹைபிரிட் மாடலை ஓட்டியது வித்தியாசமான அனுபவம்.

இந்தப் புதிய இன்ஜின், 90bhp பவர் தருகிறது. வழக்கமான K12M இன்ஜினை விட இது 7bhp அதிகம். முன்பக்க பேசஞ்ஜர் சீட்டுக்கு அடியில் ஹைபிரிட் சிஸ்டத்துக்காக லித்தியம் ஐயன் பேட்டரியை வைத்துள்ளார்கள். டூயல்ஜெட் என்ற பெயரிலேயே தெரிந்திருக்கும் - ஒவ்வொரு சிலிண்டரிலும் இரண்டு பெட்ரோல் இன்ஜெக்டர்கள் இருக்கும் என! இது மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தோடு சேரும்போது, மைலேஜ் அதிகரிக்கிறது. அராய் டெஸ்ட்டிங்கில் வழக்கமான பெலினோ, லிட்டருக்கு 21.01 கி.மீ மைலேஜ் கொடுத்தது என்றால், ஹைபிரிட் கிளான்ஸா 23.87 கி.மீ மைலேஜ் தருகிறது.

கிளான்ஸாவா... பெலினோவா?

மொத்தப் பாராட்டுகளையும் ஹைபிரிட் சிஸ்டத்துக்குக் கொடுத்துவிடவும் முடியாது. ஹைபிரிட் சிஸ்டம், வீணாகும் பவரை பேட்டரிக்கே திரும்ப வழங்குகிறது என்றால், இந்த டூயல்ஜெட் சிஸ்டம் காரின் Thermal Efficiency-யை அதிகரிக்கிறது. அதாவது இதில் பெட்ரோல்-காற்று கலவை எரிவதற்குக் குறைவான இடமும், அதிகமான அழுத்தமும் கொடுக்கப்படுவதால், இன்ஜின் திறன் முன்பைவிட அதிகரிக்கிறது. `வெப்பமும் அதிகரிக்குமே' என்றால், `அதைக் கட்டுப்படுத்தத்தான் பிஸ்டன்களுக்குக் கீழ் ஆயில் கூலிங் ஜெட் வைத்துள்ளோம்' என்கிறார்கள். இன்ஜெக்டர்களுக்குத் தனி போர்ட்டும், வாட்டர் கூல்டு EGR-ம் கொடுத்துள்ளதால், காற்று மாசு குறைவது மட்டுமில்லை; இந்த இன்ஜினின் திறனும் ஏகத்துக்கு அதிகரிக்கிறது.

கிளான்ஸாவா... பெலினோவா?

இன்ஜின் ஓகே... டிரைவிங்?

த்ராட்டிலைத் தட்டியதும் குஷியாகி விடுகிறது கிளான்ஸா. டர்போ சார்ஜர் போல இந்த ஹைபிரிட் சிஸ்டத்தின் e-boost, 1200-1600rpm-க்குள் வந்து கொஞ்சம் உற்சாகத்தைக் கூட்டுகிறது. ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்தால், ஏதோ இழுப்பது போல லைட்டாக உணரலாம். இதற்குக் காரணம் ஹைபிரிட் சிஸ்டம் மூலம் பேட்டரி சார்ஜ் ஆவதுதான். பேட்டரி எப்போது சார்ஜ் ஆகிறது, எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறது என்பதெல்லாம் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரிலேயே தெரியும்.

காரின் ஆரம்பகட்ட பர்ஃபாமன்ஸ் நன்றாக இருந்தாலும், இதன் மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட்டும் சாதாரண K12 இன்ஜினைவிட சுமார். என்னதான் 7bhp பவர் அதிகமாக இருந்தாலும், இந்த கிளான்ஸா 0-100 போட்டியில் பெலினோவை விட வேகம் குறைவு (13.56 நொடிகள்). 5,000rpm-க்கு மேலே சென்றால், டூயல்ஜெட் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிக் ஏற்றுகிறது. பவர், பர்ஃபாமன்ஸ், ரிஃபைன்மென்ட் எல்லாம் பழைய இன்ஜினுக்குச் சளைத்ததில்லை. சத்தம் மட்டும் K12 இன்ஜினுக்குத் தொண்டை கட்டியது போல ஆகிவிட்டது. ஸ்போர்ட்டி சவுண்ட் வேண்டுமென்றால் பெலினோதான் வாங்கவேண்டும். ஸ்டீயரிங் சிறப்பாக இருக்கிறது. 195/55 R16 டயர்களும் சஸ்பென்ஷனும் - அதிர்வுகளைக் கட்டுப்படுத்தி, சொகுசான ஓட்டுதலைக் கொடுக்கின்றன.

இன்டீரியர் எப்படி?

ஸ்டீயரிங்கில் இருக்கும் லோகோவைத் தவிர வேறு எதுவுமே மாறவில்லை. டேஷ்போர்டு லேஅவுட், மெட்டீரியல் மற்றும் டிசைன் அப்படியே பெலினோவில் இருப்பதுதான்.  இதில் இருக்கும் ஸ்மார்ட் ப்ளே, டொயோட்டாவின் வெர்ஷன். இதன் பெயர் ஸ்மார்ட் ப்ளேகாஸ்ட் என்கிறார்கள். ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி இருக்கிறது. ஆனால் பெலினோவைப் போலவே நேவிகேஷன் மிஸ்ஸிங். பூட் கொஞ்சம் உயரம். எடை குறைவான கதவுகள், நம்பிக்கை தரும்படியாக இல்லை.

கிளான்ஸாவா... பெலினோவா?
கிளான்ஸாவா... பெலினோவா?

வாங்கலாமா?

இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். கிளான்ஸா வாங்கலாமா, பெலினோ வாங்கலாமா? கிளான்ஸா ரூ.8.83 லட்சம் முதல் ரூ.10.77 லட்சம் வரை கிடைக்கிறது. பார்க்க விலை அதிகமாக இருப்பதுபோல் தெரியலாம். ஆனால் கிளான்ஸாவின் G மற்றும் V வேரியன்ட்டுகள், பெலினோவின் விலை உயர்ந்த Zeta மற்றும் Alpha வேரியன்ட்டுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெட்ரோல்-மேனுவல் மற்றும் CVT வேரியன்ட்டுகளின் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை.

இந்த இரண்டுமே ஒரே கார்தான். ஆனால், கிளான்ஸா எடுப்பதில் உங்களுக்கு இரண்டு அட்வான்டேஜ் இருக்கிறது. ஒன்று, மைல்டு ஹைபிரிட் இன்ஜின். கிளான்ஸாவின் G வேரியன்ட்டின் விலை, பெலினோ ஹைபிரிட் மாடலை விடச் சுமார் ரூ.70,000 குறைவு. இரண்டாவது, கிளான்ஸாவில் டொயோட்டாவின் 3 ஆண்டு/1,00,000 கி.மீ வாரன்ட்டி வருகிறது. மாருதியில் வெறும் 2 ஆண்டு/40,000 கி.மீ வாரன்ட்டி கிடைக்கிறது.

செம விலையில் நல்ல மைலேஜ் கார் வேண்டும்; மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இருந்தால் சூப்பர் என ஆசைப்பட்டால், டொயோட்டா கிளான்ஸாவின் டூயல்ஜெட் இன்ஜின் வேரியன்ட்டைத் தாராளமாக எடுக்கலாம். ஒரு பின்குறிப்பு - தற்போது வைத்திருப்பது அறிமுக விலைதான் என்று கூறியிருக்கிறது டொயோட்டா.

தொகுப்பு:  ரஞ்சித் ரூஸோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு