Published:Updated:

ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா
ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: மஹிந்திரா எக்ஸ்யூவி300

பிரீமியம் ஸ்டோரி

றுத்தெடுக்கும் சித்திரை வெயிலில் வாழ்பவர்களை, நறுக்கென வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் போட்டு வெறுப்பேற்ற அற்புதமான ஓர் இடம் கேரள மாநிலம் மூணாரில் இருக்கிறது. `மூணார்தான் அடிக்கடி போயிட்டு வர்றோமே, பெருசா என்னத்தைச் சொல்லப்போறீங்க!’ என்பவர்கள், நிச்சயம் வட்டவடா எனும் இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். மூணார் தாண்டி 50 கி.மீ தொலைவில் ஏற்காடு, ஏலகிரி மாதிரியான போதையேற்றும் பாதை வழியே பயணித்தால் வட்டவடா.

ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா

``ரிஜிஸ்ட்ரேஷன்கூட முழுசா முடியலை. வட்டவடா போலாமா?’’ என்று புத்தம் புதிய எக்ஸ்யூவி300 காரில் லக்கேஜ்களை ஏற்ற ஆரம்பித்தார் அரவிந்தன். ``இவரு மாணிக்கம். சினிமாவுல இருக்கார்’’ என்று நண்பரையும் அறிமுகப்படுத்தினார். `நான்கு பேர்தான் தாராளமாகப் பயணிக்க முடியும்’ என்கிற ரிப்போர்ட்டைப் பொய்யாக்கி, ஐந்து பேர்கொண்ட குழுவுடன் வட்டவடாவுக்கு வட்டமடித்துக் கிளம்பியது எக்ஸ்யூவி300.

• போடி நாயக்கனூர் தாண்டி முந்தல் செக்போஸ்ட்டில்தான் கார் நின்றது. வழக்கமான சம்பிரதாய செக்கிங் முடித்ததும்... இனி மலைப் பயணம்தான்.

• இந்தியாவை மூன்று பக்கமும் கடல் சூழ்ந்துள்ளதுபோல், வட்டவடா வரை மலைதான் சூழ்ந்திருந்து நம்மை ஆசீர்வதித்தது. முழுக்க முழுக்க மலைக்கு நடுவேதான் பயணம் தொடங்கியது.

• போடிமெட்டு எனும் கேரளா பார்டரில், சூடான இஞ்சி டீ! மொபைல்போனில் மலையாளத்தில் ஏர்டெல்லும், சாலைகளில் லாட்டரிச் சீட்டுக்காரர்களும் ரோமிங் அலர்ட் கொடுத்தார்கள். கேரளா வந்ததற்கான அறிகுறி.

• ஆனை  இறங்கல் அணை வந்தது. இந்த அணையில் யானைகள் இறங்கி வந்து தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பதால், இப்படி ஒரு பெயர் வந்ததாகச் சொன்னார்கள். `அமர்க்களம்’ படத்தில் `சொந்தக் குரலில் பாட...’ என்று ஷாலினி அஜித் சொந்தக் குரலில் பாடி ஆடியது இந்த இடத்தில்தானாம்.

• சின்னக்கனல் தாண்டி நேஷனல் வியூ பார்க் என்றொரு வியூ பாயின்ட். காரை நிறுத்திவிட்டுப் பார்த்தால்... எதிரே கொழுக்குமலை, ஆனைமுடி என்று லாங் ஷாட்டில் பரவசமளித்தன.

• பூப்பாறா எனும் இடத்தில் மதிய உணவு. `மூணார் தாண்டிப் போகப்போறோம்’ என்பதால், `மதி, வெல்லம், இவ்விட, அவ்விட, வல்லியதாயிட்டுண்டு’ என்று சில மலையாள வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு சீன் போட்டோம். ஆனால், மூணார் தாண்டி வட்டவடா வரையிலும் நம்மைத் தவிர யாரும் மலையாளம் பேசவேயில்லை. ``அஞ்சு ஜெனரேஷனா நாங்க இங்கதாண்ணே இருக்கோம். நாங்க சுத்தத் தமிழ்!’’ என்றார் மூணாரில் சாக்லேட் விற்கும் பெண்மணி ஒருவர்.

ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா

• போகும் வழியெல்லாம் மலையடிவாரங்களில் யானைகள் குடும்பம் குடும்பமாக, புகைப்பட நிபுணரின் கேமராவுக்கு விருந்தளித்தன. மூணார் என்றால், மாட்டுப்பட்டி அணையைத் தாண்டாமல் இருக்க முடியாது. படகுச் சவாரிக்கு இங்கு கூட்டம் அள்ளும். மாலையாகிவிட்டதால், ``நாளைக்குத்தான் போட்டிங்’’ என்றார்கள்.

