Published:Updated:

டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை!
டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை!

ஃபேக்டரி விசிட் - டொயோட்டா தொழிற்சாலை

பிரீமியம் ஸ்டோரி

``இதுவரை வெளியே சொல்லாத சில விஷயங்கள் டொயோட்டாவில் நடக்குது. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? எங்க ஃபேக்டரிக்கு வாங்க’’ என டொயோட்டாவில் இருந்து அழைப்பு வந்தது. ஆர்வமாகக் கிளம்பினோம். பெங்களூர் விமான நிலையத்திலிருந்து இரண்டு மணி நேரத் தொலைவில், பிடதி என்ற இடத்தில் இருக்கிறது - டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிற்சாலை.

டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை!

டொயோட்டா தொழிற்சாலையில் முதலில் பார்த்த இடம் டொயோட்டா டெக்னிக்கல் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட் (TTTI). 2007-ம் ஆண்டில் இந்தக் கல்வி நிலையத்தைத் தொடங்கியிருக்கின்றனர். பள்ளிப்படிப்பை முடித்த ஏழை மாணவர்களுக்காக இந்தப் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் பயிற்சி மட்டுமல்ல... உடற்பயிற்சி, ஆட்டிட்யூட் மற்றும் ஆப்டிட்யூட் பயிற்சிகளையும் பெறுகிறார்கள்.  இங்கேயே தங்கிப் படிக்கலாம். படித்த பிறகு அவர்கள் டொயோட்டா தொழிற்சாலையிலேயே வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு படிக்க முடியும்.

TTTI-யைத் தொடர்ந்து டொயோட்டாவின் நேஷனல் மேன்பவர் எக்ஸலென்ஸ் சென்டருக்குச் சென்றோம். டொயோட்டா சர்வீஸ் சென்டர் பணியாளர்கள் அனைவருக்கும் இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. விற்பனைக்கு முன்பு, விற்பனை செய்த பிறகு, சர்வீஸ், ரீ-பர்ச்சேஸ் என நான்கு பிரிவுகளாகப் பயிற்சி தருகிறார்கள். ``இந்தப் பயிற்சியால்தான் கஸ்டமர்களை அதிகம் தக்கவைத்துக் கொள்கிறோம்’’ என்கிறார்கள் டொயோட்டா நிறுவனத்தினர்.

சர்வீஸ் சென்டரில் என்னென்ன டூல்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்பதும், அதை வேலை நேரத்தைக் குறைக்க எப்படிக் கையாள்கிறார்கள் என்பது இங்கு நேரடியாகக் காண்பிக்கப்பட்டன. இவை மட்டுமல்ல, டொயோட்டாவின் Express Maintenance எப்படிச் சாத்தியமாகிறது என்பதும் இங்கே கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அடுத்ததாக பார்ட்ஸ் சென்டர். தினம் தினமும் இந்த சென்டருக்கு உதிரிபாகங்கள் வரவழைக்கப்பட்டு, இதர சர்வீஸ் சென்டர்களுக்குப் பரிமாற்றப்படுகின்றன. இதனால் தேக்கம் என்பதே கிடையாது. 

டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை!

`சர்வீஸ் சென்டருக்குச் செல்ல முடியாதவர்களுக்காக, சர்வீஸ் சென்டரே வீடு தேடி வரும் என்கிறது’ டொயோட்டாவின் சர்வீஸ் எக்ஸ்பிரஸ். அதாவது, மொத்த சர்வீஸ் சென்டரையும் ஒரு வேனில் அடைத்து, நீங்கள் இருக்கும் இடத்துக்கே கொண்டு வந்துவிடுகிறார்கள். விரைவில் இதை இந்தியா முழுவதும் பார்க்கலாம்.

``தொழிற்சாலைக்குள் புதிதாக இரண்டு இடங்களைச் சேர்ந்துள்ளோம்’’ என டொயோட்டா ரீ-சைக்கிள் சென்டர் மற்றும் எக்கோ ஸோனுக்கு அழைத்துச் சென்றார்கள். உதவாத கார் ஏதாவது இருந்தால் அதை வாங்கி அதில் உள்ள பாகங்களைப் பிரித்தெடுத்து  உருக்கி, மற்றொரு பாகத்தைத் தயாரிக்கிறார்கள். ஒரு டொயோட்டா காரிலிருந்து 95.8% பாகங்களைப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்கிறார்களாம். (புரியலையா... அடுத்த பக்கம் பாருங்க!)

டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை!

எக்கோ ஸோன் என்பது, மாணவர்களுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும், பல்லுயிர் வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் சொல்லிக்கொடுக்க உருவாக்கப்பட்டுள்ள இடம். 432 ஏக்கர் வளாகத்துக்குள் 25 ஏக்கர் அளவில் இந்த எக்கோ ஸோனை உருவாக்கியுள்ளார்கள்.

டொயோட்டாவில் அதிகம் கேட்கப்பட்ட வார்த்தை, `கைஜென்’. ஜப்பானிய மொழியில் கைஜென் என்றால், தொடர்ச்சியாக மேம்படுவது என அர்த்தம். கார்கள் மட்டுமல்ல, இங்கு CEO-வில் இருந்து கடைநிலை ஊழியர் வரை யாருமே ஒரே நிலையில் தேங்கிவிடாமல், அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்.

டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை!

டொயோட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராஜாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``சில நிறுவனங்கள் டீசல் இன்ஜின்களை நிறுத்தி வருகிறார்களே, உங்களுடைய டீசல் இன்ஜின்களை BS6 ஆக மாற்றப்போகிறீர்களா?’’

``புதிய தொழில்நுட்பங்கள் வருவதால், BS6 வாகனங்களுக்கு மக்கள் கொஞ்சம் அதிகமாகவே செலவு செய்ய வேண்டியது வரும். பெட்ரோல் இன்ஜின்களை BS6 ஆக மாற்றுவதைவிட, டீசல் இன்ஜின்களை மாற்றுவதற்குச் செலவுகள் அதிகம்தான்.''

``கரோலா ஆல்ட்டிஸை நிறுத்தப் போவதாக தகவல்கள் வருகின்றனவே?’’

``நாங்கள் தொடர்ந்து எங்களுடைய அனைத்து கார்களையும் அப்டேட் செய்து கொண்டேதான் இருக்கிறோம். வரும் தகவல்கள் எல்லாவற்றையும் உறுதியானது என நம்ப வேண்டாம்.’’

``டொயோட்டா-மாருதியிலிருந்து வேறு என்னென்ன கார்கள் வரப்போகின்றன?’’

``கிளான்ஸா வந்துவிட்டது. அடுத்து பிரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா எனத் தொடர்ந்து மாருதி சுஸூகியின் மூன்று கார்களும் டெயோட்டாவில் வரப்போகின்றன. இதற்குப் பிறகு எங்களுடைய ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மாருதி சுஸூகிக்குக் கொடுக்கிறோம். இவை முடிந்த பிறகு தொழிற்சாலையைப் பகிரும் திட்டமும் உள்ளது.’’

``கடன் வட்டி குறைகிறது, பெட்ரோல் விலையும் குறைகிறது. ஆனால், கார் விலை மட்டும் ஏறிக் கொண்டேபோகிறதே?’’

``எரிபொருளும் கடன் வட்டியும் மட்டும் விலை ஏற்றத்துக்கான காரணம் அல்ல. லாஜிஸ்டிக்ஸ், பாகங்களின் விலை, மின்சாரச் செலவு போன்றவை மாறிக்கொண்டே இருக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களும் சேரும்போது, விலை ஏற்றம் அவசியமாகிறது. `பிஎஸ்6 எரிபொருளின் விலையை உயர்த்தப் போவதில்லை’ என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.’’

-  ரஞ்சித் ரூஸோ;  படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு