Published:Updated:

ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட்

எம்ஜி ஹெக்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்ஜி ஹெக்டர்

ஃபர்ஸ்ட் டிரைவ் - எம்ஜி ஹெக்டர்

ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட்

ரு இங்கிலாந்து நிறுவனம், தன்னுடைய முதல் மாடலின் டெஸ்ட் டிரைவை நம் ஊரில் ஏற்பாடு செய்திருந்தால் விட்டுவிட முடியுமா? கோவை-கோத்தகிரி-குன்னூர் என்று நாள் முழுவதும் அலுக்க அலுக்க எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் காரை டெஸ்ட் டிரைவ் செய்தபோது, ‘‘என்ன கம்பெனிங்க இது? புதுசா இருக்கே? எவ்வளவு விலை வருது? 7 சீட்டர் இல்லையா? அட, இவ்வளவு வசதிகள் இருக்கா? இப்போதான் ஹேரியர் வாங்கினேன்... அடடா!’’ என்று ஏகப்பட்ட கேள்விகள், கருத்துகள், செல்ஃபிகள். எம்ஜி என்றால் மோரிஸ் கராஜஸ். SAIC-க்குச் சொந்தமான இந்த நிறுவனம், முதன் முதலில் ஒரு மிட்சைஸ் எஸ்யூவியைத்தான் களமிறக்குவோம் என்று சொன்னதைச் செய்து காட்டிவிட்டது. இந்த மாத இறுதியில் எம்ஜி ஷோரூம்களில் ஹெக்டரைப் பார்க்கலாம். அதற்கு முன்பு இதன் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டைப் பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எவ்வளவு நீ...ளம்!

சீனாவில் விற்பனையாகும் Baojun 530 எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு தான் ஹெக்டரைத் தயாரித்திருக்கிறார்கள். முதலில் சொன்னபடியே சாலைகளில் செல்ஃபி எடுத்த பலர் கேட்ட முதல் கேள்வி, ‘‘இது 7 சீட்டர்தானே?’’ காரின் நீளம் அப்படி. (4,655 மிமீ) 4 மீட்டரைத் தாண்டி, பெரிய எஸ்யூவிபோல படு நீ...ளமாக இருக்கிறது எம்ஜி ஹெக்டர். ஆனால், இது 5 சீட்டர்தான். அதற்குப் பதிலாக பூட் ஸ்பேஸிலும் வீல்பேஸிலும் (2,750 மிமீ) இடவசதியிலும் தாராளம் காட்டியிருக்கிறார்கள். இந்த செக்மென்ட்டிலேயே இவை எல்லாமே அதிகம் கொண்ட முதல் கார், ஹெக்டர்தான். இதன் பூட் ஸ்பேஸ் - 587 லிட்டர். பெரிய ப்ரீமியம் செடான் கார்களுக்கு இணையானது இது.

முன் சீட்டுகள் நல்ல விசாலம். 6 வழிகளில் மெமரி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஸ்டீரியங்கிலும் ரீச் அண்ட் ரேக் இருப்பதால், எல்லோருக்கும் நல்ல டிரைவிங் பொசிஷன் கிடைக்கும்.

F-35 என்றொரு விமானம் இருக்கிறது. இந்த விமானத்தின் டிசைன்தான் ஹெக்டரின் இன்ஸ்பிரேஷன் என்கிறது எம்ஜி. அகலமான கிரில். சுற்றிலும் க்ரோம் வேலைப்பாடு, நடுவே எம்ஜி லோகோ. புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், DRL, டெயில் லைட்ஸ் என்று எல்லாமே LED மயம். ஹெட்லைட்டுகள் ‘C’ வடிவ பிராக்கெட்டுகளுக்கு நடுவே இருப்பது நல்ல ரசனை. இதன் இண்டிகேட்டர்கள், ஆடி ஸ்டைலில் கலக்குகின்றன. ஃப்ளோட்டிங் டிசைன் இண்டிகேட்டர்கள், பார்க்கிங் லைட்டைப் போட்டுவிட்டுப் பார்த்தால் செம அழகு! மேலே ரூஃபும் ஃப்ளோட்டிங் ஸ்டைல்தான். காருக்குக் கீழே முன் பக்கம் ஸ்கஃப் பிளேட் கொடுத்திருக்கிறார்கள். 17 இன்ச் வீல்களுக்கு, டைமண்ட் கட் அலாய் வீல்கள் இன்னும் ஹைலைட். காரின் டிசைனும் நீளமும்தான் இதை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட்

டச் ஸ்க்ரீனா... டேப்லெட்டா?

ப்ரீமியம் ரக கார் என்பதால், எல்லாமே சாஃப்ட் டச் மெட்டீரியல்ஸ். ஆனால் சில இடங்களில் ஹார்டு பிளாஸ்டிக்ஸ் இருந்தன. டேஷ்போர்டுக்கு நடுவே, குழந்தைகள் விளையாடும் டேப்லெட்டை வைத்திருக்கிறார்களே என்று நினைத்தால்... அதுதான் டச் ஸ்க்ரீன். அளந்து பார்த்தால்... 10.4 இன்ச்! செக்மென்ட்டின் பெரிய டச் ஸ்க்ரீன் கொண்ட முதல் கார். வழக்கம்போல் இல்லாமல் செங்குத்தான இதன் டிசைன், இன்னும் புதுமை. GPS நேவிகேஷன் சிஸ்டம், (ரியல் டைம் டிராஃபிக் அப்டேட்டுடன்), ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி, மியூசிக், இன்டர்நெட் என்று வசதிகள் ஏராளம். ஸ்க்ரீன் பெரிதாக இருப்பதால், பார்த்துப் பார்த்துக் கை வைக்க வேண்டியதில்லை; ஆனால், டச் ஆப்பரேட் ஆக கொஞ்சம் டிலே ஆவதுபோல் தெரிகிறது.

டச் ஸ்க்ரீனை ஒட்டியே ஏர்-கான்கள்.இதில் இருப்பது சிங்கிள் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசிதான். ரிவர்ஸ் கியரைப் போட்டால், கேமரா 360 டிகிரியில் காட்சிகள் கண்முன்னே விசாலமாய் விரிகின்றன. தைரியமாய் ரிவர்ஸ், சைடு, ஃப்ரன்ட் பார்க்கிங் பண்ணலாம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எளிமை புதுமை. கலர் MID ஸ்க்ரீனில் டயர் ப்ரஷர், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அலர்ட், மொபைல்போன் ஆக்சஸ் என்று எல்லாவற்றையும் கலர்ஃபுல்லாகப் பார்த்துக் கொள்ளலாம். ஹைபிரிட் மாடலில் பேட்டரி சார்ஜிங் பற்றிய தகவலும் தெரியும். ஒரு குறை - பகல் நேர வெளிச்சத்தில் சில தகவல்கள் படிக்க முடியாமல் கண்கள் கூசுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீட்கள், செமி ஸ்லீப்பர்!

முன் சீட்டுகள் நல்ல விசாலம். 6 வழிகளில் மெமரி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஸ்டீரியங்கிலும் ரீச் அண்ட் ரேக் இருப்பதால், எல்லோருக்கும் நல்ல டிரைவிங் பொசிஷன் கிடைக்கும். பெரிய விண்ட்ஸ்க்ரீன் சாலையைத் தெளிவாகக் காட்டுகிறது. பின் பக்கம் 3 பேர் தாராளமாக அமரலாம். லெக்ரூமும் அதே! 6 அடி உயரமானவர் களுக்குக்கூட ஹெட்ரூம் சூப்பர். இங்கே 4-வே எலெக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் சீட்கள். ஆனால், ஸாரி - உயரத்தை மட்டும் அட்ஜஸ்ட் பண்ண முடியாது. சீட்களை அப்படியே ரெக்லைன் செய்யலாம். பின் பக்கம் ஏர் வென்ட்டுகளும், ஃபாஸ்ட் சார்ஜிங் ஸாக்கெட்டும் உண்டு.

ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட்

ஹைபிரிட், பெட்ரோல், டீசல்

பெட்ரோல்-ஹைபிரிட் மற்றும் டீசல் என இரண்டு வேரியன்ட்களில் வருகிறது எம்ஜி ஹெக்டர். முதலில் டீசலைத்தான் மலையேற்றினோம். ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியரில் இருக்கும் அதே 2.0 லிட்டர், 170 bhp பவர், 35 kgm டார்க் கொண்ட ஃபியட்டின் டீசல் இன்ஜின்தான். ஆச்சரியம் - ஸ்டார்ட் செய்தால் டீசல் இன்ஜின் ரொம்பவும் உறுமவில்லை. டேக்கோமீட்டரை வைத்துத்தான் இன்ஜின் ஆன் ஆகியிருப்பதையே கண்டுபிடிக்க முடிகிறது. ரெவ் லிமிட்டைத் தாண்டி ஆக்ஸிலரேட்டர் மிதிக்கும்போது ‘ஹலோ, நான் டீசல்’ என்று சத்தம் போடுகிறது இன்ஜின். மொத்தத்தில் கேபின் இன்சுலேஷன் அருமை.

ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட்

டர்போ லேக் இல்லையென்றால், எப்படி அது ஃபியட் இன்ஜின் ஆகும்? அதேதான்... மலையேற்றங்களில் 2,000 rpm-க்குக் கீழே பவர் டெலிவரியில் சுணக்கம் தெரிந்தது. இன்ஜின் ECU-வில் எம்ஜி வேலை பார்த்துள்ளது தெரிகிறது. ஆம்! காம்பஸ் அளவுக்கு டர்போ லேக் இல்லை. மிட் ரேஞ்ச்சும் காம்பஸைவிட அருமை. பவர் டெலிவரி லீனியராக இருக்கிறது.

கியர்பாக்ஸும் அதே! ஃபியட்டின் C635 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்தான். ஆட்டோமேட்டிக் பற்றி இன்னும் எந்தத் தகவலும் சொல்லவில்லை எம்ஜி. மைலேஜுக்காக கொஞ்சம் டாலர் கியர் ரேஷியோ செட்-அப் வைத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் நல்ல ரிலாக்ஸ்டு டிரைவிங் கிடைத்தது. நீலகிரி மலைச்சாலையில் வேகம் குறையும்போது சட்டென கியரைக் குறைத்தால், அற்புதமான பவர்/டார்க் டெலிவரி கிடைத்தது. ஓவர்டேக்கிங்கில் இது மிகவும் அவசியம். டீசல் மாடலில் க்ளட்ச் பெடல் கொஞ்சம் ஹெவிதான். இடது பக்கம் நன்றாக ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால் டெட் பெடலுக்கான இடம் கொஞ்சம் நெருக்கியடிக்கிறது.

அடுத்து, பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின். இந்த 1.5 லிட்டர் இன்ஜினில் இருப்பது 143 bhp பவரும், 25kgm டார்க்கும். போனஸாக 2kgm, இதன் 48V பேட்டரி Pack-ல் இருந்து கிடைக்கிறது. பின் பக்கப் பயணிகளின் சீட்டுக்கு அடியில் இந்த பேட்டரியைப் பொருத்தியிருக்கிறார்கள். ஆக்ஸிலரேஷனின்போது எக்ஸ்ட்ரா பூஸ்ட் கிடைக்கிறது. ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இருப்பதால், நீங்கள் பிரேக் பிடிக்கப் பிடிக்க பேட்டரியில் பவர் சேர்ந்து கொண்டே இருக்கும். டீசல் போல் இல்லை இந்த ஹைபிரிட் பெட்ரோல்... அத்தனை ஸ்மூத். க்ரூஸ் செய்யும்போது சத்தமில்லாமல் பறக்கிறது பெட்ரோல் ஹெக்டர்.

டீசல்போல் டர்போ லேக் அதிகமாகத் தெரியவில்லை. ஆனால் ஓவர்டேக்கின்போது லேசாகத் தெரிந்தது. மற்றபடி சிட்டிக்குள் ஓட்டுவதற்கு பெப்பியாகவே இருந்தது. ஆனால் ஹைவேஸில் டீசல்போல் பிரமாதமாக இல்லை பெட்ரோல். இத்தனைக்கும் பெட்ரோல்/டீசல் இரண்டிலுமே 6,500 rpmதான் ரெட்லைன் என்பது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம். வீக் எண்டில் மலையேற்றங்கள்தான் உங்கள் பொழுதுபோக்கு என்றால், டீசல்தான் பெஸ்ட்.

ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட்

அற்புத விளக்கு பூதம்!

எம்ஜி ஹெக்டருக்கு ஏகப்பட்ட அப்ளாஸ் கிடைப்பது இங்கேதான். ஆம்! இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் இதுதான். i-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஏகப்பட்ட வசதிகள். இந்த i-ஸ்மார்ட் ஆப்பை நம் ஸ்மார்ட்ஃபோனில் வைத்துக்கொண்டால், போன் மூலமாகவே காரை அன்லாக் செய்வது, டெயில் கேட்டைத் திறப்பது/மூடுவது, காரின் இருப்பிடம், டயர் ப்ரஷர், சர்வீஸ் ரிமைண்டர் என்று எல்லாமே ஒன் டச்சில் செய்து கொள்ளலாம். Machine-Machine உடனான சிம் கார்டுடன், இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 6 இணைக்கப்பட்டுள்ளதுதான் காரணம். 5G தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வசதிகளுடன் இயங்குகிறது இந்த சிஸ்டம்.

வாய்ஸ் கமாண்ட்தான் எம்ஜி-யின் அழகே! ‘ஹலோ எம்ஜி’ என்று அழைத்தால், ‘யெஸ், ஐ’யம் ஹியர்’ என்று அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம்போல... நமக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யத் தயாராகிறது. ‘ஸ்விட்ச் ஆன் ஏ.சி’ என்றால், கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உடனே ஆன் ஆகிறது. ‘பவர் விண்டோவை மூடு, சன்ரூஃபைத் திற’ என்றால், சட்டென மேஜிக் போல் எல்லாமே நடக்கின்றன. மொத்தம் 100 வகையான விஷயங்களை இதில் செய்து கொள்ளலாம். நம் இந்தியர்களின் பேச்சு வழக்குக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டிருப்பதால், பிரிட்டிஷ்காரர்கள்போல ஸ்டைலான ஆங்கிலம்தான் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இது தவிர விபத்துக் காலங்களில், காற்றுப்பை திறந்த அடுத்த விநாடியே, தானாகவே எம்ஜி-யின் மேனேஜ்மென்ட் சென்டருக்குத் தகவல் போய்விடும். பிறகு உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான ஃபேவரைட் எண்களுக்கு மெசேஜ் போகும். தானாகவே அவசர எண்ணுக்கும் அழைப்பு போய், ஆம்புலன்ஸ்-போலீஸ் போன்ற அவசர கால உதவிகளும் தேடிவந்து விடும்.

ஆஃப்ரோடரா? சாஃப்ட்ரோடரா?

எஸ்யூவி என்பதால், முதலில் நாம் நோட்டம் விட்டது கி.கிளியரன்ஸைத்தான். 192 மிமீ என்பது ஒரு மிட்சைஸ் எஸ்யூவிக்கான அளவுகளில் குறைந்ததுதான் என்பதால், காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் மாதிரி ஆஃப்ரோடில் புகுந்து புறப்பட முடியாது. ஆனால் இதன் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப், சிட்டிக்குள் கொஞ்சம் சொகுசான அனுபவத்தைத் தரும். ஸ்பீடு பிரேக்கர்கள், ஓட்டைகள், குண்டு குழிச் சாலைகளை நன்றாகவே சமாளிக்கிறது ஹெக்டர். இதன் லைட்வெயிட் ஸ்டீயரிங், சிட்டிக்குள் புகுந்து புறப்பட ஈஸியாக இருக்கிறது. அதிவேகத் திருப்பங்களில் லேசான பாடி ரோல் கொஞ்சம் படுத்துகிறது.

ஹெக்டருக்கு இன்னொரு பெரிய லைக் - இதன் ஆல்வீல் டிஸ்க் பிரேக்ஸ். க்ரெட்டாவில்கூட இந்த வசதி இல்லை என்பது எம்ஜி மேல் மரியாதையை ஏற்படுத்துகிறது. ஏபிஎஸ், இபிடி எல்லாமே இதனுடன் லிங்க் செய்யப்பட்டிருப்பதால், இந்த 1.7 டன் எஸ்யூவியைச் சட்டென நிறுத்த இந்த டிஸ்க் பிரேக்ஸின் உதவி அவசியம்.

ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட்

ஹெக்டருக்கு ஓட்டுப் போடலாமா?

லுக், டிரைவிங், ஹேண்ட்லிங் என்று எதிலுமே ஏமாற்றவில்லை ஹெக்டர். அதைத் தாண்டி ‘வா...வ்’ என்று வாயைப் பிளக்க வைப்பது வசதிகள்தான். இதன் டாப் வேரியன்ட்டான ஷார்ப் மாடலில் உள்ள வசதிகளைக் குறித்துக்கொள்ள தனிப் புத்தகம்தான் போட வேண்டும். Style, Super, Smart, Sharp - இவைதான் ஹெக்டரின் 4 வேரியன்ட்கள். கடைசிக்கு முந்தைய மாடலான Smart வேரியன்ட்டில் - சன்ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் சீட்கள், ஹீட்டட் ORVM, ஆட்டோ ஹெட்லைட்ஸ் போன்ற சில வசதிகள்தான் மிஸ்ஸிங்.

எம்ஜி இப்போதுதான் இந்தியாவுக்குள் டயர் பதித்திருக்கிறது. டீலர்ஷிப்புகளும் இப்போதுதான் புதிதாக முளைக்கத் தொடங்கி இருக்கின்றன. செப்டம்பருக்குள் 250 டீலர்களைத் திறந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறது எம்ஜி. இதன் விலை 16 முதல் 23 லட்சம் ரூபாய்க்குள் வந்தால், ஹெக்டருக்கு எக்கச்சக்க ஓட்டுகள் விழலாம். டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா XUV500 - இவற்றுக்கெல்லாம் கொஞ்சம் பிகில் அடிக்கக் காத்திருக்கிறது ஹெக்டர்!