• அதைத் தாண்டி, `ராஜாதி ராஜா’ படத்தில் `மலையாளக் கரையோரம்...’ பாட்டு பாடுவாரே ரஜினி, அது இந்த இடம்தான் என்று ஒரு ஏரியாவைக் காட்டினார்கள். `` `வானமே எல்லை’ படமும் இங்கதான் எடுத்தாங்க’’ என்கிற தகவலும் கிடைத்தது.

• மூணாரில் இருந்து வட்டவடாவுக்குச் சரியாக ஒன்றரை மணி நேரம் ஆனது. வட்டவடாவில் கோவிலூர் எனும் இடத்தில் மவுன்ட்டெயின் ஹட் எனும் ரிசார்ட்டில் ஏற்கெனவே புக்கிங் செய்ததால், பயணம் ஈஸியாக இருந்தது. 2,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வரை ரிசார்ட்டுகள் இங்கு உண்டு.

• வட்டவடாவில் டெம்பரேச்சர் செக் செய்தேன். 18 டிகிரி என்றது. ஸ்வெட்டர் தேவையில்லை. ஆனால், குளிர் தாங்கவில்லை. ரூம் பையன்கள் சமைத்த சப்பாத்தி, சிக்கனை முழுங்கிவிட்டு, மறுநாள் எழுந்தால் வட்டவடா வேறோர் உலகமாக இருந்தது.

• கட்டஞ்சாயா குடித்து முடித்தபோது, ``ஜீப் சவாரி போலாமா?’’ என்று வந்தார் காட்டேஜ் இளசு ஒருவர். சீஸனுக்குத் தகுந்தாற்போல் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை ஜீப் சவாரிக் கட்டணம்.

• மொத்தம் 10 கி.மீ பயணம் என்றார்கள். அரை கி.மீ-க்கு 10 நிமிடம் ஆனது. காரணம், பாதையே இல்லாத பாதை. எக்ஸ்பர்ட் டிரைவர்கள் மட்டும்தான் ஜீப்பை இங்கே கையாள முடியும். மோட்டோ ஜிபி ரேஸ் மாதிரி முழங்கால் உரசியபடி திடும் திடும்மென கார்னரிங் செய்து ஜீப்பை ஏற்றி இறக்கினார் டிரைவர். நாம் பார்த்ததிலேயே மோசமான ஆஃப்ரோடு என்று சொல்லலாம்.

• முதல்ல அருவிக்குப் போய் குளிச்சுடலாம் என்பதுதான் திட்டம். கார்/பைக்குகள் பார்க் செய்யப்பட்டிருந்த இடத்தைத் தாண்டியும் ஜீப் நிற்கவில்லை. திடும்மென முளைத்த பாறைகள், சர்ரென காலை வாரும் பள்ளங்கள், சலசலக்கும் ஓடைகள் வழியாக செம த்ரில்லிங்காக வண்டி ஓட்டிய ஜீப் டிரைவருக்கு எக்ஸ்ட்ரா கொடுக்கணும் என நினைத்துக் கொண்டேன்.

• ஒருவழியாக நின்ற ஜீப்பில் இருந்து இறங்கி... பெரிய பெரிய ருத்திராட்ச மரங்களுக்கு இடையில்... 30 டிகிரி இறக்கத்தில் 300 மீட்டர் தாழ்வாக இறங்கினால்... `பெரிய குடை’போல வனத்தை மறைத்து அருவி, இசை மீட்டிக் கொண்டிருந்தது. பேரே `பெரிய குடை அருவி’தானாம். இவ்வளவு இறக்கத்தில் விலங்குகள் இறங்க சான்ஸே இல்லை என்றதால், தைரியமாக அருவியில் அதகளம் செய்யலாம்.

• இரண்டு, மூன்று கிளைகளாக விழுந்துகொண்டிருந்த அருவியில் ஓரிடத்தில் மட்டுமே குளிக்க அனுமதி. நீச்சல் பார்ட்டிகளுக்கு நல்ல யோகம். இடதுபக்கம் திரும்பினால், `பாகுபலி’ படத்தின் லோ பட்ஜெட் லொக்கேஷன் மாதிரி இருந்தது. ``இங்கே குளிக்க அனுமதியில்லை’’ என்றார்கள்.

• மலைகளுக்கு நடுவே குகை போன்ற இடத்தில் விழுந்து கொண்டிருந்த தண்ணீரைக் காட்டி, ``இதுதான் ஃப்ரெஷ்ஷான அருவித் தண்ணி. செடி-கொடிகளுக்கு மத்தியிலிருந்து உருவாகி வருது. அதாவது அருவியோட ஆரம்பம்’’ என்றார் டிரைவர் இளைஞர். குடித்துப் பார்த்தால்... `அமேசானில் இருந்து வரும் அரிய வகை மூலிகை நீர்’ என்று விளம்பரம் செய்யும் அளவுக்குச் சுத்தம்.

ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா

• அருவியைப் படம்பிடித்து விட்டு, மறுபடியும் மோட்டோ ஜிபி ஜீப் பந்தயம். போகிற வழியில் ஆதிவாசிகள் வாழும் இடத்தைக் காட்டினார். வட்டவடாவின் ஸ்பெஷலே விவசாயம்தான். மிளகு, மிளகாய், காய்கறிகள் என பசுமை விகடனுக்கு அற்புதமான கவர் ஸ்டோரி செய்யலாம்போல! சுள்ளென அடித்த வெயிலில் ஜில்லென விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள் விவசாயிகள்.

• மலைவாசி விவசாயிகளிடம் இருந்து ப்ளம்ஸ் பழங்களை, மலிவான விலையில் நேரடி கொள்முதல் செய்துகொண்டனர் அரவிந்தனும் மாணிக்கமும். வட்டவடாவின் ஸ்பெஷல் - விவசாயம்தான் என்றாலும், ஸ்ட்ராபெர்ரி பழ உற்பத்திதான் இங்கு முக்கிய விவசாயமே!

• ஸ்ட்ராபெர்ரி தோட்டத்துக்கு ஒரு விசிட். சுற்றிலும் ஸ்ட்ராபெரி பழங்கள், செடிகள். சினிமா இயக்குநர்களுக்கு, காதல் பாடல்களுக்கான அருமையான லொக்கேஷனாக இதை ரெக்கமண்டு செய்யலாம். ஸ்ட்ராபெரி ஜாம், ஸ்ட்ராபெரி ஒயின், ஜூஸ் என்று சில அயிட்டங்களையும் பார்சல் செய்து கொண்டனர் வாசகர்கள்.

• மனசே இல்லாமல்தான் ஜீப்பில் இருந்து மறுபடியும் எக்ஸ்யூவி-க்கு மாறினோம். திரும்பி வரும் வழியில் குண்டல டேமில் ஒற்றை யானை மிரட்டல் தரிசனம் தந்தது. `` `ரோஜா’ படத்தில் அரவிந்த்சுவாமியும் மதுபாலாவும் படகுச் சவாரி போவார்களே... அது காஷ்மீர் அல்ல... இங்குதான்’’ என்று ஸ்கூப் நியூஸ் சொன்னார்கள்.

• வீட்டுக்கு வந்த பிறகும் வட்டவடாவைச் சுற்றியே மனசு வட்டமடித்துக்கொண்டிருந்தது. அப்புறமென்ன... முதல் பாராவில் சொன்னதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
 
தமிழ்; படங்கள்: வீ.சக்தி அருணகிரி
 

வட்டவடா போறீங்களா, இதை கவனிங்க!

வட்டவடாவுக்கு, தேனியிலிருந்து ஒரு நாள் டூர் அடிக்கலாம். மூணார் தாண்டித்தான் வட்டவடா போக வேண்டும். படுத்தி எடுக்காத குளிர், ஜில்லென்று உறைக்கும் வெயில், விவசாய நிலங்கள், ஸ்ட்ராபெரி/ப்ளம்ஸ் பழங்கள், அருவிகள், வியூ பாயின்ட்கள் இதுதான் வட்டவடாவின் ஸ்பெஷல். போகும்போது நிறைய பைகள் எடுத்துக்கொண்டு போனால் நேரடி டீலிங்கில் பொருள்களை அள்ளி வரலாம். தங்குவதற்கு காட்டேஜ்கள், ரிசார்ட்கள் 2,500-ல் இருந்து எக்கச்சக்கம் உண்டு. (மவுன்ட்டெயின் ஹட் ரிசார்ட்: 94958-12320). காட்டேஜிலேயே ஜீப் சவாரி தருகிறார்கள். தனியாகவும் ஆப்ஷன் உண்டு. வியூ பாயின்ட், அருவி, ஸ்ட்ராபெரி தோட்டம் என்று சுற்றிக்காட்ட 6 பேருக்கு 2,500 ரூபாய் கட்டணம். யானைகள், காட்டெருமைகள், மான்களை நிச்சயம் பார்க்கலாம். மூணாருக்குப் போனால், வட்டவடாவுக்கு ஒரு விசிட் அடிக்கத் தவறாதீர்கள்.

பார்க்க வேண்டிய இடங்கள்: மூணாரிலிருந்து

• எரவிக்குளம் நேஷனல் பார்க் (16 கி.மீ) காட்டுக்குள் சவாரி போகலாம். வரையாடுகள்தான் இங்கே ஸ்பெஷல்.

• காந்தலூர் (48.5 கி.மீ) 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர் தோட்டம் உண்டு. ஏகப்பட்ட வியூ பாயின்ட்களும், ஜீப் ட்ரெக்கிங் வசதியும் உண்டு.

• மாட்டுப்பட்டி அணை (12 கி.மீ) அற்புதமான படகுச் சவாரி. பல திரைப்படங்களின் லொக்கேஷன் இதுதான்.

• குண்டல அணை (26 கி.மீ) யானைகள் உலவும் உலகம். வியூபாயின்ட்டும் உண்டு.

• டீ மியூசியம் (12 கி.மீ) டீ தயாரிப்பதை நேரில் பார்க்கலாம். 120 ரூபாய் கட்டணம்.

• பிளாஸம் ஹைடல் பார்க் (6 கி.மீ) படகுச் சவாரி, மலர்ப் பூங்கா போன்றவை இங்கே ஸ்பெஷல்.

• ஆனைமுடி (20 கி.மீ) தெற்கு இந்தியாவின் பெரிய மலைப்பிரதேசங்களில் ஒன்று. வனவிலங்குகள் - முக்கியமாக யானைக்கூட்டங்கள் பார்க்கலாம்.

• பொத்தமேடு வியூபாயின்ட் (8 கி.மீ) முழுக்க டீ வாசம் நிரம்பிய அற்புதமான பச்சைப்பசேல் வியூ பாயின்ட்.

• ஆற்றுக்காடு அருவி (5 கி.மீ) பள்ளிவாசல் எனும் இடத்தில் உள்ள இந்த அருவி, பல கிளைகளாக விழுகிறது.

• மாங்குளம் அருவி (28 கி.மீ) குளிப்பதற்கேற்ற அற்புதமான அருவி. ஜீப்பிலும் போகலாம்.

• யானைக்குளம் (10 கி.மீ) யானைகள் குளிக்கும் குளம் என்பதால் இந்தப் பெயர். நாமும் குளிக்கலாம். ஜீப் சவாரி, ட்ரெக்கிங் உண்டு.

ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா

எக்ஸ்யூவி300 எப்படி?

பயணம் முழுக்க மலைப்பாதைதான் என்பதால், எக்ஸ்யூவி-யின் டிரைவிங்கைச் சோதிக்க அற்புதமான வாய்ப்பு. மராத்ஸோவில் இருக்கும் அதே 1.5 லிட்டர் இன்ஜின்தான். 117 bhp, ஹைவேஸில் பறக்கிறது எக்ஸ்யூவி300. 3,500 rpm தாண்டினால் அசத்தல் அனுபவம். ஆனால், 2,000-த்துக்குள் டர்போ லேக்தான், வழக்கம்போல் சோதனை செய்கிறது. ஆனால் ரொம்பவும் படுத்தவில்லை. நாம் போனது டாப் வேரியன்ட்டான W8(O). வசதிகளில் அசத்துகிறது இந்த மினி எக்ஸ்யூவி. 4 வீல்களுக்குமே டிஸ்க். இது க்ரெட்டாவில்கூட இல்லாத ஆப்ஷன். 7 காற்றுப்பைகள், ஸ்மார்ட் வாட்ச், டூயல் ஸோன் ஏ.சி, ஆட்டோ ஹெட்லைட்ஸ், 7 இன்ச் டச் ஸ்கிரீன், டயர் டைரக்‌ஷன் மானிட்டர் எல்லாமே உண்டு. ``என் காரில் பிடிக்காத விஷயம் மூணுதான். மராத்ஸோ மாதிரி சென்ட்ரலைஸ்டு ஏ.சி போட்டிருக்கலாம். டிக்கி இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம். ஸ்டார்ட் பட்டன் இடதுபக்கம் இருக்கிறது குழப்பமா இருக்கு. மத்தபடி சூப்பர்! 14.36 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். என் சாய்ஸ் சரிதானண்ணே?’’ என்று கேட்டுக் கொண்டார் அரவிந்தன்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு