டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

நரேனுக்கு இடம் இல்லை!

சம்பளப் பிரச்னை காரணமா?i1 SUPER SERIES

சார்லஸ்

 ##~##

இந்திய ரேஸ் வீரர்களின் அறிமுகத்துடன் அதிரடியாகத் துவங்குகிறது 'ஐ ஒன் சூப்பர் சீரிஸ்!’ சச்சின் டெண்டுல்கர் - பிராண்ட் அம்பாஸிடர், ஷாரூக்கான் - மும்பை அணியின் உரிமையாளர், நாகார்ஜுனா - ஐதராபாத் அணியின் உரிமையாளர் என ஏகப்பட்ட ஸ்டார் அட்ராக்ஷனுடன் ஆரம்பமாகும் இந்த இந்திய சர்வதேச ரேஸ் திருவிழா, பிப்ரவரி மாதம் முதல் ஆரம்பமாகிறது.

சர்வதேச ரேஸ் வீரர்கள், இந்திய சர்வதேச வீரர்கள், இந்திய வீரர்கள் என மொத்தம் மூன்று பிரிவுகளாக ரேஸ் வீரர்களைப் பிரித்திருக்கிறது 'ஐ ஒன்’ ரேஸை நடத்தும் மச்தார் மோட்டார் ஸ்போர்ட்ஸ்.

நரேனுக்கு இடம் இல்லை!

1997-ம் ஆண்டு ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் வென்றவரான ஜாக் வில்நவ், ஐ ஒன் சூப்பர் சீரிஸ் ரேஸ் போட்டியின் உச்சபட்ச‌ நட்சத்திர வீரர். இவருடன் ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா-1 அணியில் இருந்த ஜியான் கார்லோ ஃபிஸிகெல்லா, விட்டான் டோனியோ லூஸி ஆகியோரும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஜீன் அலஸ்சி, ஹெயின்ஸ் ஹெரால்டு, மிக்கா சாலோ என நீளும் சர்வதேச ரேஸ் வீரர்கள் பட்டியலில், 2005-ம் ஆண்டு நரேன் கார்த்திகேயனுடன் ஜோர்டான் அணிக்காக இணைந்து ரேஸ் ஓட்டிய ஜப்பானைச் சேர்ந்த சாக்கான் யமாட்டோவும் இடம் பிடித்திருக்கிறார். ஐ ஒன் சூப்பர் ரேஸ் போட்டியில், ஒற்றைப் பெண்ணாகக் களம் இறங்குகிறார் பிப்பா மான். அமெரிக்காவின் புகழ் பெற்ற இண்டிகார் ரேஸ் வீராங்கனையான 28 வயது பிப்பா, ஐ ஒன் சூப்பர் சீரிஸில் வெற்றி பெறும் உற்சாகத்தில் இருக்கிறார். மொத்தம் 10 வீரர்கள் இடம் பிடித்திருக்கும் இந்த சர்வதேச ரேஸ் வீரர்கள் பட்டியலில், நம் நாட்டின் கரூண் சந்தோக்கும் இடம் பிடித்திருக்கிறார். ஆனால், நரேன் கார்த்திகேயன் இந்தப் பட்டியலில் இல்லை. 'சம்பளப் பிரச்னையால் நரேன், ஐ ஒன் சூப்பர் சீரிஸில் இருந்து விலகினார்’ என்கிறது ரேஸ் வட்டாரம்.

நரேனுக்கு இடம் இல்லை!

இந்திய சர்வதேச ரேஸ் வீரர்கள் பட்டியலில் 9 ரேஸர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் ரெட்புல் அணியில் இருந்த நீல் யானியுடன் இந்தியாவின் அர்மான் இப்ராஹிம், ஆதித்யா பட்டேல், அகில் குஷ்லானி, பார்த்தீவ் சுரேஷ்வரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆதித்யா பட்டேலுக்கு முன்பிருந்தே சர்வதேச ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் அஷ்வின் சுந்தர், இந்திய ரேஸர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். மொத்தம் 11 ரேஸர்கள் இடம் பிடித்திருக்கும் இந்தப் பட்டியலில் கௌரவ் தலால், விஷ்ணு பிரசாத், அமேயா வால்வால்கர், சைலேஷ் பொலிசெட்டி, பார்த் கோர்படே ஆகியோர் நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள்.

மொத்தம் 9 அணிகள் பங்கேற்கும் இந்த ஐ ஒன் சூப்பர் சீரிஸ் ரேஸ் போட்டியில் ஒரு அணிக்கு தலா இரண்டு ரேஸர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு அணியிலும் ஒரு இந்திய வீரர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்திய சர்வதேச வீரர்கள் எனப் பட்டியலிடப்பட்டு இருக்கும் 9 பேரும் 'டூ இன் ஒன்’ வேலையைப் பார்ப்பார்கள். அதாவது, சர்வதேச வீரர்கள் இல்லை என்றால், அவர்களுக்குப் பதிலாகவும், அவர்கள் வந்துவிட்டால், இந்திய வீரர்களாகவும் பங்கேற்பார்கள்.

இதற்கிடையே உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தல் காரணமாக, முதல் ரேஸ் பிப்ரவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், மலேசியாவின் செப்பாங் ரேஸ் டிராக்குக்குப் பதில், கத்தாரில் முதல் போட்டி துவங்குகிறது. 'ஐ ஒன் சூப்பர் சீரிஸ்’ 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட போட்டி என்பது குறிப்பிடத்தக்கது!