Published:Updated:

க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?
க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் வென்யூ

பிரீமியம் ஸ்டோரி

மே 21-ம் தேதி, நடுக்கடலில் கப்பலின் மேல்தளத்தில் வென்யூவை அறிமுகம் செய்து ஹூண்டாய் கெத்துக்காட்டியது. ஹூண்டாயின் நம்பிக்கையைக் தகர்க்கவில்லை வென்யூ. கார் விற்பனைக்கு வந்த வேகத்தில் 33,000 புக்கிங்குகள் குவிந்துவிட்டன. ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான i20-க்கும், மிட்சைஸ் எஸ்யூவியான க்ரெட்டாவுக்கும் நடுவில் இதை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், நெக்ஸான், எக்ஸ்யூவி300 என்று காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கெல்லாம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கும் வென்யூவில், கௌஹாத்தியிலிருந்து ஷில்லாங் வரை ஒரு டிரைவ் அடித்தோம்.

க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

ஹலோ, நானும் எஸ்யூவிதான்!

சட்டெனப் பார்த்தால், க்ரெட்டாவைச் சுருக்கி டிசைன் செய்ததுபோல்தான் இருக்கிறது வென்யூ. பல்க்கியான சான்டா ஃபீ காரில் இருப்பது போன்ற கிரில்லைப் பார்த்தால், `பெரிய காரா இருக்குமோ!’ என்று காரைச் சுற்றிவந்தால், பொசுக்கென முடிந்துவிடுகிறது. அட ஆமாம்... 4 மீட்டருக்குட்பட்ட கார்தான் இது (3,995 மிமீ). ஒரு காம்பேக்ட் எஸ்யூவிக்கு இது சரியான நீளம்தான். ஆனால் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, உயரமும் அகலமும் குறைவுதான் (1,590/1,770 மிமீ). சிறிய கார் என்பதாலோ என்னவோ, ஜம்மென்ற ரோடு பிரசன்ஸ் இதில் மிஸ்ஸிங்.

i20 காரின் மாடிஃபைடு பிளாட்ஃபார்மில்தான் வென்யூ தயாராகிறது. 69% HSS (High Strength Steel) கொண்டு தயாரிக்கப்பட்டதால், திடமாகவும் உறுதியாகவும் இருக்கும் என்கிறது ஹூண்டாய். வீல்களைச் சுற்றி ஒரு ஏர் கர்டெய்ன் இருக்கிறது. இது, சிறப்பான ஏரோ டைனமிக்ஸுக்காகவும், வெளிக்காற்றுச் சத்தத்தைக் குறைப்பதற்காகவும் பொருத்தப் பட்டிருக்கிறதாம்!

ஹெட்லைட்ஸ், ஸ்ப்ளிட் ஸ்டைலில் இருக்கின்றன. லேட்டஸ்ட் கார்களில் இப்போது ஒரு ட்ரெண்ட் பரவிவருகிறது. அதாவது, ஹெட்லைட் கீழேயும், டே டைம் ரன்னிங் விளக்குகள் மேலேயும் இருப்பதுதான் அது. வென்யூவிலும் அந்த மாடர்ன் டிசைன்தான். DRL-க்கு LED. இதன் பாடி கிளாடிங், காரைக் கொஞ்சம் கெத்தாகக் காட்ட முயல்கிறது. ஃப்ளாட்டான பானெட், உயர்ந்திருக்கும் கேபின், உறுதியான ஷோல்டர் லைன், ரூஃப் ரெயில், 16 இன்ச் அலாய் வீல்களுக்கான ஆர்ச்சுகள் எல்லாமே, `ஹலோ, நானும் எஸ்யூவிதான்’ என்கின்றன.

க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

பின்னாடி என்ன இருக்கு?

காரின் பின்பக்க டிசைனுக்காக, அதிகமாக  அலட்டிக் கொள்ளவில்லை ஹூண்டாய். டெயில் லைட்டிலிருந்து ரூஃப் ரெயில் வரை, காரின் கீழே இருக்கும் சில்வர் நிற ஸ்கஃப் பிளேட்டுகள் வரை எல்லாமே சிம்பிள்தான். டெயில் லைட்டிலும் LED மயம். இண்டி கேட்டர் லைட்களைக் கொஞ்சம் உள்ளடக்கி வைத்துள்ளது புதுமை. பம்பருக்குக் கீழே அழகாக இரண்டு விளக்குகள் கொடுத்திருந்தார்கள். பனிவிளக்குகள்தான் இங்கே ஷிஃப்ட் ஆகிவிட்டனவோ என்று நினைத்தால்...
அது ரிவர்ஸ் லைட்.

215/60 R16 டயர்கள், செமையான அலாய் வீல் டிசைனோடும் எஸ்யூவிக்கான ஜீனோடும் பக்காவாக இருக்கின்றன. இதன் மேல்பக்க டிசைன், எனக்கென்னவே மாருதியின் பிரெஸ்ஸாவை நினைவுப்படுத்துவது போலவே இருந்தது. அதாவது, வென்யூவைப் பார்த்து க்ராஸ்ஓவர் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்று ஹூண்டாய் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
உள்ளே...

சூட் கோட்டில் பக்காவாக டக்-இன் செய்துகொண்டு, ஷூ மாட்டி- டை கட்டிய ஒரு ஜென்டில்மேனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படித்தான் காருக்குள் நுழைந்ததும் ஜென்டிலாக நம்மை வரவேற்கிறது இதன் டேஷ்போர்டு டிசைன். அந்த ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீனே போதும். ஹூண்டாயின் டேஷ்போர்டு இப்போதெல்லாம் அந்தளவு நீட் அண்ட் க்ளீன். ஆல் பிளாக் தீமில் அங்கங்கே சில்வர் நிற ஹைலைட்டுகளும், தையல் வேலைப்பாடுகளும் அருமை! (ஸ்டீயரிங் வீல், கியர் லீவர், சீட்களைக் கவனியுங்கள்.) ஃபிட்- ஃபினிஷ், தரமும் வழக்கம்போல சூப்பர்.

சில கார்களில் டேஷ்போர்டு வெயிலில் ரிஃப்ளெக்ட் ஆகும். வென்யூவின் டெக்‌ஷர்டு டேஷ்போர்டில், அந்தப் பிரச்னை இருக்காது. ஏர்வென்ட்டுகள்கூட சூப்பரான டேம்பர் செட்டிங்கில் கலக்குகின்றன. ஸ்டீயரிங்கும், கியர் லீவரும்கூட பிடிப்பதற்கே ஆசையாய் இருக்கின்றன. `இவ்வளவு தரமா’ என்று டேஷ்போர்டுக்குக் கீழே கவனித்தால்... சில ஹார்டு பிளாஸ்டிக்ஸ் தெரிகின்றன.

இடம் போதுமா?

தரம், க்ரெட்டாவின் ட்வின்தான்! ஆனால், இடவசதியில் க்ரெட்டாவுக்குத் தம்பிதான் வென்யூ. விண்டோக்களில் இருந்து வீல்பேஸ் வரை எல்லாமே சிறியது. இதன் வீல்பேஸ், 2,500 மிமீ. ஆனால், இதன் பெரிய டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட்டால், இந்த இடவசதிக் குறைபாடெல்லாம் மறந்து விடுகிறது. டிரைவிங் பொசிஷன் சூப்பர். வெளிப்பக்க விஸிபிலிட்டி, இதன் உயரமான சீட்டிங் பொசிஷனால் அற்புதமாக இருக்கிறது. இதன் குஷனிங் மட்டும் நீண்டதூரப் பயணங்களுக்கு எடுபடுமா எனத் தெரியவில்லை.

பின்பக்க இடவசதி... ப்ச்! இந்த செக்மென்ட்டிலேயே குறைவான இடவசதி வென்யூவில்தான். லெக்ரூம்... ரொம்ப கஷ்டம். இரண்டு பேர் ஜாலியாக உட்காரலாம். மூன்றாவது நபர் கொஞ்சம் பரிதாபம்தான். முன்பக்க உயரமான சீட்கள், பின்பக்க சிறிய விண்டோக்கள் எல்லாம், பிக்பாஸ் வீடுபோலத்தான்; வெளியே நடப்பது தெரியாது. ஒரு நல்ல விஷயம் - உயரமான முன்பக்க சீட்களுக்கு அடியில், பின்பக்கப் பயணிகள் காலைக் கீழே நீட்டி உட்காருவதற்கு ஏற்ப இழுத்துக்கொள்ளலாம்.

க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

கனெக்ட்டட் காரா... அப்படின்னா?

8 இன்ச் கொண்ட ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன்தான், வென்யூவின் கேபினில் முதல் அட்ராக்‌ஷன். எக்கோஸ்போர்ட்டில் வெறும் 6.5 இன்ச்தான். ஆனால், ஃபோர்டின் சின்ன SYNC3 கொண்ட டச் ஸ்கிரீன், அத்தனை பளிச்சென இருக்கும். வென்யூவின் டச் ஸ்கிரீன் வெயிலில் கிளாரடித்து, க்ளாரிட்டியைக் காலி செய்கிறது.

கனெக்ட்டிவிட்டி ஏரியாவில் ஹூண்டாயை அடித்துக்கொள்ள முடியாது. `இந்தியாவின் ஃபர்ஸ்ட் கனெக்ட்டட் கார்’ என்கிற அடைமொழியுடன் வருகிறது வென்யூ. ஆம்! உள்ளேயே ஒரு சிம் கார்டு, உங்களை எப்போதுமே காருடன் கனெக்ட்டட் ஆக வைத்துக்கொள்கிறது. இதற்குப் பெயர் ப்ளூ லிங்க் கனெக்ட்டிவிட்டி. அது மட்டுமல்ல, போன் மூலமாகவே காரை லாக்/அன்லாக், ஸ்டார்ட்/ஸ்டாப், ஏ.சியை ஆன்/ஆஃப் எல்லாமே செய்துகொள்ளலாம். இதை காருக்குள்ளே இருந்துதான் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. எந்த இடத்தில் இருந்தும் இதைச் செய்யலாம். இதைத் தாண்டி காரின் இருப்பிடத்தை ட்ராக் செய்வது, ஸ்பீடு அலர்ட், டயர் ஃப்ரஷர், ஜியோஃபென்ஸிங் என கூல் வசதிகள் நிறைய!

பிராக்டிக்கல் காரா வென்யூ?

ஆம்! வென்யூ நிச்சயம் பிராக்டிக்கலான கார்தான். சின்னச் சின்னப் பொருட்களை வைத்துக் கொள்ள ஏகப்பட்ட இடவசதி உண்டு. டோர் பாக்கெட்டுகளில் 1 லிட்டர் தண்ணீர்பாட்டில் வைக்க இடம், பூட் ஸ்பேஸில் 350 லிட்டர் இடம் என்று ஸ்டோரேஜ் ஸ்பேஸுக்கெல்லாம் பஞ்சமில்லை. இரண்டு பெரிய லக்கேஜ்களை ஏற்றி டூர் அடிக்கலாம். இதைத் தாண்டியும் முக்கியமாக, அந்த வயர்லெஸ் போன் சார்ஜிங்கைச் சொல்லலாம். இந்தச் சிறிய காரில், பின்பக்கப் பயணிகளுக்கு ஏ.சி வென்ட்டும் உண்டு.

இதன் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டமும் செம. வாய்ஸ் மூலமாகவே பல விஷயங்களைச் செய்துகொள்ளலாம். நேவிகேட் to சென்னை என்று ரூட் மேப் போடுவது, ஏ.சி-யை ஆஃப் செய்வது, கதவைத் திறப்பது என்று ஏகப்பட்ட விஷயங்கள் அடக்கம். இதைத் தாண்டி ரோடு சைடு அசிஸ்டன்ஸ், SOS உண்டு. இதற்கான பட்டன், ரியர்வியூ மிரர்-க்குப் பின்னால் இருக்கின்றன.

இதுபோக ரியல் டைம் டிராஃபிக் அப்டேட்ஸ், வெஹிக்கிள் டயக்னஸ்டிக்ஸ், மெயின்டனென்ஸ் அலர்ட் என்று ப்ளூ லிங்க் கனெக்ட்டிவிட்டியில் மொத்தம் 33 வகையான வசதிகள் உண்டு.

பாதுகாப்பிலும் வியக்க வைக்கிறது வென்யூ. 6 காற்றுப்பைகள், ABS, EBD, ESP, பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ISOFix சீட் மவுன்ட், ஸ்பீடு சென்ஸிங் டோர் லாக் என்று ஏகப்பட்ட வசதிகள். சீன் போடவும் வென்யூவில் சில அம்சங்கள் உண்டு. சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி... அடடா! நிச்சயம் வென்யூ, பிராக்கடிக்கலான கார்தான்.

க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

பெட்ரோலா, டீசலா... எது ஜாலி டிரைவிங்?

குழம்பாமல் நோட் செய்துகொள்ளுங்கள். மொத்தம் மூன்றுவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது வென்யூ. 1.4 லிட்டர் (90bhp), 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட ஒரே ஒரு டீசல் இன்ஜின்; 1.2 லிட்டர் (83bhp), 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்கொண்ட பெட்ரோல்; 1.0 லிட்டர், டைரக்ட் இன்ஜெக்‌ஷன் உடனான டர்போ பெட்ரோல் இன்ஜின். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் உண்டு.

முதலில் டீசல்! க்ரெட்டா, i20, வெர்னாவில் இருக்கும் அதே 1.4லிட்டர் இன்ஜினை ஸ்டார்ட் செய்தேன். ஐடிலிங்கில் அவ்வளவாக அதிர்வுகள் இல்லை. த்ராட்டிலை மிதித்த விநாடி, ஸ்மூத்தாகக் கிளம்பியது வென்யூ டீசல். பிரெஸ்ஸாவைவிட ஸ்மூத் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். 1,800 rpm-க்குக் கீழே... ஆம்... அந்த டர்போ லேக் லேசாகப் படுத்தத்தான் செய்கிறது. அதைத் தாண்டித்தான் இன்ஜின் விழிக்கிறது. அதேநேரம் 5,000 rpm வரை இதை இழுத்து என்ஜாய் பண்ண முடியவில்லை. ஆக பொறுமையாக ரசித்து ஓட்டுவதற்கு வென்யூ டீசல் சரியான சாய்ஸ்.

0-100 கி.மீ-யை பொறுமையாக 15.48 விநாடிகளில் கடந்தது. இதுவே பிரெஸ்ஸாவுக்கு 12.96 விநாடிகளும், எக்கோஸ்போர்ட்டுக்கு 12.74 விநாடிகளும் ஆகும்.

பெட்ரோலுக்கு வரலாம். இதன் ஸ்பெஷலே 1.0 லிட்டர், GDi (Direct Injection) டர்போதான். 120 bhp பவரும், 17.2 kgm டார்க்கையும் வாரி வழங்குகிறது இந்த பெட்ரோல் இன்ஜின். வழக்கம்போல 3 சிலிண்டர்தான். ஆனால் அதிர்வுகள் தெரியவில்லை. ஐடிலிங்கில் வெல் பேலன்ஸ்டு. இந்த அலுமினிய இன்ஜினின் பேலன்ஸர் ஷாஃப்ட்டில் ஸ்மூத்னெஸ்க்காக வேலைபார்த்துள்ளார்கள். ஆனால் இதிலும் டர்போ லேக் தெரிகிறதே? பவர் டெலிவரியும் அந்தளவுக்கு பன்ச்சாக இல்லை. டீசல் இன்ஜின்போல மிட்-ரேஞ்ச்தான் அருமை. மைலேஜுக்கான ட்யூனிங் என்கிறது ஹூண்டாய். ஒரு விஷயம் - எக்கோஸ்போர்ட்டில் எக்கோபூஸ்ட் இன்ஜினோடு இந்த வென்யூ டர்போவை ஒப்பிட முடியவில்லை. ஆனால் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், செம லைட். 

அடுத்து, பெட்ரோலில் DCT (Dual Clutch Transmission) கியர்பாக்ஸ். இந்த ட்வின் கிளட்ச் கியர்பாக்ஸின் ரெஸ்பான்ஸ் நல்ல வேகம். ஜெர்க்கே தெரியவில்லை. இன்ஜினுடன் நல்ல பார்ட்னர்ஷிப். குறைந்த வேகங்களில் நல்ல ஸ்மூத்னெஸ். பேடில் ஷிஃப்டர்களைத் தேடினால்... இல்லை. ஆனால் ஏதாவது கார்னரிங்கில் வேகம் குறைக்கும்போது, அற்புதமாக டவுன்ஷிஃப்ட் நடக்கிறது இந்த கியர்பாக்ஸில். இந்த 1.0 பெட்ரோல் Di-DCT காம்பினேஷன் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பர்ஃபாமன்ஸில் டீசலைவிட அசத்துகிறது. 0-100 கி.மீ-க்கு 12.58 விநாடிகள்தான் ஆனது.

க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

டீசலின் கிளட்ச் செம லைட் வெயிட். பயன்படுத்த அற்புதமாக இருக்கிறது. பெட்ரோலின் கியர்பாக்ஸ் நல்ல ஸ்மூத். ஹூண்டாய் இன்ஜினீயர்கள், வென்யூவின் சஸ்பென்ஷனை கொஞ்சம் ஸ்டிஃப்பாக வைத்திருக்கிறார்கள். அதனால் மேடு-பள்ளங்களில் கொஞ்சம் இறுக்கமாகப் பயணிக்க வேண்டும். எஸ்யூவி என்பதால் லாங் வீல் டிராவலும், 195 மிமீ கி.கிளியரன்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அதனால் ஸ்பீடு பிரேக்கர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
ஷாக் அப்ஸார்பர்களை நன்றாக இயக்குகின்றன இதன் 16 இன்ச் வீல்கள். மோசமான சாலைகளில் சத்தமில்லாமல் வேலையைச் செய்கிறது இதன் சஸ்பென்ஷன்.

ஹூண்டாயில் ஸ்டீயரிங் பற்றிய குறைபாடு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த இன்டர்நெட் கனெக்ட்டட் காரின் ஸ்டீயரிங், வீல்களுடன் கனெக்ட் ஆக மறுப்பதுபோலவே ஓர் உணர்வு. ஆனால் இதன் குறைவான பாடிரோலாலும், சட் சட் என திசை மாற்ற முடியும் ஸ்டீயரிங்காலும் அந்தக் குறை பெரிதாகத் தெரியவில்லை. டிராஃபிக்கில் லேசாகவும், கஷ்டமில்லாமலும் இயக்க முடிகிறது வென்யூவை.

 தமிழ்; படங்கள்  துளசிதரன்;

க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி?

வென்யூவில் சின்னச் சின்ன குறைகள். முக்கியமாக, பின்பக்க இடவசதி, டீசல் இன்ஜினின் மந்தமான ரெஸ்பான்ஸ். அதைத் தாண்டி எல்லா பாக்ஸ்களிலும் டிக் அடிக்கிறது வென்யூ. பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கின் அற்புதமான அனுபவம், டிரைவர்களுக்கு வரம். வென்யூவில் எல்லோரையும் கவரப்போகும் விஷயம் - தொழில்நுட்பம். கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாயிலிருந்து 12.5 லட்சம் வரை வென்யூ விற்பனைக்கு வந்திருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, XUV300, எக்கோஸ்போர்ட் , நெக்ஸான் எல்லோரும் போட்டிக்குத் தயாராக நிற்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு