Published:Updated:

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19

தொடர் - 19
பிரீமியம் ஸ்டோரி
தொடர் - 19

புரோட்டா அல்ல... ப்ரோட்டோ!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19

புரோட்டா அல்ல... ப்ரோட்டோ!

Published:Updated:
தொடர் - 19
பிரீமியம் ஸ்டோரி
தொடர் - 19

`ப்ரோட்டோ டைப்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆட்டோமொபைல் துறையில் ப்ரோட்டோ டைப், ப்ரோட்டோ எனும் சொற்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பவை. `ப்ரோட்டோ டைப்' என்ற சொல், `ப்ரோட்டோடைபான்’ என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. இந்தச் சொல்லுக்கு `PRIMITIVE FORM’ என்று பொருள். தமிழில் இதை `அடிப்படை வடிவம்’ எனக்கொள்ளலாம். கார் டிசைனைப் பொறுத்தவரை ப்ரோட்டோ டைப் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அங்கம்.

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19

உலகெங்கிலும் ப்ரோட்டோ டைப் செய்வதற்கென்றே தனித்துவமாக பல நிறுவனங்கள் இயங்குகின்றன. இது, சவாலான, அதிகம் செலவு பிடிக்கும் வேலை என்பது உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`PROTOTYPING IS THE CONVERSATION YOU HAVE WITH YOUR IDEAS.’

ஒரு கார் உருவாக்கத்தின் பின்னணியில் பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பல்வேறுபட்ட கோணங்களில் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. டிசைனர், தன் படைப்பாற்றலைச் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். முதலீட்டாளர், பங்குச்சந்தையின் மதிப்பை மேலே எடுத்துச் செல்லும் வகையில் இந்த வாகனம் இருக்க வேண்டும் என விரும்புவார். வாடிக்கையாளரோ புதிய தொழில்நுட்பம், கவரும் வடிவம், பாய்ச்சலான வேகம், பாதுகாப்பான பயணம், வாங்கும் வகையில் விலை என அவரின் எதிர்பார்ப்புகள் நீளும். இந்தப் பட்டியலின் பல்கோண எதிர்பார்ப்பைச் சரிபார்த்துக் கொள்ளும் மாதிரி மாடல்தான், ப்ரோட்டோ டைப்.

ப்ரோட்டோ டைப்பை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு `CLASS-A’ -வின் அடுத்த கட்டத்தில், இன்ஜினீயர்களின் பங்கை தெரிந்து கொள்ள வேண்டும்.

CLASS-A என்பது, ஒரு வெர்ச்சுவல் டேட்டா (Virtual Data). அதாவது, கம்ப்யூட்டரில் விளைந்த கனவு. அதை உற்பத்தி செய்ய ஏதுவான காராக மாற்ற, பெரிய அளவில் பொறியியல் சாமர்த்தியம் தேவை. முதலில் உட்புறம், வெளிப்புறம் என டேட்டா பிரிக்கப்படும். பிறகு, மெட்டீரியல் வகையாகவும் பிரிக்கப்படும். உதாரணமாக கண்ணாடிகள், ஸ்டீல் பேனல்கள், ரப்பர் பொருள்கள், பிளாஸ்டிக் ட்ரிம்கள் எனப் பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மெட்டீரியலின் உற்பத்தி உத்திக்கு ஏற்றவாறு டீட்டெயில் செய்ய வேண்டும். செய்யப்பட்ட டீட்டெயிலை அதற்குரிய உதிரிபாகத் தயாரிப்பாளரின் கைக்குக் கொண்டுசென்று பொறியியல் மாடல்கள் சரிதானா என உறுதி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் `டூலிங்’ (TOOLING) எனப்படும் `அச்சுக்கு உகந்த பொறியியல் உத்தி’ Tool Room Engineering-ஐ தனித்தனியாக உறுதி செய்து கொண்டுதான் ப்ரோட்டோ நிலைக்கு வர வேண்டும்.

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19

உலகின் மிகப்பெரிய வர்த்தகமாக இன்றும் இருப்பது, ஆட்டோமோட்டிவ் துறைதான். ஐபிஎம், கூகுள் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள்கூட போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. டெல்லி குருக்ராமில் உள்ள மாருதி சுஸூகியைச் சுற்றி ஆயிரக்கணக்கான உதிரி பாக உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களில் ஒருவர் மற்றொருவரின் பாகத்தைப் பற்றி அறிய, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், மாருதி சுஸூகி நிறுவனத்துக்குத்தான் ஒட்டுமொத்த காரின் மீதும் அக்கறையும், பொறுப்பும், உரிமையும்!

எனவே, இந்த ப்ரோட்டோ டைப்பில்தான் பல பாகங்களின் மாதிரிகள் பல்வேறு முறைகளில், வெவ்வேறு இடங்களில் பெறப்பட்டு அசெம்பிள் செய்யப்படுகின்றன. ஆகவே, ப்ரோட்டோவுக்கு நான்கு முக்கியமான அடிப்படைத் தேவைகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.

• ஒரு சிறிய பேப்பரில் ஸ்கெட்ச்சாக இருந்து, பிறகு கம்ப்யூட்டர் மானிட்டரில் Cad மாடலாக இருந்த கார், தன் உண்மையான முழு அளவில் (1:1 Size) முழுதாகக் கண்முன் நிற்கும்போது திருப்தியளிக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுதல். (Design Validation) யாரைத் திருப்திப்படுத்த வேண்டும்? வடிவமைப்பாளர், பொறியியலாளர், நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டீம், முக்கியமான பங்குதாரர், வாடிக்கையாளர் எனப் பல்வேறு திசைகளிலும் அலசி ஆராய்ந்து இசைவைப் பெறுவது முதல் நோக்கம்.

• ஒட்டுமொத்த வாகனத்தின் உதிரி பாகங்கள் ஒன்றோடு ஒன்று இணக்கமான கட்டமைப்பு, பொருத்தம், திருத்தம், சீரான இடைவெளி மற்றும் சமன் ( FIT, FINISH, GAPS & FLUSH).

• Functional Requirements என்கிற அதன் இயக்கம் மற்றும் பர்ஃபாமன்ஸ் சார்ந்த விஷயங்களோடு, HUMAN FACTORS என்கிற ERGONOMICS. அதாவது, Man to Machine Interface மற்றும் Easily Assemble Capabilities.

• நம்பகத்தன்மை, நீடித்த உழைப்பு. லட்சக்கணக்கான கி.மீ கடந்தும் கழன்று விழாத பாகங்களின் கட்டுறுதி.

இதையெல்லாம் சரிபார்த்து, நிறை குறைகளை அலசி, எதையெல்லாம் கூட்ட/குறைக்க வேண்டும் என அறிவுறுத்தும் நண்பன்தான் ப்ரோட்டோ.

ஒரு நல்ல ப்ரோட்டோவின் பலனாக ஏராளமான பணச்செலவையும் நேரத்தையும் குறைக்க முடியும். மேலும், கார் என்பது, உயிர்ப் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விஷயம். அத்துடன் ஒவ்வொரு முறையும் புதிய கார் மார்க்கெட்டுக்கு வரும்போதும் புதிய புதிய ஸ்டைலுடன் வரும். அட்வான்ஸ் டெக்னாலஜியோடும் வர வேண்டியது, மார்க்கெட்டிங் காலத்தின் கட்டாயம். புதியது வலியதாகவும் ஓட்டுவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். அதனால், இந்த ப்ரோட்டோக்களைப் பல்வேறு நிலைகளில் பற்பல ப்ரோட்டோக்களை உருவாக்கி ஓட்டிப் பார்க்க வேண்டியது கார் நிறுவனங்களின் கடமை. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தேவை மற்றும் திறமைக்கேற்ப கார் டிசைனின் வெவ்வேறு நிலைகளில் ப்ரோட்டோக்களின் எண்ணிக்கை மாறுபடும்.

மிகப் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லம்போகினி, `Clay Model’களைச் செய்வதே இல்லை. அவர்கள் நேரடியாக ஸ்டீல் மாடலுக்குச் சென்றுவிடுவதாக அறிந்திருக்கிறேன்.

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19

ஒரு படம், ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதுபோல ஒரு ப்ரோட்டோ, ஆயிரம் மீட்டிங்குகளுக்குச் சமம். உங்கள் டிசைன் எப்படிப்பட்டது என்பதை உங்கள் ப்ரோட்டோ காட்டிவிடும். உங்கள் சக போட்டியாளரின் டிசைனை பக்கத்தில் நிறுத்திப் பார்த்து எடை போட்டுக் கொள்ளலாம். குறைகளைக் கண்டறிய சீக்கிரம் ப்ரோட்டோ கட்டத்தை எட்டினால் சரி செய்ய நேரம் கிடைக்கும். மிக விரைவான தோல்வி, வெற்றியை அடைய விரைவாக வழிகாட்டலாம்.

என் கண் முன்னால் நடந்த ஒரு நிகழ்வு இதைத் தெளிவுபடுத்தக்கூடும் என்பதால், பகிர்கிறேன்.

இந்தியாவின் ஒரு முக்கிய நிறுவனம், 1990-களில் ஒரு லக்ஸூரி காரை வடிவமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அது, ஹூண்டாய், டொயோட்டா போன்ற கார் தயாரிப்பாளர்கள் களத்தில் இல்லாத காலம். தேவூ என்றொரு நிறுவனத்தின் சியல்லோ எனும் கார், 7  முதல் 8 லட்சம் ரூபாய் விலையில் வந்து கொண்டிருந்தது. அதுவே மெர்சிடீஸ் பென்ஸுக்கு அடுத்த சொகுசு காராக அறியப்பட்ட நேரத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு சொகுசு காரைக் கொண்டுவந்துவிட அந்த நிறுவனம் 1996-ம் ஆண்டு முதல் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தது. 2004-ல் கிட்டத்தட்ட டெஸ்ட்டிங் ப்ரோட்டோ நிலைக்கு வந்து, முதல்கட்டமாக 30 ப்ரோட்டோ கார்களைத் தயார்செய்து ரிவ்யூ செய்து கொண்டிருந்த நேரம்.

ஸ்கோடா இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்க... இந்தியச் சந்தையில் இதற்கு முன் யாரும் அறிந்திராத வசதிகளோடு களமிறக்கப் பட்ட ஸ்கோடா ஆக்டேவியா, 10.5 லட்சத்தில் அறிமுகமானது. முன்பு குறிப்பிட்ட நிறுவனத்தின் ப்ரோட்டோவை ஆக்டேவி யாவின் அருகில் நிறுத்திப் பார்த்த அந்த நிறுவன மேலாண் இயக்குநர், தைரியமான ஒரு முடிவை எடுத்தார். அந்த கார் புராஜெக்ட்டை அப்படியே நிறுத்திவிடுவதுதான் அந்த முடிவு. ஏனென்றால், அவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருந்த அந்த புராஜெக்ட், ஸ்கோடா ஆக்டேவியாவைவிட எல்லா வகைகளிலும் மிகவும் பின்தங்கியிருந்தது. மார்க்கெட்டுக்கு வந்தால் படுதோல்வி உறுதி. அந்தக் கட்டத்தில், அதுவரை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் விழுங்கியிருந்தது அந்த புராஜெக்ட். அந்த கார் உற்பத்திக்கு வர மேலும் 300 கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், அந்த ஒட்டுமொத்த கார் தயாரிப்புத் திட்டமும் கைவிடப்பட்டதால், ஒரு வரலாற்றுத் தோல்வி தடுக்கப்பட்டது.
அதற்குக் காரணம், இந்த ப்ரோட்டோ டைப்தான்.

 - வடிவமைப்போம்

 - க.சத்தியசீலன்;

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism