Published:Updated:

களமிறங்குகிறது கியா... போட்டிக்கு ரெடியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
களமிறங்குகிறது கியா... போட்டிக்கு ரெடியா?
களமிறங்குகிறது கியா... போட்டிக்கு ரெடியா?

முதல் பார்வை - கியா செல்ட்டோஸ்

பிரீமியம் ஸ்டோரி

ம் நாட்டுக்கு மற்றுமொரு புதிய கார் நிறுவனமாக வந்திருக்கிறது கியா. வரும்போதே பக்காவாக... அதாவது, அடுத்த ஆண்டு அமலுக்கு வரவிருக்கும் BS6 மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப, கோதாவில் இறங்குகிறது இந்நிறுவனம்.

ஆம்! கியா முதல் முதலாகக் களம் இறக்கப்போகும் செல்ட்டோஸ் இந்த மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட இருக்கிறது. ஹூண்டாயைப்போல கியாவுக்கும் தென்கொரியாதான் தாய்நாடு. இன்னும் கேட்டால் கியாவும் ஹூண்டாயும் சகோதர நிறுவனங்கள். தாயும் சேயுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பதால்… ஹூண்டாய் க்ரெட்டாவுக்குத்தான் இந்த செல்ட்டோஸ் முதல் போட்டியாக இருக்கும்.

களமிறங்குகிறது கியா... போட்டிக்கு ரெடியா?

வெளித்தோற்றம்

க்ரெட்டாவைப்போல இதுவும் நான்கு மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட எஸ்யூவி. கியா கார்களின் தனி அடையாளமே புலி மூக்கின் வடிவில் இருக்கும் அதன் கிரில்தான். அந்தப் புலி கிரில், செல்ட்டோஸிலும் தகதகவென்று கிரோம் பூச்சுகளால் மின்னி ஈர்க்கிறது. கீழே ஐஸ்க்யூப் போல இருக்கும் பனி விளக்குகள், ஏர் டேம், ஸ்கிட் பிளேட் என்று அனைத்தும் சரியான அளவுகளில் அமைந்திருக்கின்றன.

17 இன்ச் வீல்களும், ரப்பர் கிளாடிங் கொடுக்கப்பட்ட சதுரமான வீல் ஆர்ச்சுகளும், நீண்ட வீல் பேஸும், சரிவான ரூஃப் லைனும், அதில் அமைந்திருக்கும் ரூஃப் ரெய்ல், ஸ்பாய்லர் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனாவின் டிசைனும்…. இது ஒரு கட்டுமஸ்தான கார் என்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.

உள்ளலங்காரம்:


செல்டோஸை உள்ளே சென்று பார்க்க யாருக்கும் இப்போது அனுமதி இல்லை. அதனால் வெளியிலிருந்துதான் பார்த்தோம். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை தவிர இன்னும் ஆறு வண்ணங்களிலும் இது விற்பனைக்குக் கிடைக்கும். காரின் பாடி கலரை மட்டுமல்ல; காரின் ஃரூப் கலரையும் வெவ்வேறு காம்பினேஷனில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஆனால் காரின் இன்டீரியரைப் பொறுத்தவரை கறுப்பு அல்லது பீஜ் ஆகிய நிறங்களில் செல்ட்டோஸ் விற்பனையாகும். காரின் வீல் பேஸ் அதிகம் என்பதால், காரின் கேபின் தாராளமாகவே இருக்கிறது. தரமும் நன்றாக இருக்கிறது. ஹூண்டாய் வென்யூ காரைப்போலவே இதுவும் கனெக்ட்டட் டெக்னாலஜியுடன் அறிமுகமாகிறது.அலுவலகத்தில் சீட்டில் உட்கார்ந்தபடியே ஸ்மார்ட் போன் மூலம் UVO கனெக்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தி, காரை ஸ்டார்ட் செய்து ஏசி போடலாம். டிரைவர் தனியாக காரை ஓட்டும்போது, கார் குறிப்பிட்ட ஏரியாவைத் தாண்டாமல் இருக்க… ஜியோகிராஃபிக்கல் ஃபென்ஸ், டைம் ஃபென்ஸ் என்று கண்ணுக்குத் தெரியாத வேலிகளை அமைக்கலாம். இப்படி 37 விதமான சிறப்பம்சங்களைக் கொண்டது செல்ட்டோஸின் கனெக்டட் டெக்னாலஜி.

செல்ட்டோஸின் அடுத்த அதிரடி… கியா கொடுக்கும் இன்ஜின் ஆப்ஷன்கள். முதலாவது 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வெளிவரும் T-GDi மாடல். டர்போ எல்லாம் வேண்டாம் என்றால், 1.5 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு.

களமிறங்குகிறது கியா... போட்டிக்கு ரெடியா?

அது மட்டுமல்ல… 7 கியர்களைக் கொண்ட DCT வேண்டுமா… அல்லது CVT (கியா மொழியில் இது IVT) ட்ரான்ஸ்மிஷன் வேண்டுமா? அதுவும் உண்டு. தவிர, 6 கியர்களைக் கொண்ட ஆட்டோமேட்டிக் / மேனுவல் கியர் ஆப்ஷன்ஸும் உண்டு. GT Line என்ற தனி வேரியன்ட்டும் உண்டு என்பதால், ஸ்போர்ட்டியான செல்ட்டோஸையும் எதிர்பார்க்கலாம். ஆப்ஷன்ஸை இப்படி அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறது கியா.

காரை ஓட்டும்போது நார்மல், ஸ்போர்ட், எக்கோ என்று மூன்று ‘மோட்’கள் வேறு இருந்தன. அதேபோல சாலைக்கு ஏற்ப கிரிப் எப்படி இருக்க வேண்டும் என்பதை டிரைவர் தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக - Mud, Wet, Sand என்று மூன்று ஆப்ஷன்ஸ் உண்டு. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், புதிய டிசைனில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சன் ரூஃப் ஆகியவற்றுடன் உயரமான சீட்டிங் பொசிஷன் செல்டோஸுக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுத் தருகின்றன.

எல்லாம் சரி, புதிதாக வந்திருக்கும் கம்பெனியாச்சே...? சர்வீஸ், ஸ்பேர்ஸ் எல்லாம் பிரச்னையாக வந்துவிடக்கூடாது என்று கியா எடுத்த எடுப்பிலேயே 160 நகரங்களில் 265 டச்  பாயின்ட்ஸ் உடன்தான் முதல் போணியே செய்ய இருக்கிறது. செல்ட்டோஸின் பர்ஃபாமன்ஸ், சஸ்பென்ஷன், ஹேண்ட்லிங், மைலேஜ் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முழுமையான டெஸ்ட் டிரைவ் வரை காத்திருப்போம்.

- வேல்ஸ்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு