
ஃபர்ஸ்ட் லுக் - ரெனோ ட்ரைபர்
நான்கு மீட்டருக்கு உட்பட்ட ஒரு காரில் ஏழு சீட்டுகள் இருக்க முடியுமா? இருக்க முடியும். அதுதான் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக இருக்கும் ரெனோ ட்ரைபரின் ஸ்பெஷல்.

ரெனோவில் ஏற்கெனவே லாஜி என்ற பெயரில் ஒரு MPV இருக்கிறது. ஆனால், டிசைன் விஷயத்தில் ட்ரைபர் தனித்துவத்தோடு இருக்கிறது. இது எஸ்யூவியா, எம்பிவியா, க்ராஸ்ஓவரா என்று கேட்டால், ரெனோ அந்த கேள்வியைத் தாண்டிப் போய்விடுகிறது. அதனால் இது என்ன என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
ரெனோவின் நீள அகலங்கள் மற்றும் அதன் வடிவத்தை வைத்துப் பார்க்கும்போது இது க்விட்டுக்கு மேலே…. டஸ்ட்டருக்குக் கீழே என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் கேப்ச்சரில் இருக்கும் பல நல்ல அம்சங்கள் இதிலும் இருக்கின்றன. ரெனோ ட்ரைபரின் அடுத்த அட்ராக்ஷன், ஒரு லிட்டர் BS6 பெட்ரோல் இன்ஜின்.

வெளித்தோற்றம்
நல்ல ரசனையோடும், சரியான விகிதாச்சாரத்தோடும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த ட்ரைபர். க்ரீஸ் கோடுகள் இழையோடும் பானெட், பளபளக்கும் க்ரோம் வேலைப்பாடுகள், மூன்று அடுக்கு கிரில், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், வைரமணிகள் போன்று தோற்றமளிக்கும் DRL, ஏர் டேம், அதன் கீழே இருக்கும் ஸ்கிட் ப்ளேட்ஸ்… அனைத்துக்கும் மேலாக 182 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸோடு மேல் நோக்கி எழும்பி நிற்கும் ட்ரைபர் கச்சிதமாக மட்டுமல்ல… கம்பீரமாகவும் இருக்கிறது. இதைப் பக்கவாட்டில் இருந்து பார்த்தாலும் இந்தக் கருத்து வலுப்பெறுகிறது. காரணம், கறுப்பு நிற டோர் க்ளேடிங், இதன் ஷோல்டர் லைன், ரூஃப் ரெயில், கழுகின் அலகு போன்று அழகாக இருக்கும் டெயில் லைட்ஸ், ஸ்பாய்லர், ரியர் ஸ்கிட் ப்ளேட்ஸ் ஆகியவை காரின் பின்புறத்துக்குப் பொலிவு சேர்க்கின்றன. ஏழு சீட் கார்கள் என்றாலே குவார்ட்டர் கிளாஸ்தான் காரின் அழகுக்கு வேட்டு வைக்கும். அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்று `C' பில்லரோடு குவார்ட்டர் கிளாஸுக்கும் கறுப்பு வண்ணத்தைக் கொடுத்திருப்பதால், ஸ்போர்ட்ஸ் கார் லுக் கிடைத்து விடுகிறது.

உள்ளே...
சீட் கவர், டோர் பேடிங், டேஷ்போர்டு என்று அனைத்துமே அடுத்த செக்மென்ட் எஸ்யூவிக்களில் இருக்கும் அளவுக்குத் தரம். தேவையான அளவுக்கு மெட்டல் மற்றும் க்ரோம் பூச்சுகளும் இருக்கின்றன. டிரைவர் சீட் நல்ல உயரத்தில் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. ரெனோவின் க்விட் தொடங்கி கேப்ச்சர் வரை அனைத்திலும் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இருக்க… ட்ரைபரில் இருப்பது 8 இன்ச் டச் ஸ்கிரீன். ஆப்பிள் கார் ஃப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ என ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியும், நேவிகேஷன் சிஸ்டமும் உண்டு. LCD திரையோடு இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் 3.5 இன்ச்தான். இதில் இரட்டை க்ளோவ் பாக்ஸ் இருக்கிறது. இதில் ஒன்றில் கூலிங் வசதி உண்டு. அதேபோல முன்னிருக்கைகளுக்கு இடையே இருக்கும் இடத்திலும் ஒரு கூலிங் பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

நான்கு மீட்டருக்கு உட்பட்ட கார்களில் அதிகமான வீல் பேஸ் கொண்ட கார், ட்ரைபர்தான். இதன் வீல் பேஸ் 2,636 மிமீ. இதற்குள் ஏழு சீட்டுகளைச் சாமர்த்தியமாக அடுக்கியிருக்கிறது ரெனோ. ட்ரைபரின் முக்கியமான அம்சம், மூன்றாவது வரிசை சீட்டுகள். வழக்கமாக இந்த மூன்றாவது வரிசைக்குச் செல்ல இரண்டாவது வரிசையில் இருக்கும் ஒரு சீட்டை மடக்க வேண்டும். இதிலும் அப்படித்தான். ஆனால் காரின் பின் கதவு பெரிதாகவும் அகலமாகவும் திறப்பதால்… மூன்றாவது வரிசைக்குச் செல்வது சிரமமாக இல்லை. இரண்டாம் வரிசையில் இருக்கும் ஒற்றைச் சீட்டை மடக்குவதும் சுலபமாகவே இருக்கிறது. ஆனால் மூன்றாவது சீட்டில் அமர்ந்து நீண்ட தூரப் பயணம் போவது சிரமம்.
ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது என்பதுதானே நியதி. மூன்று வரிசை சீட்டுகளும் இருந்தால் இரண்டு லேப்டாப் பைகளை வைக்க முடியும். மூன்றாவது வரிசையில் இருக்கும் ஒரு சீட்டைக் கழற்றித் தனியாக வைத்துவிட்டால் பூட் கொள்ளளவு 320 லிட்டராகிவிடும். மூன்றாவது வரிசையில் இருக்கும் எல்லா சீட்டுகளையும் கழற்றி வெளியே வைத்துவிட்டால் பூட் கொள்ளளவு 625 லிட்டர். மூன்றாவது வரிசை சீட்டுகளைக் கழற்றவோ மாட்டவோ ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை என்பது பெரிய ஆறுதல்.
ட்ரைபரில் எத்தனை வேரியன்ட், எதில் என்ன உண்டு என்பது போன்ற விவரங்களை ரெனோ இன்னும் வெளியிடவில்லை. ஆனால் டாப் வேரியன்ட்டில் ஏபிஎஸ், 4 காற்றுப்பைகள் ஆகியவற்றோடு ரிவர்ஸ் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார், 15 இன்ச் அலாய் வீல் ஆகியவை நிச்சயம் உண்டு.

இன்ஜின்
72 bhp சக்தியையும் 9.6 kgm டார்க்கையும் வெளிப்படுத்தும் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் ட்ரைபரை இயக்கப் போகிறது. இதில் டர்போ சார்ஜர் கொண்ட இன்ஜின் ஆப்ஷன் விரைவில் வெளிவரும். இதன் செயல்பாடு, சஸ்பென்ஷன், ஹேண்ட்லிங், மைலேஜ் போன்ற விஷயங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தால்தான் தெரியும்.
- வேல்ஸ்