Published:Updated:

ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை!
ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை!

கேஷுவல் டிரைவ்: ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட

பிரீமியம் ஸ்டோரி

திடீரென அலுவலக வாசலில் ப்ரீமியம் வாடை. பார்த்தால்... ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் உறுமிக்கொண்டிருந்தது. ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ், ஹாரிபாட்டர் படங்கள்போல் இவோக், வோக், டிஸ்கவரி, டிஸ்கவரி ஸ்போர்ட் என எக்கச்சக்க வேரியன்ட்கள் ரேஞ்ச்ரோவரில் உண்டு. கிட்டத்தட்ட ரேஞ்ச்ரோவரின் எல்லா மாடல்களிலும் ஆஃப்ரோடு டெஸ்ட் முடித்து புளகாங்கிதம் அடைந்திருந்த வேளையில், ``சாஃப்ட் ரோடு டெஸ்ட் பண்ணிப்பாருங்களேன்...’’ என்று ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடலின் சாவியை நம் கையில் திணித்து, ஒரு டாஸ்க் வைத்தது லேண்ட்ரோவர்.

ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை!

80 லட்சம் ரூபாயிலிருந்துதான் ரேஞ்ச்ரோவர் கார்களின் விலையே தொடங்கும். ஸ்போர்ட் மாடலில் S, SE, HSE என மூன்று வேரியன்ட்கள் உண்டு. நமக்கு வந்தது HSE எனும் டாப் மாடல். ஆன்ரோடு விலை, கிட்டத்தட்ட 1.73 கோடி ரூபாய்!

சென்னை முழுக்க ரேஞ்ச்ரோவரை விரட்டுவதுதான் நமக்கான அசைன்மென்ட். `அவ்வளவுதானே’ என சாதாரணமாக நினைத்துவிட முடியாது. ஆலப்புழா படகு மாதிரி அவ்வளவு நீளம் இருந்தது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட். 5 மீட்டருக்கு, 121 மிமீதான் குறைவு. குறுக்குச்சந்துகளில் `U’ டர்ன் போடுவதற்கெல்லாம் திறமை வேண்டும். பார்த்தவுடன் 7 சீட்டர் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், ஸ்போர்ட் 5 சீட்டர்தான். அதேநேரம், பின்பக்கம் சீட்களை ஃப்ளாட்டாக்கிவிட்டு, மூன்று பேர் படுத்துக்கொண்டே வரலாம்.

ஸ்டார்ட் செய்ததும் உறுமியது 3 லிட்டர் இன்ஜின். பானெட்டைத் திறந்து பார்த்தால், V6 சிலிண்டர். வாவ்! 258 bhp பவர். சென்னை ஈசிஆரில் விரட்டினால், 258 குதிரை சக்திகளும் வந்திறங்கின. அதிலும் ஸ்போர்ட் மோடில் கியர் லீவரை ஓரமாகத் தள்ளிவிட்டு, ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஆக்ஸிலரேட்டரை ஒரே மிதி... 7.7 விநாடிகளில் 0-100 கி.மீ-யைத் தொட்டுவிடலாம். ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டை சிட்டிக்குள் ஓட்டுவதற்குத்தான் ஜென் நிலைக்குப் போக வேண்டும். அதாவது, பொறுமைசாலிகள் மட்டும்தான் ஸ்போர்ட்டைக் கையாள முடியும்.

ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை!

60 kgm டார்க். ஸ்டார்ட் செய்து கிளம்பினால், விமானம் டேக்-ஆஃப் ஆவதுபோல் நம்மை பின்னோக்கித் தள்ளுகிறது பவர் டெலிவரி. பிரேக்ஸும் அத்தனை ஷார்ப். சொன்ன இடத்துக்கு முன்பாகவே நிற்கிறது கார். நான்கு வீல் டிஸ்க்குகளிலும் ABS, EBD என எல்லாமே கனெக்ட் ஆகியிருக்கின்றன.

இன்டீரியர், விமான காக்பிட்டின் காப்பிகேட்போல் இருக்கிறது. நிறைய கன்ட்ரோல்கள் தெரிந்தாலும், நசநசவெனக் குழப்பியடிக்கவில்லை. கண்களை மூடிக் கொண்டு ஏதாவது ஒரு வசதியை நினைத்துக் கொள்ளுங்கள் - அது ரேஞ்ச்ரோவரில் இருக்கும். மெரிடியன் சரவுண்டு சிஸ்டம், வாய்ஸ் கமாண்டு, GPS, 10 இன்ச் டச் ஸ்கிரீன், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், லேன் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டிரைவர் கண்டிஷன் மானிட்டர், 16-way மெமரி டிரைவர் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், LED மேட்ரிக்ஸ் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்... டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் மிரர்ஸ்... அடடா!

இதெல்லாம் ஸ்டாண்டர்டுதான். ஆப்ஷனலாகவும் எக்கச்சக்க வசதிகள் உண்டு. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் ரசித்த அம்சம் - இதன் சஸ்பென்ஷன் செட்-அப்பை, அதாவது காரின் உயரத்தை ஏற்றி - இறக்கிக்கொள்ளலாம். எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், வால்வோ பஸ்போல அவ்வளவு சொகுசு. எவ்வளவு பெரிய பள்ளத்தில் ஏற்றி இறக்கினாலும் உள்ளே அதிர்வுகள் அவ்வளவாகத் தெரியவில்லை. கியர் லீவருக்குக் கீழ் இருக்கும் பட்டன் மூலம் காரின் உயரத்தை அலேக்காகத் தூக்கி, அற்புதமாக ஆஃப்ரோடு செய்யலாம். நெடுஞ்சாலைகளில் காரின் உயரத்தை இறக்கி, விமானம்போல் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கலாம்.

ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை!

ஆஃப்ரோடு வாகனங்கள்போல் டிப்பார்ச்சர் ஆங்கிள், அப்ரோச் ஆங்கிள் அதிகம் என்பதால், ஆஃப்ரோடு பயணங்களில் ரேஞ்ச்ரோவர் இருந்தால் கவலையே இல்லை. 40 டிகிரி இறக்கங்களில் சர்ரென இறங்கும்போது, பம்பரில் இடிக்காமல் வீல்கள் காரைத் தாங்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள் இதன் இன்ஜினீயர்கள். டிரைவர் முழங்கால்கள் முதற்கொண்டு மொத்தம் 9 காற்றுப்பைகள். பயப்படவே தேவையில்லை.

டிரைவிங்கில் நான்கு மோடுகள் கொடுத்திருந்தார்கள். ஈரமான சாலைகளுக்கு, மணல் பாதைகளுக்கு, வழுக்கும் மலைப்பாதைகளுக்கு, கரடுமுரடான சாலைகளுக்கு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம். ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் 850 மிமீ ஆழம் வரை தண்ணீருக்குள் இறங்கிப் போய்க்கொண்டே இருக்கலாம்.

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் இன்னொரு ஸ்பெஷல் - க்ரூஸ் கன்ட்ரோல். இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இது, ஆஃப்ரோடுக்கான க்ரூஸ் கன்ட்ரோல். இதன் பெயர் ஆல்டெரெய்ன் புராக்ரஸ் கன்ட்ரோல். `இதுல எப்படி கார் போகும்?’ என்பது மாதிரியான கன்னாபின்னாவென பாதையே இல்லாத ஒரு சாலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் 3 கி.மீ செட் செய்து கொள்ளுங்கள். ஆக்ஸிலரேட்டர், பிரேக்கிலிருந்து காலை எடுத்துவிடுங்கள். உங்கள் கவனம் - ஸ்டீயரிங்கில் மட்டும்தான் இருக்க வேண்டும். தானாக ஆக்ஸிலரேட் செய்து, தானாகவே பிரேக் பிடித்து பத்திரமாக நம்மை இறக்கிவிடுகிறது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்.

ஆல் இஸ் வெல்தான். ஆனால், இத்தனை கோடி ரூபாய் விலைகொண்ட காரில் வால்வோக்களில் இருப்பதுபோல் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பெடெஸ்ட்ரியன் காற்றுப்பை, செல்ஃப் பார்க் அசிஸ்ட் போன்ற முக்கியமான சில வசதிகள் இல்லை!இருந்தாலும், லேண்ட்ரோவர் நிறுவனத்துக்கு ஒரு மெயில் தட்டலாம் என்று இருக்கிறேன் - `ஒன்ஸ்மோர் இந்த டாஸ்க் கிடைக்குமா?’

-  தமிழ்,  படங்கள்:  பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு